Unity in Worship

வழிபாட்டில் ஒன்றித்தல்

——————————-

#  திருமறை பகுதிகள்

————————

நெகேமியா 2: 17 – 20

ரோமர் 8: 31 – 39

லூக்கா 9 : 1 – 6

#. துவக்கமாக…

——————-

# இந்திய தென்னாட்டில் அருட்பணியின் விளைவாக… மாற்றங்கள் தனி நபரிடம் உருவானது, தனி நபர் மனமாற்றம் சமூக மாற்றமாக உருவெடுத்தது, சமூக மாற்றம் திரள் இயக்கமாக வளர்ந்தது, அந்த மாபெரும் திரள் இயக்கம், திருச்சபைகளாக உருவெடுத்தது, திருச்சபைகள் ஒன்றிணைந்து தென்னிந்திய திருச்சபையாக வளர்ந்து நிற்கின்றது…

# கல்வி எனும் கண் திறந்து…,மருத்துவம் என்னும் சேவை செய்து…,இல்லங்கள் பல திறந்து வைத்து…,அன்பர் ஆயர் இணைத்து வைத்து…, அருட்பணி சுடரை முன்னெடுத்து…,கலங்கரை விளக்காய்…,சமூகத்தின் முதுகெலும்பாய்…,ஏழை எளியோரை தாங்கிப் பிடிக்கும் நங்கூரமாய்…,இணைத்துச் செல்லும் அச்சாணியாய்…தென்னிந்திய திருச்சபை சான்றாய் வளர்ந்து நிற்கின்றது…

# ஒருமைப்பாட்டிற்கு உலகத்திற்கே தென்னிந்திய திருச்சபை பாடம் நடத்திக் கொண்டிருக்கிறது …

# நான்கு பாரம்பரியங்கள், மொழிகள், கலாச்சாரங்கள், பண்பாடுகள், நிறங்கள்… இணைந்து ஒரு இயக்கமாய் வளர்ந்து நிற்கிறது தென்னிந்திய திருச்சபை…

# வழிபாடு என்பது வழிபடுதல். வழிபடுதல் என்பது ஒரு வழி. அது வழியாக, வாய்மையாக, வாழ்வாக, விடுதலையாக சமூகத்தை ஒருங்கிணைக்கிறது, இயங்க வைக்கிறது, இறை ஆட்சியை நிறுவுவதற்கு வழி ஏற்படுத்துகிறது….

1. ஒன்றித்தல் – மறு கட்டுமானத்திற்காக …(நெகேமியா 2: 17 – 20)

——————————-

மறுக்கட்டுமானம் என்பது கடவுளின் திட்டங்களில் ஒன்று. திருமறை முழுவதும் கடவுள் சமூகத்தை எவ்வாறு மறுக்கட்டுமானம்  செய்துள்ளார் என்பதை எடுத்துக்காட்டி இருக்கிறது…..

இந்த திருமறை பகுதியும் ஒடுக்குதலினால் வீழ்ந்து போன, போரினால் உருக்குலைந்து போன சமூகத்தையும், மக்களையும், நம்பிக்கையையும், நகரத்தையும் கடவுள் எவ்வாறு ஒன்றிப்பு என்பதன் மூலம் மறுக்கட்டுமானம் செய்துள்ளார்  என்பதை விளக்குகின்றது….

வடநாடு தென்னாடு என்று பிரிந்து கிடந்தது இஸ்ரவேல் நாடு. எருசலேம் யூதாவின் தலைநகராகவும், சமாரியா இஸ்ரவேலின் தலைநகராகவும் இருந்தது. சீரியா மற்றும் பாபிலோனியர்கள் படையெடுப்பால் இஸ்ரவேல் நாடு உருக்குலைந்து சிறைப்பட்டு போயின. எருசலேம் நகரம் தீக்கிரையாக்கப்பட்டது, (2.ராஜாக்கள் 15, 25) அலங்கங்கள் இடித்து போடப்பட்டன….

நெகேமியா தீர்க்கர் இடிந்து கிடந்த, பாழாய் கிடந்த, தீக்கிரையாக்கப்பட்ட எருசலேமை மறுக்கட்டுமானம் செய்வதற்கு திட்டமிடுகின்றார், இறைவனிடம் மன்றாடுகின்றார், அரசரிடம் அனுமதியும் பெறுகின்றார்….

நகரம் இடிந்து கிடப்பதையும், மக்கள் வாழ்வு சீர்குலைந்து கிடைப்பதையும் கண்ட நெகேமியா  அதை மறு கட்டுமானம் செய்வதற்கு முயற்சி எடுக்கின்றார்…

கடவுளின் செயல்பாடும், தீர்க்கதரிசியின் முனைப்பும் மக்களை ஒன்று படுத்தியது. அந்த ஒன்றிப்பு அலங்கத்தை கட்டுவதற்கு மட்டுமல்ல சமூகத்தை கட்டமைப்பதற்கு வழியாக அமைந்தது…..

ஒத்த கருத்து உடையவர்கள் ஒன்றாக இணைந்தார்கள். மறு கட்டுமானத்திற்கு நெகேமியா விடுத்த அழைப்பை ஏற்றுக் கொண்டார்கள். மறுக்கட்டுமானத்திற்கான முன்னெடுப்புகளையும், தொடர் செயல்பாடுகளையும் இணைந்து நின்று, தம் கரங்களை இணைத்து செயல்படுத்தினார்கள்….

சன்பல்லாத், தொபியா, கேஷேம் போன்ற வலதுசாரி சிந்தனையுடையவர்கள், எதிர்ப்பாளர்கள், இந்த மறு கட்டுமானத்திற்கு தடையாக இருந்தாலும் அந்த தடைகளை தகர்த்தெறிந்து, அலங்கத்தை கட்டுவதற்கும் சமூகத்தை மறுக்கட்டுமானம்  செய்வதற்கும் முனைப்போடு ஒன்றித்து செயல்பட்டார்கள், அதில் வெற்றியும் பெற்றார்கள்…

அலங்கத்தை கட்டுவது என்பது சமூகத்தை கட்டமைப்பது, நம்பிக்கையை விதைப்பது, எதிர்கால வாழ்வை உறுதி செய்வது, விழுந்து கிடந்த சமூகத்தை எழசெய்வதாகும்….

நெகேமியா தீர்க்கரின் தலைமைத்துவமும்,  அவரின் செயல்பாடுகளும், முற்போக்கு சிந்தனைகளும், பிரிந்து கிடந்த இஸ்ரவேலரை ஒன்றுபடுத்தியது, இந்த ஒன்றிப்பு சமூகத்தை மறுக்கட்டுமானம் செய்வதற்கு வழிவகை செய்தது…..

ஒத்த கருத்து உடையவர்களையும், சமூக சிந்தனையாளர்களையும், செயல்பாட்டாளர்களையும், சீர்திருத்தவாதிகளையும் இனம் கண்டு, அவர்களை ஒன்றிணைக்கும் பொழுது பேராற்றல் வெளிப்படுகிறது, பெரிய மாற்றங்கள் உண்டாகிறது,  அது மறு கட்டுமானத்திற்கு வழி வகை செய்கிறது….

இந்திய பண்பாட்டுச் சமூக சூழலில் தென்னிந்திய திருச்சபை ஆற்றிய பெரும் பங்களிப்பு மறு கட்டுமானம்……

சாதியின் கொடுமையால், அடிப்படைவாதிகள் அடக்குமுறைகளால், சமயத்தோடு கலந்திருந்த அரசியலால், பிற்போக்குவாதிகளால் உண்டான அடிமைத்தனத்தை மீட்டெடுப்பதற்கு அருட்பணியர்கள் முனைப்போடு செயல்பட்டார்கள்,  ஒன்றித்து இயங்கினார்கள், தொடர் முயற்சியால் சமூகத்தை மறு கட்டுமானம் செய்தார்கள்…..

சமூகத்தில் மாற்றங்கள் உண்டானது, மனிதம் மலர்ந்தது, ஒடுக்குதலில் கிடந்த சமூகம் நிமிர்ந்து நின்றது , கல்வி, மருத்துவம், வேலை வாய்ப்புகள் என அனைத்திற்கும் அது வழிவகை செய்தது….

2. ⁠ஒன்றித்தல் – மறு அர்ப்பணிப்பிற்காக….(ரோமர் 8: 31 – 39)

——————————-

ஆதித்திருச்சபையான ரோமாபுரி திருச்சபை, திருச்சபை வரலாற்றில் மிக முக்கிய இடம் பெறுகிறது. பல துன்பங்களை சந்தித்த திருச்சபை……

இயேசு கிறிஸ்துவினால் உண்டான மாபெரும் இயக்கத்தில் இணைந்த சீடர்களையும், அன்பர்களையும், தோழர்களையும் கொண்டது இந்த ரோமாபுரி திருச்சபை…..

பல எதிர்ப்புகள், துன்பங்கள், அடக்குமுறைகள், வன்முறைகளை சந்தித்தது இந்த திருச்சபை. இவற்றின் ஊடாக பற்றுறுதியில் ஒவ்வொரு நாளும் வளர்ந்து இருந்தது இந்த திருச்சபை…..

இந்த ரோமாபுரி திருச்சபை சந்தித்ததை பவுல் பட்டியலிடுகின்றார்….மரணமானாலும், ஜீவனானாலும், தேவதூதர்களானாலும், அதிகாரங்களானாலும், வல்லமைகளானாலும், நிகழ்காரியங்களானாலும், வருங்காரியங்களானாலும், உயர்வானாலும், தாழ்வானாலும், வேறொந்தச் சிருஷ்டியானாலும் நம்முடைய கர்த்தராகிய கிறிஸ்து இயேசுவிலுள்ள தேவனுடைய அன்பைவிட்டு நம்மைப் பிரிக்கமாட்டாதென்று நிச்சயித்திருக்கிறேன்( 8  :  38, 39)…..

சிலுவை பாதையின் போது இயேசு கொண்டிருந்த அந்த உறுதி, பாடுகள், துன்பங்கள், அவமானங்கள், நிராகரிப்புகள், அலைக்கழிப்புகள் வன்முறைகள்.. போன்றவற்றை துணிவோடு எதிர்கொள்ள வழி செய்தது….

திருச்சபை வாழ்வில் எத்தனை துன்பங்கள் வந்தாலும், கிறிஸ்துவின் அன்பை விட்டு நம்மை ஒருபோதும் பிரிக்க முடியாது. கிறிஸ்து நம்மோடு இருக்கிறார்.  நாமும் இயேசு கிறிஸ்துவோடு இணைந்திருக்கின்றோம்…..

பவுல் அடியாரின் இந்த கடிதம், இந்த கடிதத்தின் மூலமாக அவர் மக்களுக்கு விடுத்த அறைகூவல், மற்றும் அழைப்பு திருச்சபை மக்களை ஒன்றிப்பு செய்தது…..

இந்த ஒன்றிப்பு ஆதி திருச்சபை அன்பர்களையும், நண்பர்களையும் , இறை மக்களையும் பற்றுறுதியில் மேலும் வளர்ந்து பெருக செய்து, துன்பங்களை சகித்து, பாடுகளை சந்தித்து, இயேசு கிறிஸ்து உருவாக்கிய இந்த மாபெரும் இயக்கம் தொடர்ந்து இயங்க இறை மக்களை மறு அர்ப்பணிப்புக்கு வழிநடத்தினது…..

ரோமாபுரி திருச்சபை அன்பர்கள் இறைமகன் இயேசுவுக்கு என்று தங்களை ஏற்கனவே அர்ப்பணித்தவர்கள், மாபெரும் திருச்சபையாக அணிவகுத்தவர்கள். இப்பொழுது  திருத்தூதவர் பவுல் அடியார் மூலம் தங்களை ஒன்றிணைத்து இறை ஆட்சிக்காக மறு அர்ப்பணம் செய்கிறார்கள்….

தென்னிந்திய திருச்சபை பேராயர்களாக, பணியாளர்களாக, இறை மக்களாக, ஆயர்களாக, அன்பர்களாக, அருட் பணியாளர்களாக, பெண்கள் ஐக்கிய சங்கமாக,  சிறுவர்களாக, இளையோர்களாக … தங்களை முழு மனதோடு இறைவனின் இத்திட்டத்தில், இயக்கத்தில் தொடர்ந்து இயங்க தங்களை மறு அர்ப்பணிப்பு செய்ய இந்த திருநாள் நம்மை வழி நடத்துகின்றது…..

3. ⁠ஒன்றித்தல் – மறு வாழ்விற்காக…..(லூக்கா 9 : 1 – 6)

——————————-

இயேசு கிறிஸ்து தம் திருப்பணியை துவங்கும் பொழுது 12 சீடர்களை ஒன்றிப்பு செய்து, அவர்களை தம் திருப்பணிக்காக உடன் இணைத்துக் கொண்டு திருப்பணியை ஆற்றினார்….

மேலும் தன் திருப்பணி வட்டத்தை விரிவாக்கம் செய்து, 70 பேர் கொண்ட கூட்டமைப்பை ஆண்டவர் இயேசு கிறிஸ்து துவங்கினார். அந்தக் கூட்டமைப்பிற்கு ஆற்றலையும், அதிகாரத்தையும், பணிகளையும் தந்து செயல்பட வைத்தார்….

கடவுள் தம் ஒரே பேரான மைந்தன் இயேசுவை,  இவ்வுலகத்திற்கு எதற்கு அனுப்பினாரோ, அந்த நோக்கத்தை நிறைவேற்றும் படியாக இந்த கூட்டமைப்பையும் ஆண்டவர் உருவாக்கி,  இறை அரசாட்சியை உருவாக்க பணியமர்த்தினார்…

இருளில் கிடந்த மக்கள் வெளிச்சத்தை காணவும், சிறைப்பட்டோருக்கு விடுதலை தரவும், நோயற்றோர் குணமாகவும், அநீதிகள் களையப்படவும், நியாயம் பெருக்கெடுத்து ஓடவும், மனித மாண்பு மலரவும், வாழ்வு இழந்த மக்கள் மறுவாழ்வு பெறவும் இந்தக் கூட்டமைப்பு, ஒன்றிப்பு மிக அவசியமானது என்று ஆண்டவர் உணர்ந்து  இந்த ஒன்றிப்பை செயல்படுத்தினார்….

இந்தக் கூட்டமைப்பு தனி நபர் விடுதலை என்பதை கடந்து,  ஒட்டுமொத்த சமூக விடுதலைக்கும், சமூக நீதிக்காகவும்,  சமூக மாண்புக்காகவும் தொடர்ந்து உழைத்திட வேண்டும்……

விளிம்பு நிலையில் உள்ள, ஓரங்கட்டப்பட்டு ஒடுக்குதலில் உள்ள, தீட்டு என்னும் கருத்தியலால் புறந்தள்ள பட்ட, கடன் சுமையால் வறுமைக்கோட்டுக்கு கீழே தள்ளப்பட்ட… மக்களின் மறுவாழ்விற்காக ஆண்டவர் இயேசுவால் ஏற்படுத்தப்பட்டது இந்த ஒன்றிப்பு, கூட்டமைப்பு….

இந்தக் கூட்டமைப்பில் தங்களை இணைத்துக் கொண்டவர்கள்,  தங்களை மறைத்துக் கொண்டு, இறை ஆட்சி மலர வேண்டும் என்ற உயர்ந்த நோக்கத்தோடு ஆண்டவர் இயேசுவின் வழியில் பயணித்தவர்கள், பாடுகளை சந்தித்தவர்கள், சிலுவையை சுமந்தவர்கள், ரத்த சாட்சியாக மரித்தவர்கள்,  வீர மரணம் அடைந்தவர்கள்….

ஆண்டவர் இயேசுவின் இந்த ஒன்றிப்பு, கூட்டமைப்பு இவ்வுலகத்தோடும், இந்த உலகின் அதிகாரங்களோடும், எதிர்த்து நின்று, வாழ்வுதனை இழந்த மக்களுக்கு  மறு வாழ்வை அமைப்பதே இதின் தலையாய நோக்கம்….

தென்னிந்திய திருச்சபை இயேசுவின் திரு சித்தத்தை தொடர்ந்து நிறைவேற்ற, வாழ்வு இழந்த  மக்களின் மறுவாழ்வாக அமைந்திட உறுதி ஏற்றிட வேண்டும்….

 #. நிறைவாக 

——————–

# ஆலயங்கள் அன்பின் அடையாளங்களாக மாறும்பொழுது அன்பர் இயேசு கிறிஸ்து அகமகிழ்வார், விண்ணிலும் மண்ணிலும் அவர் மாட்சி பெருகும்…..

# கல்வி நிலையங்கள் கல்வி சாலைகளாக மாறும் பொழுது அதில் நீதியும் நேர்மையும் பயணிக்கும்…..

# மருத்துவமனைகள் சேவை மையங்களாக உருவெடுக்கும் பொழுது மக்கள் மறுரூபம் ஆக்கப்படுவார்கள்…..

# அருட்பணி எல்லைகள் விரிவடையும் பொழுது நற்செய்தி தாராளமயமாக்கப்படுகிறது….

#அவர்கள் ஒன்றாய் இருப்பது போல நாமும் ஒன்றித்து இருக்க தென்னிந்திய திருச்சபை நம்மை ” மறு கட்டுமானம் செய்ய அழைக்கின்றது, மறு அர்ப்பணிப்பு செய்ய உந்துகிறது, மறுவாழ்வடைய வழிவகை செய்கிறது…”

+ இணைந்து பயணிப்போம்….

+ ஒன்றிணைந்து வழிபடுவோம்…

+.வழிபாடாக வாழ்ந்திடுவோம்…

இறைப்பணியில்

உங்களோடு….

Rev. Augusty Gnana Gandhi
Trichy – Tanjore Diocese
Ariyalur Pastorate