magi kings, epiphany, comet-5855864.jpg

6 ஜனவரி 2024

கிறிஸ்துவுக்குள் பிரியமானவர்களே, இந்நாள் இயேசு தன்னை யூதரல்லாதவர்களுக்கு வெளிப்படுத்திய திருநாள் என திருச்சபை வழிகாட்டியில் நாம் படிக்கின்றோம். வைதீக திருச்சபைகள் இந்நாளில் கிறிஸ்து பிறப்பை நினைந்து கொள்ளும் பாரம்பரியம் எம்மிடையே காணப்படுகின்றது.

கடவுள் தன்னை பல்வேறுபட்ட வழிகளில் மக்களுக்கு வரலாற்றில் வெளிப்படுத்தியுள்ளார். குறிப்பாக, இயற்கையினூடாக ஆபிரகாமுக்கு வெளிப்படுத்தியதாக தொடக்கநூல் (ஆதியாகமம்) 12:1-7 வரையுள்ள
பகுதியில் படிக்கின்றோம். மேலும், கடவுளின் வெளிப்பாடு ஆலயத்திற்குள் காணப்பட்டதை எருசலேம் ஆலய அர்ப்பணிப்பு எமக்கு உணர்த்துகின்றது. பொதுவெளிப்பாட்டினூடாக தன்னை வெளிப்படுத்திய கடவுள்,
சிறப்பு வெளிப்பாட்டினூடாக அதாவது இயேசுவினூடாக தன்னை வெளிப்படுத்தியதாக எபிரேயர் 12:1-3 வரையுள்ள பகுதி எமக்குக் காண்பிக்கின்றது. இதனைப் போன்றே ஆண்டவர் இயேசுவும் தன்னை பல்வேறுபட்ட முறைகளில் பல்வேறுபட்ட மக்களுக்கு வெளிப்படுத்தியதை புதிய ஏற்பாடு அல்லது இரண்டாவது ஏற்பாடு எமக்குக் காண்பிக்கின்றது.

மத்தேயு எழுதிய நற்செய்தியாளன் இயேசுவை ‘மேசியா’ என்ற பதத்தினூடாக யூதர்களுக்கு வெளிப்படுத்துகின்றார். அதேபோன்று, யூதரல்லாதவர்களுக்கும் இயேசுவின் வெளிப்பாடு அவசியம் என்பதை அவர் உணர்கின்றார். இதனையே மத்தேயு 2:1-12 வரையுள்ள பகுதியில் நாம் படிக்கிறோம். இங்கு ஆண்டவர்
இயேசு தன்னை யூதரல்லாத ஞானிகளுக்கு வெளிப்படுத்தியுள்ளார். இவர்கள் மோசேயின் சட்டங்களையோ நியாயப்பிரமாணங்களையோ பெற்றவர்கள் அல்ல. மாறாக, நட்சத்திரத்தின் வாயிலாக மீட்பரை சந்தித்தவர்கள் என்ற செய்தி மத்தேயுவினால் முன்வைக்கப்படுகின்றது. எனவே, இயேசுவின் பிறப்பு
எல்லோருக்கும் உரியது என்ற செய்தியை லூக்கா 2:10-15 வரையுள்ள பகுதியில் நாம் படிக்கிறோம். எல்லா மக்களுக்குமான மீட்பு அல்லது மீட்பர் என்ற கருத்து வலியுறுத்தப்படுகின்றது. யோவான் 1:14ல், இயேசுவின் மனுவுருயெடுப்பு எல்லோருக்கும் உரியதாகும். மனுவுரு எடுத்ததன் ஊடாக சமூக, பொருளாதார, அரசியல் சமயற் சூழலுக்குள் ஆண்டவரின் மனுவுரு எடுத்தல் காணப்படுகின்றது என யோவான் கூறுகின்ற செய்தியும் இதுவே ஆகும். இதன் வழியிலேயே மத்தேயுவும் இயேசுவின் பிறப்பில் ஓர் அனைத்துலக தன்மையைக் காண்பிக்கின்றார்.

மத்தேயுவின் அனைத்துலக தன்மை இயேசுவின் போதனைகளுக்குள்ளும் புதைந்துள்ளது. மத்தேயு 13:30,31ம் வாக்கியங்களில் வரும் கடுகுவிதை உவமை, வலை உவமை போன்ற உவமைகள் இறையரசில் எல்லோருக்கும் உரிய தன்மையை எடுத்துக் காண்பிக்கின்றது. இயேசு கற்பிக்க வந்த இறையரசு எல்லோருக்கும் உரியது என்பதை மத்தேயு 8:11ல் அவர் காண்பிக்கின்றார். அது மாத்திரமன்றி மத்தேயு
28:19,20ல் நீங்கள் உலகமெங்கும் புறப்பட்டுபோய் எல்லா மக்களையும் சீடராக்குங்கள் என்ற செய்தி தூதுப்பணியில் காணப்படுகின்ற அனைத்துலக தன்மையை எடுத்துக் காண்பிக்கின்றது. இந்த அனைத்துலக தன்மை மானிடர்களுக்குள் மட்டும் கட்டுப்படுத்தி வைத்திராமல் அனைத்து படைப்புக்களுக்கும் உரியது என்ற செய்தியை மாற்கு 16:15ல் நாம் படிக்கின்றோம்.

இயேசுவின் பிறப்பு, போதனைகள், அவருடைய தூதுப்பணிக்கு அனுப்பும் தன்மை ஆகிய அனைத்தும் எம்மை அவரண்டை இழுத்துக்கொள்ளுவதற்கான வழிவகைகள் ஆகும். இவைகள் குறிக்கப்பட்ட இனத்திற்குள், சமயத்திற்குள் கட்டுப்படுத்தப்படாமல் அனைத்துலக தன்மை சார்ந்ததாக அமைகின்றது. எனவேதான், எபேசியர் 1:10ல், கிறிஸ்துவுக்குள் அனைத்தும் கூட்டிணைக்கப்படும் என்ற பகுதி எல்லாவற்றையும் ஒன்றிணைக்கும் கிறிஸ்துவின் பணி பற்றி பேசுகின்றது. எனவே, மனிதரால்
உருவாக்கப்பட்டுள்ள அனைத்து தடைகளையும் தாண்டி நாம் கிறிஸ்துவின் அனைத்துலக தன்மையையும் அவரது பணியையும் பிறருக்கு எடுத்துச் செல்வோமாக.

ஆக்கம்: அற்புதம்