27 ஆகஸ்ட் 2023

Christian Presence in Multi Faith Society

மத்தேயு 13:31-33

•          நாம் வாழும் சூழல் ஓர் பல்சமய சூழலாகும். பல்லினச் சூழலாகும். இத்தகைய சூழலில் கிறிஸ்தவன் அல்லது கிறிஸ்தவள் எப்படியாக தமது சாட்சியத்தை தனது பிரசன்னத்தைக் காத்துக் கொள்ளுதல் என்பது முக்கியமானதாகும்.

•          பழைய ஏற்பாட்டு பகுதியிலே தானியேல் 1ம் அதிகாரத்தில், தானியேல் பல்சமய சூழல் பின்னணியில் தனது விசுவாசத்தைக் காத்துக் கொள்ளுகின்றார். அதாவது, சிறப்பாக ஏனையவர்கள் மாமிச உணவை உண்ணுகின்ற வேளையில் ஓர் மரக்கறியை உண்டு தனது நிலையை உணர்த்துகின்றார். மேலும், செபிக்கக்கூடாது என்று சட்டம் ஏற்றப்பட்ட சூழலிலும் அங்கு இறைவனுடன் உள்ள தொடர்பை அவர் துண்டிக்கவில்லை. இப்படியான சூழலில் பின்னர் சாத்ராக், மேஷாக், ஆபேத்நேகோ போன்றவர்களும் பல்சமய சூழலில் தமது விசுவாச உறுதிப்பாட்டைக் காத்துக்கொண்டனர்.

•          திருப்பாடல் – சங்கீதம் 67ல், மக்களினம் அனைத்தும் இறைவனிடம் வருகிறார்கள் என்ற கருத்து வலியுறுத்தப்படுகின்றது. ஏசாயா 49:6இலும், இஸ்ராயேல் மக்கள் இருளில் இருக்கும் மக்களுக்கு ஒளியாக இருக்க அழைக்கப்பட்டுள்ளனர் என்ற கருத்து வலியுறுத்தப்படுகிறது. இவ் அழைப்பின்மூலம் அவர்களது வாழ்வின் மூலம் பிற இனத்தார் கடவுளை கண்டுகொள்கின்றனர் என்கின்றனர்.

•          அப்போஸ்தலர் – திருத்தூதர்பணிகள் 10ம் அதிகாரத்தில், கடவுள் கொர்னேலியுவை தெரிந்தெடுப்பதை நாம் பார்க்கின்றோம். இங்கு கொர்னேலியு ஓர் போர்த்தளபதியாகவும், இறைவனிடம் மன்றாடுபவனாகவும், இறைவனுக்கு அஞ்சி மக்களுக்கு தான தர்மம் புரிபவனாகவும் காட்டப்படுகின்றான். இத்தகைய சூழ்நிலையில் இவனின் மன்றாடல்களுக்கு இறைவன் பதிலளிக்கின்றார். இறைவன் தன்னை மனிதர்களைப்போல ஓர் குறிக்கப்பட்ட சமயத்திற்குள் கட்டுப்படுத்திக் கொள்ள விரும்புவதில்லை. சமயத்திற்கு அப்பால் இறைவனின் பிரசன்னம் இருக்கின்றது என்பதற்கு இது ஓர் சிறந்த எடுத்துக்காட்டாகும்.

•          மத்தேயு 13:31ல், ஆண்டவர் இறையரசைக் குறித்து போதிப்பதற்காக உவமைகளை பயன்படுத்துவதை நாம் காணலாம். இங்கு கடுகு விதையூடாக இறையரசு புரிய வைக்கப்படுகின்றது. அதுபோல் சிறிய மரமாக இருந்தபோதிலும் முளைத்து தனது கிளைகளைப் பரப்புகின்றது. அக்கிளைகளில் ஆகாயத்துப் பறவைகள் கூடுகளை அமைக்கின்றன எனக் கூறப்படுகின்றது. ஆகாயத்துப் பறவைகள் என்பது பல்லின பறவைகள் ஆகும். வேறுபாடுகளுள்ள ஒரு சமூகத்தில் நாம் ஒற்றுமையை தேடுவதற்கு இது ஓர் சிறந்த உதாரணமாகும். மேலும், வலை உவமையின்மூலம் ஓர் மனிதன் வலையை கடலுக்குள் வீசும்போது பல மீன்கள் அகப்படுகின்றன. இவ்வாறு இறையாட்சி எல்லோரையும் ஒன்றிணைக்கின்றது. மத்தேயு 8:11லே, இந்தக் கருத்து வலியுறுத்தப்படுகின்றது. ஆகவே, பல்லின பல்சமய சூழலில் கிறிஸ்தவ பிரசன்னம் என்பது இறையாட்சிக்கான ஓர் சாட்சியமாகும். ஆமேன்.