29 நவம்பர் 2023

வட இந்திய திருச்சபையின் உருவாக்கம்
Church of North India – Formation Day
யோவான் 17:17-26

• கடவுளுடைய பெயரில் மக்கள் ஒன்றுகூடும் இடமே திருஅவை எனக் அழைக்கப்படுகின்றது. இது எபிரேய மொழியில் கஹால் எனவும், கிரேக்க மொழியில் எக்லிசியா எனவும் அழைக்கப்படுகின்றது. ஆண்டவர் இயேசு இவ்வுலகில் இறையரசை உருவாக்கவே வந்தார் (மாற்கு 1:14,15). எனினும், இவ் இறையரசின் அடையாளமாக உபகரணமாக மாதிரியாக திருஅவை காணப்படுகின்றது.

• பழைய ஏற்பாட்டு பகுதியில் ஏசாயா 65:17-25ல், இஸ்ராயேல் மக்கள் பாபிலோனிய அடிமைத்தனத்திலிருந்து மீண்டு வந்த பின்னர், அவர்கள் மத்தியில் பணியாற்றும் மூன்றாம் ஏசாயா புதிய கட்டுமானங்கள், புதிய உருவாக்கங்கள், இறைவன் உருவாக்கப்போகும் புதிய வானம், புதிய பூமி போன்றவற்றைப் பற்றி இங்கு பேசுகின்றார். சிறப்பாக, நவம்பர் 29ம் திகதி வட இந்திய திருச்சபைகளின் ஒன்றிணைவுகூட இறைவன் பார்வையில் ஓர் புதிய படைப்பாகவே காணப்படுகிறது. ஏனெனில், திருஅவை பிரிவுகளின் ஒற்றுமை என்பது நற்செய்திக்கான வாழும் சாட்சியமாகும்.

• திருப்பாடல் – சங்கீதம் 122ல், கர்த்தருடைய ஆலயத்திற்கு போவோம் வாருங்கள் என்று சொன்னபோது தான் மனமகிழ்ச்சியடைந்ததாக தாவீது பேசுகின்றார். இங்கு சிறப்பாக இவ் ஆலயத்தில் சகோதரர்களின் ஒருமிப்பு மனமகிழ்வை ஏற்படுத்துகின்றது. திருப்பாடல் – சங்கீதம் 133ல், மக்கள் ஒன்றிணைந்து இறைவனை வழிபடுவது அது ஓர் வாழும் சாட்சியமாகும். அந்த ஒற்றுமை, வழிபாட்டைவிட பலமான நற்செய்தி அறிவிப்பாகுமென மத்தேயு 5:22-24ல், நாம் கடவுளோடும் மனிதர்களோடும் ஒப்புரவாகுவது நாம் உலகுக்கு கொடுக்கும் உயர்ந்த நற்செய்தி ஆகும். இந்த ஒப்புரவாகுதலையே வட இந்திய திருச்சபை பிரிவின் ஒன்றிணைவு எமக்கு எடுத்துக் காண்பிக்கின்றது.

• 1 கொரிந்தியர் 12:12-26 வரையுள்ள பகுதியில், கிறிஸ்துவே சரீரம், கிறிஸ்துவே தலை நாம் அனைவரும் அவயவங்கள் என பவுல் திருச்சபையை உவமைரீதியில் வர்ணிக்கின்றார். எனவே, நாங்கள் ஒவ்வொருவரும் அவயவங்களாக காணப்படுகின்றோம். ஒரு அவயவம் மற்றொரு அவயவத்தை வேண்டாம் என தள்ளிவிட முடியாது. நாம் எல்லோரும் ஒன்றிணைந்து இசைந்து செயற்படுதல் அவசியம். இதுவே, ஆதித்திருச்சபையிலே கண்டறியப்பட்ட உண்மையாகும். அப்போஸ்தலர் – திருத்தூதர்பணிகள் 2:42-47ல், அவர்கள் எல்லோரும் ஒன்றிணைந்து செயற்பட்ட வேளையில் கர்த்தர் இரட்சிக்கப்படும் மக்களை அனுதினமும் சபையில் சேர்த்துவந்தார்.

• நற்செய்தி பகுதியில் யோவான் 17:17-26ல், ஆண்டவர் இயேசுவின் உன்னத குருத்துவ மன்றாடலில் தமது சீடர்களினதும் உலக மக்களினதும் ஒருமைபாட்டிற்காக அவர் மன்றாடுகின்றார். ஒருமைபாட்டில் அவர் ஒன்றிணைவதன் ஊடாக தமக்கு நேரிடும் எதிரிகளை பலமாக மேற்கொள்ளுவதற்கு இது வாய்ப்பாக அமையும். ஓர் திருச்சபை திருச்சபைக்குள்ளும் திருச்சபைக்கு வெளியே இருந்தும் பல சவால்களை எதிர்நோக்கும்போது திருச்சபை பிரிவுகளுக்கிடையே நிலவும் ஒற்றுமை இச்சவால்களை இலகுவாக மேற்கொள்ள உதவியாக இருக்கும்.

• இன்றைய நாளிலே வட இந்திய திருச்சபை பிரிவுகளின் ஒன்றிணைப்பைக் குறித்து நாங்கள் எண்ணுகின்ற வேளையில் திருச்சபை பிரிவுகளிடையே நிலவுகின்ற ஒற்றுமை நற்செய்தியை நாம் வாழ்வுமூலம் எடுத்துக் காட்டுவதற்கும் எம்மிடையே நிலவுகின்ற ஒப்புரவாகுதல் இறைவனுக்கு சிறந்த வழிபாட்டை எடுத்துக் கூறுவதாகவும் மேலும் இவ்வுலகில் நாம் பல்வேறுபட்ட தன்மையுள்ள எதிர்ப்புக்களை சந்தித்து மேற்கொள்வதற்கும் ஏற்றதொன்றாகும். காலத்தின் தேவையை உணர்ந்து நாமும் ஓர் நிறுவன சார்ந்த ஒற்றுமையை நோக்கி கடினங்களின் மத்தியில் நகர்ந்து செல்லுதல் அவசியமானதாகும். எனவே, இது கடினத்தன்மையுள்ளதாக காணப்பட்டாலும் பணிகளிடையேயாவது ஒற்றுமையை ஏற்படுத்த நாம் முயற்சிப்போமாக. ஆமேன்.

ஆக்கம்: அற்புதம்