26 நவம்பர் 2023

ஆண்டவருடைய வருகைக்கான ஆயத்தம்
லூக்கா 12:35-40

• ஆண்டவரின் நாள், ஆண்டவரின் வருகை, இறுதியியல் போன்றவைகள் எல்லா சமயங்களிலும் காணப்படுகிற ஒரு நம்பிக்கை. அதேபோன்று இஸ்ராயேல் மக்கள் ஆண்டவரின் நாள் மிகவும் பொல்லாதது வேதனை நிறைந்தது என்ற எண்ணத்தோடு வாழ்ந்து வந்தனர் (ஆமோஸ் 5:18-21). எனினும், ஆமோஸ் அது பிற சமயத்தவர்களுக்கும் பிற நாட்டவர்களுக்குமல்லாமல் கடவுளை வழிபடும் இஸ்ராயேல் மக்களுக்கே ஒரு தீர்ப்பு நாள் எனக் கூறுகின்றார்.

• வாசிக்கக் கேட்ட பழைய ஏற்பாட்டு பகுதியிலும் ஓசியா 10:12-15இலும், ஆண்டவரின் நாள் அல்லது ஆண்டவரை தேடும்நாள் ஓர் நடுத்தீர்ப்பின் நாள் எனக் கூறப்படுகிறது. இதே கருத்தியலை திருப்பாடல் – சங்கீதம் 37இலும் நாம் பார்க்கிறோம். அங்கு, நல்லார் – பொல்லார் ஆகியோருக்கான நடுத்தீர்ப்பு ஆண்டவரின் வருகையில் இடம்பெறும் என்ற கருத்தியல் வலியுறுத்தப்படுகின்றது.

• புதிய ஏற்பாட்டு பகுதி கொலோசேயர் 4:1-6ல், பரிசுத்த பவுல் தனது வாசகர்களை நோக்கி, அதாவது நீங்கள் உங்கள் வார்த்தைகளைக் கட்டுப்படுத்திக் கொள்ளுங்கள். உங்கள் வார்த்தைகள் மற்றவர்களுக்கு ஆறுதலைக் கொடுக்கவும், நம்பிக்கையைக் கொடுக்கவும், அத்தோடு வார்த்தைகளால் பிறரை நியாயந்தீர்க்காமலும் இருக்கப் பார்த்துக் கொள்ளுங்கள் என ஆசிரியர் திருச்சபை மக்களைப் பார்த்து வேண்டுகிறார்.

• லூக்கா 12:35-45 வரையுள்ள பகுதியில் பார்க்கின்றபோதும், அங்கு ஒரு பணியாளர் எஜமானின் வருகைக்காக எவ்வாறு காத்திருந்து பணிவிடை செய்கின்றாரோ அதுபோல நாமும் எமது எஜமானாகிய வருகைக்காக ஒவ்வொரு நாளும் எங்களுடைய செயற்பாடுகளினூடாக ஆயத்தப்படுதல் அவசியமானது என்ற கருத்து வலியுறுத்தப்படுகின்றது.

• ஆண்டவரின் வருகையைப் பற்றி சிறப்பாக நாங்கள் பேசினாலும், மாற்கு 13:31லே, இதோ மனுஷகுமாரன் வருகின்ற வேளையை யாருமே அறியார். பிதா மாத்திரமே அறிவார் என்ற கருத்து வலியுறுத்தப்படுகின்றது. இதனூடாக எப்பொழுது வருகை நடைபெறும் என்பது அல்ல நாம் எப்படி அதற்கு ஆயத்தமாக இருக்கின்றோம் என்பதே அவசியமானது. எனவே, இந்த கருத்தியல்களை எண்ணியவர்களாக மறுபடியும் இன்னுமொரு திருவருகை காலத்திற்குள் கடந்து செல்லுவோம். ஆமேன்.

ஆக்கம்: அற்புதம்