church window, baptism, sacrament-1016443.jpg

14 ஜனவரி 2024

•            கிறிஸ்துவுக்குள் பிரியமானவர்களே, எபேசியர் 4:1-6ல், ஆதித்திருச்சபையின் ஓர் பற்றுறுதியின் அறிக்கையின் வடிவமாக இன்றைய நாள் கருப்பொருள் காணப்படுகின்றது. “ஒரே ஆண்டவரும் ஒரே திருமுழுக்கும்” உள்ளது என பவுல் எபேசிய திருச்சபைக்கு குறிப்பிடுகின்றார். இங்கு ஆண்டவர் என்னும் பதம் ‘அடனோய்’ என்னும் எபிரேய மொழியிலிருந்தும், ‘கியூரியஸ்’ என்னும் கிரேக்க மொழியிலிருந்தும் உருவானதாகும். மேலும், யோவான் நற்செய்தியாளர் யோவான் 20:31ல், இயேசு தேவனுடைய குமாரனாகிய மெசியா என நீங்கள் விசுவாசிக்கும்படியாகவும் விசுவாசித்து அவர் மூலம் மீட்படையும் படியாகவும் இவைகள் எழுதப்பட்டன எனக் குறிப்பிடுகின்றார்.

•            யோவான் நற்செய்தியில் காணப்படும் ‘நானே’ என்ற இயேசுவின் கூற்றுக்கள் அவருடைய நற்செய்திக்கே தனித்துவமானவைகள் ஆகும். விடுதலைப்பயணம் 3:14ல், கடவுள் மோசேக்கு தன்னை வெளிப்படுத்தும்போது, “இருக்கிறவர் நானே. இருக்கிறவரே உன்னை அனுப்புகிறேன்” எனக் கூறுகிறார். இங்கு ‘நானே’ என்னும் பதம் கடவுளை அல்லது கடவுளால் அனுப்பப்படும் மெசியாவை குறிக்கும் ஓர் பதமாகும். எனவேதான், யோவான் இப்பதத்தை எடுத்து இயேசுவே கடவுளால் அனுப்பப்படும் மேசியா என்று குறிப்பிடுகின்றார். தனது நற்செய்தியில் இயேசுவே மெசியா என்பதை நீங்கள் கண்டடையவே எழுதப்பட்டது எனவும் கூறுகின்றார். மெசியா என்பதற்கு ‘அபிஷேகம் செய்யப்பட்டவர்’ என பொருள்படுகின்றது.

•            ஆரம்ப காலத்தில் இஸ்ராயேல் மக்கள் கடவுளை அரசனாகக் கொண்டு செயற்பட்டு வந்தனர். திருப்பாடல் 23ல் நாம் காணலாம். பிற்பட்ட காலப்பகுதிகளில் அவர்களை சுற்றி வாழ்ந்த பெலிஸ்தியர் போன்றவர்களிடத்தில் காணப்பட்ட அரசமைப்பு முறை, யுத்தங்களில் ஏற்பட்ட தோல்வி போன்றவைகள் தமக்கும் ஓர் அரசன் வேண்டுமென்ற சிந்தனையை இஸ்ராயேல் மக்கள் மத்தியில் ஏற்படுத்தியது. இதனால் இஸ்ராயேல் மக்கள் சாமுவேல் இறைவாக்கினரிடம் தமது சிந்தனையை எடுத்துக்கூற 1 சாமுவேல் 8ம் அதிகாரத்தில், அரசமைப்பு தோன்றும்போது ஏற்படும் சீர்கேடுகளை சாமுவேல் எடுத்துக்கூறினாலும் மக்கள் அதற்கு இணங்கவில்லை. நிறைவில், ஒருங்கமைக்கப்பட்ட அரசுக்குள் சவுல், தாவீது, சாலமோன் போன்ற மன்னர்களின் அரசாட்சி ஏற்பட்டது. பின்னர், ஆட்சி பிளவடைந்ததை அடுத்து வட அரசு கி.மு. 721ல் அசீரியராலும் தென் அரசு கி.மு.586ல் பாபிலோனியராலும் அழிக்கப்பட்டது. இதன் பின்னணியில் அரசிழந்த சமூகம் மறுபடியும் இறைவனிடம் திரும்புகின்றது. எசேக்கியேல் 34ம் அதிகாரத்தில், மந்தைகளை இறைவனே பொறுப்பெடுப்பதாக எசேக்கியேல் கூறிகின்றார். இங்கே நல்ல ஆயனுக்குரிய அவரது வருகைக்குரிய அத்திவாரம் போடப்படுகின்றது.

•            யோவான் 10ம் அதிகாரம் ‘நல்ல ஆயன்’ பற்றிய இயேசுவின் நானே என்ற கூற்றாகும். இங்கே இயேசு தன்னை நேர்மையுள்ள ஓர் ஆயனாகக் காண்பிக்கின்றார். அவர் மந்தைகளின் கதறுதல்களுக்கு செவிகொடுத்து ஆபத்து வேளையில் மந்தையோடிருந்து போஷித்து அவைகளுக்காக உயிரைக் கொடுப்பவர் எனவும் காண்பிக்கின்றார். சிதறடிக்கப்பட்டிருக்கும் மந்தைகள் அனைத்தையும் ஒன்றாக சேர்த்து ஒரே மந்தையும் ஒரே மேய்ப்பனும் என்ற எண்ணக்கருவை ஏற்படுத்தப்போவதாகவும் கூறுகின்றார். யூதப் பாரம்பரியத்தின்படி மேய்ப்பர்கள் தமது மந்தைகளை எடுத்துக்கொண்டு தூரப்பகுதிகளிலே மேயவிடுவார்கள். அவர்கள் மறுபடியும் தொழுவத்துக்குள்ளே மந்தையைக் கொண்டு வருவதற்கு நேரம் கிடைக்காத வேளையில் இலைக் குழைகள் தடிகளினால் ஓர் கூடாரத்தை அல்லது தொழுவத்தை ஏற்படுத்துவார்கள். தொழுத்துவத்துக்குள்ளே மந்தைகளை விட்டுவிட்டப் பின்னர் மேய்ப்பன் தொழுவத்தின் வாயிலில் உறங்குவான். ஏதாவது, ஒரு தீமை ஏற்படும் என்று சொன்னால் மேய்ப்பனை தாண்டியே மந்தைகளுக்கு தீமை ஏற்பட வாய்ப்புண்டு. எனவேதான், இப்பகுதியிலே ‘நானே ஆட்டுமந்தையின் வாயில்’ என்றும் கூறுவது இன்னும் அதிக பாதுகாப்பை வழங்குபவர் இயேசுவே என்ற செய்தி இதற்கூடாக ஏற்படுத்தப்படுகின்றது.

•            இன்று நாம் வாழுகின்ற காலப்பகுதியில் இறைவனின் இருப்பு நிலை வினா எழுப்பப்படுகிறதொன்றாகும். மேலும், இயேசுவைப் பற்றிய பிழையான புரிந்துகொள்ளுதல், திருமுழுக்குப்பற்றிய தவறான போதனைகள் ஒரே மந்தையும் ஒரே மேய்ப்பனுமாக நாங்கள் வாழ முடியாமல் திருச்சபைக்குள் பல்வேறுப்பட்ட பிளவுகளை ஏற்படுத்தி வருவதை நாம் அறிகின்றோம். இத்தகைய சூழ்நிலையில் இயேசுவைப் பற்றிய சரியான புரிந்துணர்வோடு பவுல் கூறுகின்ற ஒரே திருமுழுக்கின் வாயிலாக நாங்கள் ஒன்றிணைதல் அவசியம். எங்கள் பற்றுறுதி அறிக்கைகள் எங்களை ஒன்றிணைப்பதாக. இயேசுவின் உன்னத குருத்துவ மன்றாடலில் யோவான் 17:20,21ல், “தந்தையே நானும் நீரும் ஒன்றாயிருப்பதைபோல உலக மக்கள் அனைவரும் ஒன்றாயிருக்க உம்மை வேண்டுகிறேன்” என்ற பதத்தின் ஊடாக ஒற்றுமை இன்னும் அதிகமாக புலப்படுத்தப்படுவதாக. ஏற்படுத்தப்படுவதாக.

ஆக்கம்: அற்புதம்