peace, symbol, petals-7043225.jpg

21 ஜனவரி 2024

• நாம் வாழும் உலகில் ஒற்றுமை என்பது மனிதர்கள் அனைவராலும் விரும்பப்படுகின்றதொன்றாகும். இன்றைய ஞாயிற்றுக்கிழமை திருச்சபை பிரிவுகளுக்கிடையே ஒற்றுமையை ஏற்படுத்துமாறு எங்களை அழைக்கின்றது. வரலாற்றில் ஏற்பட்ட பிளவுகள் குறிப்பாக 1517ல் லூத்தரன் திருச்சபை பிரிவு, 1534ல் அங்கிலிக்கன் திருச்சபை பிரிவு, 1738ல் மெதடிஸ்த திருச்சபை பிரிவு, 1865ல் இரட்சண்ய சேனை திருச்சபை பிரிவு இவ்வாறாக ஏற்பட்ட திருச்சபை பிரிவுகளுக்கிடையே ஒற்றுமையை ஏற்படுத்த நாம் அழைக்கப்படுகின்றோம்.

• எசேக்கியேல் 37ம் அதிகாரம், இஸ்ராயேல் மக்கள் பாபிலோனியாவில் அடிமைத்தனத்தில் இருக்கும் காலப்பகுதியில் எசேக்கியேல் இறைவாக்கினர் உரைத்த இறைவாக்காகும். இஸ்ராயேலர் வரலாற்றிலே ஒன்றித்த அரசு கி.மு. 10ம் நூற்றாண்டில் வட அரசு, தென் அரசு என பிளவடைந்தது. நிறைவில், தென் அரசு கி.மு.586-539 வரையான காலப்பகுதியில் பாபிலோனியாவில் அடிமைகளாக வாழ்ந்த காலப்பகுதியிலேயே இஸ்ராயேலர் மத்தியில் எசேக்கியேல் இறைவாக்கினர் நம்பிக்கைத் தரும் வார்த்தைகளை உலர்ந்த எலும்புகளின் உவமை வாயிலாக பேசுகின்றார். தமது சொந்த தேசத்திற்கு போகவே மாட்டோம் என வாழ்ந்த இஸ்ராயேலர்கள் மத்தியில் உலர்ந்த எலும்புகளுக்கு இறைவன் உயிர்கொடுக்க முடியுமேயானால் உங்களுக்கும் அவர் சொந்த நாட்டிற்கு கொண்டு போவார் என்ற செய்தியை அவர் காண்பிக்கின்றார்.

• இக்காலத்திலேயே இஸ்ராயேல் மக்கள் தமது படைப்பின் வரலாற்றைப் பற்றி எண்ணலாயினர். இறைவன் இவ்வுலகை ஒழுங்கின்மையிலிருந்தும் வெறுமையிலிருந்தும் படைத்ததாக தொடக்கநூல் (ஆதியாகமம்) 1:1-3ல் நாம் படிக்கின்றோம். ஒழுங்கின்மையிலிருந்தும் வெறுமையிலிருந்தும் அழகான ஓர் உலகத்தை இறைவனால் உருவாக்க முடியுமேயானால் அடிமைத்தன வாழ்வில் ஒழுங்கின்மையும் வெறுமையுமாக உங்கள் வாழ்க்கை காணப்படலாம். இதைக் கூட ஓர் அழகான வாழ்வாக இறைவனால் மாற்றமுடியும் என்ற செய்தியே எசேக்கியேல் இறைவாக்கினர் ஊடாக இஸ்ராயேல் மக்களுக்கு இறைவன் கூறுகின்றார். மேலும், அழிவடைந்து சிதைவடைந்து இருக்கின்ற வட அரசு, தென் அரசு ஆகியவற்றை இறைவன் ஒருமைப்படுத்த அழைக்கின்றார் என்ற வாக்கும் இங்கு காணப்படுகின்றது. இது ஒன்றிப்புக்கான ஓர் அழைப்பாகும். இந்த ஒன்றிப்பு நீதியை அடிப்படையாகக் கொண்டு மேற்கொள்ளப்படும்போது அது நிலைத்திருக்கும் ஒருமைப்பாடாகும். திருப்பாடல் 85:10ல், நீதியும் அமைதியும் ஒன்றையொன்று முத்தமிடுகின்றன என ஆசிரியர் கூறுகின்றார். ஆகவே, ஒன்றிப்பின் மையம் எப்பொழுதும் நீதியை அடித்தளமாகக் கொண்டிருக்க வேண்டும் என்பதை நாம் இங்கு காண்கின்றோம்.

• 1907ம் ஆண்டு முதல் திருச்சபை ஒருமைப்பாட்டு வாரங்கள் அனுஷ்டிக்கப்பட்டு உரோமன் கத்தோலிக்கச் திருச்சபை பிரிவுக்கும் புரட்டஸ்தாந்து திருச்சபை பிரிவினருக்கும் இடையேயான ஒருமைப்பாடு, புரட்டஸ்தாந்து திருச்சபை பிரிவினருக்கும் இளம் சபையினருக்குமிடையேயான ஒருமைப்பாடு போன்ற ஒருமைப்பாடுகள் நம்மிடையே வலம் வருவதை நாம் அவதானிக்கின்றோம். சிறப்பாக இந் ஞாயிற்றுக்கிழமை ஒருமைப்பாட்டு வாரத்திலே, “நீ இறைவனிடத்திலும் சக மனிதரிடத்திலும் உன்னிடத்திலும் அன்பு கூருவாயாக” என்பதே பிரதான கருப்பொருளாகும். எனவே, எமது ஒருமைப்பாடு எப்பொழுதும் அன்பின் மையத்திலே காணப்படவேண்டும் என்பதையே மத்தேயு 5:21-26 வரையுள்ள பகுதி கூறுகின்றது. வழிபாட்டில் ஒப்புரவாகுதல் அவசியமாகின்றது. இந்த ஒப்புரவாகுதல் அன்பின் அடித்தளத்தில் உருவாகும்போது ஒருமைப்பாடு மலரும் என்பதில் சந்தேகம் இல்லை. இவ் ஒருமைப்பாட்டிற்காக நாங்கள் எல்லாவற்றையும் செபத்துடனும் நன்றி அறிதலுள்ள உள்ளத்தோடும் இறைவனுக்கு தெரிவிக்க அழைக்கப்படுகின்றோம் என பிலிப்பியர் 4:6லே படிக்கிறோம். அப்பொழுது எங்கள் உள்ளத்திலே அமைதி நிலைக்கும் என காண்பிக்கப்படுகின்றது.

• எசேக்கியேல் காண்கின்ற கனவு தனித்துவங்களை நாம் பேணியவர்களாக ஒவ்வொருவரும் மற்றவர்களின் வளர்ச்சிக்காகவும் அபிவிருத்திக்காகவும் பாடுபடவேண்டும் என ஏசாயா காண்கின்ற கனவுக்கு ஒத்த கனவாகும். ஏசாயா 11:6-9ல், வேறுப்பட்ட விலங்குகள் ஒன்றாக வாழுகின்றன என்ற செய்தி காண்பிக்கப்படுகின்றது. அவைகள் தங்கள் தனித்துவங்களைப் பேணிக்கொண்டு மற்றவர்களின் வளர்ச்சிக்காகவும் அபிவிருத்திக்காகவும் பாடுபடுவதைப் போன்று ஒவ்வொரு சபைப் பிரிவுகளும் தமது தனித்துவங்களைப் பேணிக்கொண்டு மற்ற சபைப்பிரிவின் வளர்ச்சிக்காகவும் அபிவிருத்திக்காகவும் பாடுபட வேண்டும் என்பதே இன்றைய சவாலாகும்.

• திருச்சபை பிரிவுகளுக்கிடையே மாத்திரம் நாம் ஒருமைப்பாட்டை நாம் ஏற்றுக்கொள்ளாமல் உருவாக்காமல் சமயங்களுக்கிடையேயான ஒருமைப்பாடுகளும் கருத்தியல்களுக்கிடையேயான ஒருமைப்பாடுகளும் இன்று பேசப்படும் ஒன்றாகும். எனவே, வேற்றுமையில் ஒற்றுமையை நாங்கள் காண்பதைப் போன்று சிறப்பாக எமது தூதுப்பணிகளில் நாம் இறைவன் காண்பித்திருக்கின்ற முன்மாதிரியை மையமாகக் கொண்டு பணிமாதிரியை மையமாகக் கொண்டு எங்களை வெறுமையாக்குவதன் ஊடாகவே இவ் இலக்கை எங்களால் அடைய முடியும். யோவான் 13:1-10 வரையுள்ள பகுதியில் ஆண்டவர் இயேசுவின் வெறுமையாக்கல், பிலிப்பியர் 2:5-11ல் அவருடைய வெறுமையாக்கல் இந்த இரண்டு அனுபவங்களும் ஒற்றுமை திருப்பணியில் மிக அவசியமானதாகும். எனவே, நீதியை அடித்தளமாகக் கொண்ட அன்பை மையமாகக் கொண்ட வெறுமையாக்கலை அடித்தளமாகக் கொண்ட ஒருமைப்பாட்டை நோக்கி நாம் அனைவரும் பிரயாணிப்போமாக.

ஆக்கம்: அற்புதம்