உடைத்தல் + உருவாக்குதல் 

வாலிபனான இயேசு சமூகத்தில் நடக்கும் ஒவ்வொரு காரியங்களையும் கூர்ந்து கவனிக்கும் ஆற்றல் கொண்டவர்.  சிறு வயது தொடக்கம் அவருக்கும், அவருடைய நண்பர்களுக்கும், அவருடைய ஊர் மக்களுக்கு எதிராக நடக்கும் அநியாயங்களையும், அநீதிகளையும், வெறுப்புகளையும், மறுப்புக்களையும், ஏமாற்றுக்களையும், அவதானித்தவராகவும் அவற்றை அனுபவித்தவராகவுமே அவர் வாழ்ந்து வந்தார்.  

இயேசு கலிலேயாவில் நாசரேத் என்னும் சிற்றூரில் வளர்ந்து வந்தார். இப்பகுதிகளில் உழைக்கும் வர்க்கமான தொழிலாளர்களே அதிகமாக வாழ்ந்து வந்தனர். மீனவர்கள்,தச்சர்கள்,விவசாயிகள்,மேய்ப்பர்கள்,கூலி தொழில் செய்பவர்களே இப்பகுதியில் அதிகமாக காணப்பட்டனர். அதிகாரத்தில் இருப்பவர்கள் உழைக்கும் வர்க்கத்தினரை படிப்பறிவு அற்றவர்களாகவும், அசுத்தமானவர்களாகவும், பாவிகளாகவே கருதினர். பதவியில் இருந்தோர் இவர்களை தாழ்நிலையினராகவும் கீழ் நிலையினராகவும் நடத்தினர். 

கலிலேய மக்கள் விடுதலை சிந்தை உடையவர்கள்,அவர்கள் எப்போதும்  தங்கள் அடக்குமுறைக்கு எதிராக குரல் கொடுப்பவர்களாகவே வாழ்ந்து வந்தனர். அவர்கள் ரோம அடக்குமுறைக்கு எதிராக பலமுறை கிளர்ந்து எழுந்து போராடின சமூகமாகவே காணப்பட்டனர். ஆகவே பதவிகளில் இருந்தோர் இவர்களை விரோதிகளாக கருதி வெறுத்து ஒதுக்கினர்.  .

‘இவற்றுக்குப் பின்பு மக்கள்தொகை கணக்கிடப்பட்ட நாட்களில் கலிலேயனான யூதா என்பவன் தோன்றித் தன்னோடு சேர்ந்து கிளர்ச்சி செய்யும்படி மக்களைத் தூண்டினான். அவனும் அழிந்தான்; அவனைப் பின்பற்றிய மக்கள் அனைவரும் சிதறிப்போயினர்.’

திருத்தூதர் பணிகள் 5 :37

யூதர்கள் மத்தியில் கலிலேயர்களை பற்றி தாழ்நிலை சிந்தனையே காணப்பட்டது, இவற்றுக்கான உதாரணங்களை பார்ப்போம்.

யோவான் 1: 46 -47   பிலிப்பு நத்தனியேலைப் போய்ப் பார்த்து, இறைவாக்கினர்களும் திருச்சட்ட நூலில் மோசேயும் குறிப்பிட்டுள்ளவரை நாங்கள் கண்டுகொண்டோம். நாசரேத்தைச் சேர்ந்த யோசேப்பின் மகன் இயேசுவே அவர்” என்றார். அதற்கு நத்தனியேல், 

“நாசரேத்திலிருந்து நல்லது எதுவும் வர முடியுமோ?” – குறுகிய மனப்பான்மை 

நத்தனியேலை போல இன்னும் அநேகர் சாதாரண கிராமத்தில் வளர்ந்து கடவுளின் ஆசியோடு பேரறிஞர்களுடன் கலந்துரையாடி போதனை செய்த இயேசுவை தாழ் நிலையிலேயே கண்ணோக்கினர்.  மாற்கு 6: 2-3   ‘ஓய்வுநாள் வந்தபோது அவர் தொழுகைக்கூடத்தில் கற்பிக்கத் தொடங்கினார். அதைக் கேட்ட பலர் வியப்பில் ஆழ்ந்தனர். அவர்கள், “இவருக்கு இவையெல்லாம் எங்கிருந்து வந்தன? என்னே இவருக்கு அருளப்பட்டுள்ள ஞானம்! என்னே இவருடைய கைகளால் ஆகும் வல்ல செயல்கள்! இவர் தச்சர் அல்லவா! மரியாவின் மகன்தானே! யாக்கோபு, யோசே, யூதா, சீமோன் ஆகியோர் இவருடைய சகோதரர் அல்லவா? இவர் சகோதரிகள் இங்கு நம்மோடு இருக்கிறார்கள் அல்லவா?” என்றார்கள். இவ்வாறு அவரை ஏற்றுக் கொள்ள அவர்கள் தயங்கினார்கள்.’ இன்றும் இவ்வாறான வார்த்தைகளை நாம் கேட்டுக் கொண்டே இருக்கிறோம், ‘ஆ இவனா, இவே அவன்ட மகன் தானே! இவே சொல்லி நாம என்ன கேட்கிறது? இவே எல்லாம் நம்மக்கு புத்தி சொல்ல வந்துட்டான்’ என்று பேசிக் கொள்வார்கள்.  

கலிலேய யூதனான இயேசு, சிறு பிராயம் தொடக்கம் அடக்குமுறைகளையும், அடிமைத்தனங்களையும்,எதிர்ப்புகளையும், சவால்களையும், வேறுபாட்டையும், அவமானங்களையும் சந்தித்தே வளர்ந்து வந்தார்.தனது மக்கள் ஒதுக்கப்படுவதை, அதிக வரி அறவிடப்படுவதை, சமுதாயத்தில் இருந்த ஏற்ற தாழ்வு, மனிதர்கள் மத்தியில் இருந்த வெறுப்புணர்வு, மனிதாபிமானமற்ற சமயமுறைகள், குருட்டு வழிப்பாட்டு சடங்குகளை அவதானித்து இயேசு கடவுளின் அன்பையும் இரக்கத்தையும்  இவற்றில் காணாது கலங்கினார். 

இதனால் இயேசு எப்பொழுதும் அவரது போதனையில் கடவுளின் அன்பயும், நீதியையும்,இரக்கத்தையும் பிரதானப்படுத்தி போதித்தார்.அதன் படி வாழ்ந்து வழி காட்டினார்.

குறுகிய சிந்தனைகளை ‘உடைத்து’ பரந்த சிந்தனைகளை ‘உருவாக்குதல்’ 

இயேசுவின் காலத்தில் வாழ்ந்த யூதர்களில் அநேகர் நாங்கள் மாத்திரமே கடவுளின் பிள்ளைகள் என்ற மேட்டிமை சிந்தனையைக் கொண்டிருந்தனர்.  நாங்களே சிறப்பானவர்கள், நாங்களே தெரிவு செய்யப்பட்டவர்கள் என்ற பிழையான கருத்து மற்றவர்களை தாழ்வாக பார்க்க அவர்களை தூண்டியது.  யூத தேசியவாதம் இன்றைக்கு போல 2000 வருடங்களுக்கு முன்பும் அவர்களின் ரத்தத்தில் உரியே காணப்பட்ட து.

இயேசு இவர்களின் தேசியவாதத்தை வெறுக்கவில்லை, மாறாக மற்றவர்கள் தாழ்வானவர்கள் கடவுள் எங்களுக்கு மட்டுமே, நாங்கள் மேன்மையானவர்கள் என்கிற குறுகிய சிந்தனையே வெறுத்தார். அனைவரும்ஆண்டவர் பார்வையில் சமம்  கடவுள் அனைவரையும் நேசிக்கிறார் என்று இயேசு போதித்தார்.இதை விளக்கும் வண்ணம் இயேசு நாசரேத்தில்  தொழுகை கூடத்தில் பேசிய பின்பு  அங்கு கூடியிருந்த மக்களிடம் இரண்டு உதாரணங்களைக் கூறினார். ‘எலியாவின் காலத்தில் மூன்றரை ஆண்டுகளாக வானம் பொய்த்தது; நாடெங்கும் பெரும் பஞ்சம் உண்டானது. அக்காலத்தில் இஸ்ரயேலரிடையே எலியாவின் காலத்தில்   கைம்பெண்கள் பலர் இருந்தனர். ஆயினும், அவர்களுள் எவரிடமும் எலியா அனுப்பப்படவில்லை; சீதோனைச் சேர்ந்த சாரிபாத்தில் வாழ்ந்த ஒரு கைம்பெண்ணிடமே அனுப்பப்பட்டார். மேலும், இறைவாக்கினர் எலிசாவின் காலத்தில் இஸ்ரயேலரிடையே தொழு நோயாளர்கள் பலர் இருந்தனர்; ஆயினும் அவர்களுள் எவருக்கும் நோய் நீங்கவில்லை. சிரியாவைச் சார்ந்த நாமானுக்கே நோய் நீங்கியது” 

ஏழையான கைம்பெண்ணையும், செல்வந்தரான படைத்தலைவர் நாமனை பற்றி இயேசு பேசுகிறார். இவ்விருவரையும்  கடவுளின் அன்பே விடுவிக்கிறது என்ற சிந்தனையில் கடவுள் இனம், பாலினம், பரம்பரை, தகுதிநிலை, அந்தஸ்து, செல்வம்  போன்ற எதையும் கண்ணோக்குபவர் அல்ல  என்று முழங்குகிறார். அவர் யூதர்களை மட்டுமல்ல எல்லாரையும் நேசிப்பவராக இருக்கிறார் என்று யூத தேசியவாத வேற்றுமை சிந்தனைகளை உடைக்கிறார். யூதர்களின் குறுகிய மனநிலையை உடைத்து பரந்த சிந்தனைக்கு அழைக்கிறார். 

தவறான சட்டங்களை உடைத்தல் + அன்பை உருவாக்குதல்

இயேசுவின் காலத்தில் நோயாளர்கள் (தொழுநோயாளர்கள்),பெண்கள் (சுகவீனமான பெண்கள் ), வரிகட்டாதவர்கள், வரிவசூலிப்போர், இவ் அனைவருமே பாவிகள் என்ற பெயராலே அழைக்கப்பட்டனர்.  யூதர்கள் இவர்களை வெறுத்து ஒதுக்கினர், கடவுளின் சாபமே இவர்களை இப்படி துன்புறுத்துகிறது என்று நம்பினர். அத்தோடு இவர்கள் தீட்டுபட்டவர்கள் அசுத்தமானவர்கள் என்று பறைசாற்றி வந்தனர். மாற்கு 5:21-43 பகுதிகளில் இரண்டு சுகப்படுத்தல் சம்பவங்களை நாங்கள் பார்க்கிறோம், யவிருவின் மகள் உயிர்பெற்றெழுதலும் இரத்தப்போக்குடைய பெண் நலமாதலும் குறிப்பிடப்படுகிறது.

12 வருடங்கள் இரத்தப் போக்கினால் அவதியுற்ற பெண் பல்வேறு மருத்துவர்களிடம் சென்று, தன்னை குணமாக்க சொத்து முழுவதையும் செலவழித்தார் ஆனால் அவருக்கு சுகம்  கிடைக்கவேயில்லை.  இரத்தப்போக்கு நோய் என்பதால் அதிகமான இரத்தம் உடலை விட்டு நீங்கிக்கொண்டே இருக்கும்,  உடல் சோர்வாகும், பெலன் இல்லாமல் போகும், சில வேலைகளிலே தனது வேலைகளை செய்து கொள்ளக்கூட  சிரமப்படும் பெண்ணாக இந்த பெண் காணப்பட்டாள். அவள் சமூகத்தால் ஒதுக்கி வைக்கப்பட்டிருந்தால் அவளை தீட்டு என்று எல்லாருமே கருதினர்  அவளோடு யாரும் பேசுவதில்லை, அவளின் குரலுக்கு செவி சாய்ப்பதில்லை, அவளை புரிந்து கொள்ளவில்லை. சட்டம் இப்படி சொல்லுகிறது என்று அவளை புறக்கணித்து ஒதுக்கி வைத்திருந்தார்கள்.

லேவியர் 15:19-25 ‘பெண் ஒருத்திக்கு உரிய மாதவிலக்கு நாள்கள் கடந்தும் உதிரப்பெருக்கு நீடித்தால், அந்த நாள்கள் எல்லாம் விலக்கு நாள்களைப்போல் தீட்டானவையே. அவளைத் தொடுபவர் மாலைமட்டும் தீட்டாயிருப்பர்.’                

தனிமையாக ஒதுக்கப்பட்டு, வேதனையோடு  12 வருடங்கள் மனதிலே பல குழப்பத்தோடு, கவலையோடு, கண்ணீரோடு கோபத்தோடு இப்பெண் வாழ்ந்து வந்தார். இயேசுவை குறித்து கேள்விப்பட்ட இப்பெண் எப்படியாவது இயேசுவிடம் நான் சுகம் பெற வேண்டும் என்ற முயற்சியோடு, அவ்விடத்திற்கு வருகிறார். இயேசு நோய்களை சுகமாக வல்லவர் அவர் எனக்கு விடுதலை கொடுப்பார் என்ற சிந்தனையோடு அவரின் உடையின் ஒரு ஓரத்தை யாவது நான் தொட்டு விட வேண்டும் என்று அவர் முன்னே வருகிறார். விசுவாசத்தோடு இயேசுவின் ஆடையின் ஓரத்தை தொட்டவுடன் உடல்  சுகம் பெற்றதை அவள் உணர்ந்தால் இரத்தப்போக்கு, உடல்வலி, மயக்கம், சோர்வு தன்மை, எல்லாமே ஒரு நொடியில் சுகமானது.

இயேசு நோயாளர்களை சுகப்படுத்திய பின்பு, ‘“இதை யாருக்கும் சொல்ல வேண்டாம்,’, என்று அதிகமான சந்தர்ப்பத்தில் கூறுவதை கேட்டிருப்போம், மாற்கு 1:42-44, லூக்கா5:14,  ஆனால் இச்சந்தர்ப்பத்தில் என்னை தொட்டது யார் ? என்னை தொட்டது யார்? என்னை தொட்டது யார்? என்று இயேசு தொடர்ந்து இக்கேள்வியை கேட்டுக்கொண்டிருந்தார்.  

இயேசு தன்னை தொட்டது யார் என்று அறிந்திருந்தார், ஆனாலும் அச்சந்தர்ப்பத்தில் அப்பெண்ணை பேச வைக்க வேண்டும், என்ற சிந்தனையில் அவ்விடத்தை ஆயத்தப்படுத்துகிறார். இரத்தப்போக்குடைய பெண்கள் வெளியே வரக்கூடாது, யாரோடும் பேசக்கூடாது, எதையும் தொடக்கூடாது என்று இருந்த சட்டத்தை உடைக்கும் நோக்கில் அப்பெண்ணை அனைவர் முன்னிலையிலும் பேச வைக்கிறார். பெண் பேசுவதை விரும்பாத, கேட்காத கூட்டம்  பல வருடங்களாக ஒதுக்கப்பட்டு அடக்கப்பட்டு வேதனையோடு இருந்த பெண்ணின் குரலை கேட்டார்கள்.’ மாற்கு 5:33 அப்பெண் தமக்கு நேர்ந்ததை அறிந்தவராய், அஞ்சி நடுங்கிக்கொண்டு, அவர்முன் வந்து விழுந்து, நிகழ்ந்தது அனைத்தையும் அவரிடம் சொன்னார்.’    ஒதுக்கப்பட்டவரை இயேசு உள்வாங்குகிறார், ஓரத்தில் இருந்த பெண்ணை இயேசு மையத்துக்கு அழைத்து வருகிறார்.

இயேசு ஒதுக்கப்பட்ட பெண்ணை பேச வைக்கிறார்!  அனைவரையுமே  செவிசாய்க்க வைக்கிறார்!  இழந்த உரிமைகளை பெற்றுக் கொடுக்கிறார்! இயேசு சுகப்படுத்துகிறார், தவறான சமுதாயக் கட்டுகளில் இருந்து சுத்தப்படுத்துகிறார், இழந்த சுதந்திரத்தை பெற்று கொடுக்கிறார்.  

‘தீட்டு பட்ட பெண் யாரை தொட்டாலும் தீட்டு’ என்று சட்டம் சொன்னாலும் இயேசு அந்தப் பெண்ணை  தொட்டு மகளே, உனது நம்பிக்கை உன்னைக் குணமாக்கிற்று. அமைதியுடன் போ. நீ நோய் நீங்கி நலமாயிரு” என்று அவரை உற்சாகப்படுத்துகிறார். மகளேஎன்ற உயரிய அந்தஸ்தை அவரை ஒடுக்கிய மக்கள் முன் கொடுத்து அவரை உயர்த்துகிறார். மனிதத்தன்மையற்ற,கொடிய சட்டங்களை உடைத்து அன்பை உருவாக்குகின்றார். 

விடுதலை நாயகனான இயேசு தமது ஒவ்வொரு போதனைகளிலும், அற்புதங்களிலும், அடையாளங்களிலும் சமூக மாற்றத்தையே தோற்றுவிக்க அதிகம் பாடுபட்டார். அரசியல் ஒடுக்குமுறை,  சமய சாம்ராஜ்ஜியம்,  சமுதாய சீர்கேடுகள், பொருளாதார சுரண்டல்,  மனிதாபிமானற்ற சட்டங்களுக்கு விரோதமாக பேசினார் அவற்றை முற்றாக எதிர்த்தார்.  சமூக அநீதிகளை எதிர்த்து பேசிய இயேசு அவற்றை உடைத்து புதிய சிந்தனைகளை தமது போதனைகளின் மூலம் சமூகத்தில் விதைத்தார். அநீதிகளை உடைத்து நீதியை விதைத்தவராக இயேசு காணப்பட்டார்.  இயேசுவின் ஒவ்வொரு செயல்பாடும் மானிட விடுதலையை மையப்படுத்தியதாகவே இருந்தது,  இயேசுவின் சீடர்களாகிய நாமும் சமுதாய மாற்றத்திற்காகவும், சமூக அநீதிகளுக்கு எதிராக செயல்படுபவராக இருத்தல் வேண்டும். மனிதனை அடிமைப்படுத்தும் ஒவ்வொரு அநீதியான  கட்டமைப்புக்கு எதிராக இயேசு சமூகமாக  செயல்பட இயேசு எங்களை அழைக்கிறார்.

Author
Rev. Ruben Pradeep Rajendran
St.Margaret’s Church, Kotagala
Mobile number; 0774475642

#RubenPradeep  #Food and Fellowship#Friends