together, hands, prayer-5928481.jpg

பெண்ணியப் பார்வையில் விளக்குகிறார் அருட்சகோதரி. முனைவர். ரொபான்ஸி அ ஹெலன்.


என்ற அழகிய வரிகளில் கடவுள் யார் என்பதை நாம் புரிந்து கொள்கிறோம். கடவுள் தாயுமானவர். நம் வாழ்வில் அவரை அம்மாவாக நம்மை அரவணைத்து அப்பாவாக நம்மை பாதுகாத்து வழிநடத்துவதை நாம் உணர்ந்திருக்கிறோம். ‘தாய் வயிற்றில் உன்னை நான் உருவாக்கும் முன்பே அறிந்திருந்தேன்; (எரே 1:5) அவர் தன்னை ஒரு தாயாக உருவகப்படுத்தியிருப்பதை நாம் பழைய ஏற்பாட்டில் இவ்வாறு காண்கிறோம்.

கடவுள் யார்?

நம் மத்தியில் உறவாடும் இறைவனாக, நம்மைத் தேடி வரும் இறைவனாக, மக்களோடு மக்களாக, அவர் நமக்காக தம் கடவுள் நிலையிலிருந்து இறங்கி வந்து நம்மை மீட்டார். தாயாக அன்பு செய்து, தந்தையாக வழிநடத்தி; நம் மீது தம் அலாதி அன்பைப் பொழிகிறார்.

யூத சமுதாயத்தில் பெண்கள்
யூத சமுதாயத்தில் பெண்கள் இரண்டாம் நிலைக் குடிகளாக கருதப்பட்டனர். பெண்களை யூத சமுதாயத்தில் பெண்கள் தங்களின் தந்தைக்கும், இணையருக்கும் கீழானவர்களாக நடத்தப்பட்டாலும் கடவுள் மீட்பின் வரலாற்றில் ஆண்களுக்கு இணையாக பல பெண்களைத் தேர்ந்தெடுத்தார். கடவுளின் பார்வையில் அனைவரையும் சமம் என்பதை நிருபித்தார். ஆனால் மனிதர்களோ பிரிவினை, ஏற்றத்தாழ்வு, பகைமை நிறைந்தவர்களாக இருக்கிறார்கள். இவற்றிலிருந்து நம்மை விடுவிக்க கடவுள் மீண்டும் களமிறங்கியிருக்கிறார்.

1. பராமரிக்கும் கடவுள்: ஆதாமும் ஏவாளும்
படைப்பின் தொடக்கத்திலிருந்தே நம்மை அன்பு செய்து, அரவணைக்கும் கடவுளாக இருக்கிறார். நம்மோடு வழிநடக்கும் தாயாக, தந்தையாக நம் வாழ்வில் வலம் வருகிறார். அதனாலேயே தம் உருவிலேயே தம்மைப் போலவே இருக்க வேண்டும் என மனிதர்களை படைப்புகளுக்கெல்லாம் சிறந்த படைப்பாக படைத்தார்.
கடவுளின் உருவிலேயே அவர்களைப் படைத்தார்; ஆணும் பெண்ணுமாக அவர்களைப் படைத்தார். (தொ நூ 1: 27).

பின்பு, ஆண்டவராகிய கடவுள், மனிதன் தனிமையாக இருப்பது நல்லதன்று; அவனுக்குத் தகுந்த துணையை உருவாக்குவேன்’ என்றார். (தொ.நூல்2:18). கடவுள் மனிதனின் தனிமையை புரிந்து கொள்ளும் தாயாக காட்சியளிக்கிறார். வாழ்வின் எல்லா நிலைகளிலும் மனிதன் பாவம் செய்த பொழுது, கடவுள் சினமுற்றிருந்தாலும் ஆதாம், ஏவாளை பராமரிக்கும் கடவுளாக களமிறங்குகிறார். பாவத்திலிருந்து விடுவிக்க, நமக்கு மீட்பைத் தேடித் தர இன்றும் நம்மோடு பயணிக்கிறார்.

2. எளியவன் ஆபேலின் குரல் கேட்கும் கடவுள்:
கடவுளுக்கு சிறந்த காணிக்கையை அளித்ததால் பொறாமைக்கு பலியான ஆபேலின் குரலை ஆண்டவர் கேட்கின்றார். விரைந்து வந்து, பாதிக்கப்பட்டவனுக்காக நீதி கோருகிறார்.


ஆண்டவர் காயினிடம், ‘உன் சகோதரன் ஆபேல் எங்கே?’ என்று கேட்டார். அதற்கு அவன், ‘எனக்குத் தெரியாது. நான் என்ன, என் சகோதரனுக்குக் காவலாளியோ?’ என்றான். அதற்கு ஆண்டவர், ‘நீ என்ன செய்துவிட்டாய்! உன் சகோதரனின் இரத்தத்தின் குரல் மண்ணிலிருந்து என்னை நோக்கிக் கதறிக் கொண்டிருக்கிறது. இப்பொழுது, உன் கைகள் சிந்திய உன் சகோதரனின் இரத்தத்தைத் தன் வாய்திறந்து குடித்த மண்ணை முன்னிட்டு, நீ சபிக்கப்பட்டிருக்கின்றாய்.(தொ.நூ 4: 9-11)

3. துன்பத்தில் துணை நிற்கும் கடவுள்: பணிப்பெண் ஆகார்:
ஆதரவற்று, தன் உரிமையாளர் சாராவுக்கு அஞ்சி ஓடிய பணிப்பெண் ஆகாரை மீட்டு அவள் வழியாக ஒரு சந்ததியை கடவுள் உருவாக்குகிறார்.
பின்பு, ஆண்டவரின் தூதர் அவளிடம், ‘உன் வழி மரபினரை யாரும் எண்ண முடியாத அளவுக்குப் பெருகச் செய்வேன்’ என்றார். மீண்டும் ஆண்டவரின் தூதர் அவளிடம், இதோ! கருவுற்றிருக்கும் நீ ஒரு மகனைப் பெற்றெடுப்பாய். அவனுக்கு இஸ்மயேல் எனப் பெயரிடுவாய். ஆபேலின ஏனெனில், உன் துயரத்தில் ஆண்டவர் உனக்குச் செவிசாய்த்தார். அப்பொழுது, ‘என்னைக் காண்பவரை நானும் இங்கே கண்டேன் அல்லவா?’ என்று அவள் சொல்லித் தன்னுடன் பேசிய ஆண்டவரை, ‘காண்கின்ற இறைவன் நீர்’ என்று பெயரிட்டழைத்தாள். (தொநூ 16: 10-11, 13). அடிமைப் பெண்ணின் கூக்குரலுக்கு செவிசாய்த்து துன்பத்தில் துணை நிற்கிறார்.

4. நீதி வழங்கும் கடவுள்: தாமார்
யூதாவின் மருமகளான தாமார் தம் மாமனாரை எதிர்த்து தமக்கு நீதி வேண்டினாள். யூத சமூகம் அவளை பாவியாக சித்தரித்தது. அவளின் பக்கம் நியாயம் இருந்தது. ‘அவள் என்னைக் காட்டிலும் நேர்மையானவள் என யூதாவின் வாயிலிருந்தே சான்று பகரச் பகர்ந்தார். (தொ நூ 38: 25-26)

5. மீட்பின் கடவுள் : மருத்துவப் பெண்கள் சிப்ரா, பூவா
மீண்டும் தான் உருவாக்கிய இனத்தைக் காக்க மோசேவைத் தேர்ந்தெடுக்கிறார். அவரைக் காக்க கடவுள் பல பெண்களைத் தேர்ந்தெடுத்ததாக நாம் விடுதலைப் பயண நூலில் காண்கிறோம். பாரவோன் மன்னன் எபிரேயரின் ஆண் குழந்தைகளைக் கொல்ல திட்டமிடுகிறான். எபிரேயரின் மருத்துவப் பெண்களான சிப்ரா, பூவா என்பவர்களிடம் எகிப்திய மன்னன் கூறியது: ‘எபிரேயப் பெண்களின் பிள்ளைப் பேற்றின்போது நீங்கள் பணிபுரிகையில் குறிகளைக் கவனியுங்கள்; ஆண்மகவு என்றால் அதைக் கொன்றுவிடுங்கள்; பெண்மகவு என்றால் வாழட்டும்’. ஆனால், அந்த மருத்துவப்பெண்கள் கடவுளுக்கு அஞ்சியிருந்ததால் எகிப்திய மன்னன் தங்களுக்குக் கூறியிருந்தபடி செய்யவில்லை.

மாறாக, ஆண் குழந்தைகளையும் அவர்கள் வாழவிட்டார்கள். மன்னனின் கட்டளையை துணிவுடன் மீறுகின்றனர். கடவுளுக்கு கீழ்ப்படிகின்றனர். இதன்பொருட்டுக் கடவுள் மருத்துவப் பெண்களுக்கு நன்மை செய்தார். இஸ்ரயேல் மக்களையும் எண்ணிக்கையில் பெருகச் செய்தார். அவர்கள் ஆள்பலம் மிக்கவர் ஆயினர். இம்மருத்துவப் பெண்கள் கடவுளுக்கு அஞ்சியிருந்ததால், அவர் அவர்கள் குடும்பங்களைத் தழைக்கச் செய்தார். இஸ்ராயேல் மக்களின் விடுதலைப்பயணமே பெண்களின் உதவியுடன் ஆரம்பமாகிறது.

6. பராமரிக்கும் கடவுள் : மோசேயின் தாயும், சகோதரியும்:
இவ்வாறிருக்க, லேவி குலத்தவர் ஒருவர் லேவி குலப்பெண்ணொருத்தியை மணம் செய்து கொண்டார். அவள் கருவுற்று ஓர் ஆண்மகவை ஈன்றெடுத்தாள்; அது அழகாயிருந்தது என்று கண்டாள்; மூன்று மாதங்களாக அதனை மறைத்து வைத்திருந்தாள்.இதற்கு மேல் அதனை மறைத்து வைக்க இயலாததால், அதனுக்காகக் கோரைப்புல்லால் பேழை ஒன்று செய்து அதன்மீது நிலக்கீல், கீல் இவற்றைப் பூசினாள்; குழந்தையை அதனுள் வைத்து நைல்நதிக் கரையிலுள்ள நாணல்களுக்கிடையில் விட்டுவைத்தாள். அதற்கு என்ன ஆகுமோ என்பதை அறிந்துகொள்ளக் குழந்தையின் சகோதரி தூரத்தில் நின்று கொண்டிருந்தாள். (விப 2: 1-4). சமூகம் புறக்கணிப்பதை கடவுள் உயர்வாக எண்ணினார். அவர்கள் மூலம் மீட்பைக் கொணர்ந்தார்.

7. பராமரிக்கும் கடவுள் : பாரவோன் மன்னனின் மகள்
அப்போது பார்வோனின் மகள் நைல்நதியில் நீராட இறங்கிச் சென்றாள். அவள் தோழியரோ நைல் நதிக்கரையில் உலாவிக்கொண்டிருந்தனர். அவள் நாணலிடையே பேழையைக் கண்டு தன் தோழி ஒருத்தியை அனுப்பி அதை எடுத்தாள்; அதைத் திறந்தபோது ஓர் ஆண் குழந்தையைக் கண்டாள்; அது அழுதுகொண்டிருந்தது. அதன் மேல் அவள் இரக்கம் கொண்டாள். இது எபிரேயக் குழந்தைகளுள் ஒன்று’ என்றாள் அவள். உடனே குழந்தையின் சகோதரி பார்வோனின் மகளை நோக்கி, ‘உமக்குப் பதிலாகப் பாலூட்டி இக்குழந்தையை வளர்க்க, எபிரேயச் செவிலி ஒருத்தியை நான் சென்று அழைத்து வரட்டுமா?’ என்று கேட்டாள்.

பார்வோனின் மகள் அவளை நோக்கி, ‘சரி. சென்று வா’ என்றாள். அந்தப் பெண் சென்று குழந்தையின் தாயையே அழைத்து வந்தாள். பார்வோனின் மகள் அவளை நோக்கி, ‘இந்தக் குழந்தையை நீ எடுத்துச் செல். எனக்குப் பதிலாக நீ பாலூட்டி அதனை வளர்த்திடு. உனக்குக் கூலி கொடுப்பேன்’ என்றாள். எனவே, குழந்தையை எடுத்துச் சென்று அதனைப் பாலூட்டி வளர்த்தாள் அப்பெண். குழந்தை வளர்ந்தபின் அவள் பார்வோனின் மகளிடம் அவனைக் கொண்டுபோய் விட்டாள். அவள் அவனைத் தன் மகன் எனக்கொண்டாள். (விப 2: 5-10). இஸ்ரயேலரை மீட்க கடவுள் மோசேவைத் தேர்ந்தெடுத்தார். அவரைப் பாதுகாத்து, பாரவோனின் கையிலிருந்து விடுவிக்க மன்னனின் மகளையே கடவுள் தேர்ந்தெடுக்கிறார். ஒரு புறவினத்துப் பெண்ணையும் தம் திட்டத்திற்காக பயன்படுத்துகிறார்.

8. சமத்துவத்தின் கடவுள்: செலொபுகாதின் புதல்வியர்
யோசேப்புப் புதல்வரான மனாசே குடும்பங்களைச் சார்ந்தவர் செலொபுகாத்து. இவர் மனாசேயின் மைந்தர் மாக்கிரின் புதல்வர் கிலியாதுக்குப் பிறந்த ஏபேரின் மகன், இவருக்கு மக்லா, நோகா, ஒக்லா, மில்கா, திர்சா என்ற புதல்வியர் இருந்தனர். அவர்கள் வந்து மோசே, குரு எலயாசர், தலைவர்கள், மக்கள் கூட்டமைப்பினர் அனைவர் முன்னிலையில் சந்திப்புக் கூடார வாயிலருகில் நின்று கூறியது: எங்கள் தந்தை பாலை நிலத்தில் இறந்து போனார். கோராகைச் சார்ந்தவர்கள் ஆண்டவருக்கு எதிராகக் கூடிய கூட்டத்தினுள் அவர் இல்லை. அவர்தம் பாவத்துக்காகவே இறந்தார். அவருக்குப் புதல்வர்கள் இல்லை. இப்போதும் தமக்குப் புதல்வர் இல்லாத காரணத்துக்காக எங்கள் தந்தையின் பெயர் அவர் குடும்பத்திலிருந்து ஏன் நீக்கப்பட வேண்டும்? எங்கள் தந்தையின் சகோதரர்களிடையே எங்களுக்கும் பங்கு தாருங்கள்.

மோசே அவர்கள் வழக்கை ஆண்டவரிடம் கொண்டு வந்தார். ஆண்டவர் மோசேயிடம் கூறியது: செலொபுகாதின் புதல்வியர் கேட்பது சரியே; அவர்கள் தந்தையின் சகோதரரிடையே அவர்களுக்கும் உரிமைச் சொத்தில் பங்கு கொடுத்து, அவர்கள் தந்தையின் உரிமைச் சொத்து அவர்களுக்குக் கிடைக்கச் செய். (எண்ணிக்கை 27: 1-11)

9. துணைநிற்கும் கடவுள் : யோசுவாவின் ஒற்றர்களும் இராகாபும்
யோசுவா அனுப்பிய ஒற்றர்களைப் பாதுகாக்க கடவுள் ஏன் கனானியப்பெண் இராகாபைத் தேர்ந்தெடுக்க வேண்டும்? அதுவும் அந்நாட்டில் விலைமாது என முத்திரை குத்தப்பட்ட பெண்ணிடம் ஏன் அந்த ஒற்றர்கள் செல்ல வேண்டும்? உங்கள் முன்னிலையில் எங்கள் உள்ளம் தளர்ந்திருக்கிறது. ஏனெனில், உங்கள் கடவுளாகிய ஆண்டவர், மேலே விண்ணுலகம் முதல் கீழே மண்ணுலகம் அனைத்திற்கும் கடவுள். நான் உங்களுக்கு இரக்கம் காட்டியதுபோல் நீங்களும் என் தந்தை வீட்டிற்கு இரக்கம் காட்டுவீர்கள் என்று இப்பொழுது எனக்கு ஆண்டவரின் பெயரால் வாக்குறுதி அளியுங்கள். நம்பத் தகுந்த அடையாளம் ஒன்றினை எனக்குக் கொடுங்கள். (யோசுவா 1: 1-20). கடவுள் பார்வையில் அனைவரும் சமம். அவர் எதையும் தீட்டாக எண்ணவில்லை. கட்டுவோர் புறக்கணித்த கல்லே கட்டடத்தின் மூலைக்கல் என்பதை கடவுள் நிருபிக்கிறார்.

கடவுள் யாரை, எவ்வாறு, யார் மூலமாகத் தேர்ந்தெடுக்கிறார் என நமக்குத் தெரியாது. ஆனால் உரிய நேரத்தில் தமக்குரியவர்களை அவர் தேர்ந்தெடுப்பார். பெண்கள் இரண்டாம் குடிகள், ஆண்களுக்கு கீழானவர்கள் என அன்றிலிருந்து இன்று வரை சமூதாயம் சொல்கிறது. ஆனால் கடவுளோ பெண்களைத் தேர்ந்தெடுத்து வழிநடத்துகிறார். பைபிளை எழுதியது ஆண்கள் என்றாலும், மீட்பின் வரலாற்றில் பெண்களின் பங்கு மறைக்கப்பட்டாலும், கடவுள் அவர்களின் மாண்பை உயர்த்துகிறார்.

10. வழிநடத்தும் கடவுள் : தெபோரா
கானானியர்களை வெற்றி கொள்ள கடவுள் முதல் பெண் நீதிபதியாக இறைவாக்கினர் தெபோராவைத் தேர்ந்தெடுக்கிறார். இஸ்ரயேல் மக்கள் ஆண்டவரின் பார்வையில் தீயதெனப்பட்டதை மீண்டும் செய்தனர். ஆட்சோரை ஆண்ட கானானிய மன்னன் யாபினிடம் ஆண்டவர் அவர்களை ஒப்படைத்தார். அவனுடைய படைத்தலைவன் சீசரா அரோசத்கோயிமில் வாழ்ந்து வந்தான். இஸ்ரயேலர் ஆண்டவரை நோக்கிக் கூக்குரலிட்டனர். ஏனெனில், அவனிடம் தொள்ளாயிரம் இரும்புத் தேர்கள் இருந்தன. அவன் இருபது ஆண்டுகள் இஸ்ரயேலரைக் கடுமையாக ஒடுக்கினான். அச்சமயத்தில் இஸ்ரயேலருக்கு இறைவாக்கினரும் இலப்பிதோத்தின் மனைவியுமான தெபோரா நீதித் தலைவியாக இருந்தார். (நீ.த 4: 1-4)

11. முன் நிழலாக கடவுள்: அன்னா
பல ஆண்டுகள் குழந்தை இல்லாமல் இழிவாக நடத்தப்பட்ட போதும், கடவுள் மேல் கொண்ட தீராத நம்பிக்கையின் விளைவாக சாமுவேலை கடவுள் அன்னாவுக்கு பரிசாகக் கொடுக்கிறார். தன் முதல் மகனின் உயிரை அன்பிலும் மரியாதையிலும் கடவுளுக்குக் கொடுத்தாள். அவளுடைய செயல்கள் கடவுளின் பார்வையில் உயர்வாக இருப்பதைக் காண்கிறோம். (1சாமுவேல் 1:2–2:21)

12. இரக்கத்தின் கடவுள் ரூத்து:
மத்தேயு நற்செய்தியில் காணப்படும் இயேசுவின் சந்ததியில் குறிப்பிடப்பட்டுள்ள ஐந்து பெண்களில் ரூத், தாமார், ராகாப், ‘உரியாவின் மனைவி’ (பெத்சேபா) மற்றும் மேரி ஆகியோருடன் ஒருவர். காத்தரின் டூப் சாகன்ஃபீல்ட், ரூத் என்பவர் அன்பான இரக்கத்தின் ஒரு முன்மாதிரி என்று வாதிடுகிறார் அவர் மற்றவர்களின் நல்வாழ்வை ஊக்குவிக்கும் வழிகளில் செயல்படுகிறார்.(ரூத் 1:8-18)

13. துணையாய் வரும் கடவுள்: எஸ்தர்
எஸ்தர் பாரசீக புலம்பெயர்ந்த நாடுகளில் வாழும் ஒரு இளம் யூதப் பெண், பேரரசின் அனைத்து யூதர்களையும் படுகொலை செய்ய .நீதிமன்ற அதிகாரி ஆமான் மன்னரை அங்கீகரிக்கும்படி வற்புறுத்துகிறார். எஸ்தரோ மன்னரின் தயவைக் பெற்று, அரசியாகி, யூத மக்களை அழிவிலிருந்து காப்பாற்ற தனது உயிரைப் பணயம் வைக்கிறார். அதில் வெற்றியும் பெறுகிறார். தம்மிடம் வந்தவரை மொர்தெக்காயிடம் எஸ்தர் அனுப்பி, ‘நீர் போய், சூசாவில் உள்ள யூதர்களை ஒன்றுகூட்டும். எல்லாரும் எனக்காக உண்ணா நோன்பிருங்கள். இரவு பகலாக மூன்று நாள்களுக்கு உண்ணவோ பருகவோ வேண்டாம். நானும் என் பணிப்பெண்களுங்கூட நோன்பிருப்போம். அதன்பின் சட்டத்துக்கு எதிராக நான் மன்னரிடம் செல்வேன். இதனால் நான் இறக்க வேண்டியிருந்தாலும் சரியே’ என்றார். (எஸ்தர் 4: 15-16)

14. போரிடும் கடவுள் : யூதித்து
கைம்பெண்ணான யூதித்தை கடவுள் ,ஸ்ரயேல் மக்களைக் காக்க தேர்ந்தெடுக்கிறார். நான் சொல்வதைக் கேளுங்கள். நான் செய்யப்போகும் செயல் நம் வழிமுறையினர் நடுவே தலைமுறை தலைமுறையாய் நினைவுகூரப்படும். நீங்கள் இன்று இரவு நகர வாயில் அருகே வந்து நில்லுங்கள். அப்போது நான் என் பணிப்பெண்ணுடன் வெளியே செல்வேன். நீங்கள் நகரை நம் பகைவர்களிடம் கையளிக்கப்போவதாக உறுதியளித்த அந்த நாளுக்குள் ஆண்டவர் என் வழியாக இஸ்ரயேலை விடுவிப்பார். (யூதித்து 8: 32-33)

கடவுள் எளிமையிலும் தாழ்மையிலும் வாழ்ந்தவர்களை தேடி கண்டுபிடித்து நலிவடைந்தவர்களின் வாழ்வில் மாற்றத்தைக் கொண்டு வருகிறார். பழைய ஏற்பாட்டில் ஒவ்வொரு பெண்களும் கடவுளின் பிரதிநிதிகளாக, அவரின் கைகளாக, கால்களாக, இருளில் கிடந்த மக்களை மீட்க, அடிமைப்பட்டவர்களை விடுவிக்க, இவர்கள் இல்லையேல் மீட்பு இல்லை என்னும் நிலையை ஏற்படுத்துகிறார்.

அருட்சகோதரி. முனைவர். ரொபான்ஸி அ ஹெலன்.

கத்தோலிக்க அருட்சகோதரி