pexels-photo-1667240-1667240.jpg

திருமறை பகுதிகள்:

ஏசாயா : 6: 1 – 8
அப்போஸ்தலர் 9: 10 – 18
லூக்கா 10 : 1 – 11

# உட்புகும் முன்…

“புண்ணியர் இவர் யாரோ” என்ற கீர்த்தனை பாடலில், கடைசி சரணம் “துன்ப பாத்திரத்தின் அடிவண்டலையும் இயேசு பருகினார்” என்று ஆசிரியர் இயேசுகிறிஸ்துவின் அருட்பணி வலியை எடுத்துக்காட்டுகின்றார்…

” நீ உனக்கு சொந்தம் அல்லவே” என்ற பாடலில் சிலுவை மரத்தில் தொங்கி மரித்தாரே, திரு ரத்தம் ரத்தம் திருவிலாவில் வடியுது பாரே …இந்த பாடலில் ஆண்டவரின் அருட்பணியில் உண்டான வலி, துன்பம், பாடு, அவமானம், தனிமை, காயம், துரோகம் …எல்லாம் வெளிப்படுத்தப்பட்டுள்ளது…

சிறியா நாட்டில் அகதிகள் கொல்லப்பட்டபோது அதில் ஒரு சிறுமி பேட்டி கொடுத்தாள். கண்ணீரோடு, வலியோடு தன் பெற்றோரை, உடன் பிறப்புகளை இழந்த அந்த சூழ்நிலையில், நான் எல்லாவற்றையும் “சாமியிடம் சொல்லுவேன்” என்ற அந்த வார்த்தையில் வலி நிறைந்திருந்தது…

அருட்பணியும், திருப்பணியும் இறைவனின் வேதனையையும், வலியையும் பகிர்ந்து கொள்ளும் ஒன்றாக, பிணிபோக்கு மருந்தாக அமைந்திடல் வேண்டும் …

1. “இறை உறவை விட்டு விட்டீர்களே” என்ற “இறைவனின் மன வலியை” ஏசாயாவின் அருட்பணி வெளிப்படுத்துகிறது…(ஏசாயா : 6: 1 – 8)

இறைவனுக்கும் இஸ்ரவேலர்களுக்கும் உண்டான உறவு “உடன்படிக்கை உறவு.” “நீங்கள் என் மக்கள் நான் உங்கள் கடவுள்” எனும் உடன்படிக்கையின் மீது கட்டப்பட்ட தெய்வீக உறவு.

“வானவில்” உடன்படிக்கையை வெளிப்படுத்தியது. நான் ஒருபோதும் உங்களை அழிக்க மாட்டேன். நீங்கள் என் சொந்த ஜனம் என்ற உறவு .

உசியா மன்னன் மரித்த பொழுது, இஸ்ரவேலர் இந்த உடன்படிக்கை உறவில் இல்லை. உறவில் பெரும் விரிசல். கடவுளை விட்டு விலகினார்கள். தம் மனம் போன போக்கில் வாழ்ந்தார்கள். இறை அச்சம் துளியும் இல்லாமல் வாழ்ந்தார்கள்.

ஆண்டவர் தன் மன வேதனையை பகிர்ந்து கொள்கின்றார். என் பிள்ளைகளைப் போல வளர்த்து ஆதரித்தேன், அவர்களோ கலகம் பண்ணினார்கள்(1:2). என் ஜனம் அறிவில்லாமல் உணர்வில்லாமல் இருக்கிறது (1:3). மாடு கூட தன் எஜமானையும் அறியும், கழுதை கூட தன் ஆண்டவரின் முன்னணையை அறியும் (1:3) என்பது மன வேதனையின் வெளிப்பாடாக ஆண்டவர் புலம்புகின்றார்.

கசப்பான பழங்களை தந்தது (5:4)
எளியவர்களை நசுக்கினார்கள்(5:8)
விருந்துகளில் எல்லை மீறினார்கள்(5:12)
தங்கள் நினைத்ததை சாதித்தார்கள்(5:20)
நீதி – நியாயத்தை புரட்டினார்கள்(5:25) நியமங்களை வெறுத்தார்கள்(5:24)
“ஐயோ” என்று ஆண்டவர் புலம்புகிறார், மன வேதனையை, மன வலியை வெளிப்படுத்துகிறார்.

ஜெப ஆலயத்தில் முதன்முறையாக பாடகர் குழு இல்லாமல் ஒரு பாடல் ஒலிக்கின்றது. அது இறைவனின் ஒப்பாரி பாடல் . “யாரை நான் அனுப்புவேன், யார் எனது காரியமாக போவார்” என்ற அந்த வரிகள், இறைவனின் மன வேதனையை, வலியை நிதர்சனமாக எடுத்துக்காட்டினது.

இந்த சூழலில் ஏசாயா மட்டும் இறைவனின் மனவலியை தன்னுடைய தாக்கிக் கொள்கின்றார். இறைவனின் வலியை போக்குவதற்கு அருட்ப பணியை துவங்குகின்றார். அது தீர்க்கதரிசன அருட்பணி. மக்களோடு மக்களாக வாழ்ந்து, மக்கள் மனதில் மாற்றம் வரவும், சமயங்களில் மறுமலர்ச்சி உண்டாகவும், சமூகத்தில் மாற்றம் உண்டாகவும் .. அருட்பணியை துவக்குகிறார். அந்த அருட்பணி நிச்சயம் இறைவனின் மன வலியை நீக்கும் மருந்தாக அமைந்திருக்கும் என்பதில் ஐயமில்லை…

இறை உறவை மறந்த மக்களை மீட்டு இறை உறவில் வளர ஏசாயாவின் அருட்பணி அறைகூவல் விடுத்தது…

2. “இறைவனையே துன்புறுத்துகிறீர்களே” என்ற “கிறிஸ்துவின் வலியை” பவுலின் திருப்பணி பகிர்ந்து கொண்டது…(அப்போஸ்தலர் 9: 10 – 18)

இயேசு கிறிஸ்துவின் மரணத்திற்கு பின்பு “இயக்கம்” ( Movement) வளர்ந்தது. வேகமாய் பரவியது. பெந்தகோஸ்தே பண்டிகையில் ஒரு பேரியக்கம் ( Mass Movement) உருவானது. ஒரே நாளில் 3000 மக்கள் கிறிஸ்துவை தழுவினார்கள்(2: 41). இது சமய மாற்றம் அல்ல சமூக மாற்றத்திற்கான அடித்தளம்.

திரளான கூட்டத்தார் ஒரே இருதயம், ஒரே மணம் உடையவர்களாய் “பொது உடமை சமுதாயத்தை” கட்டி எழுப்பினார்கள் (4:32). இது தனி உடமை சமுதாயத்திற்கு எதிரான ஒன்று. தங்கள் உடமைகளை பகிர்ந்து கொடுத்து “சமத்துவ சமுதாயத்திற்கு” வித்திட்டார்கள். ஆண் – பெண் என்ற “இணைந்த விசுவாச திருக்கூட்டம்” (Fsith community) சமூகத்தில் ஒரு மாற்றத்தை கொண்டு வந்தது. அது நாம் ஆண் பெண் என்ற வேறுபாடு அற்ற “ஓர் இனம்” என்பதை வலியுறுத்தியது.

இதன் விளைவுகள் யூத சமய அரசியல் வட்டங்களில் பல அதிர்வுகளை உண்டாக்கியது… இதனால் சமய தலைவர்கள் அடிப்படை வாதிகளாக( Fundementalist) மாறினர். சமய சீர்திருத்தம் என்ற பெயரில் வன்முறைகள் (Violence) தலைவிரித்தாடின. மதமாற்ற தடை சட்டங்கள் உருவாகின( Anti conversion law). வீடுகளில் நுழைவதற்கு அனுமதி தேவையில்லை (8:3). ஆண், பெண் சிறைகளில் அடைக்கப்பட்டார்கள்(8:3). அச்சுறுத்தல் (9:1), கண்டால் அவர்களை சிறை பிடித்து, கொலை செய்யலாம். மொத்தத்தில் எருசலேமில் துன்பம் உண்டானது (8:1), இயேசுவின் அடியவர்கள் சிதறடிக்கப்பட்டார்கள்.

இப்படி துன்புறுத்தப்பட்டவர்கள் ‘எவரையும் துன்புறுத்தவில்லை, எவர்களிடமும் அநீதி செய்யவில்லை, எந்த தவறும் செய்யவில்லை… ஆண்டவர் இயேசுவின் வழியை தெரிந்து கொண்டவர்கள். இயேசுவின் போதனைகளாலும் , இயேசுவின் செயல்பாடுகளாலும் கவரப்பட்டு, தங்களை ஆண்டவருடைய இயக்கத்தோடு தங்களை இணைத்துக் கொண்டவர்கள். மொத்தத்தில் நீதியின் நிமித்தம் துன்பப்பட்டவர்கள். அன்பின் வழியை தெரிந்து கொண்டதால் அவமானப்படுத்தப்பட்டவர்கள்.

இந்தப் பின்னணியத்தில் இறை மக்களை, இறை அடியவர்களை, கிறிஸ்துவின் வழியில் நடந்தவர்களை, வாழ்ந்தவர்களை துன்புறுத்திய சவுலோடு ஆண்டவர் உரையாடுகின்றார். அந்த உரையாடலில் கிறிஸ்துவின் வலியும், வேதனையும் கலந்திருந்தது. அந்த வலி, வேதனை சிலுவை மரணத்தை வெளிப்படுத்தியது. என்னை ஏன் துன்பப்படுத்துகிறாய் ? இது வெறும் வார்த்தை அல்ல, வலியோடு கலந்த வார்த்தை. இறை மக்களின் கண்ணீரை வெளிப்படுத்திய வார்த்தை. இறை மக்களின் பாடுகளையும், அவமானங்களையும்.. சுமந்த வார்த்தை. மொத்தத்தில் இறைவனின் வேதனையை வெளிச்சம் போட்டு காட்டுகின்ற வார்த்தை. நீயும் உன் கூட்டத்தாரும் பக்தி என்ற போர்வையில் , சமய மறுமலர்ச்சி என்ற பெயரில் இறைவனையே துன்புறுத்துகிறீர்கள் என்பதை வெளிச்சம் போட்டு காட்டியது.

துன்புறுத்திய பவுல் துன்புறுவதற்கு தன்னை அர்ப்பணிக்கின்றான். கிறிஸ்துவின் வலியோடு தன் வலியை இணைத்துக்கொள்ள அர்ப்பணிக்கின்றார். கிறிஸ்துவின் வழியில் பயணிப்பதற்கு ஆயத்தமாகின்றார். கிறிஸ்துவாகவே வாழ தீர்மானிக்கின்றார்.

பவுல் அடியாரின் திருப்பணி சமயத்தில் மட்டுமல்ல சமூகத்தில் பல மாற்றங்களைக் கொண்டு வந்தது. பவுலின் பேரியக்கம் திருச்சபையை உருவாக்கியது. திருச்சபை சமூக மறுமலர்ச்சிக்கு வித்திடுகின்றது.

3. “இறை ஆட்சியை விட்டு வழுவினீர்களே” என்ற “இயேசுவின் வலியை” சீடர்களின் அருட்பணி முன்னெடுத்தது….(லூக்கா 10 : 1 – 11)

ஆண்டவராகிய இயேசு கிறிஸ்து தம் திருப்பணியை துவங்கும் பொழுது “மனம் திரும்புங்கள்; இறை ஆட்சி சமீபமாய் இருக்கிறது” என்று முழங்கினார்.

நம்மோடு பன்னிரண்டு சீடர்களை அழைத்து, பயிற்சி தந்து இறை ஆட்சியை கட்டுகின்ற திருப்பணியில், அருட்பணியில் அவர்களை பயிற்றுவித்தார்.

சிலுவை மரணம் நெருங்கி இருப்பதை அறிந்து மேலும் 70 சீடர்களை ஆண்டவர் நியமனம் செய்தார். இது வழக்கத்திற்கு நேராக ஆண்டவரால் தெரிந்து கொள்ளப்பட்டு நியமனம் பெற்றவர்கள்.

சீடர்களுக்கு அதிகாரத்தை பகிர்ந்து அளித்து, அற்புதங்கள், அடையாளங்கள் செய்யவும், மக்களை மனம் திரும்புதலுக்கு ஏற்ற கனிகளை கொடுக்கவும் அவர்களை வழி அனுப்பினார்.

இறை ஆட்சியை மறந்து , அதன் தகவுகளை துறந்து, இறைவன் காட்டும் வழியில் நடக்க மறந்த தம் மக்களை ஆண்டவர் வேதனையோடு எச்சரிக்கின்றார், கண்டித்து உரைக்கின்றார்.

கோராசின் பட்டணமே, பெத்சாயிதா பட்டணமே உனக்கு ஐயோ என்று ஆண்டவர் புலம்புகின்றார். நீ நியாயத் தீர்ப்பு நாளில் நீ தாழ்த்தப்படுவாய். உன்னதரை மறந்தாய் என்று ஆண்டவர் வேதனையோடு புலம்புகின்றார்.

ஆண்டவரின் இந்த வலியை, வேதனையை நீக்குவதற்கு சீடர்கள் அர்ப்பணிப்போடு புறப்பட்டு சென்றார்கள்.
அவர்களும் ஆண்டவரின் இயக்கத்தில் தங்களை முழுமையாக இணைத்துக் கொண்டு, அருட்பணி செய்து, அநேக அடையாளங்களையும், அற்புதங்களையும் நடத்தினார்கள். அவர்களை கண்டு தீய ஆற்றல்கள் பறந்தோடி என்று இயேசுவிடம் சான்று பகர்ந்தார்கள்.

இயேசுவின் லட்சியமான “இறை ஆட்சியை” இம்மண்ணுலகில் நிறுவுவதற்கு ஆண்டவரின் சீடர்கள் தங்களை அர்ப்பணித்தார்கள். தங்களை ரத்த சாட்சியாக ஒப்புக்கொடுத்தார்கள். அந்த மரணத்தில் இயேசுவின் இயக்கம் இன்னும் வளர்ந்து கொண்டே இருக்கிறது. இறை ஆட்சியை அமைக்கும் களப்பணியில் தன்னை ஈடுபடுத்திக் கொண்டிருக்கிறது.

நிறைவாக….

இறைவனின் வலியை “மோசே, எஸ்தர், மரியாள், யோசேப்பு…போன்றோர் உணர்ந்தார்கள். இறைவனின் வலியை தங்கள் வழியாக ஏற்றுக் கொண்டு அருட்பணி புரிந்தார்கள்…..

திருச்சபைகளின் அருட்பணி இயக்கம் இன்று கடவுளின் வலியை உணர்ந்து…
ஆலயங்களிலும்….
மருத்துவமனைகளிலும் ….
கல்வி சாலைகளிலும் …
இல்லங்களிலும் ….
பராமரிப்புகளிலும் ….
தெருக்களிலும்….
விடுதலைப் பணிகளிலும்…. களத்தில் பணி செய்து வருகின்றது.

முன்கள பணியாளராய் …
சமூக போராளியாய் …
நல்லெண்ண இயக்கமாய்…
சமய நல்லிணக்க உரையாடல்களாய்….
சமத்துவ சமூகம் படைக்கும் இயக்கங்களாய்…
பாடுபடும் பணியாளராய்….

இறைவனின் வலிகளில் பங்கெடுப்போம்….
இறை உறவை பலப்படுத்துவோம்….
இறை வழியில் பயணிப்போம்…
இறை ஆட்சிக்கு தடம் அமைப்போம்…

அருட்பணியில்
உங்களோடு…

இறைப்பணியில் உங்களோடு

Rev. Augusty Gnana Gandhi,

CSI Trichy Tanjore Diocese.