தை 2 2022

யோவான் 12:20-32

உடன்படிக்கை என்ற சொல் எமது வாழ்வில் அடிக்கடி நாம் கேட்கும் சொல்லாகும். குறிப்பாக, இலங்கையில் பலவிதமான உடன்படிக்கைகள் காணப்படுகின்றன. இந்திய பிரதமர் ரஜிவ் காந்தி அவர்களுக்கும் இலங்கை ஜனாதிபதி J.R ஜயவர்தன அவர்களுக்கும் இடையில் மேற்கொள்ளப்பட்ட உடன்படிக்கை. விடுதலைபுலிகளுக்கும் இலங்கை பிரதமர் ரணில் அவர்களுக்கும் இடையில் மேற்கொள்ளப்பட்ட உடன்படிக்கை. ஸ்ரீமா சாஸ்திரி ஆகியோருக்கு இடையில் ஏற்பட்ட உடன்படிக்கை என பல உடன்படிக்கைகளை உதாரணங்களாக கூறலாம். பொதுவாக தனி நபர்களுக்கிடையே மேற்கொள்ளப்படுகின்ற உடன்படிக்கைகள், சமூகங்களுக்கிடையே மேற்கொள்ளப்படுகின்ற உடன்படிக்கைகள் போன்று இறைவனுக்கும் மனிதனுக்கும் நிலவுகின்ற உடன்படிக்கை மிகவும் முக்கியமானதொன்றாகும்.

• உடன்படிக்கை என்னும் சொல் பெரித் என்ற எபிரேய சொல்லில் இருந்து எழுந்ததாகும். உடன்படிக்கை என்ற எண்ணக்கரு ஏத்தியர் என்ற மக்களிடமிருந்து இஸ்ராயேலர் பெற்றுக் கொண்டிருக்கலாம் என நம்பப்படுகின்றது. பொதுவாக உடன்படிக்கையில் உடன்படிக்கை செய்பவர், உடன்படிக்கை பெறுபவர், உடன்படிக்கையின் நிபந்தனை, உடன்படிக்கையின் தண்டனை, உடன்படிக்கை உறவு ஆகியவைகள் முக்கியத்துவப்படுத்தப்படுகின்றன.

• திருமறையில் கடவுள் ஆதிப்பெற்றோருடன் செய்த உடன்படிக்கை (ஆதியாகமம் / தொடக்கநூல் 3:15), இனிமேல் தண்ணீரினால் பூமியை அழிக்கமாட்டேன் என நோவாவுடன் செய்த உடன்படிக்கை (ஆதியாகமம் / தொடக்கநூல் 9ம் அதிகாரம்). அத்துடன் ஆபிரகாமுடன் செய்த உடன்படிக்கை (தொடக்கநூல் / ஆதியாகமம் 17:1-10), கடவுள் சீனாய் மலையில் இஸ்ராயேலுடன் செய்துகொண்ட உடன்படிக்கை (விடுதலைப்பயணம் / யாத்திராகமம் 19:1-10), தாவீதின் அரசு என்றுமே நிலைத்திருக்கும் என தாவீதுடன் செய்த உடன்படிக்கை (2 சாமுவேல் 7ம் அதிகாரம்), எரேமியாவின் புதிய உடன்படிக்கை (எரோமியா 31:31-34), இயேசுவின் இரத்தத்தினாலாகிய புதிய உடன்படிக்கையாகிய திருவிருந்து போன்றவற்றைக் குறிப்பிடலாம்.

• இஸ்ராயேலர் மக்கள் பாபிலோனியாவில் அடிமைத்தனத்தில் இருக்கும்போது (கி.மு. 586-539) அவர்கள் மத்தியில் இறைவன் புதிய உடன்படிக்கையை மேற்கொண்டார். ஏனெனில் அக்காலத்தில் திருப்பலிகளோ ஓய்வுநாட் சட்டங்களோ மக்கள் மத்தியில் காணப்படவில்லை. இவற்றை செய்வதற்கும் ஆசாரியர்கள் அவர்களிடத்தில் இல்லை. எனவேதான், எரேமியா உள்ளார்ந்த சமயம், தனியாள் பொறுப்பு போன்றவற்றை வலியுறுத்தி உங்கள் உள்ளங்களில் நீங்கள் இறைவார்த்தைகளை பதித்து வைக்கும்போது அவற்றின் ஊடாக நீங்கள் இறைவனுடன் புதிதான உடன்படிக்கையை செய்ய முடியும் என புத்திமதி கூறுகின்றார்.

• யோவான் 15:1-10 வரையிலான பகுதியில் ஆண்டவர் இயேசு நானே திராட்சைச் செடி நீங்கள் கொடிகள் எனக் கூறுகின்றார். இங்கு நானே எனும் பதம் இறைவனை அல்லது இறைவனால் அனுப்பப்படும் மெசியாவை குறிப்பதற்கு பயன்படுத்தப்படும். விடுதலைப்பயணம் 3:14ல் எரியும் முட்செடியின் நடுவில் இறைவன் மோசேக்கு தோன்றி இருக்கின்றவர் நானே. இருக்கின்றவரே உன்னை அனுப்புகின்றேன் என கூறுகின்றார். இதனூடாக, இறைவனின் இருப்பு நிலை உறுதிப்படுத்தப்படுகின்றது. மேலும், அவ் இறைவனே இயேசுவை உலகிற்கு அனுப்பியுள்ளார் என்பது புலனாகின்றது (யோவான் 20:21). எனவே, இவ் இயேசுவில் நிலைத்திருந்து அவருடன் உடன்படிக்கை உறவில் வாழுமாறு யோவான் மக்களை அழைக்கின்றார். இதற்காக, பின்வரும் காரணங்களைக் குறிப்பிடுகின்றார்.

• கி.பி. 70ம் ஆண்டில் எருசலேம் ஆலயம் வெல்பசியன் மகன் தீத்துஸ் என்பவரால் அழிக்கப்பட்டது. இதுவரை காலமும் ஆலயம் நிலைத்திருக்கும் என எண்ணி ஆலயத்தில் நம்பிக்கை வைத்த மக்கள் சோர்வடைந்தனர். இம்மக்களையே யோவான் என்றுமே நிரந்தரமான இயேசுவின்மீது நம்பிக்கை வைத்து உடன்படிக்கை உறவுக்குள் வருமாறு அழைக்கின்றார். இப்புதிய வருடத்தில் நாமும் தற்காலிகமானவைகளில் அல்ல நிரந்தரமான இறைவார்த்தையில் நம்பிக்கை வைத்து இறைவனுடன் உடன்படிக்கை செய்து கொள்ளுவோமாக.

• அக்காலத்தில் ஞானவாதக் கொள்கையினர் இயேசுவின் மனிதத்தன்மையைக் குறித்து வினா எழுப்பினர். சடப்பொருள் கெட்டது எனவும் ஆவி நல்லது எனவும் கூறினர். இதனால், இயேசுவின் சரீரம் தீயது எனவும் கடவுள் இவ்வுலகை படைக்கவில்லை எனவும் போதித்து நின்றனர். இப்படிப்பட்ட பிழையான போதனைகளிலிருந்து மக்களை விடுவித்து இயேசுவின் போதனையில் நிலைத்திருங்கள் என யோவான் கூறுகின்றார். இதன்படி நாமும் இவ்வருடத்தில் முதலாளித்துவ போதனைகள், நுகர்வு கலாசாரங்கள் போன்றவைகள் இயேசுவின் போதனைகளிலிருந்து எம்மை விலகச் செல்கின்றன. இதற்கு எதிராக எதிர்நீச்சல் போட அழைக்கப்படுகின்றோம். அதாவது, ரோமர் 12:1-2 எமது சரீரங்களை நாம் கடவுளுக்கு உயிருள்ள பலியாக ஒப்படைக்க அழைக்கப்படுகின்றோம். இதுவே நாம் செய்யும் சிறந்த வழிபாடாகும். அதாவது, இறைவனுக்குரிய மதிப்பையும் மரியாதையையும் வழிப்பாட்டினூடாக அவருக்கு தெரியப்படுத்தும்போது நாம் அவரோடு செய்து கொள்ளும் உடன்படிக்கையின் ஆரம்பமாக காணப்படுகின்றது.

• மேலும், விடுதலைப்பயணம் / யாத்திராகமம் 3:1-14ல் கடவுள் தன்னை இருக்கிறவராகவே இருக்கிறேன் என்று வெளிப்படுத்துகின்றார். இந்த வெளிப்பாடு ஆதியும் அந்தமுமற்ற அல்பாவும் ஓமெகாவுமான வெளிப்பாடு ஆகும் (திருவெளிப்பாடு / வெளி 1:8). இறைவன் அன்று துன்பப்படும் மக்களுடன் நேற்றும் இன்றும் என்றும் மாறாதவராக தமது இருப்பு நிலையை உறுதிப்படுத்தினார் (எபிரேயர் 13:8). இறைவன் இவ் உடன்படிக்கையை அல்லது தன்னுடைய வெளிப்பாட்டை தெரிந்து கொள்ளப்பட்ட மக்களுடன் மாத்திரம் செய்து கொள்ளாமல் யூதர் அல்லாதவர்களுக்கும் தன்னை வெளிப்படுத்துகின்றார் (யோவான் 12:20-33). இங்கு கிரேக்கர்களுக்கு இயேசு தன்னை வெளிப்படுத்துகின்றார். பொதுவாக கிரேக்கர்கள் அறிவின் மூலம் மீட்பை அடையலாம் என எண்ணியிருந்த மக்களுக்கு இயேசு மீட்பு தியாகத்தினூடாக ஏற்படுகின்றது என்பதை கோதுமை மணியின உவமையின் ஊடாக எடுத்துக் காண்பிக்கின்றார்.


<span class="has-inline-color has-quaternary-color">அருளம்பலம் ஸ்டீபன்</span>
அருளம்பலம் ஸ்டீபன்

இலங்கை