brothers, poverty, begging

Christian Response to Poverty

# திருமறைப் பகுதிகள்

ஆமோஸ் 8: 4 – 7
யாக்கோபு 2: 1 – 7
லூக்கா 16: 19 – 31

#. சிந்தனைக்கு

நிலவரம்பு உச்ச சட்டம் – நில பிரபுக்களை ஒழிப்பதற்கு உருவாக்கப்பட்டது…
அடிமைத்தனம் ஒழிப்புச் சட்டம் – அடிமையற்ற சமூகம் உருவாக ஏற்படுத்தப்பட்டது…
சிறுசேமிப்பு திட்டம் – கந்து வட்டிக் கொடுமையில் இருந்து ஏழைகளை காப்பதற்கு உருவாக்கப்பட்டது….
உழவர் சந்தை – வியாபாரிகளிடமிருந்து விவசாயிகளை காப்பாற்றுவதற்கு கொண்டுவரப்பட்டது…
சுய உதவிக் குழுக்கள் – பெண்கள் கூட்டமைப்பை உருவாக்கி, வட்டி என்கின்ற சுமையை போக்குவதற்கு வழிவகை செய்தது…
இது போன்று உருவாக்கப்பட்ட அத்தனை சட்டங்களும் “ஏழைகளுக்கும், வறுமைக்கோட்டில் வாடுபவர்களுக்கும், விளிம்பு நிலை மக்களுக்கும், உழைக்கின்ற வர்க்கத்திற்கும், பெண்களுக்கும், தலித் மக்களுக்கும் துணை நின்று அவர்களை விடியலை நோக்கி நகரத்தி, சமூக நீதி மாற்றங்களை கொண்டு வந்தது….

2016 நவம்பர் 8ஆம் தேதி – மறக்க முடியாத நாள். ஏழைகளை நசுக்கி, நடுத்தர வர்க்கத்தை வீதியில் நிற்க வைத்து, பணக்காரர்களுக்கு சாமரம் வீசிய நாள் அது….

நிகழ்கால கவிதை இப்படி சொல்லுகிறது…

பூங்காக்களில்
உள்ள செடிகள்
முகம் வாடி
விடக் கூடாது
என்று மிகவும்
கவனமாக
இருக்கின்றோம்…!

நான்கு வழி
சாலையில்
நடப்பட்ட
செடிகளின்
தாகத்தை
சிரத்தையோடு
தீர்த்து விடுகின்றோம்…!

சேரி
மக்களின்
வறுமையை
மிகவும்
கவனமாக
திட்டமிட்டு
“திரையிட்டு”
ஒழித்து விட்டோம்…!

திருவிருந்து ஆராதனை போது பாடப்படும் பாடல் “தாரகமே தாரகமே – பசி தாகத்துடன் உம்மிடம் வேகத்துடனே வாரேன் – தாரகமே… இந்தப் பாடல் திருவிருந்தை மட்டும் குறிக்கின்ற ஒன்று அல்ல, “பசியை” பற்றியும் வலியுறுத்துகிறது. பசி, தாகத்தோடு வருகின்ற, இறை மக்களுக்கு ஆண்டவர் திருவிருந்து மூலம் பசியாற்றுகின்றார், தாகம் தீர்க்கிறார். இது இறை ஆட்சியின் முன் சுவை விருந்து. இந்த விருந்தை உண்டவர்களின் “தலையாய திருப்பணி”, சமுதாயத்தில் பசியோடு வாழ்கின்ற மக்களின் வறுமையை போக்க வேண்டும் என்பதே… “உணர்ந்து பாடுவோம், வறுமையை ஒழிக்க, பண்ணமைத்து பாடு(படு)வோம்….”

வறுமையும் அதற்கான கிறிஸ்தவத்தின் நிலைப்பாடும் என்ற பொருளில் திருமறைப் பகுதிகளை தியானிப்போம்….

1). வறுமைக்கான காரணிகளை வெளிச்சத்தில் கொண்டு வர அழைக்கப்பட்டுள்ளோம் … (ஆமோஸ் 8: 4 – 7)

ஆமோஸ் தீர்க்கரின் காலத்தில் ஏழை – பணக்காரன் என்ற பாகுபாடு இஸ்ரவேல் மக்களிடத்திலே எவ்வாறு இருந்தது என்பதை திருமறை காட்சி படுத்துகின்றது….

பெரும் பணக்காரர்கள் மாரி காலத்திற்கு ஒரு வீடும் கோடைகாலத்திற்கென்று ஒரு வீடும் கட்டி சுகபோகமாக வாழ்ந்திருந்தார்கள்.(3: 15) யானை தந்ததால் இல்லங்களை கட்டி அதில் வாழ்ந்து இருக்கின்றார்கள்.(3: 15) …

தந்தங்களால் செய்யப்பட்ட கட்டில்களில் படுத்து, உயர்ரக மதுபானங்களை ருசித்து, வாசனை மிக்க நறுமண தைலங்களை உடலில் அப்பிக் கொண்டு, கொளுத்த கன்றுகளை தின்று “இறைவனை மறந்து, நியமங்களையும் துறந்து வாழ்ந்தார்கள் இந்த செல்வந்தர்கள் என்று ஆமோஸ் அம்பலப்படுத்துகின்றார்….

மரக்காலைக் குறைத்து, சேக்கல் நிறையை அதிகமாக்கி, கள்ளத்தராசினால் வஞ்சித்து, தரித்திரரைப் பணத்துக்கும், எளியவர்களை ஒரு ஜோடு பாதரட்சைக்கும் கொள்ளும்படிக்கும்;, தானியத்தின் பதரை விற்கும்படிக்கும் (8: 5)செல்வந்தர்கள் இரக்கமின்றி, மனித நேயம் இன்றி, இறை அச்சமும் இன்றி வாழ்ந்திருந்தார்கள் என்பதை இந்த திருமறை பகுதி வெளிச்சத்திற்கு கொண்டு வருகிறது….

ஏழைகளை வறுமைக் கோட்டிற்கு கீழே தள்ளியும், அவர்கள் வாழவே முடியாத விளிம்புக்கு தள்ளப்பட்டதையும், ஏழைகளை அடிமைகளாக மாற்றியும் சமூகத்தில் ஏழை – பணக்காரன்(Rich – Poor), இருப்பவர் – இல்லாதவர் (Haves – Have not) என்ற பிளவை மேலும் அதிகப்படுத்தி வாழ்ந்த இழிநிலையை வெளியரங்கம் ஆக்கினார்….

கடவுள் தீர்க்கதரிசிகளையும்,
நசரேயர்களையும் உருவாக்கி மக்களை நல்வழிப்படுத்த பணித்திருந்தார், ஆனால் செல்வந்தர்கள் அவர்களுக்கு உயர்ரக விருந்தளித்து தீர்க்கதரிசனம் சொல்ல வேண்டாம் என்று தங்கள் கட்டுப்பாட்டில் அவர்களை வைத்துக் கொண்டார்கள்(2:12) என்ற இழிநிலையை வீதிக்கு கொண்டு வந்தார்…

ஆமோஸ் தீர்க்கதரிசி இஸ்ரவேல் சமூகத்திற்கு, கடவுள் உண்டாக்கின சட்டங்களையும், நியமங்களையும், கட்டளைகளையும் கடைப்பிடிக்கவில்லை என்றால் செல்வந்தர்களே நீங்கள் அழிவீர்கள், கடவுளின் சினத்திற்கு ஆளாவீர்கள், கடவுள் உங்களை தண்டிப்பார் என்று எச்சரிக்கின்றார்…

கடவுளால் ஏற்படுத்தப்பட்ட சட்டங்கள், இஸ்ரவேல் சமூகத்திலே “வறுமையை ஒழிப்பதற்கும், வறுமை கோட்டிற்கு கீழ் வாழுகின்ற ஏழைகள் வளம் பெறுவதற்கும், ஒரு சமத்துவ சமுதாயம் (Egalitarian society) iஉருவாவதற்கும் அது வழி செய்தது…

ஏழாம் வருஷத்தின் முடிவிலே விடுதலைபண்ணுவாயாக. விடுதலையின் விபரமாவது: பிறனுக்குக் கடன்கொடுத்தவன் எவனும், கர்த்தர் நியமித்த விடுதலை கூறப்பட்டபடியால், அந்தக் கடனைப் பிறன் கையிலாகிலும் தன் சகோதரன் கையிலாகிலும் தண்டாமல் விட்டுவிடக்கடவன்.(உபாகமம் 15:1-3)

இந்த ஏழைகளின் சார்பாக உள்ள சட்டங்களை கடைப்பிடிக்காவிட்டால் அது இஸ்ரவேலருக்கு சாபமாக உருவாகும் என்ற நியமங்களை மறந்து போன செல்வந்தர்களுக்கு, இறை வார்த்தையை உரைக்கின்றார், இறை கண்டனத்தை பதிவு செய்கின்றார், இறைவனின் கோபத்தை எடுத்துக்காட்டுகின்றார், இனி அழிவு நிச்சயம் என்பதை பறைசாற்றுகின்றார்….

நாட்டில் “வறுமை கோடுகளே இல்லாத” ஒரு புதிய உலக வரைபடத்தை உருவாவதற்கு நாம் அழைக்கப்பட்டிருக்கின்றோம்….

2). வறுமை ஒழிப்புக்கான முன்னெடுப்புகளை துவங்கிட தெரிந்து கொள்ளப்பட்டுள்ளோம் …(யாக்கோபு 2: 1 – 7)

இறைவனால் உண்டாக்கப்பட்ட திருச்சபை, இறை ஆட்சியின் முன் அடையாளமாக விளங்க வேண்டும். திருச்சபை அதற்காகவே அழைக்கப்பட்டிருக்கிறது. அன்று இஸ்ரேல் சமூகத்தை தெரிந்து கொண்ட இறைவன், இன்றைக்கு திருச்சபையை தமது திருப்பணியாளர்களாக தெரிந்து கொண்டிருக்கின்றார்…

திருத்துதுவராகிய யாக்கோபு நமது கடிதத்தில்,திருச்சபையில் நிலவுகின்ற “ஏற்ற தாழ்வுகளையும், பிளவுகளையும், அழுக்குகளையும், அசிங்கங்களையும்”தோலுரித்துக் காட்டுகின்றார்…

பொன்மோதிரமும் மினுக்குள்ள வஸ்திரமும் தரித்திருக்கிற ஒரு மனுஷனும், கந்தையான வஸ்திரம் தரித்திருக்கிற ஒரு தரித்திரனும் உங்கள் ஆலயத்தில் வரும்போது,
மினுக்குள்ள வஸ்திரந்தரித்தவனைக் கண்ணோக்கி: நீர் இந்த நல்ல இடத்தில் உட்காரும் என்றும், தரித்திரனைப் பார்த்து: நீ அங்கே நில்லு, அல்லது இங்கே என் பாதபடியண்டையிலே உட்காரு என்று சொல்வதும், நடை முறைப்படுத்துவதும் எவ்வளவு இழிவானது என்று திருச்சபைக்கு வலியுறுத்துகின்றார்(2 :1-3)…

என் பிரியமான சகோதரரே, கேளுங்கள் தேவன் இவ்வுலகத்தின் தரித்திரரை விசுவாசத்தில் ஐசுவரியவான்களாகவும், தம்மிடத்தில் அன்புகூருகிறவர்களுக்குத் தாம் வாக்குத்தத்தம்பண்ணின ராஜ்யத்தைச் சுதந்தரிக்கறவர்களாகவும் தெரிந்துகொள்ளவில்லையா? (2:5) என்று இறைமகன் இயேசு கிறிஸ்துவின் செயல்பாடுகளை வலியுறுத்தி கூறுகின்றார்….

இப்படி ஏழைகளை வஞ்சிப்பதும், ஏழைகளுக்கு ஒரு நியாயம் கற்பிப்பதையும், செல்வந்தர்களுக்கு சார்பாக துணை நிற்பதை “பாவம்”(2:9) என்றும், இது குற்றம் (2:10) என்றும், உடன்படிக்கை மீறுதல்(2:11) என்றும் யாக்கோபு தமது திருச்சபைக்கு கண்டிப்போடு அறிவுறுத்துகின்றார்….

“உன்னிடத்தில் நீ அன்பு கூறுவது போல பிறரிடத்தில் நீ அன்பு கூறுவாயாக” என்ற நியமங்களை மறந்து போகும் செல்வந்தர்களுக்கு நியாயத்தீர்ப்பில் மட்டுமல்ல அன்றன்றே நியாயத்தீர்ப்பு உண்டு என்பதை சமூகத்திற்கு எடுத்துக்காட்டும் இறைப்பணியில் இணைந்திட, இயங்கிட இறை மக்களாக நாம் அழைக்கப்பட்டிருக்கின்றோம்…

கடவுள் எங்கே இருக்கிறார் என்றால் அவர் ஏழைகளின் சார்பாக நிற்கின்றார். ஏழையின் உருவக அவர் மனு உரு எடுத்தார். ஏழையோடு ஏழையாக வாழ்ந்தார். ஏழைகளின் மறுவாழ்வுக்காக குரல் கொடுத்தார். ஏழைகளின் சார்பாக நின்று ஏழைக்கு பங்காளரானார், பங்காளி என்னும் உறவானார் என்பதை உணர்ந்து கொள்ள வேண்டும் என்று யாக்கோபு பிரயாசப்படுகின்றார்….

அன்றைய யூத சமூகத்தில் வேறுபாடுகள் இருந்தது, பிரிவினைகள் கடைப்பிடிக்கப்பட்டன, ஆதிக்க போட்டிகள் தலைவிரித்தாடின, அடக்குமுறைகள் தலை தூக்கி இருந்தன இதற்கு மறுமொழியாக உருவாக்கப்பட்டது தான் திருச்சபை என்பதை தமது திருச்சபை அன்பர்களுக்கு யாக்கோபு நினைவூட்டுகின்றார்….

அருளுரை என்பது நிகழ்கால நிகழ்வுகளை கேள்வி எழுப்புகின்ற ஒன்றாக இருந்திட வேண்டும் என்ற நிலைப்பாட்டில் யாக்கோபு உறுதியாக நிலை நிற்பதை இந்த திருமறை பகுதி நமக்கு தெளிவாக காட்டுகின்றது…

திருப்பணியாளர் என்பவர் எல்லா மக்களுக்கும் உரியவராக இருந்திடல் வேண்டும். குறிப்பாக இறைவன் சார்பாக, இறைவனின் சித்தத்தை நிறைவேற்றுகின்றவராக, எளியோரின் தோழராக இருந்திடல் வேண்டும் என்பதை யாக்கோபு அவர்களின் திருப்பணி நமக்கு அறைகூவல் விடுகின்றது….

விளிம்பு நிலையில் உள்ள ஏழைகள், திருச்சபைகளில் இன்றும் ஏழையாகவே இருக்கின்றார்கள். திருச்சபையின் பண்டிகைகளில் அவர்களுக்கு உரிய அங்கீகாரம் தொடர்ந்து மறுக்கப்பட்டு கொண்டே வருகிறது. ஏல விற்பனைகளில் அவர்கள் வெறும் பார்வையாளர்களாகவே இருக்கும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளார்கள்….

கல்வி, மருத்துவம், வேலை வாய்ப்பு …போன்றவைகள் தொடர்ந்து ஏழைகளுக்கும், வறுமைக் கோட்டில் வாழ்பவர்களுக்கும், விளிம்பு நிலை மக்களுக்கும், தலித் மக்களுக்கும் மறுக்கப்பட்டு கொண்டே வருகிறது. கடவுள் இவர்களுக்கானவர் ( God’s Preferential option of poor) என்ற பார்வை திருச்சபையில் திட்டமிட்டு அழிக்கப்பட்டு வருவது இழிவானது….

திருச்சபை புதிய சமூகமாக, சமத்துவத்தை வளர்க்கும் கூடமாக, வறுமைக்கு எதிரான நிலைப்பாடுகளை துணிந்து எடுக்கும் சபைகளாக, அதற்கான பணியாளர்களை உருவாக்கும் இயக்கங்களாக, நீதியின் நிமித்தம் துன்பப்படுகின்ற இறை மக்களாக வாழ தெரிவு செய்யப்பட்டு இருக்கிறோம்….

அன்றைக்கு யாக்கோபு என்னும் திருப்பணியாளர் வறுமையை குறித்தும் ஏழைகளைக் குறித்தும் கரிசனை உடையவராக, சுட்டிக்காட்டி, தட்டி கேட்டதைப் போல திருச்சபையும், பணியாளர்களும் தங்கள் எழுத்துக்களினாலும் தங்கள் செயல்பாடுகளினாலும் சபையை முன்னெடுத்துச் செல்ல நம் கடமைப்பட்டு இருக்கிறோம்….

3). வளமான சமுதாயம் உருவாக இறையியல் பயணத்தை தொடர்ந்திட பணிக்கப்பட்டுள்ளோம்….(லூக்கா 16: 19 – 31)

இயேசுவின் உவமை ஒரு புதிய இறையியல் தளத்தை கட்டமைக்கிறது. புதிய கோட்பாட்டை வடிவமைக்கின்றது. அது இறை ஆட்சியை குறித்து பேசுகின்றது….

செல்வந்தர் ஒருவரும் லாசரு என்ற ஒரு வரியவர் இருவரின் வாழ்வு ஒரு முன் உதாரணமாக காட்டப்பட்டுள்ளது. உலகில் செல்வந்தரின் வாழ்க்கை சுகபோகமாக இருக்கின்றது. லாசர் என்ற ஏழையை கண்டு கொள்ளவும் இல்லை, அவரை கருத்தில் கொள்ளவும் இல்லை…

செல்வந்தரின் வாசலில் இருந்த லாசர் என்னும் யாசித்தவரை செல்வந்தர் கண்டு கொள்ளவும் இல்லை. அவருக்கு உதவி செய்திட மனமும் இல்லை. நாய்கள் வந்து அவனை நக்கும் பொழுது, அவனைக் குறித்த கரிசனையும் அவனுக்கு எழவில்லை, அக்கறையும் வரவில்லை, இறக்கமும் வரவில்லை, மனிதாபிமானமும் எழவில்லை என்றால் அவன் எப்படிப்பட்ட குணம் உடையவன் பண்பு உடையவன் என்பது விளங்குகின்றது….

செல்வந்தரும் லாசருவும் மரித்து விண்ணகம் செல்கின்றார்கள். விண்ணகத்தில் உண்டாகின்ற காட்சி இவ்வுலகத்தின் காட்சிக்கு நேர் எதிராக காட்டப்பட்டுள்ளது….

உலகத்தில் வறியவராக வாழ்ந்த லாசரு விண்ணரசில் செல்வந்தராகவும், பெரும் பணக்காரராக வாழ்ந்த மனிதர் விண்ணரசில் ஏழையாகவும் சித்தரிக்கப்பட்டுள்ளனர்….

செல்வந்தராக வாழ்ந்த மனிதர் விண்ணரசில், நோயினால் துன்புற்ற அந்த லாசரவின் விரல் நுனியில் இருந்து ஒரு சொட்டு நீர் தந்து என் தாகத்தை தீரும் என்று இறைவனிடம் கெஞ்சுகிறார். ஆண்டவர் செல்வந்தரின் மன்றாட்டை ஏற்க மறுத்தார்…..

விண்ணரசில் அந்த செல்வந்தர் கடவுளிடம் வேண்டுகின்றார் எனக்கு 5 சகோதரர்கள் உண்டு. அவர்கள் இந்த துன்பத்தை அனுபவிக்க கூடாது, எனவே அவர்களுக்கு கற்றுக் கொடுக்கும் படி உமது தூதரை அனுப்பும் என்று வேண்டிக் கொள்கின்றார்….

கடவுள் அந்த விண்ணப்பத்தை நிராகரிக்கின்றார். ஏற்கனவே நான் அனுப்பிய நீதி தலைவர்கள், தீர்க்கதரிசிகள், சீடர்கள் நியமங்களின் வழியாக கட்டளைகளின் வழியாக கற்றுத் தந்ததை வலியுறுத்தியதை ஏன் மறந்தீர்கள் என்று உணர்த்தியதோடு மட்டுமல்லாமல் தண்டனை தீர்ப்பையும் ஆண்டவர் குறிப்பிடுகின்றார்…..

செழுமை கடவுளின் ஆசிர்வாதம் என்றும் வறுமை கடவுளின் சாபம்” என்றும் தலைமுறை தலைமுறையாக, கருத்தியல் ரீதியாக அன்றும் இன்றும் சமூகத்தில் வலியுறுத்தப்பட்டு கொண்டே வருகிறது….

இயேசு இந்த உவமையின் வழியாக, நியாயத்தீர்ப்பு என்பது நிச்சயம் நடைபெறும். அந்த நியாயத்தீர்ப்பில் பாரபட்சம் என்பது கிடையாது. தண்டனை நிச்சயம் உண்டு என்பதை இந்த உவமை வழியாக கற்பிக்கின்றார்…

இறை ஆட்சி வறுமைக்கு எதிரானது. வலியோருக்கும் அது எதிரானது. வறுமையின் தொடர்புடைய சாதியம், சமத்துவமின்மை, மனித மாண்பை குறைத்தல், அமைதி இழைத்தல்… போன்ற தீய சக்திகளுக்கு
எதிரானது என்பதை இயேசு தமது மக்களுக்கு கற்பிக்கின்றார்….

ஏழைகளே நீங்கள் வேறு பெற்றோர் என்று ஆண்டவர் இயேசு முழங்குவதையும், உணவற்ற ஏழைகளுக்கு அற்புதங்களால் உணவு அளிப்பதையும், ஏழைகளோடும் பாவிகளோடும் சமமாக உண்டு உறவாடுவதையும், ஏழைகளின் குரலாக தன் குரலை உயர்த்தியதையும், வறியவர்களின் வழிபாட்டு உரிமையை ஆலயத்தை சுத்தம் செய்து மீட்டெடுத்ததையும் ஒவ்வொருவரும் உணர இறையியல் பயணத்தை இயேசு துவங்குகின்றார்….

இந்த இறையியல் பயணத்தை உவமை வழியாக நமக்கு ஆண்டவர் தெளிவாக விளக்கிக் காட்டி இருக்கின்றார். இந்த இறையியல் பயணத்தில் வறுமைக்கு முற்றுப்புள்ளி வைப்போம். வறுமையின் கோர முகத்தை வெளிச்சம் போட்டு காண்பிப்போம். இறையியல் தளங்களில் கருத்தாக்கங்களையும், கோட்பாடுகளையும்,,சட்டங்களையும், நடைமுறைகளையும் நெறிப்படுத்துவோம்…

புதிய இறையியல் பார்வையோடு, இயேசு கற்பித்த செயல் படுத்திய நற்செய்திகளை நடைமுறைப்படுத்த முனைப்போடு செயல்படுவோம் ….

#. நிறைவாக

திருச்சபைகளில் நடக்கின்ற தோத்திரப் பண்டிகைகளில், அசன பண்டிகைகளில் முதல் பந்தி யாருக்கு என்பதை இன்று முடிவு செய்வோம்…..

கானாவூர் திருமண பந்தியில் இறைவன் இயேசு செய்த அற்புதம், “ருசி மிகுந்த திராட்சை ரசம் கடைசியில் வருகின்ற ஏழைகளுக்கே” கிடைத்தது என்பதை உணர்ந்து திருப்பந்தி அமைப்போம்…..

ஏழைக்கு பங்காளனார், பாவிக்கு ரட்சகனார், இயேசு என்னும் திருமகனார் உலகத்திலே பிறந்தவராம் … போன்ற பொருள் உள்ள பாடல்களை பண்ண அமைப்போம்…..

வறுமைக் கோடுகளே இல்லாத புதிய உலக வரைபடத்தை உருவாக்க முனைப்போடு செயல்படுவோம்….

வறியவர்களின் வாழ்வில் உள்ள கூட்டு வாழ்வையும், எளிமையான வாழ்வையும், இயற்கையோடு இணைந்த வாழ்வையும், அவர்களின் சகிப்புத்தன்மையையும், விட்டுக் கொடுத்தலையும், தாராள மனப்பான்மையையும், அவர்களின் தெய்வ பக்தியையும், அவர்களோடு உழன்று வாழ்கின்ற இறைவனையும் நாம் என்றைக்கு காண்கிறோமோ, உணர்கிறோமோ அன்றைக்கு அந்த வீட்டுக்கும் அந்த மனிதருக்கும் இரட்சிப்பு வரும்…

இந்த புதிய சொந்தங்களோடு என்றைக்கு நம்மை இணைத்துக் கொள்கின்றோமோ அன்றைக்கு புதிய வாழ்வு மலரும், புதிய சமூகம் உருவாகும், இறை ஆட்சி மண்ணில் நிலவிடும்…

திருப்பணியில்

Rev. Augusty Gnana Gandhi
Trichy – Tanjore Diocese
Ariyalur Pastorate

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *