முதன்முறையாக, 229 பேர்களை மட்டுமே கொண்ட சோம்பென் பழங்குடியினர் (Shompen Tribe) சமூகத்திலிருந்து 7 பேர் நடந்துகொண்டிருக்கும் மக்களவைத் தேர்தலில் வாக்குச்செலுத்திய செய்தி அனைவருடைய கவனத்தையும் ஈர்த்தது. இன்று 18 வயதிற்கு மேற்பட்ட அனைவரும் வாக்களிக்க முடியும் என்ற உரிமை 1950க்கு முன் இந்தியாவில் நடைமுறையில் சட்டமாக இல்லை. இது நம்மில் எத்தனைபேருக்கு தெரியும்?

Credit: PTI Photo 

சுதந்திரத்திற்கு முன்வரை இந்திய மக்கள் தொகையில் 13% பேர் மட்டுமே வாக்களிக்கும் உரிமையை பெற்று இருந்தார்கள். 1901 ஆம் ஆண்டின் இந்திய கவுன்சில்கள் சட்டத்தின் படி தேர்ந்தெடுக்கப்பட்ட நபர்களுக்கு மட்டுமே வாக்களிக்க சலுகையளிக்கப்ட்டது. தனியார் சொத்து வைத்துள்ளோர், நில உடைமையாளர்கள், நகராட்சிக்கு வருமானம் வரி செலுத்துவோர் ஆகியோர் இதில் அடங்குவர்.

சைமன் குழுவும் அம்பேத்கரும்

பிரிட்டிஷ் இந்தியாவில் அரசியல், சட்ட சீர்த்திருத்தங்களை மேற்பார்வையிட்டு பரிந்துரைகளை வழங்க சைமன் குழு 3 பிப்ரவரி 1928இல் இந்தியாவுக்கு வந்தது. இதில் இந்திய பிரதிநிதிகள் நியமிக்கப்படாதபடியால் இந்திய காங்கிரஸ், முஸ்லீம் லீக் கட்சிகள் இக்குழுவிற்கு தங்களது ஒத்துழைப்பைத் தர மறுத்தனர். எனவே 1928 பிப்ருவரி மற்றும் மே மாதத்தில் அனைத்துக் கட்சி கூட்டம் நடத்தப்பட்டு எதிர்கால இந்தியாவின் அரசியலமைப்பு சட்டதிற்கான வரைவுகளை மேற்கொள்ள நேரு தலைமையில் ஒரு குழு நியமிக்கப்பட்டது. இக்கூட்டத்திற்கு அம்பேதக்ரோ அவரின் அமைப்பைச் சார்ந்தவர்களோ அழைக்கப்படவில்லை.

நேரு குழு தங்களது வேலைகளை தொடங்கிய வேளையில், 29 மே 1928 ஆம் ஆண்டு பகிஷ்கிருத ஹிதகாரணி சபா (Bahishkrit Hitakarini Sabha) சார்பாக சைமன் குழுவிற்கு தனது இரண்டு அறிக்கைகளை சமர்ப்பித்தார் அம்பேத்கர். எதிர்கால அரசியலமைப்பில் வயது வந்தோர் அனைவருக்கும் வாக்குரிமை (Universal Adult Franchise) என்ற ஜனநாயக அரசியலமைப்புக் கோட்பாட்டை அம்பேத்கர் அறிக்கை வலியுறுத்தியது. மேலும் மாண்டேகு-செம்ஸ்போர்டு (Montagu- Chelmsford Report 1930- 1931) உறுதியளித்த தாழ்த்தப்பட்ட வகுப்பினருக்கான அரசியல் பிரதிநிதித்துவம், சட்டப் பாதுகாப்பு போன்றவை எவ்வாறு சவுத்பரோ குழுவினரால் (Southborough Committee ) காற்றில் பறக்கவிடப்பட்ட வாக்குறுதிகளாக மாறியது என்பதைக் குறிப்பிட்டார் அம்பேத்கர்.

“தேர்தல் என்றால் என்ன”- வரையறுத்த அம்பேத்கர்

அம்பேத்கரின் கருத்துப்படி” பொறுப்புள்ள அரசாங்கத்தின் பார்வையிலிருந்து தேர்தல் என்பது கோட்பாட்டளவில் சரியானது என்பது மட்டுமின்றி, அரசியல் கல்வியின் நோக்குநிலையிலிருந்து பார்க்கும்போது நடைமுறையிலும் அவசியமானது. ஒவ்வொரு சமூகத்தினருக்கும் அரசியல் கல்வி பெறுவதற்கான வாய்ப்பு கட்டாயம் இருக்க வேண்டும். வாக்குரிமையைப் பயன்படுத்துவதன் மூலம் அல்லாமல் வேறு வழியில் அதை அடைய முடியாது,

நாட்டின் அமைச்சரவையில் தாழ்த்தப்பட்ட வகுப்பினருக்கு இடம் கிடைத்தாலொழிய, அரசியல் சீர்திருத்தங்களை அறிமுகப்படுத்துவதால் அவர்களுக்கு எந்தப் பெரிய நன்மையும் கிடைக்காது என்றும், அமைச்சரவையின் பிரதிநித்துவதால் மட்டுமே இவர்கள் அரசாங்கத்தின் கொள்கையில் செல்வாக்கு செலுத்த முடியும் என்றும் குறிப்பிட்டு, தாழ்த்தப்பட்ட வகுப்பினரின் பிரதிநிதிக்கு அமைச்சரவையில் கட்டாயமாக இடமளிக்க வேண்டும்” என்று வலியுறுத்தினார்.

தூரகாட்சியாளராகிய அம்பேத்கர் The Foresighted Ambekar

ஏற்கனவே பல நாடுகளில் நடைமுறையில் இருந்த (Universal Adult Franchise) என்ற முறையை வலியுறுத்தியதால் இன்று சாதி, கல்வி, நிலவுடைமை, பாலினம் என்ற எந்தவிதமான தடைகளும் இன்றி நம்மால் வாக்களிக்கமுடிகிறது. 1928 முதல் 1950 அதாவது 22 ஆண்டுகள் மிக நீண்ட உரையாடல்கள், விவாதங்களுக்கு பிறகே இந்த மாபெரும் ஜனநாயக முறை நடைமுறைப்படுத்தப்பட்டது. ஆண்களை போல அனைத்துப் பெண்களுக்கும் வாக்குரிமை வழங்கப்படவேண்டும் என்பதை அம்பேத்கர் வலியுறுத்தினார்.
அம்பேதக்கர் சமர்ப்பித்த ஆதாரங்கள், புள்ளிவிவரங்கள், மேற்கோள்கள் அனைத்தும் தாழ்த்தப்பட்ட வர்க்கத்தினர், நிலமற்றவர்கள், பிராமணர் அல்லாதவர்கள், பெண்கள் என சமூகத்தில் வாக்குரிமை மறுக்கப்பட்ட 83% பேரின் பார்வையில் இருந்து தொடுக்கப்பட்டன.

“ஆகஸ்ட் 1928இல் நேரு அவர்களின் குழுவால் சமர்ப்பிக்கப்பட்ட அறிக்கையில் வயது வந்தோருக்கான வாக்குரிமை, கல்வி, உரிமைகள் போன்றவை இடம் பெற்றன, இதில் அம்பேதக்ரின் தாக்கம் பிரதிபலித்தது. இக்குழுவினால் தாழ்த்தப்பட்ட வர்க்கத்தினருக்கு சட்டமன்றங்களில் எவ்வித சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்படவில்லை என்பதை சுட்டிக்காட்டும் விதமாக இவ்வறிக்கையை பிராமணர் அல்லாத மற்றும் தாழ்த்தப்பட்ட வர்க்கத்தினரின் பார்வைகளை உள்வாங்காத அறிக்கை எனவும், பிராமண சாதி மேலாதிக்க அதிகாரங்களை தொந்தரவு செய்யாமல் அதிகாரத்தை அடையவதற்கு எடுக்கப்படும் முயற்சியே இது எனவும் திறனாய்வு செய்தார் அம்பேத்கர்.

இந்திய அரசியல் அமைப்பு உருவாக்க நடந்த உரையாடல்களில், வயது வந்தோருக்கான வாக்குரிமை எனும் உலகளாவிய நடைமுறையை முதன்முதலாக அறிமுகப்படுத்திய பெருமை அம்பேதக்ரையே சாரும்”- என்பதை அனுராக் பாஸ்கர் தனது நூலான The Foresighted Ambekar பதிவுசெய்கிறார்.

23 அக்டோபர் 1928இல் சைமன் குழு சில சந்தேகங்களுக்கு பதில் அளிக்க அம்பேத்காரை அழைக்கிறது, அங்கு அவர் பதிவு செய்த ஆதாரங்களும், வாதங்களும் அவருடைய சட்ட நுண்ணறிவையையும் எந்தளவு சமூகத்தை புரிந்து வைத்துள்ளார் என்பதையும், மனிதநேயத்தை எவ்வாறு சட்ட ரீதியாக நடைமுறை படுத்த எத்தனித்தார் என்பதையும் விளக்குகிறது.

தாழ்த்தப்பட்ட வகுப்பினர் அரசியலமைப்பு ரிதியாக தனித்துவமான மற்றும் சுதந்திரமான சிறுபான்மையினராகக் கருதப்படவேண்டும். பெரும்பான்மையினரால் ஒடுக்கப்பட்டு, உரிமைகள் மறுக்கப்பட்ட சிறுபான்மையினர் சமூகமே அரசியல் கரிசனை கொடுக்கப்பட வேண்டும். ஏனெனில் அவர்களே இதற்கு தகுதியுடையவர்கள்.

பிரிட்டிஷ் இந்தியாவில் உள்ள மற்ற சிறுபான்மையினரை விட தாழ்த்தப்பட்ட வகுப்பு சிறுபான்மையினருக்கு மிகப் பெரிய அரசியல் பாதுகாப்பு தேவை. இவர்களே கல்வியில் பின்தங்கிய, பொருளாதாரத்தில் ஏழ்மையுடைய, சமூக அடிமைத்தனத்தையும் மற்றும் வேறு எந்த சமூகமும் பாதிக்கப்படாத சில கடுமையான அரசியல் இயலாமையை எதிர்கொள்க்கிறார்கள்.

உரிமைமறுக்கப்பட்டவர்களின் பிரதிநிதி அம்பேத்கர்

பாம்பே மாகாண குழு 7 மே 1929 அன்று சைமன் குழுவிற்கு தங்களுடைய பரிந்துரையை சமர்ப்பித்தது. ஆனால். அம்பேதகர் சில பரிந்துரைகளின் சிக்கல்களை சுட்டிக்காட்டி அதில் கையொப்பம் இட மறுத்தார்.

எனது சகநண்பர்கள் சில முன் தீர்மானங்களை மனதில் கொண்டு அனைவருக்கும் வாக்குரிமை வழங்க மறுக்கினறனர்.

  • தனியார் சொத்தை வைத்திருப்பவர்கள் ஓட்டுரிமைக்கு தகுதியானவர் என்ற பரிந்துரை முற்றிலுமாக தவறு. தனியார் சொத்தினை வைத்திருக்கக்கூடிய முதலாளிகள் தொடக்கத்தில் இருந்து தொழிலாளர்களுக்கு எதிரான கூட்டு வாழ்வை நிர்ணயிக்கின்றனவர்களாக இருக்கின்றார்கள். எனவே இந்த நிலமற்ற கூலித் தொழிலாளிகளின் வாக்குரிமையே அவர்கள் வாழ்வியில் புதிய மாற்றத்தை ஏற்படுத்தும். எனவே தனியார் சொத்தை வைத்திருப்பவர்கள் ஓட்டுரிமைக்கு தகுதியானவர் என்ற பரிந்துரை கைவிடப்பட வேண்டும் என்பதை அவர் வலியுறுத்தினார்.
  • இரண்டாவதாக, கல்வியறிவின்மையை காரணம் காட்டி வாக்குரிமை மறுப்பதை கடுமையாக எதிர்த்தார் மும்பை அரசாங்கம் பல ஆண்டுகளாக புறக்கணிக்கப்பட்ட மக்களுக்கு கல்வியறிவை கொடுப்பதை தவிர்த்திருக்கிறது. சமுதாயத்தில் உயர் வகுப்பில் இருக்கக்கூடிய மக்களுக்கு மட்டுமே கல்வி அறிவு கொடுக்கப்பட்டிருக்கிறது. எனவே, கல்வியறிவின்மைக்கு அரசாங்கம் தான் காரணமே ஒழிய வெகுஜன மக்கள் அல்ல. எனவே அவர்கள் அனைவருக்கும் வாக்குரிமை வழங்க வேண்டும் என்பதை வலியுறுத்துகிறார்.
  • அனைவருக்கும் வாக்குரிமை படிப்படியாகயம் மெதுவாகவும் கொடுக்கப்பட வேண்டும் என்ற கொள்கையையும் ஏற்கவில்லை. அவ்வாறு செய்வது பின்னர் பிறக்கவிருக்கும் குழந்தைகளுக்கு எப்போதும் கிடைக்கவிருக்கும் நன்மையை மறுப்பதற்கு சமம் என்கிறார்.

அண்ணல் அம்பேத்கர் 1928 முதல் 1950 வரை சமயசார்பற்ற அனைவரின் பாதுகாப்பையும் உறுதிசெய்கிற இந்திய அரசியலமைப்பு சட்டம் உருவாவதற்கு தன்னுடைய அறிவற்றலையும் உடலுழைப்பு தியாகமாக கொடுத்திருக்கின்றார். இவையனைத்தும் எளிமையாக நடந்துவிடவில்லை, மிக நீண்ட நெடிய போராட்டத்தின் வழியாகவே நடைமுறைப்படுத்தப்பட்டு, அனைவருக்கும் வாக்குரிமையும் கிடைத்திருக்கிறது.

அனைவருக்கும் வாக்குரிமை கிடைப்பதற்கும் நேரு குழுவின் பங்களிப்பும் உதவியது, ஆனால் தனியாளாக அம்பேத்கர் செய்த பல்வேறு ஆய்வுகளையும். எடுத்துக்காட்டுகளையும், நடைமுறையில் நடந்த சட்டமீறல்களையும், நிர்வாகத்தில் உயர் சாதியினர் செய்த தவறான நிர்வாக அணுகுமுறைகளையும் ஆவணமாக பதிவு செய்துள்ளதையும் அவரது சமூக அக்கறையையும் ஒப்படைப்பையும் வெளிப்படுத்துகிறது.

தாழ்த்தபட்ட வகுப்பினரை கட்டாயமாக அரசாங்கத்தில் இணைத்தல் (Mandatory Inclusion), அவர்களுக்கு சட்டப்பாதுகாப்பு கொடுத்தல் (Legal Safeguard), அவர்களை ஒரு தனித்துவமான சுதந்திர சிறுபான்மை அங்கீகரித்து (A distinct Independent Minority) அரசியல் அமைப்பின் வழியாக அவர்களின் உரிமைபாதுகாப்பிற்கு உறுதியளிக்கவேண்டும் (Constitutional Guarantee) என்பன அவரது சமரசமற்ற கருத்தியலாக இருந்தது.

The Foresighted Ambekar- Anurag Bhaskar

அம்பேத்கர், தாழ்த்தப்பட்ட வகுப்பினருக்கு மட்டுமல்ல, 83 % வாக்குரிமை மறுக்கப்பட்டவர்களாகிய பிராமணர் அல்லாதவர்கள், பெண்கள், நிலமற்றவர்கள், கூலித் தொழிலாளிகள் என பின்தங்கிய அனைவரின் உரிமைகளுக்காகவும் செயல்பட்டார்.

உண்மையாகவே அம்பேத்கர் இன்றைக்கு மட்டுமல்ல என்றைக்கும் பொருத்தமுடையவரே.

ஜெபசிங் சாமுவேல்

Courtesy: The Foresighted Ambekar- Anurag Bhaskar
https://www.legalserviceindia.com/legal/article-8595-a-historical-perspective-on-universal-adult-suffrage-and-it-s-importance.html
https://lawcorner.in/right-to-vote-in-india/
https://kistley.blog/2023/08/18/the-transformative-power-of-universal-adult-franchise-indias-journey-towards-inclusive-democracy-essay-from-cji-chandrachud-speech/