30 நவம்பர் 2023

திருத்தூதுவரும் இரத்தசாட்சியுமாகிய அந்திரேயா
Andrew, Apostle and Martyr
யோவான் 12:20-26

• ஆண்டவர் இயேசுவின் சீடர்களுக்குள் அந்திரேயா முக்கியமானவராகக் காணப்படுகின்றார். இவர் பற்றிய பணிகளின் தன்மைகளை நாம் யோவான் நற்செய்தியிலேயே பெருமளவு காணலாம்.

• பழைய ஏற்பாட்டு பகுதியில் ஆமோஸ் 7:10-15ல், ஆமோசின் அழைப்பைப் பற்றி பேசப்படுகின்றது. அவர் தீர்க்கதரிசிகளின் பரம்பரையைச் சார்ந்தவர் அல்ல. மாறாக, மந்தை மேய்ப்பவராகவும் காட்டத்தி பழங்களை பொறுக்கிக் கொண்டிருப்பவராகவுமே இருந்தார். எனவே இறைவனின் அழைப்பு தீர்க்கதரிசன குடும்பத்துக்குள் மாத்திரமல்லாமல் அதற்கு அப்பாலும் இறை அழைப்பு காணப்படுகின்றது என்பதற்கு ஆமோசின் அழைப்பு சிறந்த எடுத்துக் காட்டாகும். இவ் அழைப்புக்கு ஒத்ததாகவே அந்திரேயாவின் அழைப்பும் காணப்படுகின்றது.

• சங்கீதம் – திருப்பாடல் 67ல், நாம் பார்க்கின்றோம் இறைவார்த்தைகளை அறிவிப்பதே ஒரு திருப்பணியாளன் பணியாகுமென அதற்காகவே அவர் அழைக்கப்பட்டுள்ளார் எனவும் அதிக சவால்களுக்கு அவர் முகங்கொடுக்க வேண்டிய தன்மையையும் இதில் நாம் காணலாம்.

• பிலிப்பியர் 3:1-11ல், பிலிப்பி திருச்சபை மக்களைக் குறித்து பவுல் எழுதும்போது இதோ உங்கள் நினைவுகள் எப்பொழுதும் என்னிடத்தில் உள்ளன என்றும், அவர்கள் சார்பில் தான் இறைவனிடம் மன்றாடுகிறேன் எனவும் கூறுகின்றார். இதேபோன்று ஒரு திருப்பணியாளன் தனது திருஅவை மக்களின் நினைவுகளை எப்பொழுதும் தன் உள்ளத்திலே வைத்துக் கொள்ள வேண்டும். அத்துடன், இறைவனின் மாட்சிக்காகவே மக்களின் நன்மைக்காகவும் தன்னுடைய பணிகளை விருத்தி செய்ய அழைக்கப்படுகின்றான். அதனையே அந்திரேயாவும் நிறைவிலே செய்தார்.

• யோவான் 12:20-26ல், அந்திரேயாவின் பணி இங்கு விபரிக்கப்படுகின்றது. அதாவது, கிரேக்கர்கள் இயேசுவை சந்திக்க வந்திருந்த சந்தர்ப்பத்திலே இச்செய்தியை இயேசுவிடத்திலே எடுத்துக் கூறியவர் இந்த அந்திரேயா. அதாவது, தொடர்புபடுத்தும் அல்லது இணைக்கும் ஊழியத்தை அவர் புரிந்து வந்தார். அவருடைய திருப்பணி ஒரு பரபரப்பற்ற ஒரு திருப்பணியாகும். யோவான் 6:1-20ல், ஐந்து அப்பங்களையும் இரண்டு மீன்களையும் ஐயாயிரம் பேருக்கு பகிர்ந்தளித்த சம்பவத்தின்போது ஒரு சிறு பையனிடம் ஐந்து அப்பங்களும் இரண்டு மீன்களும் இருக்கின்றன என்ற செய்தியை இயேசுவிடம் எடுத்துக் கூறியவரும் இவரே ஆவர். மேலும் யோவான் 1:35-49 வரையுள்ள பகுதியில், இயேசுவை முதலில் கண்டு அனுபவித்த அந்திரேயா அச்செய்தியை தனது சகோதரனாகிய பேதுருவினிடத்திலே மேசியாவைக் கண்டோம் எனக் கூறி அறிவிக்கின்றார். இவ்வாறாக மேசியாவுடன் ஏனையவர்களை தொடர்புபடுத்தியும் தேவையுள்ள மக்களை மேசியாவுடன் தொடர்புபடுத்தியும் ஓர் தொடர்புபடுத்தும் இணைக்கும் பரபரபற்ற ஊழியத்தை இவர் புரிந்துவந்தார். இவரும் இயேசுவின் ஏனைய சீடர்களைப் போன்றே இரத்தசாட்சி முடிதரித்ததாக வரலாறு கூறுகின்றது. சிறப்பாக சிலுவையிலே X வடிவத்தின் அமைப்பில் இவர் அறையப்பட்டதாக வரலாறு பேசுகின்றது. இவருடைய நினைவுப் பெயரை மையமாகக் கொண்டு ஆலயங்களும் நிறுவனங்களும் தனிநபர்களும் காணப்படுவதை நாம் அவதானிக்கலாம். ஆமேன்.

ஆக்கம்: அற்புதம்