தொழுவம் நோக்கி 01

(லூக்கா 2:16)
நமது வாழ்வில் பல்வேறு சந்தர்ப்ங்களில் கடவுள் பல்வேறு விதமான அழைப்புகளை நற்செய்திகளை எமக்கு அருளுகின்றார். மேற்கூறப்பட்ட பகுதியிலே தேவதூதர்களால் அறிவிக்கப்பட்ட அழைப்பை கேள்வியுற்ற மேய்ப்பர்கள் உடனடியாக அழைப்புக்கு பதிலளிக்கும் வகையில் விரைந்து சென்றனர். அழைப்பை பெறும் ஒவ்வொரு மனிதனும் அவ்வழைப்பிற்கு பதிலளிப்பது முக்கியமான ஒன்றாகும்.

கடவுள் ஆபிரகாமை அழைத்து அனைவருக்கும் ஆசீர்வாதமாக இருக்கும் பணியை அவரிடத்தில் கையளித்தார் (ஆதி 12:1-3).எனவே அழைப்பு சலுகைகளை அனுபவிப்பதற்காக அல்ல மாறாக கடமைகளை பொறுப்புக்களை நிறைவேற்றுவதற்கே ஆகும். குறிப்பாக கடவுள் இஸ்ரவேல் மக்களை புற இனத்தவருக்கு ஒளியாய் இருக்குமாறு அழைத்திருந்தார் (ஏசா 49:6). இதன் ஒளியில் அழைப்பு பொறுப்புரிமை சார்ந்த ஒன்றாகும்.

கடவுள் எம்மை அழைக்கும் போது நாம் விட்டுவிட வேண்டியவைகள் ஒரு புறமும் பற்றிக்கொள்ள வேண்டியவைகள் மறுபுறமும் காணப்படுகின்றது. இயேசு சீடர்களை அழைத்தப்போது அவர்கள் தங்களுக்கு உரித்துடையவர்களை கைவிட்டு மாறாக இயேசுவை பின்பற்றி அவரோடு பிரயாணித்ததை நாம் காணலாம் (லூக்கா 4:11-18)

கடவுள் எம்மை அழைக்கும் போது அவ்வழைப்பிற்கு சரியான முறையில் பதிலளிக்கும் போது அந்நிகழ்வு வாழ்வில் பெரும் சந்தோஷத்தை ஏற்படுத்தும் (ஏசா 6:1-8). மாறாக அழைப்பிலே நாம் உதாசீனம் செய்யும் போது துக்கங்களுக்கு முகங்கொடுக்க நேரிடும் (மாற்கு 10:17-22)

மன்றாட்டு
கடவுளே, உமது அழைப்பை சரிவர உணர்ந்துக்கொண்டு அதற்கென வாழ எமக்கு உதவிசெய்தருளும் ஆமென்.

அருட்பணி. அருளம்பலம் ஸ்டீபன்