Men Playing Soccer

ஆசிய தேசத்தில் 600 மில்லியன் மக்கள் குறைபாடு உள்ள அல்லது விசேட தேவையுள்ள அல்லது அங்கவீனத் தன்மையுள்ள மக்களாகக் காணப்படுகின்றனர். 4251 குறைப்பாட்டு தன்மைகள் இவ்வுலகில் காணப்படுகின்றது.

பொதுவாக மானிடர்களை ‘அங்கவீனத்தன்மை’ அதாவது பார்வை இழந்தோர், பேச்சுத்திறன் குறைந்தோர், மூளைவளர்ச்சி குன்றியோர் போன்ற பதங்களை உபயோகிக்கின்றனர். இன்னுமொரு சிலர் இவர்களை ‘பிற ஆற்றல் உள்ளவர்கள்’ அல்லது ‘மாற்றியல்பு உள்ளவர்கள்’ எனவும் அழைக்கின்றனர். மாறாக, இன்னுமொரு சிலர் ‘அங்கவீனத்தன்மையுள்ள மக்கள்’ என்ற பதத்தை பயன்படுத்துகின்றனர். இதற்கூடாக அங்கவீனத்தன்மை முக்கியப்படுத்தப்படுவதோடு அவர்கள் மக்கள் என்ற எண்ணக்கருவும் வலியுறுத்தப்படுகின்றது.

திருமறையை அங்கவீனத்தன்மையுள்ளவர்கள் படிக்கும்போது கடவுளையும் அங்கவீனத்தன்மையுள்ள ஒருவராகவே தங்களுடன் அடையாளப்படுத்துபவராக காண்பிக்கின்றனர். அதாவது, கடவுளின் சாயலில் படைக்கப்பட்ட ஒருவர் தனது சாயலில் கடவுளை படைப்பது தவறான காரியமா என்று வினா எழுப்புகின்றனர். கடவுளின் படைப்பில் பல வகைத்தன்மையுள்ள மக்கள் இவ்வுலகில் காணப்படுகின்றனர். இது படைப்பில் புலப்படும் பல்வகைத்தன்மையை எமக்கு எடுத்துக் காண்பிக்கின்றது.

வாசிக்கக்கேட்ட மத்தேயு நற்செய்தியில் 17:14-21ம் வசனம் வரையுள்ள பகுதியில், ஆண்டவர் இயேசுவால் ஆற்றப்பட்ட ஒரு புதுமையை நாம் காணலாம். அமெரிக்க தூதுப்பணியாளராகிய ‘புளர்’ என்ற அறிஞரின் கருத்துப்படி புதுமைகளை மூன்று வகைகளாகப் பிரிக்கின்றார். இயற்கைக்கு எதிரான புதுமை, நோய்களைக் குணப்படுத்தும் புதுமை, பிசாசுகளைத் துரத்துகின்ற புதுமை என மூன்று வகையாக புதுமைகளை வகுக்கின்றார்.

ஆண்டவர் இயேசு ஓர் மகனை அவருடைய பிசாசின் பிடியிலிருந்து விடுதலை அளித்து, அவரை பேசவும் வைத்த நிகழ்வை நாம் இங்கு காணலாம். மேலும், இந்நிகழ்விலே பொதுவாக அங்கவீனத்தன்மையுள்ள மக்கள் எப்பொழுதும் புதுமைகளை அனுபவிப்பவர்கள் அல்ல. 2 கொரிந்தியர் 12:9-12 வரையுள்ள பகுதியை படித்துப் பார்க்கும்போது புனித பவுல், தனது சரீரத்தில் ஓர் முள் இருப்பதாகக் கூறுகிறார். அதனை எடுத்துப் போடும்படி மூன்று முறை மன்றாடுவதாகக் குறிப்பிட்டார். எனினும், இறைவன் அவரை நோக்கி, “உன் பலவீனத்தில் என் பலன் பூரணமாக விளங்கும்” என்ற வார்த்தையினூடாக பிரதியீட்டு பதிலை வழங்குகின்றார். அதாவது புதுமையைவிட ஆண்டவரின் இரக்கம் அல்லது அருள் பேறுபெற்றது என்பதையே இப்பகுதி காண்பிக்கின்றது. எனவே, புதுமைகளினால் இறை அடையாளத்தை நாம் தேடாமல் மாறாக, கடவுளின் அருள் அல்லது இரக்கம் எப்பொழுதும் எங்களோடு இருக்கின்றது என்ற உணர்வுடன் எமது பயணத்தை நாங்கள் தொடர்வதே எமக்கு நம்பிக்கைத் தரும் கூற்றாகும்.

Rev. Stephen Arulampalam.

Church of Ceylon, Sri Lanka.