2022ம் ஆண்டிற்குள் நாம் காலடி எடுத்து வைத்துள்ளோம். இப்புதிய ஆண்டிற்குள் நாம் காலடி எடுத்து வைக்கும்போது பின்வரும் செயல்களை நாம் கருத்தில் கொள்ள வேண்டும். பொதுவாக, புது வருடத்துக்குள் நாம் கடவுளுடனும் மனிதனுடனும் பொருத்தனைகளில் ஈடுபடுவோம். எனவே, இவ்வருடத்திற்குள் நாம் காலடி எடுத்து வைத்துள்ள நிலையில் எவற்றை மனதில் இருத்திக் கொள்ள வேண்டும் என்பதைக் குறித்து உங்களுடன் பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன்.

கடவுளின் கிருபையை நீ மறவாதே

தகுதியற்றவர்களாகிய எங்கள் மீது கடவுள் காண்பிக்கின்ற இரக்கத்தையே நாம் கிருபை என அழைக்கின்றோம். அவருடைய இரக்கம் என்றுமே எங்கள் மத்தியில் உள்ளது (சங்கீதம் 100). இக் கிருபையினாலேயே இப்புதிய வருடத்துக்குள் நாம் பிரவேசித்துள்ளோம் என்பதை நாம் மறந்துவிட முடியாது. இது கடவுளால் எமக்கு அருளப்பட்ட ஓர் பரிசுப்பொருள். இதனை நன்றியுடன் எப்பொழுதும் நாம் நினைவு கொள்ள வேண்டும். பலர் இவ்வருடத்தைக் காண வேண்டுமென விரும்பியிருந்தபோதிலும் இயற்கை மற்றும் செயற்கை அனர்த்தங்களால் இவ்வுலகைவிட்டு பிரிந்து போயினர். ஆனால், எமக்கோ இவ்வுலகில் வாழ்வதற்கு இறைவன் இன்னுமோர் வாய்ப்பை அளித்துள்ளார். எனவே, இப்புதிய வருடத்தை நாம் உதாசீனப்படுத்தாமல் இவ்வுலகில் மற்றவர்களுக்கு உருசை கொடுக்கும் உப்பாகவும் (மத்தேயு 5:13), மற்றவர்கள் எங்கள் வெளிச்சத்தில் வாழக்கூடிய வகையில் ஒளியாகவும் (யோவான் 8:12) நாம் வாழ அழைக்கப்படுகின்றோம்.

கடவுள் மாறாதவர்

காலங்கள், நேரங்கள் மாற்றமடைகின்றன. காலநிலைகள், இயற்கை
போன்றவைகளில் மாற்றங்களால் இயற்கையில் ஏற்படும் குழப்பங்களை நாம் எமது வாழ்வில் அனுபவித்துள்ளோம். உதாரணமாக: 2004ம் ஆண்டு மார்கழி மாதம் 26ம் திகதி உலகில் ஏற்பட்ட சுனாமி இலங்கையில் 40,000கும் மேற்பட்ட உயிர்களை காவுக் கொண்டது. மேலும், அண்மையில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்குகள், மண்சரிவுகள் போன்றவைகள் பல சேதங்களை எமக்கு ஏற்படுத்தின. இவைகள் காலநிலை மாற்றத்தினால் ஏற்படுபவை ஆகும். மேலும் மனிதர்களின் செயற்பாடுகளும் காலத்திற்கு காலம் மாற்றம் அடைகின்றன. ஆனால், கடவுளோ என்றும் மாறாதவராக இருக்கின்றார். அவர் எரியும் முட்செடியின் மத்தியில் மோசேயை நோக்கி, ‘நான் இருக்கிறவராகவே இருக்கிறேன்’ எனக் கூறினார் (யாத்திராகமம் 3:14). மேலும், இயேசு கிறிஸ்து நேற்றும் இன்றும் என்றும் மாறதவராய் இருக்கின்றார் (எபிரேயர் 13:8). எனவே, இந்த வாக்குத்தத்தங்கள் எப்பொழுதும் இறைவனின் இருப்பு நிலையையும் அவரின் மாறாத் தன்மைகளையும் எமக்குக் காண்பிக்கின்றது. இவைகள் எமது அவநம்பிக்கையில் நம்பிக்கைகள் ஆகும்.

புதியவைகளைக் குறித்து சிந்தியுங்கள்

பழைய வருடம் எம்மை விட்டுக் கடந்து புதிய வருடத்;துக்குள் நாம்
வந்துள்ளோம். பழையன கழிதலும் புதியன புகுதலும் என்ற பழமொழிக்கமைய நாம் பழைய சிந்தனைகளை களைந்து புதியவைகளைக் குறித்து சிந்திக்க அழைக்கப்படுகின்றோம். ஒருவர் கிறிஸ்துவுக்குள் வாழ்;ந்தால் புதியவனாக இருக்கின்றான். பழையவைகள் ஒழிந்து போயின. எல்லாம் புதியவை ஆயின (2 கொரிந்தியர் 5:17-20)ஆம் வரையுள்ள பகுதியில் நாம் படிக்கின்றோம். எமது சிந்தனைகளில் மாற்றம் ஏற்படும்போது வார்த்தையில் மாற்றம் ஏற்படும். எமது வார்த்தைகளில் மாற்றம் ஏற்படும்போது எமது செயல்களில் மாற்றம் ஏற்படும். இவ்வாறான மாற்றங்கள் எங்களில் ஏற்படும்போது நாம் புதிய வானத்தையும் புதிய பூமியையும் உலகிலே படைக்கலாம் (வெளி 21:1-7). இறைவன் விரும்புகின்ற உலகத்தை எம்மால் உருவாக்க முடியும். ஆரம்பகாலத்தில் கடவுள் உலகை படைத்தபோது. அதனை நல்லது எனக் கண்டார். பின்னர், மனிதனைப் படைத்ததற்காக மனங்கசந்தார். ஏனெனில் அவனது நினைவுகள் நித்தமும் பொல்லாதவைகளாக காணப்பட்டன (ஆதியாகமம் 6:5). இதனொளியில் நாம் புதிய படைப்பாக மாறும்போது இறைவன் எம்மையும் இவ்வுலகத்தையும் நல்லது எனக் காண்பார். எனவே, இதனை உருவாக்க நாம் முற்படுவோமாக.

தீமைகளுக்குள் நன்மையைத் தேடு

நாம் பிரவேசித்துள்ள இவ்வருடம் தீமைகள் எல்லாம் எம்மை விட்டு
அகன்று நன்மைகள் சூழப்போகின்ற வருடம் என நாம் நினைந்துவிட முடியாது. மாறாக, தீமைகள் எம்மை விட்டு அகலமாட்டாது. யாபேஸ் தன்னுடைய மன்றாடல்களில் தீமைகளில் இருந்து தன்னைக் காத்தருளும் என மன்றாடுகின்றார் (2 நாளாகமம் 4:10). மேலும், ஆண்டவர் இயேசு பரமண்டல ஜெபத்தில் சோதனைக்குள் பிரவேசிக்கப் பண்ணாமல் தீமையினின்று எம்மைக் காத்தருளும் என் மன்றாடுகின்றார் (மத்தேயு 6:9-12). அத்துடன் ஆண்டவர் இயேசுவின் உன்னத குருத்துவ ஜெபத்தில் அவர் ஜெபிக்கும்போது, பிதாவே நான் உம்மிடத்தில் வருகிறேன். என்னுடைய சீடர்களோ இவ்வுலகில் வாழப் போகிறார்கள். அவர்களை தீமையிலிருந்து காத்துக் கொள்ளும் என மன்றாடினார் (யோவான் 17:11-32). இதன்மூலம், தீமைகள் நாளுக்குநாள் அதிகரிக்கப் போகின்றன. நல்லவர்களின் வாழ்வில் தீயவர்களின் தாக்கங்களும் அதிகரிக்கப்போகின்றன. எனவே, உங்களது வாழ்விலும் தீயவர்களின் தாக்கங்கள் எப்பொழுதும் செல்வாக்கு செலுத்தும். இதனை மேற்கொள்ள தொடர்ந்தும் இறைபலத்தில் தங்கி இருக்க முயற்சியுங்கள். சோதனைக்குட்படாமல் விழித்திருந்து மன்றாடுங்கள்.

சவால்களுக்கு முகங்கொடுக்க ஆயத்தப்படுங்கள்

கடந்த வருடத்தைப் போன்றே இவ்வருடமும் அதிகளவு சவால்களை எமது
விசுவாசத்தை பரீட்சைப் பார்க்கப் போகின்றன. உதாரணமாக: நுகர்வு கலாசாரம், பொருள் முதல்வாதம், சமயச் சார்பின்மை, இறைவனின் இருப்பு நிலையைக் குறித்த சந்தேகம் போன்றவைகள் இவ்வருடத்திலும் எமது விசுவாசத்தை பரீட்சைப் பார்க்கக்கூடும். பரிசுத்த பவுல் தீமோத்தேயுவுக்கு கூறுவதைப் போன்று, விசுவாசத்தைக் காத்துக் கொள்ள நாம் அழைக்கப்படுகின்றோம். ஏசா ஒரு கோப்பை கூழுக்காக தனது சிரேஷ்ட புத்திர பாகத்தை இழந்ததுபோன்று எமது விசுவாசத்தை நாமும் இழக்காமல் நாமும் கிருபையினால் காத்துக் கொள்ள வேண்டும். விசுவாசத்தைக் கொண்டு இரட்சிக்கப்பட்டுள்ளோம். இது கடவுளின் கொடையாகும் (எபேசியர் 2:8). எனவே, இவ்ரட்சிப்பை இழந்து போகாதபடி இவ்வருடத்தில் வருகின்ற எத்தகைய சவால்களாக இருந்தாலும் அவைகள் அனைத்தையும் மேற்கொள்வதற்கு வேண்டிய பெலத்தை இறைவனிடம் வேண்டிக் கொள்ளுவோம்.

சமூகப் பொறுப்பை மறவாதிருங்கள்

நாம் இந்த உலகில் இறைவனால் படைக்கப்பட்டுள்ளோம். இறைவன்
பல்வேறு பொறுப்புக்களையும் கடமைகளையும் எமக்கு தந்துள்ளார். இவற்றை நிறைவேற்ற வேண்டும் என்ற உணர்வை நாம் உள்ளத்தில் நிறுத்திக் கொள்ள வேண்டும். குறிப்பாக, இறைவன் இப் பூமியைப் படைத்து இவற்றில் உள்ள அனைத்தையும் ஆண்டுகொள்ளுமாறு எமை அழைத்துள்ளார். இது கடவுளிடமிருந்து நாம் பெற்ற கட்டளையாகும் (ஆதியாகமம் 1:25-28). மேலும், ஆண்டவர் மோசேயின் மூலம் 10 கட்டளைகளை எமக்குத் தந்துள்ளார் (யாத்திராகமம் 20:1-10) இதனை ஆண்டவர் இயேசு சுருக்கமாக, உன் தேவனாகிய கர்த்தர் நானே. உன் தேவனாகிய கர்த்தரிடத்தில் உன் முழு மனதோடும், உன் முழு பெலத்தோடும் நீ அன்பு கூறுவாயாக. உன்னிடத்தில் நீ அன்பு கூறுவதுபோல பிறனிடத்திலும் அன்பு கூறுவாயாக (மாற்கு 12:28-32). நாம் ஒருவரில் ஒருவர் அன்பு கூறும்போது இயேசுவின் சீடர்களாக மாறுகின்றோம் (யோவான் 13:34-35). எனவே, இவ் அன்புக் கட்டளைகளை நிறைவேற்றுவது எமது கடமையாகும். அத்துடன், வார்த்தையாலும் எமது நற்செய்தியை மனிதர்களுடனும் இயற்கையுடனும் பகிர்ந்துகொள்வதும் எமது பொறுப்பாகும் (மத்தேயு 28:19-20, ரோமர் 8:22). எமது இப்பணியில் நாம் இறைவனுடன் புதிய உடன்படிக்கையில் ஈடுபடும்போது, அதாவது எமது உள்ளத்தில் அவரது வார்த்தையை நாம் இருத்திக் கொள்ளும்போது, எமது வாழ்வில் (எரேமியா 31:31-33) நற்செய்தியாக மாற்றமடையும். இத்தகைய புதிய அணுகுமுறைகளை அதாவது, வாழ்வு சார்ந்த நற்செய்தியை இப் புதிய வருடத்தில் அறிவிக்க மறவாதிருங்கள்.

இயேசுவின் பிரதிநிதிகளாக இருங்கள்

இப்புதிய வருடத்தில் நாம் கிறிஸ்தவர்களாக இருந்துவிடாமல் இயேசுவின்
பிரதிநிதிகளாக இருப்பது அவசியமாகின்றது. இயேசுவின் பிரநிதிகள் எனப்படுவோர் இயேசுவைப் பின்பற்றுவோர் ஆவர். அதாவது, உண்மையை விடுதலையை பின்பற்றுவோர், இயேசுவை பின்பற்றுவோர் ஆவர் (யோவான் 14:6), அன்பைப் பின்பற்றுவோர் இயேசுவை பின்பற்றுபவர்கள் ஆவர் (யோவான் 13:34-35), இயேசுவைப் பின்பற்றுவோர் ஒருவரோடுருவர் ஐக்கியப்பட்டிருப்பர் (1 யோவான் 1:7). இவ்வாறாக, நாம் பெயர்க் கிறிஸ்தவர்களாக இருக்காமல் இயேசுவைப் பின்பற்றும் மார்க்கத்தின் மக்களாக மாற முற்படுவோம். ஆதி கிறிஸ்தவர்கள் இப்படிப்பட்ட வாழ்க்கையை வாழ்ந்தனர். மேலும், ரோமப் போர்ச் சேவகனாகிய பிலினி என்பவர் தனது அரசன் திராஜனுக்கு எழுதிய கடிதத்தில் கிறிஸ்தவர்களின் அறவாழ்வைப் பற்றி அதிகம் பாராட்டி எழுதுகின்றார். இப்படியாக, ஆதிக் கிறிஸ்தவர்கள் தமது அறவாழ்வின்மூலம் கிறிஸ்துவின் பிரதிநிதிகளாக தம்மை மற்றவர்களுக்கு காண்பித்தனர். இப்படியாக நாமும் மாற முற்படுவோம்.

நிறைவாக,
அன்பானவர்களே, இப்புதிய வருடத்திலும் நாம் கடவுளின் கிருபையை நினைந்து அவரின் மாறாத்தன்மையை உணர்ந்து எங்கள் விசுவாசத்தைக் காத்துக் கொண்டு நன்மையைப் பற்றிக் கொண்டு புதிய படைப்பாக மாறி சமூகப் பொறுப்பை நிறைவேற்றி இயேசுவின் பிரதிநிதிகளாக மாறுவதற்கு கடவுளின் அருளை நாம் வேண்டி நிற்போம்.

அருளம்பலம் ஸ்டீபன்,
அருளம்பலம் ஸ்டீபன்,

இலங்கையின் ஆகச்சிறந்த இறையியலாளர்களில் ஒருவர்.

3 thought on “இதை மறவாதிருங்கள்”

Comments are closed.