pexels-photo-189349-189349.jpg

மத்தேயு 8: 7

“அதற்கு இயேசு நான் வந்து அவனை குணமாக்குவேன் என்றார்”

#. உட்பகுமுன் …

இந்த மாதம் முழுவதும் திருமறைக் காட்டும் வெளிச்சத்தில் பயணிப்பதற்கு நம்மை அர்ப்பணிப்போம்….

சென்ற மாதத்தில் கடவுள் தந்த வாக்குத்தத்தம் நம்முடைய வாழ்வில் என்ன தாக்கத்தை உண்டு பண்ணினது என்பதை நினைவு கூறுவோம்…..

சென்ற மாதத்தில் நமது வீட்டில் உள்ள காலண்டரில் அந்தந்த நாளுக்குரிய வசனங்கள், அது இறை வார்த்தைகள் என்பதை உணர்ந்து வாசித்தோமா என்பதையும் நினைவு கூறுவோம்…..

Rev. Augusty Gnana Gandhi

இந்த மாதம் கடவுள் மீண்டும் நமக்கு தந்த ஒரு வாய்ப்பு, இந்த வாய்ப்பை தனி நபராக, குடும்பமாக, திருச்சபையாக கடவுள் காட்டுகின்ற வழிகாட்டதலில் இணைந்து பயணிப்போம்….

இன்றைய நாளுக்கான நற்செய்தி பகுதி, ஆண்டவராகிய இயேசு கிறிஸ்து தம் அடியார்களுக்கு காட்டுகின்ற ஒரு வழிகாட்டுதல் என்பதை நாம் புரிந்து கொள்வோம். இந்த மாதம் நமக்கான அருள் வாக்கும் இதுதான்…

ஒரு நூற்றுக்கு அதிபதி ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவிடம் வந்து தன் வேலைக்காரனுக்காக மன்றாடுகின்றார். இயேசு கிறிஸ்து அவன் விண்ணப்பத்தை ஏற்றுக் கொண்டு சொல்லுகின்ற அருள் வாக்கு நான் வந்து அவனை குணப்படுத்துவேன்.

இந்த அருள்வாக்கை தியானிக்கும் பொழுது, ஆண்டவராகிய இயேசு கிறிஸ்து இதன் வழியாக தம் அடியவர்களுக்கு ஒரு வழிகாட்டுதலை முன்வைக்கின்றார்.

ஏன் ஆண்டவராகிய இயேசு கிறிஸ்து, நான் வந்து குணம் ஆக்குகிறேன் என்று அந்த நூற்றுக்கு அதிபதியிடம் சொன்னார் என்பது நாம் சிந்திக்க வேண்டிய ஒன்று. அது என்னவென்றால் ….

  1. நூற்றுக்க அதிபதியின் “அணுகுமுறை” (Approach) ஆண்டவரை வியக்க வைத்தது….

நூறு பேர் கொண்ட பணியாளர்களுக்கு ஒரு தலைவன் ஒரு ஆள் அனுப்பி இயேசுவிடம் அணுகி இருக்கலாம். ஆனால் அவர் தானே வந்து, இயேசுவிடம் தன் பணியாளருக்காக வேண்டுகின்ற விண்ணப்பம் ஒரு வித்தியாசமான அணுகுமுறையை முன்வைக்கின்றது.
தன் ‘அதிகாரத்தை’ ( Power) கீழே இறக்கி வைத்துவிட்டு, தன்னுடைய ‘பதவியை’ ( Authority) பயன்படுத்தாமல், சமூகத்தில் தனக்கு இருக்கும் ‘அந்தஸ்தை’ ( Position )கண்டுகொள்ளாமல், தன்னை வெறுமையாக்கி (Emptiness).. ஆண்டவரிடம் வந்து மன்றாடின, நூற்றுக்கு அதிபதியின் அணுகுமுறை இயேசுவை வியக்க வைத்தது….

  1. ⁠ நூற்றுக்கு அதிபதி தன் வேலைக்காரன் குறித்த “கரிசனை” (Concern) ஆண்டவரை செயல்பட வைத்தது…

வீட்டில் முடங்கி கிடக்கின்ற வேலைக்காரன் மீது நூற்றுக்கு அதிபதி கொண்டிருந்த கரிசனை ஒரு பெரும் வியப்பு தான்.
தன் வேலைக்காரர் முடங்கி கிடக்க கூடாது, உழைக்க வேண்டும், அந்த உழைப்பில் இறை அருள் இருக்க வேண்டும், அந்த இறை அருளில் அவரின் குடும்பம் மகிழ்ந்திருக்க வேண்டும், அவரின் உறவுகளும் இணைந்து இருக்க வேண்டும், அதன் மூலம் சமூகத்தில் மாண்போடு வாழ வேண்டும்… இப்படிச் சொல்லிக் கொண்டே போகலாம். இது எல்லாம் நூற்றுக்கு அதிபதியின் கரிசனையில் வெளிப்பட்ட காரியங்கள். இவைகளை ஆண்டவர் கண்டு கொண்டுதான் செயல்பட தன்னை அர்ப்பணித்தார்…

  1. ⁠ நூற்றுக்கு அதிபதி தன் பணியாளரோடு கொண்டிருந்த உறவு (Relationship) முறை ஆண்டவரை உந்தி தள்ளியது…

. இயேசு பார்த்து வியந்த மற்றும் ஒரு காரியம் நூற்றுக்கு அதிபதியும் வேலைக்காரரும் கொண்டிருந்த உறவு நிலை. இந்த உறவு நிலையை ஆண்டவர் அழகாக புரிந்து கொண்டார். இவர்களுக்கிடையே உள்ள இந்த உறவில் “ஆண்டான் – அடிமை என்ற படிநிலை இல்லை, ஏழை – பணக்காரன் என்ற பாகுபாடு இல்லை, உயர்ந்தவன் – தாழ்ந்தவன் என்ற வித்தியாசம் இல்லை என்பதை ஏசு நூற்றுக்கதிபதி மூலம் கண்டு கொண்டார். இருவரும் ‘உழைக்கின்ற வர்க்கம்’ என்பதை நூற்றுக்கு அதிபதியின் வார்த்தைகளும் செயல்களும் இயேசுவை வியக்க வைத்திருக்கலாம்….

  1. ⁠ நூற்றுக்கு அதிபதி இடம் இருந்த ” பற்றுறுதி” ( Faith ஆண்டவரை அற்புதம் செய்ய தூண்டியது….

நூற்றுக்கு அதிபதியும் இயேசுவும் பேசிக்கொண்ட உரையாடலின் இறுதியில், இயேசு தம்மை சுற்றி இருந்த மக்களை பார்த்து, நான் இஸ்ரவேல் மக்களுக்குள்ளும் இப்படிப்பட்ட விசுவாசத்தை நான் கண்டதில்லை என்று சொல்லுகின்றார். இதற்கு அடிப்படைக் காரணம் அந்த நூற்றுக்கு அதிபதியிடம் காணப்பட்ட பற்றுறுதி. இது ஆலயம் சென்றதால் வந்ததல்ல, ஆகமங்களை படித்ததாலும் வந்ததல்ல மாறாக பலர் சொல்ல கேள்வி பட்டு வந்தது என்று நாம் புரிந்து கொள்ளலாம். கண்டு விசுவாசிக்கிறவர்களை காட்டிலும் காணாது விசுவாசிக்கிறவர்களின் விசுவாசம் பெரிது என்பதை இவர் மூலமாக இயேசு கிறிஸ்து நமக்கு உணர்த்துகிறார்.

நிறைவாக……

நூற்றுக்கதுபதியின் வாழ்வு நமக்கு ஒரு வழிகாட்டுதல். இந்த மாதம் முழுவதும், நாள்தோறும் தனி நபராக, குடும்பமாக, திருச்சபையாக நாம் வாழுகின்ற இடங்களிலும், வசிக்கின்ற பகுதிகளிலும், பணி செய்கின்ற பணித்தளங்களிலும் இந்த

அணுகு முறைகளை பின்பற்றுவோம்…..

கரிசனையை வெளிப்படுத்துவோம் …

உறவுகளை கட்டி எழுப்புவோம்…

பற்றுறுதியில் வளர்வோம்…

——-////——–

இறை அருள் நம்மோடு இந்த மாதம் முழுவதும் இருப்பதாக …

இறை ஆசி நம் மூலமாக வெளிப்படுவதாக…..

இறைப்பணியில் உங்களோடு

Rev. Augusty Gnana Gandhi,

CSI Trichy Tanjore Diocese.