indian, flag, national-3602884.jpg

26 ஜனவரி 2024

• நாம் ஒவ்வொருவரும் ஏதோவொரு நாட்டின் குடிமக்கள். எனவே, எமது தேசத்தில் எமக்கு பொறுப்புள்ள உத்தரவாதமுள்ள அனேக பணிகள் காணப்படுகின்றன. ஒவ்வொரு கிறிஸ்தவனும் ஓர் உத்தரவாதமுள்ள பிரஜையாக வாழுமாறு கடவுள் எம்மை அழைக்கின்றார். ஏனெனில், கடவுள் ஓர் அரசியல்வாதி ஆவார். விடுதலைப்பயணம் 3:7ல், மக்களின் விடுதலை தொடர்பாக ஓர் கரிசனை உள்ளவராக கடவுள் காணப்படுகின்றார். இக்கரிசனை அனைத்து பிரஜைகளிடமும் காணப்படவேண்டும் என அவர் எதிர்ப்பார்க்கின்றார்.

• கிறிஸ்தவனுக்கும் அரசுக்கும் இடையேயான தொடர்பு திருமறையில் ஆழமாக வலியுறுத்தப்படுகின்றது. ஆரம்பகாலத்தில் கடவுளை தலைவராக கொண்டு செயற்பட்ட சமூகம் பின்னர் தமக்கு ஓர் அரசன் வேண்டுமென 1 சாமுவேல் 8ம் அதிகாரத்தில் சாமுவேலிடம் விண்ணப்பிக்கிறார்கள். இத்துடன் அரசுள்ள ஓர் சமூகம் இஸ்ராயேல் மக்கள் மத்தியில் உருவாகின்றது. இவ் அரசர்களை உருவாக்கும் பணியில் இறைவாக்கினர்கள் ஈடுபடுவதை நாம் காணலாம். எனினும், கி.மு.721ல் வட அரசு அசீரியர்களாலும், கி.மு.586ல் தென் அரசு பாபிலோனியர்களாலும் அழிக்கப்பட்டதன் பின்னர் ஓர் அரசற்ற சமூகம் உருவாகின்றது. இதன்பின்னர், இஸ்ராயேல் மக்கள் பல்வேறுபட்ட ஆட்சியாளர்களுக்கு அடிமைகளாகக் காணப்படுகின்றனர். பாரசீகர்களுக்கு கி.மு.539-கி.மு.333 வரையும், கிரேக்கர்களுக்கு கி.மு.333-கி.மு.64 வரையும், உரோமர்களுக்கு கி.மு.64இலிருந்து இயேசுவின் காலம் வரைக்கும் மேலும் அதற்கு அப்பாலும் ஒரு அரசாட்சி நிலவியதை நாம் காணலாம்.

• ஆரம்ப காலத்தில் கிறிஸ்தவர்களுக்கும் உரோம அரசுக்குமிடையே நல்லுறவு காணப்பட்டது. பவுல் ஓர் உரோமைக் குடிமகனாக இருந்தமை இதற்கு பிரதானமானதாகும். குறிப்பாக, பிலிப்பியில் பவுல் சிறைக்குள் அடைக்கப்பட்டு அடிக்கப்பட்ட வேளையில் அவரை சிறையிலிருந்து விடுதலை செய்தமையும் பவுலின் வழக்கு செசார் மத்தியில் கொண்டு செல்லப்பட வேண்டுமென்று பவுல் விண்ணப்பித்தமையும் இதற்கான உதாரணங்களாகும். இதற்கு எடுத்துக்காட்டாக உரோமையர் 13:1-10ல் ஒவ்வொரு கிறிஸ்தவனும் அல்லது ஒவ்வொரு குடிமகனும் அரசுக்குக் கட்டுப்பட்டு அரசுக்காக மன்றாட வேண்டும் என்ற தொனியில் பவுல் எழுதுவதை நாம் காணுகிறோம். இது அரசுக்கும் பிரஜைகளுக்குமிடையே நிலவுகின்ற ஒரு நல்லுறவை எடுத்துக்காண்பிக்கின்றது. இதனையே, மாற்கு 12:13-17ல் ஆண்டவர் இயேசுவும் வலியுறுத்துகின்றார்.

• காலம் செல்ல செல்ல கிறிஸ்தவர்களுக்கும் உரோம அரசுக்குமிடையே நல்லுறவு காணப்படவில்லை. கிறிஸ்தவர்கள் இயேசுவை ஆண்டவர் என அறிவித்தமை உரோம அரசை சவாலிட்டமை ஆகும். ஏனெனில், உரோமர்கள் செசாரை அல்லது சீசரையே ஆண்டவர் என அழைத்தனர். மேலும், கிறிஸ்தவர்கள் திருவிருந்து வழிபாட்டை நடாத்துகின்ற வேளையில் இவர்கள் தமது சொந்தக் குழந்தைகளை கொலை செய்து அவர்களின் இரத்தத்தைக் குடித்து சரீரத்தை உண்ணுகிறார்கள் என உரோமர்களால் குற்றஞ்சுமத்தப்பட்டனர். உரோமர்களுக்கு அஞ்சி கற்குகைகளில் இவர்கள் வழிபாடுகளை நடாத்துகின்றபோது கெட்ட நடத்தைகளுக்காக கூடுகின்றனர் என குற்றம் சுமத்தப்பட்டனர். கிறிஸ்தவர்களின் தொகை அதிகரித்து செல்லும்போது எதிர்காலத்தில் இவர்கள் அரசியல் பலம் கொண்டு தம்மை ஆளுவார்கள் என்ற அச்சம் உரோமர்களிடத்தில் காணப்பட்டது. இப்பேர்ப்பட்ட காரணங்களால் உரோமர்கள் கிறிஸ்தவர்களை துன்புறுத்த ஆரம்பித்தனர். இத்துன்புறுத்தல் வரலாறு கி.பி.64ல் இருந்து கி.பி.313 வரை நீடித்ததை நாம் காணலாம்.

• ஓர் பொறுப்புள்ள கிறிஸ்தவனாக ஒவ்வொருவரும் அரசாகங்கத்தின் செயற்பாடுகளை விமர்சிக்கவும் அதற்கு எதிராக தமது கருத்துக்களை வழங்கும் உரிமையும் கொண்டுள்ளார்கள். இதனையே சீர்த்திருத்தவாதியாகிய சூரித் சுவிங்கிலி தனது சிந்தனைக்கூடாகவும் முன்வைக்கின்றார். மேலும், நாம் அரசாங்கத்தின் ஒரு பகுதியாக மாறி அதன் செயற்பாடுகளை அவ்வாறு ஏற்றுக்கொள்வது ஒரு பொறுப்புள்ள உத்தரவாதமுள்ள ஒரு நாட்டின் பிரஜைக்குரிய செயற்பாடு அல்ல. மாறாக, நாங்கள் அரசின் செயற்பாடுகளை விமர்சிக்கும் ஆற்றலைக் கொண்டிருக்க வேண்டும். இதனையே ஆண்டவர் இயேசுவும், “நீங்கள் போய் அந்த நரிக்குச் சொல்லுங்கள்” எனக் கூறியமை ஓர் எடுத்துக்காட்டாகும். எனவே, நாம் ஒரு பொறுப்புள்ள உத்தரவாதமுள்ள பிரஜையாக எமது தேசத்தில் வாழுவோமாக.

ஆக்கம்: அற்புதம்