3 டிசம்பர் 2023

கிறிஸ்துவை சந்திப்பது மகிழ்ச்சியும் நம்பிக்கையுமானது
மரியாள் எலிசபெத்தை சந்தித்தல்

Joyful Expectation of Christ’s Coming
லூக்கா 1:39-45

• திருவருகைக் காலத்தில் முதலாவது ஞாயிற்றுக் கிழமையில் நாம் இயேசுவின் வருகைக்காகக் காத்திருக்கின்றோம். “கலிலேயரே நீங்கள் ஏன் வானத்தை அண்ணார்ந்து பார்க்கிறீர்கள்? நசரேயனாகிய இயேசு எவ்வாறு எடுத்துக் கொள்ளப்பட்டாரோ அவர் மறுபடியுமாக வருவார்” என்பது எங்கள் நம்பிக்கை. இந்த நம்பிக்கை எங்கள் வழிபாடுடனும் வாழ்க்கையுடனும் தொடர்புபடுத்தப்படுகின்றது.

• எரேமியா 33:10-16 வரையுள்ள பகுதியில், இஸ்ராயேல் மக்கள் பாபிலோனியாவில் அடிமைத்தனத்தில் காணப்படுகின்றார்கள். அடிமைத்தனத்தில் வாழுகின்ற மக்களுக்கு இறைவன், நீங்கள் அடிமைத்தனத்திலிருந்து மீண்டு மறுபடியும் உங்கள் சொந்த தேசத்திற்கு செல்லுவீர்கள் என்ற நம்பிக்கையின் செய்தியை எரேமியா இங்கு கூறுகிறார். இதே செய்தியை எசேக்கியேல் 37ம் அதிகாரத்திலும் நாம் காணலாம். உலர்ந்த எலும்புகளை உயிரடைய வைத்த இறைவன் உலர்ந்து போன நம்பிக்கையை மறுபடியும் புதுப்பிக்கப் பண்ணுகின்றார்.

• திருப்பாடல் – சங்கீதம் 68:11-16 வரையுள்ள பகுதியில், சிறப்பாக ஆசிரியர் இறைவனிடம் நம்பிக்கைக்காக மன்றாடுகிறார். அவநம்பிக்கைகள் இருந்திருக்கின்ற இப்பகுதியில் நம்பிக்கை அவருக்குத் தேவை எனப் பிரார்த்தனை செய்கிறார்.

• 1 தெசலோனிக்கேயர் 3:6-13ல், பவுல் தீமோத்தேயுவின் நிமித்தம் தெசலோனிக்கேய பட்டண மக்களின் நம்பிக்கைக்காக நன்றி செலுத்துகிறார். அவர்கள் இறைவன்மீது தொடர்ந்து நம்பிக்கை வைக்கின்றார்கள். தங்கள் துயரத்திலும் தங்களுக்குண்டான அனைத்து வேதனைகளிலும் அவரையே நம்பிக்கை வைப்பது பவுலுக்கு மகிழ்ச்சியைத் தருவதாகக் தெரிவிக்கின்றார்.

• லூக்கா 1:39-45 வசனம் வரையுள்ள பகுதியில், மரியாள் எலிசபெத்தைக் காணச் செல்கின்றார். பல அவநம்பிக்கைகளின் ஊடாக பிரயாணபட்டிருக்கிற மரியாளை பொறுத்தவரையிலே எலிசபெத்திடம் அவர் சென்ற வேளையில் எலிசபெத், “ஆண்டவரின் தாயார் என்னிடத்தில் வருவது எவ்வளவு மேலானது” எனக் கூறி அதாவது, மரியாளின் வயிற்றிலிருந்த குழந்தை அக்களிப்பால் மகிழ்கின்றது எனக் கூறிய வார்த்தைகள் மரியாளுக்கு நம்பிக்கையைக் கொடுக்கின்றது. அவநம்பிக்கையோடு வாழ்ந்த மரியாள் இப்பொழுது எலிசபெத்தும் அதே அனுபவத்திற்கூடாக செல்லுகிறார் என்ற செய்தியைக் கேட்டவுடன் நம்பிக்கைக் கொள்கின்றார்.

• திருவருகைக் காலத்திலும் இறைமைந்தனின் வருகைக்காக நாம் காத்திருக்கும்போது, பலவிதமான அவநம்பிக்கைகள் எங்கள் தனிப்பட்ட வாழ்க்கையின் அனுபவங்களிலும் சமூக அனுபவங்களிலும் தேசத்தின் அனுபவங்களிலும் முதலாளித்துவ பொருளாதாரக் கொள்கைகளிலிருந்து வருகின்ற அச்சுறுத்தல்கள், உலக பொருள்முதல்வாதத்திலிருந்து வரும் அச்சுறுத்தல்கள், நுகர்வு கலாச்சாரத்திலிருந்து வரும் சவால்கள் போன்றவைகள் இந்த நம்பிக்கையை மரிக்க வைக்கின்றன. எனினும், இறைவனின் வருகையைக் குறித்த நம்பிக்கையை நாங்கள் உயிர்த்துடிப்புடன் வைத்துக் கொள்ளவும் அவரை எதிர்கொள்ளவும் ஆயத்தப்படுவோமாக. ஆமேன்.

ஆக்கம்: அற்புதம்