13 ஆகஸ்ட் 2023

அருட்கொடையாகிய திருமுழுக்கு
யோவான் 3:1-8

• கடவுள் அருட்கொடைகளினூடாக தன்னை வெளிப்படுத்துகின்றார். இவைகள் அருளின் சின்னங்களாகும். நாம் அருட்கொடைகளினூடாக கடவுளின் அருளை பெறுகின்றோம். இவ்வாறு அருட்கொடையாகிய திருமுழுக்கு இந்த நாளில் நினைந்துக் கொள்ளப்படுகின்றது.

• திருமுழுக்கு என்பது கழுவுதல் என்ற அர்த்தத்தில் வருகின்றது. பிற்பட்ட காலப் பகுதியில் இது பாவமன்னிப்பின் அடையாளச் சின்னமாக பயன்படுத்தப்பட்டு வந்துள்ளது. யூதர்களைப் பொறுத்தவரையில் பாவமன்னிப்புக்காக இரண்டு பிரதான முறைகளை கடைப்பிடித்தனர். முதலாவதாக ஒரு ஆட்டை வெட்டி அதன் இரத்தத்தை பலிபீடத்திலே தெளித்து பாவமன்னிப்பை வழங்கினர். இரண்டாவதாக ஒரு ஆட்டுக்குட்டியை எடுத்து அதன் தலைமீது குறிக்கப்பட்ட நபர் செய்த பாவங்களை சொல்லி அந்த ஆட்டை வனாந்திரத்துக்குள் துரத்தி விடுவர். அவ்வாடு வனாந்திரத்தில் சென்று மடிந்துபோகையில் மனித பாவங்களும் இறந்து போகின்றது என்பது அவர்களது நம்பிக்கை. இதனையே திருப்பாடல் – சங்கீதம் 32இலும், இறைவன் பாவமன்னிப்பு அருளுகின்ற ஒருவர் என ஆசிரியர் காண்பிக்கின்றார்.

• தீத்து 3ம் அதிகாரத்தில், இப்பாவ மன்னிப்பு திருமுழுக்கினூடாக கிடைக்கின்றது என்ற கருத்து வலியுறுத்தப்பட்டாலும் அது நீரினாலும் ஆவியினாலும் அருளப்படுவதாக கூறப்படுகின்றது.

• யோவான் 3:1-6 வசனம் வரையுள்ள பகுதியில், நிக்கோதேமு இராக்காலத்தில் இயேசுவிடம் வந்து முடிவில்லா வாழ்வைப் பெறுவது எவ்வாறு என்ற வினாவுக்கு, ஆண்டவர் இயேசு அவனை நோக்கி, “நீ ஜலத்தினாலும் ஆவியினாலும் பிறவாவிட்டால் அவ் அனுபவத்துக்குள்ளே போக முடியாது” எனக் கூறுகிறார். இங்கு நீரினால் மற்றும் தூய ஆவியினால் அருளப்படுகின்ற திருமுழுக்கையே மையப்படுத்துகின்றது. நாம் கடவுளின் அருளை திருமுழுக்கின்போது பெறுவதே முக்கியமானதாகும். எமது செயற்பாடுகளே நாம் பெற்றுக்கொண்ட திருமுழுக்கின் புனிதத் தன்மையை உலகிற்கு வெளிப்படுத்துகின்றது.

• பவுல் தன்னுடைய நிருபங்களில் திருமுழுக்கைப் பற்றி எழுதும்போது, ஒரே திருமுழுக்கு உண்டென அறிக்கையிடுகிறார் (எபேசியர் 4:1-6). மேலும், திருமுழுக்கு ஓர் ஒப்புரவாகுதலின் அடையாளம் என 1 கொரிந்தியர் 1:10-14ல் கூறுகின்றார். அங்கு திருச்சபைத் தலைவர்களின் பெயராலே பிளவுற்றிருந்த திருஅவை மக்களைப் பார்த்து, “நீங்கள் யாருடைய பேரில் திருமுழுக்கு பெற்றீர்கள்?” எனக் கேட்டு அவர்களை ஒப்புரவாகுமாறு பவுல் வேண்டுகின்றார். மேலும், திருமுழுக்கில் நாம் பாவத்துக்கு மரித்து நீதிக்கு பிழைக்கின்றோம். எனவேதான், சிறப்பாக பழைய உடன்படிக்கை வாசகத்தில் விடுதலைப்பயணம் – யாத்திராகமம் 14ம் அதிகாரத்தில், இஸ்ராயேல் மக்கள் செங்கடல்களினூடாக நடக்கும்போதே அல்லது கடந்து வரும்போதே அவர்கள் திருமுழுக்கை பெற்றார்கள் என்ற கருத்தை பவுல் 1 கொரிந்தியர் 15ம் அதிகாரத்தில் வலியுறுத்துகின்றார். ஆமேன்.

Painting Courtesy: Rev. Jebasingh Samuvel