20 ஆகஸ்ட் 2023

அருட்கொடையாகிய திருவிருந்து
மாற்கு 14:12-26

• கடவுளுடைய அருளை வெளிப்படுத்தும் அடையாளச் சின்னங்களில் ஒன்றாக திருவிருந்து காணப்படுகின்றது. இவ்விருந்து ஆண்டவர் இயேசு கிறிஸ்துவினால் ஏற்படுத்தப்பட்டு இன்று திருச்சபைகளினால் கடைபிடிக்கப்பட்டு வருகின்றது.

• தொடக்கநூல் – ஆதியாகமம் 14:17ம் வசனம் முதல், ஆபிரகாம் கானானிய குருவாகிய மெல்கிசேதேக்கிடம் ஆசிபெறும்படி அப்பம், திராட்சை இரசம் போன்ற மூலகங்களை அல்லது உணவு பதார்த்தங்களை அவருக்குப் படைக்கின்றார். இங்கே திருவிருந்தின் அடிப்படை பதார்த்தங்களாக அப்பம், திராட்சை இரசம் போன்றவைகள் காணப்படுகின்றன.

• திருப்பாடல் – சங்கீதம் 104இலும், கடவுளே இயற்கை மூலம் இந்த அருட்கொடைகளை எங்களுக்குத் தருகின்றார். எனவே, திருவிருந்தின்போது, நாங்கள் கடவுளுக்கு நன்றி செலுத்த அழைக்கப்படுகிறோம். அதாவது, இறைவனிடமிருந்து பெற்றுக்கொள்ளப்படுகின்ற இயற்கை வளங்கள் அவருடைய ஆசியை எமக்கு எடுத்துக் காண்பிக்கின்றது.

• 1 கொரிந்தியர் 10:15ம் வசனம் முதல் பார்க்கும்போது, நாம் அனைவரும் ஒரே அப்பத்தில் ஒரே பாத்திரத்தில் பானம் பண்ணுவதாக பவுல் பேசுகிறார். இதனூடாக திருச்சபையில் நிலவ வேண்டிய ஒற்றுமையை காண்பிக்கிறார். 1 கொரிந்தியர் 1:10-14ல், திருச்சபை மக்களிடையே காணப்பட்ட பிளவிற்கு சவாலிடும் வகையில் திருவிருந்தின் முக்கியத்துவத்தை அவர் காண்பிக்கிறார். எனவே, திருவிருந்தின்போது நாம் கிறிஸ்துவுடனும் திருஅவை மக்களுடனும் ஒன்றித்து இருத்தல் அவசியமாகின்றது. அதாவது, நாம் கிறிஸ்துவின் ஒரு பகுதியாகவும், கிறிஸ்து எம்மில் ஒரு பகுதியாகவும் திருவிருந்தில் மாறுகிறார். எதிர்காலத்தில் நாம் இறையரசில் அருந்தப்போகும் பந்திக்கான முன்னடையாளமாக இதனை நாம் கூறலாம். இங்கு அப்பம் பிட்கப்பட்டாலே ஒழிய அது பயன்படுத்தப்பட முடியாது. அதுபோல எமது வாழ்வு உடைக்கப்பட்டாலே ஒழிய அது பயன்படுத்த முடியாது. எனவே, திருவிருந்து உடைக்கப்படும் அனுபவம் பகிர்வின் அனுபவம் அதிகளவு வேண்டப்படுகின்றது.

• மாற்கு 14ம் அதிகாரத்தில், திருவிருந்து ஏற்படுத்திய முறைமையைக் குறித்து இயேசு பேசுகின்றார். மத்தேயு, மாற்கு, லூக்கா ஆகிய நற்செய்திகளில் திருவிருந்து ஏற்படுத்திய முறைமைகள் காணப்படுகின்றது. ஆனால், யோவான் நற்செய்தியில் யோவான் 6:1-20ல், இயேசு ஐந்து அப்பங்களையும் இரண்டு மீன்களையும் ஐயாயிரம் பேருக்கு மேற்பட்ட மக்களுக்கு போஷித்த நிகழ்வுடன் திருவிருந்து தொடர்புபடுத்தப்படுகின்றது. இங்கு ஆண்டவர் அப்பத்தை எடுத்து, கடவுளுக்கு நன்றி செலுத்தி, அதைப் பிட்டு, மக்களுக்குக் கொடுத்தார். எனவே எடுத்தல், நன்றி செலுத்தல், உடைத்தல், பகிர்தல் ஆகிய நான்கு வினைச் சொற்கள் இப்பந்தியுடன் தொடர்புபடுத்தப்படுகின்றன. எனவே, இவைகள் ஒவ்வொன்றும் ஒவ்வொன்றுடன் தொடர்புடையவைகள் ஆகும். மேலும், இங்கே விருந்தளிக்கும் ஆண்டவர் எம்மை தம்முடைய நிலைக்கு உயர்த்தியுள்ளார். அதனால், பந்தி வழங்குபவரைவிட பந்தியில் இருக்கும் நாங்கள் மேன்மையுள்ளவர்கள். எனவே, இச்சடங்கு எம்முடையவைகளை நாம் மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்ளும் அனுபவத்தை எமக்குள்ளே உருவாக்குவதோடு இயேசுவின் வரலாற்று மரணம், காட்டிக் கொடுத்தல், வன்முறைச் சாவு, மறுதலிப்பு போன்றவைகளும் இச் சடங்கில் நியாபகப்படுத்த வேண்டியவைகள் ஆகும்.

Painting Courtesy: Rev. Jebasingh Samuvel