ai generated, baptism of jesus, jesus-8578352.jpg

யோவான் 21:20-25

            இவ்வுலகில் வாழ்ந்தவர்களை நாம் நினைவுப்படுத்துகின்றோம். அதன்வகையில் இயேசுவின் சீடனாகிய யோவானின் வாழ்விற்கும் பணிக்கும் இன்று நன்றி செலுத்த அழைக்கப்பட்டுள்ளோம். இவர் செபதேயுவின் குமாரராகவும் யாக்கோபின் சகோதரனாகவும் காணப்படுகிறார் (மாற்கு 10:35-45). மேலும், இயேசுவின் அன்புச் சீடராக அவரால் நேசிக்கப்பட்டு இயேசுவோடு நெருங்கிப் பழகியவர்களில் ஒருவராவார். இயேசு யவீருவினுடைய இல்லத்திற்கு சென்ற வேளையிலும், கெத்சமனே தோட்டத்தில் மன்றாடுகின்ற வேளையிலும் பேதுரு, யாக்கோபு, யோவான் ஆகிய சீடர்களை அழைத்துச் சென்றதாக நாம் காண்கின்றோம். இவர் எருசலேமில் ஓர் செல்வந்த குடும்பத்தில் பிறந்ததாக வரலாறு குறிப்பிடுகின்றது. அத்துடன் யோவான் நற்செய்தி 19:25-28ல், ஆண்டவர் இயேசு சிலுவையில் மரிக்கும்போது தன் தாயை தன் அன்புச் சீடனாகிய யோவானிடத்தில் கையளித்ததாக நற்செய்தி நூல் சான்று பகர்கின்றது.

•            யோவான் நற்செய்தியாளன் ஓர் நற்செய்தி பணியாளனாகவும், நற்செய்தியை எழுத்து வடிவில் வடித்தவராகவும் காண்பிக்கப்படுகின்றார். குறிப்பாக யோவான் நற்செய்தி, யோவானுக்கு எழுதிய திருமுகங்களாகிய திருமுகம் 1, திருமுகம் 2, திருமுகம் 3, திருவெளிப்பாடு ஆகிய ஐந்து நூல்கள் யோவானின் பெயரை தாங்கியுள்ளன. அத்துடன், இவர் எபேசு பகுதியில் நற்செய்தியை அறிவித்திருக்கின்றார். இவர் கி.பி.86ம் ஆண்டில் தொமித்தியன் என்ற உரோம பேரரசனால் கொதிக்கும் எண்ணெய்க்குள் போடப்பட்டார். ஆனால், எதுவும் இவருக்கு நேரிடாததைக் கண்டவர்கள் அவரை எண்ணெயிலிருந்து வெளியே எடுத்து பத்மோஸ் என்று சொல்லப்படும் நாட்டிற்கு நாடுகடத்தினர். அங்கிருக்கும்போதே அவர் திருவெளிப்பாடு என்னும் நூலை எழுதியதாக வரலாறு குறிப்பிடுகின்றது.

•            இயேசுவின் உயிர்ப்பின் பின்னர் அவருடைய சீடர்களுக்கு இயேசு அளித்த காட்சியைப் பற்றி இப்பகுதி பேசுகின்றது. இதன்படி, இயேசு யோவானுக்கு காட்சியளிக்கின்றார். இந்த சீடனே இயேசுவின் மார்பில் சாய்ந்திருந்தவர் என அடையாளம் காணப்படுகிறார். இயேசுவின் இறுதி இராவுணவின்போது இந்நிகழ்வு நடைப்பெற்றது. அத்தகைய வேளையில் பேதுருவுக்கும் இயேசுவுக்கும் ஏனைய சீடர்களுக்கும் இடையில் நடைபெறும் உரையாடல் இப்பகுதியில் குறிப்பிடப்படுகின்றது. பேதுரு அடையப்போகின்ற எதிர்கால நிகழ்வுகளைப் பற்றி இயேசு விளக்கிக்கொண்டிருக்கும் சந்தர்ப்பத்தில் பேதுரு இயேசுவை நோக்கி, “இப்படி என்று சொன்னால் யோவானுக்கு எவைகள் சம்பவிக்கும்?” என வினாவுகின்றார். ஆதித்திருச்சபையில் காணப்பட்ட தலைமைத்துவப் போட்டியை இங்கு நாம் காண்கிறோம். அப்பொழுது இயேசு பேதுருவை நோக்கி, “நான் வருமளவும் இவனிருக்கச் சித்தமென்றால் உங்களுக்கென்ன?” என்று கேட்கும் வினா ஆச்சரியமானதாகும். இவ்வினாவின்படி யோவான் பத்மோஸ் தீவிற்கு நாடுகடத்தப்பட்டு தனது 104ம் வயதிலே இறந்ததாக வரலாறு கூறுகின்றது.

•            நற்செய்தியாளனாகிய யோவான் குறிப்பாக தனது எழுத்தேடுகளில் அக்காலங்களில் மக்களின் பற்றுறுதிக்கு அதிக சவால்களைக் கொடுத்த ஞானவாதக் கொள்கை மற்றும் தோற்றக்கொள்கை போன்ற கொள்கைகளுக்கு எழுத்துக்கள் மூலம் நற்செய்தியின் பாதுகாவலனாகப் பணியாற்றினார். இயேசு உண்மையான மனிதன். அவரில் நிலைத்திருங்கள் என காண்பித்தது மாத்திரமன்றி திருமுழுக்கு யோவான் அல்ல, இயேசுவே மேசியா எனவும் உறுதியாக தனது நூல்களில் எழுதியுள்ளார். அத்துடன், யோவானது இரண்டாவது திருமுகத்தில் மாம்சத்தில் வெளிப்பட்ட இயேசுவை நம்பாதோர் சபிக்கப்பட்டவர்கள் என கடுமையாக எச்சரித்து இயேசுவின் மனிதத்தன்மைக்கு சான்று பகர்கின்றார். இவ்வாறாக, திருச்சபையில் பற்றுறுதியை நிலைப்படுத்துவதில் அவரது பணி பாரட்டத்தக்கதாகும். அத்துடன், கி.பி.70ல் எருசலேம் ஆலய அழிவிற்குப் பின்னர் சிதறடிக்கப்பட்ட கிறிஸ்தவர்களுக்கு ஆறுதலைக் கொடுக்கும் வகையில் இந்நூலையும் எழுதியுள்ளார். எனவே, நற்செய்திப்பணிக்குள் ‘ஆறுதலின் பணி’ அல்லது ‘ஆற்றுப்படுத்தல்பணி’ முக்கியமானதாகக் காணப்படுகின்றது. அப்பணிகளை அடியவர் செய்தது எப்பொழுதும் நினைந்துகொள்ளப்படவேண்டும்.

ஆக்கம் : அற்புதம்