கிறிஸ்து பிறப்பின் செய்தி

2021ம் ஆண்டு கிறிஸ்து பிறப்பின் நற்செய்தியை நினைந்துக் கொள்ள நாம் வந்துள்ளோம்.

உலகிலும் இலங்கையிலும் பல அசாதாரண நிலைமைகளின் மத்தியில் இப்பிறப்பை ஆக்கப்பூர்வமாக நாம் நினைந்துக்
கொண்டிருக்கின்றோம். இன்றைய உலகத்தை எடுத்துக் கொண்டால் கோவிட் – 19ன் தாக்கத்தினால் கோடிக்கணக்கான மக்கள் தங்கள் உயிர்களை இழந்துள்ளனர். இலட்சக்கணக்கான மக்களின் வாழ்வு முடக்கப்பட்டுள்ளது. உக்ரேனை ரஷ்யா ஆக்கிரமித்துள்ளது. இதனால் ரஷ்யா மீது அமெரிக்கா பொருளாதார தடைகளை விதித்துள்ளது. தாய்வானை கைப்பற்ற சீனா முயற்சித்துக் கொண்டே இருக்கின்றது. இதனால் தாய்வான் நாட்டு மக்கள் அச்சத்துடன் வாழுகின்றனர். மியன்மாரில் இராணுவ ஆட்சியின் காரணமாக ஜனநாயகத்தின் பிரதிநிதியாகிய ஆகன் சுகி அவர்கள் சிறையிடப்பட்ட சம்பவமும் ஜனநாயகத்திற்காக மக்கள் பலர் கொல்லப்பட்ட நிகழ்வும் இன்று மக்கள் மத்தியில் பதிந்துள்ளது. மேலும் ஆப்கானிஸ்தானில் தலிபான்கள் ஆட்சியைக் கைப்பற்றின போதிலும் பொருளாதார தடைகளின் காரணமாக பட்டினிச் சாவினை மக்கள் எதிர்நோக்குவதும் இவ்வருடத்தில் நடைபெற்ற இன்னுமோர் நிகழ்வாகும். எத்தியோப்பியாவில் இடம்பெற்ற தாக்குதல் காரணமாக பலர் உயிர் இழந்தும் உடைமைகளுக்கு ஏற்பட்ட சேதங்களுக்கும் அளவே இல்லை. அமெரிக்காவில் ஏற்பட்ட சூறாவளியின் காரணமாக நூற்றுக்கணக்கான உயிர்கள் கொல்லப்பட்டு இலட்சக்கணக்கான சொத்துக்கள் அழிவடைந்தமையும் நாம் மறக்க முடியாது. மேலும் இந்தியாவில் புதிய விவசாய சட்டத்தினை அரசு ஏழைகளுக்கு எதிராக கொண்டு வந்த போதிலும் மக்களின் ஆக்கப்பூர்வமான செயற்பாட்டினால் அச்சட்டங்கள் கைவிடப்பட்டமை ஜனநாயகத்திற்கு கிடைத்த பெரும் வெற்றி ஆகும்.

எமது இலங்கை தேசத்தை எடுத்துக் கொண்டால் இவ்வருடத்திலும் வைரஸ் எம்மிடம் இருந்து பிரியாவிடை பெறவில்லை. அதன் தாக்கம் மக்களின் வாழ்வின் முன்னேற்றத்தை தடுத்து நிறுத்தியுள்ளது. போர்ச்சூழல்
பின்னணியில் வீட்டிற்கு வெளியே குண்டு வெடிக்குமோ என்ற
பேரச்சத்துடன் வாழ்ந்த மக்கள் இன்று வீட்டிற்கு உள்ளேயே எரிவாயு சிலிண்டர்களின் வெடிப்பினால் அச்சத்துடன் வாழுகின்றனர். கிருமிநாசினிகள் உரம் போன்றவற்றின் பயன்பாடு இன்றி விவசாயம், பொருட்களின் தட்டுப்பாடுகள் காரணமாக கடன் சுமையில் இருந்து மீள முடியாமல் தவிக்கும் விவசாயிகள் ஏராளம். இதனால் சிறப்பாக மரக்கறிகளின் விலைகள் மலைபோல் ஏறிவிட்டன. 1000 ரூபா சம்பள உயர்வினை பெருந்தோட்ட மக்களுக்கு அரசு உறுதியளித்தப் போதிலும் அதனை தோட்டத் தொழிலாளர்கள் பெற்று அனுபவிக்க முடியாதவாறு கம்பனிகளின் தாக்கங்கள் அதிகரித்த வண்ணம் காணப்படுகின்றது. மேலும் அபிவிருத்தி என்ற பெயரில் பெருந்தோட்ட மலையக மக்களின் நிலங்கள்
சுவீகரிக்கப்பட்ட வண்ணம் காணப்படுகின்றது. இந்திய மீனவர்களின் தலையீட்டினால் வடபகுதி மீனவர்கள் தமது வாழ்வாதாரத்தை இழந்துள்ளனர். பால்மாவை விலைகொடுத்தும் வாங்க முடியாது. பச்சிளம் பாலகர்கள் தவிக்கின்றனர். கட்டுப்பாட்டு விலையினை அரசு
வர்த்தமானியில் பிரசுரித்த போதிலும் அதனை மீறி செயற்படும்
வர்த்தகர்களின் ஆதிக்கம் சந்தையில் மலிந்து காணப்படுகின்றது. பணவீக்கம் காரணமாக நாட்டின் பொருளாதார வளர்ச்சி துண்டிக்கப்பட்டுள்ளது.
ஆசிரியர் முதல் அரச உத்தியோகஸ்தர் வரை உரிமைக்காக உண்ணாது விரத போராட்டங்களையும் சட்டப்படி வேலை செய்யும் நடவடிக்கைகளையும் நாளுக்கு நாள் அதிகரிக்கின்றனர். இருள் அடைந்த வாழ்வை வாழும் மக்கள் மேலும் மின்சார கட்டுப்பாடு காரணமாக இருளில் மூழ்குகின்றனர். வெளிநாட்டு தொழில் வாய்ப்பிற்காக சென்றவர்கள் பல்வேறுபட்ட துன்பங்களை அனுபவித்து வருகின்றனர். அண்மையில் பாகிஸ்தானில் மூர்க்க வெறி கொண்டு எழுந்தவர்கள் எமது சகோதரனாகிய பிரியன்த குமாரவை மூர்க்கத்தனமாக கொலை செய்து மனைவியையும்
குழந்தைகளையும் நடுக் காட்டில் தவிக்க விட்டு சென்றமை எமது மனதில் மாறாப் புண்களை ஏற்படுத்தியது மட்டுமன்றி ஆறாத் துயரத்தில் எம்மை ஆழ்த்தியுள்ளது. பணம் நட்ட ஈடாக கொடுக்கப்பட்ட போதிலும் அது மனித உயிருக்கு ஈடாகுமா? அரசியல் காரணங்களுக்காக சிறைக்குள் எதிர்காலத்தை இழந்து வாடும் இளைஞர்கள் ஏராளமாக காணப்படுகின்றனர். மேலும் தாய்மார்களால் வீதிகளில் அநாதைகளாக விடப்பட்டு செல்கின்ற பிள்ளைகளின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரிக்கின்றன. வன்முறை சாவுகளும் தற்கொலைகளும் அதிகரித்த வண்ணமே செல்லுகின்றன. இப்பேர்ப்பட்ட சூழ்நிலையிலேயே கிறிஸ்து பிறப்பு கொண்டாடப்படுகின்றது. பல அழிவுகளுக்குள் மத்தியில் ஆக்கங்களை கண்டுணர நாம் செயற்பட வேண்டும்.

எமது வாழ்விடங்களின் மீட்பர்களாவோம்

அருளம்பலம் ஸ்டீபன்

எமது வாழ்விடங்களின் மீட்பர்களாவோம்

இயேசுவின் பிறப்பை உற்று நோக்கும்போது பல அழிவுகளின்
மத்தியில் இறைவனின் ஆக்கத்திட்டத்தை எம்மால் புரிந்துக் கொள்ள முடியும். மத்தேயு 2:15-17 வரையுள்ள பகுதியில் பெத்லகேமில் 20-30க்கும் இடைப்பட்ட சிறார்கள் ஏரோதுவினால் கொல்லப்பட்டார்கள். அவர்கள் எழுப்பிய அழுகுரல் ராமாவிலே ஏற்பட்ட அழுகுரலுடன் எரேமியா ஒப்பிடுகின்றார். அதாவது 586ம் ஆண்டு பாபிலோனிய அரசனாகிய நேபுகாத்நேச்சார் எருசலேமுக்குள் புகுந்து இளைஞர்களை வலுக்கட்டாயமாக பாபிலோனியாவுக்கு இழுத்துச் சென்றான். அப்பொழுது இளைஞர்களின் பெற்றோர்களும்கூட புலம்பிய வண்ணம் பின்னால் ஓடிச் சென்றனர். இவர்கள் ராமா என்று சொல்லப்படுகின்ற பாபிலோனியாவின் இறுதி எல்லை மாத்திரமே செல்ல முடிந்தது. அவ் எல்லையிலேயே பெற்றோர்கள் குழுமி இருந்து ஒப்பாரி வைத்து அழுதனர். இந்நிலை எமக்கு புதிதான ஓர் அனுபவம் அல்ல. மேலும் ஞானிகளால் தான் ஏமாற்றப்பட்டு விட்டேன் என்று உணர்ந்த ஏரோது அப்பிள்ளைகளை கொல்லுகின்றார். ஏரோதை பொறுத்தவரையில் தனது ஆட்சியை கைப்பற்றுவார்கள் என சந்தேகித்த தனது மனைவிமாரையும் பிள்ளைகளையும் கொலைசெய்தான். அப்படிப்பட்டவனுக்கு இச்செயல் பெரிதான ஒரு செயல் அல்ல என்றும் இப்பேர்ப்பட்ட அழிவுக்குள் ஆக்கத்தை வரலாறு காணுகின்றது. சமூகப் பாவத்தினால் கொல்லப்பட்ட சிறுவர்கள் மக்களை மீட்பதற்காக இயேசு தனது உயிரை எவ்வாறு தியாக பலியாக ஒப்புக்கொடுத்தாரோ அவ்வாறாக
சிறார்களும் மீட்புத்திட்டத்தில் தம்மையும் இணைத்துக் கொண்டனர். எனவே பல்வேறுபட்ட அழிவுகளின் மத்தியில் வாழும் நாங்கள் எமது பிரதேசத்தின் மீட்பர்களாகவும் ஆக்கத்தினை படைப்பவர்களாகவும் எம்மை
மாற்றிக்கொள்ள அழைக்கப்படுகின்றோம்.

இயேசுவின் பிறப்பு வேற்றுமையில் ஒற்றுமைக்

காண எம்மை அழைக்கின்றது

லூக்கா 2:13-20 வரை உள்ள பகுதியில் நடு இரவில் மந்தைகளை
மேய்த்துக் கொண்டிருந்த மேய்ப்பர்களுக்கு தேவதூதர்களால் அமைதியின் செய்தி அருளப்பட்டது. அவர்கள் பல அச்சத்தின் மத்தியில் வாழ்ந்து மெசியாவின் வருகைக்காக எதிர்ப்பார்த்து காத்திருந்தனர். இன்று நடைபெறும் காரியங்கள் எமக்கு அச்சத்தை ஏற்படுத்துக்கூடும். குறிப்பாக அகக்காரணிகளான தனிமை உணர்வு புறக்காரணிகளான ஓர் குறிப்பிட்ட சூழலை எவ்வாறு கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வருவது அல்லது குறிப்பிட்ட சூழலுக்குள் நாம் எவ்வாறு முகங்கொடுப்பது என்ற அச்சங்களோடு எதிர்காலத்தை குறித்த பயங்களும் மரணத்தை குறித்த பயங்களும் எம்மை வாட்டுகின்றன. இப்பேர்ப்பட்ட ஓர் சூழலில் தேவதூதர்கள் மேய்ப்பரை நோக்கி ‘உலகில் நல்மனதோருக்கு அமைதி உண்டாவதாக’ என வாழ்த்துகின்றனர். இங்கு நல்மனது என்பது பௌத்த சமயம் கூறுவதை போன்ற அட்டாங்க சீலங்களை பின்பற்றுவதே ஆகும். அதன்படி நல்லவைகளை சிந்தித்தல் எமக்கு தெரியாதவைகள் மற்றும் விளங்காதவைகள் போன்றவைகளை பிழை என நியாயம் தீர்க்கும் மனப்பான்மையில் இருந்து எம்மை விடுவித்தல் நல்லவைகள் யாரிடமும் காணப்படுமாயின் அவைகளைப் பாராட்டுதல் போன்ற குணவியல்புகளை உடையவர்களே நல்மனதோர் என அழைக்கப் படுகின்றனர். இயேசுவின் பிறப்பில் மேய்ப்பர்கள் அழிவுக்குள் அமைதியைப் பெற்றுக் கொண்டனர். மாறாக ஏரோது போன்றவர்களுக்கு அந்த அமைதியை சுவீகரித்துக் கொள்ள முடியவில்லை. இதன் காரணமாகவே அமைதியை அவர்கள் கொலை செய்தனர். இயேசுவை கொல்லுதல் என்பது உண்மையை
வாழ்வை விடுதலையை அமைதியை கொல்லுவதற்கு சமமாகும்.
பொதுவாக திருமறையில் இறைவன் அன்புள்ளவர், பராமரிப்பாளர், அமைதியை ஏற்படுத்துபவர் போன்ற பாரம்பரிய சிந்தனைகளால் நாம் கட்டப்பட்டுள்ளோம். எனினும் இறைவனை புதிய பார்வையில் பார்க்கும்படி கிறிஸ்து பிறப்பு எம்மை அழைக்கின்றது. இறைவன் எம்மை குழப்புகின்றார் என்ற ஆக்கப்பூர்வமான சிந்தனையை நாம் அறிய அறிவிக்க
அழைக்கப்படுகின்றோம். குறிப்பாக அன்றைய ஆணாதிக்க அழிவுச் சிந்தனையுள்ள சமூகத்தில் ஆக்கத்தை ஏற்படுத்தும் பணியில் இணைந்து கொள்ளுமாறு இறைவன் மரியாளை குழப்புகின்றார். ஓர் ஆணின் துணையின்றி கரு உருவாக மாட்டாது என்ற ஆணாதிக்க சிந்தனைக்கு சாவு
மணியடிக்கும் வகையில் மரியாள் அழைக்கப்படுகின்றாள். ஆரம்பத்தில்; எதிர்ப்பு தெரிவித்திருந்த போதிலும் பின்னர் இறைதிட்டத்திற்கு இணங்குகின்றாள். தனக்காக நியமிக்கப்பட்டிருந்த மனிதரிடமிருந்தும் அன்றைய சமுதாயத்தினிடமிருந்தும் பல வசைசொற்கள் பல அழிவுச் சொற்கள் அவளுக்கு ஏற்பட்ட போதிலும் ஆக்கப்பூர்வமான பணியில் தன்னை இணைத்துக் கொண்டவள் இவள். இதற்காக கிரயங்களை செலுத்தினாள். மேலும் மத்தேயு 1:18-25 வரையுள்ள பகுதியில் மரியாளை ரகசியமாக தள்ளிவிட்டு உறங்க முற்பட்ட யோசேப்பை கடவுள் குழப்புகின்றார். அநீதியை புரிந்தவனாக நீதியை மறுதலித்த யோசேப்புவை கடவுள் குழப்புகின்றார். இன்றும் இயேசுவின் பிறப்பு இப்பேர்ப்பட்ட யோசேப்புக்களை குழப்பட்டும். மேலும் சுயநலமிக்க பதவி வெறி பிடித்த மற்றவர்களின் துன்பத்தில் மகிழ்ந்திருந்த ஏரோதுவையும் கடவுள் குழப்பினார். இன்றும் இப்பேர்ப்பட்ட உணர்வுள்ள மக்கள் அழிவிற்கு காரணர்களாக காணப்படுகின்றனர். இவர்கள் குழப்பப்படும்போது ஆக்கங்கள் உலகில் ஏற்படும். இயேசுவின் பிறப்பு வேற்றுமையில் ஒற்றுமைக் காண எம்மை அழைக்கின்றது. அதாவது வேறுபாடான சிந்தனைகளை அல்லது மாறுபாடான சிந்தனைகளை எம்மால் ஏற்றுக்கொள்ள முடியாத சிந்தனைகளை நாம் அழிக்காமல் அவைகளுக்கு வாழ்வு கொடுக்கும்போது ஆக்கங்கள் உருவாகின்றன. உதாரணமாக: இயேசுவின் பிறப்பில் வேறுபட்ட கருத்தியல்கள் காணப்படுகின்றன. உதாரணமாக: மத்தேயு, லூக்கா போன்றவர்கள் இயேசுவின் பிறப்பு ஓர் கன்னிப்பிறப்பாக
கருதும்போது மாறாக யோவான் நற்செய்தியாளனும் பவுலடிகளாரும் அவர் கடவுளிடமிருந்து இறங்கி வந்தவர் என்ற கருத்தினை வலியுறுத்தினார். ஆனால் மாற்குவோ இதனைக் குறித்து எதனையும் பேசவில்லை. இவ்வாறாக பல வேறுபாடுகள் நிறைந்த ஓர் ஆக்கப் பின்னணியிலேயே ஆண்டவரின் பிறப்பு நடைபெறுகின்றது. மேலும் இயேசுவின் கன்னிப்
பிறப்பைப் பற்றி திருமறைக்குள் மாத்திரமன்றி மகாபாரத்தில் வரும் கர்ணனின் பிறப்பு, சொராயிஸ்த மதத் தலைவரின் பிறப்பு போன்றவைகளும் கன்னிப்பிறப்புடன் அடையாளப்படுத்தப்படுகின்றது. இவைகளும் சமயங்களுக்கு இடையேயான ஓர் நல்லுறவை ஆக்கப்பூர்வமாக
உருவாக்குவதற்கான அடித்தளங்களாகவே நாம் பார்க்க வேண்டும். இயேசு பிறந்த காலப்பகுதியில் ஞானவாதத் கொள்கையினர் மலிந்து காணப்பட்டனர். இவர்கள் மனித உடல் சடப்பொருளினால் உருவாக்கப்பட்டது எனக் கூறி அதனை தீயது எனக் காண்பித்தனர். அதனை ஓர் இன்பப் பொருளாகவே பயன்படுத்தினர். இதனால் சரீரம் மனித உடல் போன்றவைகள் அழிவின் சின்னமாகவே கருதப்பட்டன. இப்பேர்ப்பட்ட சூழ்நிலையில் ஆண்டவர் இயேசு மனித உடல் எடுத்ததன்
ஊடாக சரீரத்தை ஆக்கப்பூர்வமாக உருவாக்கி அதனை
மகிமைப்படுத்தினார். இவ்வாறாக பல்வேறுபட்ட அழிவுகள் மிகுந்த சமூகத்தில் ஆக்கப்பூர்வமான சிந்தனையை உருவாக்கவும் அதனை செயல்படுத்தவுமே

இயேசு இவ்வுலகிற்கு வந்தார்.

மக்களை பல அழிவுகளுக்குள் இட்டுச் செல்லும் நுகர்வுக் கலாசாரத்தையும் முதலாளித்துவ பொருளாதாரத்தையும் சவாலிடும் வகையில் கிறிஸ்து பிறப்புக் காணப்பட்டது.

இன்று மக்களை பல அழிவுகளுக்குள் இட்டுச் செல்லும் நுகர்வுக் கலாசாரத்தையும் முதலாளித்துவ பொருளாதாரத்தையும் சவாலிடும் வகையில் அவரின் பிறப்பு காணப்பட்டது. இயற்கையோடு நெருங்கிய தொடர்பை அவருடைய பிறப்பு கொண்டிருந்து இன்று நாம் பசுமை பேசும் விவசாயத்தை உருவாக்க எம்மை அழைக்கின்றது. இதனை இந்து சமய பெரியாராகிய திருநாவுக்கரசர் தனது கையில் ஏந்திய உழவாரம் மற்றும் இந்தியாவில் நம்மாழ்வார் போன்றவர்களும் பசுமை விவசாயத்தை வளர்க்கப் பாடுபட்டுள்ளனர். இவ்வாறாக பல அழிவுகளின் மத்தியில் உருவாக்கத்தையே இயேசுவின் பிறப்பு எமக்கு உணர்த்துகின்றது. நாமும் எம்மைச் சுற்றியுள்ள உலகிலும் எமது நாட்டிலும் பல அழிவுகள் காணப்பட்ட போதிலும் ஆக்ககரமான செயற்பாடுகளில் ஈடுபட கிறிஸ்து பிறப்பு எம்மை உற்சாகப் படுத்துகின்றது. எனவே நாங்கள் ஒவ்வொருவரும் ஒவ்வொரு கிறிஸ்துக்களாக மாற முற்படுவோமாக.

உங்கள் அனைவருக்கும் மனைவி ரவீந்திரவதனி மகள் சுசானா ஆகியோருடன் இணைந்து கிறிஸ்து பிறப்பு புத்தாண்டு வாழ்த்துதல்களை தெரிவிக்கின்றேன்.

அருட்பணி. அருளம்பலம் ஸ்டீபன்
அருட்பணி. அருளம்பலம் ஸ்டீபன்

இலங்கை.