ash wednesday, lent, spiritual-4823377.jpg

14/02/2024

கிறிஸ்தவ வழிகாட்டியின்படி லெந்து காலம் அல்லது உபவாச நாட்கள் மாசி 14ஆம்
திகதி முதல் ஆரம்பிக்கின்றன. இக்காலம் குருத்தோலை ஞாயிறு, பெரிய வியாழன், பெரிய வெள்ளி, உயிர்த்தெழுந்த ஞாயிறு ஆகியவற்றுடன் நிறைவடைகின்றன. பொதுவாக ஞாயிற்றுக்கிழமை தவிர்ந்து 40 நாட்கள் இதனுள் அடங்குகின்றது. 40 யூதர்களைப் பொறுத்தவரையிலே முக்கியமான எண்ணாகும். 40 வருட கால வனாந்தரப் பயணம் மற்றும் ஆண்டவர் இயேசு 40 நாட்கள் உபவாசமிருத்தல் போன்றவைகளை மையப்படுத்தியே திருச்சபை வழிகாட்டி 40 நாட்கள் உபவாச நாட்களாக கடைப்பிடித்து வருகின்றது.

இன்றைய நாளிலே கடந்த குருத்தோலை ஞாயிறு அன்று பெற்றுக்கொள்ளப்பட்ட
சிலுவைகளை எரித்து சாம்பலாக்கி அதனை மக்களின் நெற்றியிலே பூசுவார்கள். இதனூடாக மனிதன் மண்ணினால் உருவாக்கப்பட்டான். அவன் மண்ணுக்கே திரும்புவான் என்ற கருத்து வலியுறுத்தப்படுகிறது (ஆதியாகமம் 2:7 / தொடக்கநூல் 2:7). எமது வாழ்வில் இச்செயற்பாட்டை நாம் அடிக்கடி நினைந்து கொள்ள வேண்டும்.
இத்திருநாள் அன்று எமது நெற்றிகளில் சிலுவை அடையாளம் சாம்பலினால்
வரையப்படுகின்றது. மாற்கு 8:34 இதன்படி, ஒருவர் என்னை பின்பற்றி வர விரும்பினால்
தன்னைத்தான் வெறுத்து அனுதினமும் தன் சிலுவையைச் சுமந்துகொண்டு என்னைப்
பின்பற்றி வரக்கடவர் என்ற இயேசுவின் சீடத்துவத்திற்கான அழைப்பை மறுபடியும் நாம் சீர்தூக்கிப் பார்க்க அழைக்கப்படுகின்றோம். இத்திருநாளன்று மக்கள் தமது இறந்த உறவுகளின் கல்லறைக்கு சென்று அவர்கள் தொடர்பில் அவர்களின் வாழ்வுக்காகவும் பணிக்காகவும் கடவுளுக்கு நன்றி செலுத்துவர்.

எனவே, இத்திருநாள் இறைவனுக்கு நன்றி செலுத்துவதோடு எம் உறவுகளை நாம்
நினைந்துகொள்ள அழைக்கப்படுகிறோம். (திருப்பாடல் 139:1-3, சங்கீதம் 139:1-3) நாம்
இறைவனையும் சக உறவுகளையும் நினைந்துகொள்வதோடு எம்மிடையே இயற்கை
அழிவுகள், அனர்த்தங்கள் போன்றவற்றால் வாழ்விழந்த ஒவ்வொருவர் தொடர்பாகவும்
குறிப்பாக அப்பாவிகளின் இரத்தம் தொடர்பாக கடவுளுக்கு கணக்கு ஒப்படைக்க வேண்டும் என்ற உண்மையையும் உணர்ந்துகொள்ள அழைக்கப்படுகின்றோம்.

மன்றாடல்


இறைவா, இந்நாட்களில் நாம் நிலையற்றவர்கள் என்பதையும் உமது அழைப்பை
உணர்ந்து கொள்ளவும் மற்றவர்கள் சார்பில் எமக்குள்ள பொறுப்பை அறிந்துகொள்ளவும்
அருள் புரிந்தருளும். ஆமென்

அருட்பணி. அருளம்பலம் ஸ்டீபன்