lent, fast, easter-4792628.jpg

எல்லா சமயங்களிலும் உபவாச நாட்கள் அல்லது விரத நாட்கள் அனுஷ்டிக்கப்படுகின்றன. இந்து சமயத்தில் இறந்த தமது பெற்றோர்களை நினைந்தும் இஸ்லாம் சமயத்தில் றம்ழான் என்னும் பெயரில் உபவாச நாட்கள் கடைப்பிடிக்கப்படுகின்றன. இவ்விரதநாட்கள் மனித ஆன்மீகத்திற்கு அடிப்படையாக அமைகின்றன. கிறிஸ்தவர்களாகிய நாங்கள் இந்நாட்களில் உணவு தவிர்ப்பை மேற்கொள்ளுகின்றோம். ஒருசிலர் 40 நாட்களும் உணவைத் தவிர்த்து பாலையும் பழத்தையும் உண்பர். இன்னுமொரு சிலர் ஒரு நேர உணவை
மாத்திரம் உண்ணுகின்றனர்.

சீர்திருத்தவாதியாகிய சுவிங்லி என்பவரின் காலத்திலிருந்து இந்நாட்களில் மரக்கறி
உணவுகளை உண்ண வேண்டும் என்ற பாரம்பரியம் திருச்சபைக்குள் நுழைந்ததை நாம் காணலாம். எது எவ்வாறாக இருப்பினும் இவ் உணவுத் தவிர்ப்பு எம்மிடையே புதிய
ஆன்மீகத்தை உருவாக்க வேண்டும். இல்லையேல் இது உடற் பருமனைக் குறைப்பதற்கான உணவுத் தவிர்ப்பாகவோ இல்லையேல் மருத்துவ பரிசோதனைக்காக மேற்கொள்ளப்படும் உணவுத் தவிர்ப்பாகவோ அமைந்துவிடும். மேலும் இக்காலங்களில் உணவுத் தவிர்ப்பின் காரணமாக எமக்குள்ளே உருவாகும் பசி உணர்வை நாம் அறிவதனூடாக எம்மிடையே பசிக்கின்றது. பசிக்கின்ற இரந்து கேட்கும் மக்களின் குறைகளை கேட்கவும் அவர்களின் உணர்வகளை மதிக்கவும் அழைக்கப்படுகின்றோம்.

எமக்கு இது ஓர் ஆன்மீக அப்பியாசமாக இருக்கும்போது மறுகரையில் கட்டாயமாக
இவ்வுணவுத் தவிர்ப்பில் ஈடுபடுத்தப்பட்டுள்ள மக்களை நினைந்துகொள்ள வேண்டும்.
இவர்களின் பட்டினிச்சாவுக்கு நாங்களும் காரணம் என்பதை நாம் அறிக்கையிட வேண்டும். ஏனெனில், இவ்வுலகில் 20 வீதமான மக்கள் 80 வீதமான வளங்களையும் 80 வீதமான மக்கள் 20 மீதமான வளங்களையும் அனுபவிக்கின்றார்கள். இதனாலே இந்நிலை தோன்றியுள்ளது. எமது உபவாச நாட்களில் வயிற்றுக்கு மாத்திரமன்றி எமது சிந்தனை, எமது வார்த்தை போன்றவற்றுக்கும் உபவாசம் கொடுக்க வேண்டும். எதை உண்ணுகின்றோம் என்பதையல்ல

மாறாக, எவ்வார்த்தைகள் எம்மிடையே இருந்து வெளிவருகின்றன என்பதைக் குறித்தும் சிந்திக்க வேண்டும் (மாற்கு 7:1-23). அத்துடன், இந்நாட்களில் நாம் பிறரின் தேவைகளை நிறைவு செய்தல், அவர்களில் ஒருவராக நாம் மாறுதல் போன்றவையே உண்மையான உபவாசமாகக் காணப்படுகின்றது (ஏசாயா 58:1-10).

மன்றாடல்
இறைவா, எமது வயிற்றுக்கு மட்டுமன்றி ஏனைய அவயவங்களுக்கும் நாம் உபவாசம்
கொடுக்கவும் எமது உபவாசம் ஏனையவர்களின் வாழ்வு சிறக்கவும் விளம்பரமற்ற முறையில் இதனைக் கடைப்பிடிக்கவும் அருள் புரிந்தருளும். ஆமென்.

அருட்பணி. அருளம்பலம் ஸ்டீபன்