Pink Peace Light Sign

“My Peace I Give to You”

திருமறை பகுதிகள்

சகரியா8: 12-19
ரோமர் 5: 1-5
யோவான் 16: 16-33

உட்புகும் முன்

ஆண்டவர் இயேசுவின் மலைப்பொழிவு அருளுரையில் கடவுளை எவரும் தரிசிக்கலாம் என்று சொல்லிக் கொண்டு வருகிற இயேசு, “சமாதானம் பண்ணுகிறவர்கள் மட்டும் கடவுளின் பிள்ளைகள்” என்னும் தகுதியை பெறுவார்கள் என்றார்….

திருமறையில் ஒரு காதலனும் – ஒரு காதலியும் தங்கள் அன்பை பகிர்ந்து கொள்ளும் முத்தத்தை போல, பெற்றோரும் – பிள்ளைகளும் பகிர்ந்து கொள்ளும் முத்தத்தைப் போல “நீதியும் – சமாதானமும் ஒன்றை ஒன்று முத்தம் செய்யும்” என்று அழகாக சித்தரிக்கப்பட்டுள்ளது….

“ஷாலோம்” எனும் சொல் வெறும் அமைதியை (Silence) குறிக்கின்ற சொல்லல்ல, ஒட்டுமொத்த விடுதலையை ( Holistic Liberation) குறிக்கும் ஒரு சொல்….

பூக்களின் அமைதி அழகில் மயங்குவதற்கு வழிவகுக்கும், நீரோடைகளின் அமைதி நீந்தி மகிழ்வதற்கு வழிவகுக்கும், வனங்களின் அமைதி இயற்கையை ரசிப்பதற்கு வழிவகுக்கும், இறைவன் அருளும் பேரமைதி விடுதலை வாழ்விற்கு வழி நடத்தும்….

இறைவன், நீதி தலைவர்கள், தீர்க்கர்கள், அரசர்கள், சீடர்கள், திருத்தூதுவர்கள், தலைவர்கள், திருச்சபைகள், இறைமக்கள் மூலம் உலகில் பேரமைதியை ஏற்படுத்திக் கொண்டே இருக்கிறார்….

. ” … பிறருக்காய் ஈவதில், வாழ்வதில், சாவதில் பிறக்கின்றோம் வாழ்வுக்கு எனும் பொருள் துலங்கிட
அமைதியின் கருவியாய் ஆண்டவா அடியேனை
அனுதினம் வழிநடத்தும் …என்ற “பிரான்சிஸ் ஆப் அசிசி” அவருடைய பாடல் காலத்தால் அழியாதது…

திருமறை காட்டும் இந்த நாளுக்குரிய சிந்தனையை நாம் ஆராய்ந்து பார்ப்போம்…

1. இறைவன் அருளும் பேரமைதி “நீதியின் மேல் பசி தாகத்தை உண்டாக்கும்..”(சகரியா8: 12-19)

சிறைப்பட்டு போன இஸ்ரவேலர்கள் பலர். அதில் “மீந்தவர்கள்” ஒரு சிலர். அமைதி இழந்து, உறவுகளை, உடைமைகளை, வாழும் உரிமையை இழந்து, ஒடுக்கத்தில், அடிமைத்தனத்தில், சிறை இருப்பில் கிடந்த இஸ்ரவேல் மக்களுக்கு குறிப்பாக “மீந்தவர்களுக்கு” இறைவன் அருளும் பேரமைதி “விடுதலைக்கு வாழ்வுக்கு வழி நடத்தினது…”

சிறை இருப்பிலிருந்து மீண்ட இந்த மீந்தவர்கள், தங்கள் எதிர்காலத்தை கட்டமைப்பதில் இறைவன் வழி நடத்துகின்றார். இறைவன் காட்டும் இந்த “வழிகாட்டல் நெறிமுறை” அடிமைத்தனம் அற்ற ஒரு நீதி உள்ள சமூகத்தை கட்டி அமைப்பதில் பெரும் பங்கு வகிக்கின்றது….

இஸ்ரவேல் சமூகம் பேரமைதியோடு வாழ வேண்டும் என்றால் அதற்கு அடிப்படை “நீதி மலர வேண்டும்… நீதியுள்ள ஆட்சி நிறுவப்பட வேண்டும்.., நீதி தலைவர்கள் உருவாக வேண்டும், அநீதிகள் களைந்தெறியப்பட வேண்டும், சட்டங்கள் இயற்றப்பட வேண்டும், நீதி நியாயங்கள் தழைத்தோங்க வேண்டும்….

சிறையிருப்பில் இருந்து இறைவனால் விடுதலை பெற்ற இஸ்ரவேல் சமூகம், அடுத்த தலைமுறைக்கு இது “இறைவனின் சமூகம்” (People of God) என்று வெளிப்படுத்துவதற்கு ஒரே ஒரு அடிப்படை, ஒவ்வொருவரும் “நீதியின் மேல் பசி தாகம் உடையவர்களாய் இருக்க வேண்டும்” என்பதே….

நீதியை நிலைநாட்டுங்கள், உண்மைக்கு சான்றாய் இருங்கள், நீதியாளரோடு துணையாய் நில்லுங்கள், நேர்மை உள்ளவரோடு நட்பு பாராட்டுங்கள்… என்று நீதியின் மேல் பசி தாகம் உடைய சமூகமாய் வாழுங்கள் என்று சகரியா தீர்க்கர் வழியாக இறைவன் தன் சமூகத்தை நெறிப்படுத்துகிறார்…

சிறை இருப்பில் இருந்த இஸ்ரவேலர்க்கு இறைவன் அருளின பேரமைதி, விடுதலை வாழ்விற்கு மட்டுமல்ல ஒடுக்குதலற்ற, சுரண்டலற்ற, பொய் சாட்சி அற்ற, வஞ்சனையற்ற, வேறுபாடுகள் அற்ற ஒரு நீதியுள்ள, முன்மாதிரியான சமூகமாக உருவாக்குவதற்கு வழி நடத்தினது….

ஒவ்வொருவரும் மனித நேயத்தோடு வாழவும், பிறரை மதிக்கவும், நல்வழி நடத்தவும், இல்லங்களிலும், வாசல்களிலும், நீதிமன்றங்களிலும் நீதி மலர்ந்திட வேண்டும் அதுவே கடவுள் தந்த பேரமைதியின் வெளிப்பாடு….

நீதியின் மேல் பசி தாகம் உள்ளவர்கள் பாக்கியவான்கள் அவர்கள் இறைவனின் மக்கள் என்று எண்ணப்படுவார்கள், என்று இயேசு குறிப்பிடுவதைப் போல உலகில் இறை மக்களாக வாழ்வதற்கு நம்மில் வெளிப்பட வேண்டிய ஒரே அடையாளம் நீதியின் மேல் பசி தாகம் உடையவர்களாய் வாழ்வதே…

இதை வேறு வழியில் புரிந்து கொள்ள வேண்டும் என்றால் இஸ்ரவேல் சமூகம் அன்பு உறவில் வளர வேண்டும். உன்னிடத்தில் நீ அன்பு கூறுவது போல பிறரிடத்திலும் அன்பு கூறுவாயாக என்ற கட்டளையை உள்ளங்களில் எழுதப்பட வேண்டும்….

2. இறைவன் அருளும் பேரமைதி “பற்றுறுதியில் வளர்ந்து பெருகச் செய்யும்…” (ரோமர் 5: 1-5)

திரு தூதுவராகிய பவுலடியார் ரோமபுரி திருச்சபைக்கு எழுதுகின்ற இந்த கடிதத்தில், பற்றுறுதியா- செயல்படா என்ற மாபெரும் விவாதத்தை ஆரம்பிக்கின்றார். நான்காம் அத்தியாயத்தில் பற்றுறுதியே நம்மை நீதிமான்களாக உயர்த்தும் என்ற தன் நிலைப்பாட்டை உறுதிபட கூறுகின்றார்…..

பற்றுறுதியின் மூலமாகவே நாம் அனைவரும் இயேசு கிறிஸ்துவின் பேரமைதியை பெற்றிருக்கின்றோம், என்று தம் திருச்சபைக்கு வலியுறுத்துகின்றார்….

பவுலடியார் தமது வாழ்வில் ஆண்டவர் இயேசுவின் பேரிறக்கமே என்னை நீதிமானாக மாற்றியது. அதுவே என்னை திருப்பணிக்கு உந்தித் தள்ளியது. ஆண்டவர் இயேசுவுக்காக பணியாற்ற ஆற்றலையும் தருகிறது என்று அழுத்தமாக நிலைப்பாட்டை முன் நிறுத்துகின்றார்….

ஆண்டவர் இயேசு கிறிஸ்து பவுலடியார் அவர்களுக்கு அருள் பேரமைதி தன் பாதையை மாற்றியது. மன மாற்றத்தை அடையச் செய்தது. சமய சார்பில் இருந்து சமூக சார்புக்கு என்னை வழிநடத்தினது சான்று பகர்கின்றார்….

கிறிஸ்துவின் அடியவர்களை துன்புறுத்திய போது அடைந்த ஆனந்தத்தை விட, கிறிஸ்துவுக்காக துன்புறும்பொழுது வருகின்ற ஆனந்தம் அது எனக்கு மேன்மையை தருகிறது என்று புதிய நெறிமுறையை கற்றுக் கொடுக்கிறார்….

சகேயுவின் மனமாற்றம் அவரது வாழ்வில் பெரிய மாற்றத்தை தந்தது. யாரிடம் எல்லாம் அநியாயமாய் வாங்கினேனோ அவர்களுக்கு நான்கு மடங்கு திரும்பத் தருகிறேன் என்றதுபோல, யாரை துன்புறுத்தினாரோ அவர்களோடு தன்னை இணைத்துக் கொண்டு அவர்களோடு இணைந்து பாடுபடுவதை மேன்மை என்று பவளடியார் தன் இறையியல் பார்வையை வெளிப்படுத்துகின்றார்….

ஆண்டவர் இயேசு தந்த பேரமைதி பவுலடியார் வாழ்வில் உபத்திரவத்தில் பற்றுறுதியோடு வாழவும், அதில் நிலைத்திருக்கவும், இறை மக்களை அதில் நிலை பெயரச் செய்யவும் வழிநடத்தினது….

“பற்றுறுதியில் வளர்வது என்பது ஆண்டவர் இயேசு கிறிஸ்துவில் இணைந்திருப்பது, அவரின் வழியில் பயணிப்பது, அவரின் பாடுகளில் பங்கு பெறுவது, அவரது உயிர்ப்பில் பங்கு பெறுவதே” என்ற புதிய கோட்பாட்டை தனது திருச்சபைக்கு எடுத்துரைக்கின்றார்…

பற்றுறுதி எவரிடம் இருக்கிறதோ அவரிடம் செயல்பாடும் இணைந்திருக்கும் என்ற தெளிவை உணர்த்துகின்றார். அதற்கு தானே ஒரு முன் உதாரணம் என்று தன் திருச்சபைக்கு எழுதுகின்றார்…..

3. இறைவன் அருளும் பேரமைதி “இறை வழியில் பயணிக்க வைக்கும்…” (யோவான் 16: 16-33)

ஆண்டவர் இயேசு தம் சீடர்களோடு உரையாடுகின்ற இந்த உரையாடல் ஆழமான அர்த்தம் கொண்டது. மூன்றரை வருடம் தம் சீடர்களோடு உடனிருந்து, திருப்பணியில் முன் நின்று வழி நடத்தி, இறை ஆட்சியை நிறுவுவதற்கு அரும்பாடு பட்ட இயேசு தம் சீடர்களுக்கு எதிர்வரும் நிகழ்வுகளை குறிப்பிடுகின்றார்….

இனி நீங்கள் தனித்து இருக்கும் காலம் வரும், சிதறடிக்கப்படும் நேரம் வரும், என் நிமித்தம் பல துன்பங்கள் உண்டாகும் என்று தம் சீடர்களுக்கு இனி நடக்கவிருக்கும் நிகழ்வுகளை காட்டுகின்றார்….

நான் தனித்து விடப்பட்டாலும் கடவுள் என்னோடு இருப்பார். திடன் கொள்ளுங்கள் உலகத்தை ஜெயித்தேன் என்று ஆண்டவர் தம் சீடர்களுக்கு கூறுகின்றார்….

உலகம் என்பது அடக்குமுறைகளையும், தவறான அதிகாரங்களையும், வன்முறையாளர்களையும், சமய வெறியாளர்களையும், இரக்கமற்றவர்களையும், ஒடுக்குபவர்களையும், இவ்வுலகத்தின் அரசாட்சியையும் குறிக்கின்றது….

கடவுள் எனக்குத் தந்த பேரமைதியை, நான் உங்களுக்கு தருகிறேன். அது உங்களை திடப்படுத்தும், ஆற்றல்படுத்தும், இறை ஆட்சிக்கான செயல்களில் தொடர்ந்து உங்களை வழிநடத்தும் என்று தம் சீடர்களுக்கு கற்றுக் கொடுக்கின்றார்…

ஆண்டவர் இயேசுவின் வழி, அது சிலுவையின் வழி. அந்த வழியில் இறை ஆட்சியை நிறுவுவதற்கு பாடுபட்டார், சிலுவை சுமந்தார், அவமானங்களை சகித்தார் மரித்தார், உயிர்த்தார். இந்த வழியில் நீங்களும் பயணிக்க இருக்கிறீர்கள் என்பதை உணர்த்துகின்றார்….

கடவுளின் இயக்கம் ஒருபோதும் தடைபட்டதில்லை. வரலாற்றில் செயல்படுகின்ற கடவுள், இருக்கின்றவராகவே இருக்கின்ற கடவுள், இயங்கிக் கொண்டே இருக்கின்றார், இயக்கத்தையும் வளர்த்துக் கொண்டே இருக்கின்றார்…

இயேசுவின் ஆற்றல் மிகுந்த உரை, அவர் தந்த பேரமைதி அன்றைய சீடர்களுக்கு புரிந்து கொள்ள முடியாவிட்டாலும் அவரின் உயிர்ப்புக்கு பின்பதாக இயேசுவின் இயக்கம் வளர்ந்து பெருகுவதற்கு அது முன் அடையாளமாக இருந்தது….

ஆண்டவர் இயேசு தம் சீடர்களுக்கு அருளின பேரமைதி கிறிஸ்துவின் வழியில் தொடர்ந்து செயல்படுத்துவதற்கு, பயணிப்பதற்கு அது ஆற்றலை தந்தது. இறை ஆட்சி என்னும் இயேசுவின் இயக்கம் தொடர்ந்து வலுப்பெற அது ஊக்கம் தந்தது….

நிறைவாக

கடவுள் அருளும் பேரமைதி, சிறை இருப்பில் ஒடுக்கப்பட்டு கிடந்த, யூத சமூகத்து “மீந்திருந்தவர்களை” விடுதலை வாழ்விற்கு நேராகவும், நீதியுள்ள சமூகமாக தங்களை உருமாற்றிக் கொள்ள உதவியது….

கடவுள் அருளும் பேரமைதி “சிதறடிக்கப்பட்டவர்களை” கிறிஸ்துவின் அடியார்களை, பற்றுறுதியில் வளர்ந்து நிற்கவும், இறை ஆட்சியின் “முன் சுவையாக” திருச்சபை வளர்ந்து பெருகவும் வழி நடத்துகின்றது….

கடவுள் அருளும் பேரமைதி,

“ஒடுக்கப்பட்டவர்களை” இயேசுவின் சீடர்களை ஒருங்கிணைத்து, கிறிஸ்துவின் வழியில் தொடர்ந்து பயணிப்பதற்கு, சான்று பகர்வதற்கு உதவுகின்றது….

! “மீந்தவர்கள், சிதறடிக்கப்பட்டவர்கள், ஒடுக்கப்பட்டவர்கள்” இந்த மூன்றில், நாம் எந்த கூட்டம் என்பதை இன்று முடிவு செய்வோம்….

கடவுள் தருகின்ற பேரமைதி
நம் அனைவரோடும், நம் செயல்பாடுகளோடும் என்றும் இருப்பதாக ….

இறைப்பணியில் உங்களோடு

Rev. Augusty Gnana Gandhi,

CSI Trichy Tanjore Diocese.

One thought on ““என் பேரமைதியை நான் உங்களுக்கு தருகிறேன்””

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *