cows, woman, female-4708901.jpg

இயற்கை கரிசனை

எருதுகொண்டு உழுதபோது மகிழுந்து கொண்டாடிய மண் இன்று இயந்திரம் கொண்டு உழுதபோது தன்னுள் சுமந்த மண்புழுக்களும் வண்டுகளும் கதறி அழுத சத்தம் கேட்டு தன் கருவறையில் இருந்த புழுக்களும் தன்னையே சுற்றி சுற்றி தம் அடைக்கலத்தில் இருந்த தும்பிகளும் கதறிய போது மண்ணானது பேறுகால அவதியுற்றது.

எருவைத் தன் மீது தூவிய போது அதனை தன்னுள் வாங்கி இரண்டற கலந்து ஈரப்பதத்தை உறிஞ்சி வைத்துக்கொண்டு தன்னுள் விதைக்கப்பட்ட விதையை முளைப்பிக்கச் செய்த போது மகிழ்ந்து கொண்டாடிய மண்ணானது இன்றைய இரசாயன உரங்களைத் தூவியதால் தன் கருப்பை மலடாகிப் போனதையும் தன்னுள் விதைக்கப்பட்ட விதை செத்து போனதையும் தன் கர்ப்பப்பையின் நீரையெல்லாம் இரசாயன உரங்கள் உறிஞ்சிப்போட்டதைக் கண்டபோது பேறுகாலத்தைக் காணமுடியாமல் மலடாய் போன நிலையை எண்ணி மண்ணானது கதறி அழுகிறது.

தன் செட்டைகளின் கீழ் பல உயிரினங்கள் வாழ்வு தேடி வந்த போதும் அவ்வப்போது வாழ்வு பெற்ற தன் இனம் அழியாமல் பாதுகாத்திட சில உயிரினங்கள் அன்னத்திற்காகவும் இனவிருத்திக்காகவும் அடைக்கலம் புகுந்திருந்ததை எண்ணி மகிழ்ந்து கொண்டாடிய இந்த மண்ணானது பூச்சி விரட்டிகளுக்கு பதிலாக இன்று கொடிய நச்சுத்தன்மைக் கொண்ட உயிர்க்கொல்லி தன்மையுடைய இரசாயன பூச்சிக்கொல்லிகளால் எல்லா உயிரினங்களும் இனவிருத்தி அடைய முடியாமல் மடிந்துபோனதைக் கண்டு மண்ணானது விசும்பி விசும்பி அழுதுக்கொண்டே இருக்கிறது.

மாடுகளை வளர்த்த பட்டறிவு எனக்கு உண்டு. நான் வளர்த்த மாடுகளைக் குளிக்க வைத்துள்ளேன். அவைகளுக்கு கயிறுகள் அணிவித்துள்ளேன். அவற்றின் கொம்புகளுக்கு வண்ணம் தீட்டி அழகு பார்த்து மகிழ்ந்துள்ளேன். அவற்றை மேய்த்துள்ளேன். அவற்றிற்கு தீவனம் வைத்துள்ளேன். பசுக்களிடம் பால் கறந்த பட்டறிவும் அவற்றின் கன்றுகளோடு ஓடிபிடித்து விளையாடிய பட்டறிவும் எனக்குண்டு. காளைகளைக் கொண்டு ஏர் உழுதுள்ளேன். இயந்திர மயமான பிறகு டிராக்டருக்கு கயிறு அணிவிக்கவோ விளையாடி மகிழவோக் கூடாதபடி என் உள்ளம் மகிழ்ச்சி எனும் குழந்தையைச் சுமக்க கூடாத மலட்டுத்தன்மைக்கு தள்ளப்பட்டு போயிற்று.

நாட்டு மாடுகளின் இனஅழிப்புக்குப் பின்னிருக்கும் இயந்திரமயமாக்கல் மற்றும் பன்னாட்டு நிறுவனங்களின் சதி. நாட்டு மாடுகளை நான் வளர்த்த போது அவை கன்று ஈனும் ஆற்றலுடையதாயும், பால் கொடுக்கும் ஆற்றல் உடையதாயும், கன்றுகளை பராமரிப்பதுடன் ஏர் உழுவதற்கான ஆற்றல் உடையதாயும் இருந்தது. எருதுகள் வண்டி இழுக்கும், ஏர் உழ உதவிடும். அத்துடன் தன் இனத்தின் கன்றுகளை பராமரிக்கும் நல்ல தந்தையராகவும் இருக்கும். தன் இனத்தை விருத்தியடையச் செய்யும் இனத்தலைவனாகவும் இருந்து வந்தன.
டிராக்டர் என்ற இயந்திரம் வந்த பிறகு ஏர் உழ முடிந்தது. ஆனால், அவற்றின் எரிபொருளுக்காக ஏதோ ஒரு இடத்தில் புவித்தாயின் கருப்பை குடைந்தெடுக்கப்படுகிறது. டிராக்டரால் மாட்டின் இனம் அபிவிருத்தி செய்ய முடியாது என்றும், பசுவைச் சினைப்படுத்த முடியாது, கன்று ஈனமுடியாது, பால் கொடுக்க முடியாது, எருவுக்கு சானம் போட முடியாது. இதன் பாதிப்புகள் நம் வீட்டின் சமையலறையில் எதிரொலிக்கின்றதோடு நம் உடலில் ஒவ்வொரு நாளும் நஞ்சாக உட்கொள்ளப்படுகிறது என்பதை நாம் இன்னமும் அறியாதிருக்கிறோம்.

மாடு வளர்த்த போது நம் உணவில் நஞ்சு இல்லாதிருந்தது. அவைகளுக்குள் உணவுப்பொருள் இருந்தது. உணவு உற்பத்திக்கான எருவும், அவை பொருளாதார முறையில் கொள்முதலும் விற்பனை செய்யவும் போக்குவரத்து வண்டியிழுக்கும் ஆற்றலுடையதாயும் இருந்தது. இவையெல்லாவற்றையும் மலட்டுத் தன்மையுடைய இயந்திரமயமாக்கலால் தனித்தனியே வாங்கும் நிலைக்கு தள்ளப்பட்டு இயற்கையோடு இயைந்த மகிழ்ச்சிப் பெருங்கடலை நீந்தும் உரிமையையும் வாய்ப்பையும் இழந்து நிற்கிறோம்.
மாடு வளர்த்த போது மாட்டினம் வளர்ந்தது. மனிதர்களின் பொருளாதாரம் சமநிலையில் இருந்தது. விவசாயிகளின் வாழ்வாதாரம் தழைத்திருந்தது. இன்று எல்லா வளங்களையும் விழுங்கிக் கொண்டு முதலாளித்துவமும் இயந்திரமயமாக்கலும் மட்டுமே வளர்ந்து வந்துள்ளது.

நாட்டு மாட்டினத்தின் எருதுகள் ஏர் உழுவதோடு இனவிருத்தி செய்யும் தந்தையராய் இருந்தன. டிராக்டர் வந்த பிறகு எருதுகளும் காளைகளும் பயனற்றவையாக எண்ணப்பட்டு இறைச்சிக்கானவை மட்டுமே என்ற நிலையில் இளம்கன்றுகளாகவே கசாப் கடைக்கு கொண்டு செல்லப்படுகின்றன. இனவிருத்திக்காக அயல்நாட்டு விந்தணுக்களுக்காக காத்திருக்கும் நிலைக்கு தள்ளப்பட்டதோடு நம்முடைய நாட்டு மாடுகளின் இனஅழிப்புக்கு நாமே காரணமாயிருக்கத் தக்கதான அவலநிலைக்குத் தள்ளப்பட்டு போனோம். உலகளாவிய இயந்திரமயமாக்கலின் கோரப்பிடியில் மண்ணின் வளத்தையும் உயிரினச் சூழலின் பெருமகிழ்வினையும் இழந்து உயிரினச்சூழலிலா அனாதைகளாக வாழ்ந்துகொண்டிருக்கிறோம்…

சிந்தனைக்காக

தொடர்ந்து சிந்திப்போம்…
உயிரினச் சூழலை மீட்டெடுப்போம்.

மறைத்திரு. டால்டன் மனசே,

ஆற்காடு லுத்தரன் திருச்சபை