மாற்கு 10:35-45

• ஆண்டவர் இயேசு தனது திருப்பணியில் சீடத்துவத்திற்கு முக்கியத்துவம் கொடுத்தார். மத்தேயு 28:19,20ல் தமது சீடர்களை நோக்கி, “நீங்கள் உலகமெங்கும் புறப்பட்டுச் சென்று நற்செய்தியை அறிவித்து மக்களைச் சீடராக்குங்கள்” என்ற கட்டளையைக் கொடுத்தார். இச் சீடத்துவம் அதிக கிரயம் மிக்கதாகவும் பெறுமதி மிக்கதாகவும் காணப்படுகின்றது.

• “ஒருவர் என்னைப் பின்பற்றி வரவிரும்பினால் தன்னைத்தான்வெறுத்து தன் சிலுவையைச் சுமந்துகொண்டு என்னைப் பின்பற்றி வரக்கடவர்” என்ற இயேசுவின் அழைப்பு சீடத்துவத்தின் ஆபத்தையும் கிரயத்தையும் உணர்த்துகின்றது. யோவான் 12:20-26ல், “கோதுமை மணி நிலத்தில் விழுந்து சாகவேண்டும்” என்பது ஒரு மரணத்திற்கான அழைப்பேயாகும். எனவே, இயேசு ஒருவரை சீடராக அழைப்பது ஆபத்து நோக்கிய கிரயம்மிக்க ஒரு திருப்பணி என்பதை நாம் நினைவில் வைத்துக்கொள்ள வேண்டும். இயேசு தனது திருமுழுக்கின்போது இறைவனிடமிருந்து நன்மைகளைப் பெற்றுக்கொள்ள தன்னை அர்ப்பணிக்கவில்லை. மாறாக, தான் அனுபவிக்கப்போகின்ற துன்பங்களை எண்ணிப்பார்த்தார். எனவேதான், திருமுழுக்கின் பின்னர் நேரடியாக வனாந்திரத்திற்கு அனுப்பப்பட்டதாக மத்தேயு 4:1-11 கூறுகின்றது. திருப்பணியில் வரப்போகும் கிரயங்களை சிந்தித்துப் பார்க்கவே வனாந்தரப் பயணம் அவருக்கு உதவியது. மாற்கு 10:35-45 வரையுள்ள பகுதியில், ஆண்டவர் இயேசுவின் பணி மாதிரியை பற்றி எமக்கு எடுத்துரைக்கின்றது. 10:45ல், “மானிடமகன் ஊழியம் பெறுவதற்காக அல்ல, ஊழியத்தைக் கொடுப்பதற்காகவும் மக்களை மீட்கும்பொருட்டு தன் உயிரைக் கொடுக்கவுமே வந்தேன்” என்கிறார். அதாவது, பணிமாதிரியின் உச்சநிலை உயிரைக் கொடுப்பது என்பது வெளிப்படையான ஒரு உண்மையாகும். எனவேதான், இயேசு யாக்கோபுவை நோக்கி, “நான் குடிக்கும் கிண்ணத்தில் நீங்கள் குடிக்கவும், நான் பெறும் ஸ்நானத்தை நீங்கள் பெறவும் முடியுமா?” என்கிறார். இங்கே இயேசு குடிக்கும் கிண்ணம் என்பது, இரத்தத்தினால் ஆகிய திருவிருந்தையும் பெறும் ஸ்நானம் என்பது இரத்தத்தினாலாகிய திருமுழுக்கையும் எடுத்துக் காண்பிக்கிறது. இக்கிரயத்தை யாக்கோபு செலுத்த ஆயத்தமாகிறார். எனவேதான், கி.பி.42ம் ஆண்டு ஏரோதுவின் கொடிய வாளுக்கு யாக்கோபு இரையாகி வேதசாட்சியாக மரித்தார். இவரின் மரணம் சீடத்துவத்திற்கான ஓர் எடுத்துக்காட்டாகும்.

• சீடத்துவம் அதிகத் தீர்மானத்தோடு மேற்கொள்ளப்படவேண்டியதொன்றாகும். லூக்கா 14ம் அதிகாரத்தில், போராடச் செல்லும் தளபதி தன்னுடைய போர் வீரர்களின் எண்ணிக்கையை கணிப்பிடுவதைப் போன்று, கோபுரம் கட்டுகின்ற ஒருவர் கட்டடத்திற்குரிய அனைத்தும் சரியாக இருக்கிறதா என எண்ணிப்பார்ப்பதைப் போன்றுமே இது காணப்படுகின்றது. இதன்படி இவைகள் எவ்வளவு தீர்மானத்தோடு மேற்கொள்ளப்பட வேண்டுமோ அவ்வளவு தீர்மானத்தோடு சீடத்துவம் மேற்கொள்ளப்படவேண்டும் என்ற உண்மையை நாம் உணர்ந்துகொள்ள அழைக்கப்படுகின்றோம்.

• இரண்டாம் உலக மகா யுத்தத்தின்போது ஜேர்மனியில் பிறந்த பொன்கோவர் என்ற திருப்பணியாளர் ஐக்கிய அமெரிக்கா பல்கலைக்கழகத்தில் பேராசிரியராகக் கடமையாற்றினார். தனது தேசமாகிய ஜேர்மனி எரிகின்றது என்பதை அவர் உணர்ந்த போதிலும் அமெரிக்காவில் தங்கிவிடவில்லை. மாறாக, ஜேர்மனிக்கு வருகைத் தந்து துன்பத்திற்கு காரணமாக இருக்கின்ற ஹிட்லரை கொல்ல வேண்டும் என திட்டம் தீட்டுகிறார். இத்திட்டம் ஹிட்லருக்கு தெரியவரவே ஹிட்லர் பொன்கோவரை சிறையில் அடைக்கிறார். அங்கிருக்கும்போதே ‘Letters from the prison’, ‘Cost of discipleship’ என்கின்ற நூல்களை எழுதுகின்றார். அதுவே சீடத்துவத்தின் கிரயமாகக் கணிக்கப்பட்டது. இந்நூலில் அவர் கூறுவதாவது, “ஆண்டவர் எம்மை அழைப்பது மரணத்திற்காகவே ஆகும். நேரம் வரும்போது நாம் அவருக்காக மரிப்பது மேலானது” என்ற உண்மையை பொன்கோவர் குறிப்பிட்டு அதற்காகவே தன்னை அர்ப்பணித்தார்.

• இலங்கைத் திருச்சபை வரலாற்றில் உரோமன் கத்தோலிக்க திருச்சபைப் பிரிவைச் சேர்ந்த ‘மைக்கல் ரொட்ரிகோ’ கிராமிய மக்களின் விடுதலைக்காக தன்னை அர்ப்பணித்ததன் விளைவாக திருவிருந்தை அனுஷ்டிக்கும்போது இனம் தெரியாத நபர்களால் சுட்டுக் கொல்லப்பட்டார். இதேவகையில் அருட்பணி.ஜிம் பிரவுன் என்பவர் மண்டத்தீவு பகுதியில் போரினால் பாதிக்கப்பட்ட மக்கள் மத்தியில் உதவி செய்துகொண்டிருந்த சந்தர்ப்பத்தில் அவர் காணாமற்போனார். இன்றுவரை அவருக்கு என்ன நடைப்பெற்றது என்பது எமக்குத் தெரியாது. மெதடிஸ்த போதகராகிய யு.ராஜசிங்கம் என்பவர் இலங்கையில் 1980களில் நடைப்பெற்ற வன்முறைச் சம்பவங்களை உலகிற்கு எடுத்துக்காட்டியதன் விளைவாக மன்னார் பகுதியில் காரோடு சேர்த்து தீக்கிரையாக்கப்பட்டார். இவ்வாறாக ஏராளமான திருப்பணியாளர்களும் பொதுநிலையாளர்களும் சீடத்துவத்திற்கான கிரயத்தை அனுபவித்தனர்.

• சீடத்துவத்திற்கான கிரயத்தை அனுபவிக்கும்போதே அது மாட்சிமைக்குரிய பண்பு என இயேசு யாக்கோபுக்கும் யோவானுக்கும் கூறுகிறார். சிலுவை அனுபவம் இல்லையேல் உயிர்த்தெழுதல் இல்லை. துன்புறும் அனுபவம் இல்லையேல் மாட்சிமையின் அனுபவமும் இல்லை. இதுவே சீடத்துவத்தின் அனுபவமாகும். எனவே, சீடத்துவத்தை விற்று கிறிஸ்தவத்தை வாங்காதிருங்கள். சீடத்துவத்தை விற்று குருத்துவத்தை அணிகலன்களாக அணியாதிருங்கள். சலுகை அல்ல சிலுவையே மேலானது. அதன் ஒளியிலே பிழைப்பு அல்ல அழைப்பே பெறுமதியானது.

ஆக்கம்: அற்புதம்