யோவான் 17:13-17

தை 9 2022

• திருச்சபைக்கு இருக்க வேண்டிய 4 பிரதான பண்புகளில் பரிசுத்தம் முக்கியமானதாகும். அதாவது ஏகம், பரிசுத்தம், அப்போஸ்தலிக்கம், கத்கோலிக்கம் ஆகிய 4 பண்புகளை திருச்சபை கொண்டிருக்க வேண்டுமென எமது விசுவாசபிரமாணத்தில் நாம் அறிக்கையிடுகின்றோம்.

• பரிசுத்தம் என்பது ஒரு தனி மனிதனோ அல்லது சமூகமோ பிரித்தெடுக்கப்பட்டிருக்கின்ற நிலையையே குறிப்பதாகும். அதாவது, ஒரு பணிக்காக அல்லது பணியை நிறைவேற்றுவதற்காக இப்பிரித்தெடுப்பு இடம் பெறுகின்றது. கடவுள் இஸ்ரவேல் மக்களை தூய இனமாக தெரிந்தெடுத்து பரிசுத்தராய் வாழுமாறு அழைத்திருந்தார் (யாத்திராகமம் / விடுதலைப்பயணம் 19:1-10). புதிய ஏற்பாட்டிலும் இவ் அழைப்பு தொடர்கின்றது (1 பேதுரு 2:9). எனவே, திருச்சபை பாவிகளை பரிசுத்தத்தை நோக்கி வளர்க்கின்ற ஓர் பாத்தியாக காணப்படுகின்றது.

• பழைய ஏற்பாட்டு பாடத்தில் உபாகமம் அல்லது இணைச்சட்டத்தில் 7:1-11ல் கடவுள் இஸ்ரவேலரை அனைத்துலகத்தை தூய்மைப்படுத்தும் பணிக்காக அழைத்துள்ளார் என்பதை உறுதிப்படுத்துகின்றார் (ஏசாயா 49:6) கடவுள் இஸ்ரவேலர்கள் தூய்மையானவர்கள் என்பதால் அல்லது வலுவானவர்கள் என்பதால் அவர்களை தெரிந்துகொள்ளவில்லை. மாறாக, அவர்கள் பலவீனமானவர்கள் என்பதால் அவர்களை தெரிந்தெடுத்தார். அவர்கள் கடவுள் பரிசுத்தராய் இருப்பதை போல அவர்களும் அந்த பரிசுத்த நிலையை அடைய முயற்சிக்க வேண்டும்.

• எபேசியர் 5:18-20 இப்பகுதியில் எங்களுடைய அற ஒழுக்கங்களில் நாம் தூய்மையைக் காத்துக் கொள்ள வேண்டும் என பவுல் கூறுகின்றார். இதனையே திருப்பாடல்கள் / சங்கீதம் 15இலும் நாம் காணலாம். நாம் நல்லவர்களாய் இருப்பதனால் நற்கிரியைகளை புரிகின்றோம். மாறாக, நற்கிரியைகளினால் நாம் நல்லவர்களாக மாறிவிட முடியாது.

• ஆண்டவர் இயேசுவின் உன்னத குருத்துவ செபத்தில் இயேசு தனது சீடர்களை குறித்து இங்கு மன்றாடுகின்றார். இதனை யோவான் 17:13-17 வரையுள்ள பகுதியில் நாம் பார்க்கின்றோம். இங்கு ஆண்டவருடைய வார்த்தையே எம்மைப் புனிதப்படுத்துகின்றது. இதனை பவுல் தீமோத்தேயுவுக்கு ஆலோசனையாகவும் கூறுகின்றார் (2 தீமோத்தேயு 3:16-18). மேலும், தாவீது நாம் பாவம் செய்யாதபடி உமது வார்த்தையை என் உள்ளத்தில் வைத்துள்ளேன் எனக் கூறுகின்றார். இவைகளே எம்மை பரிசுத்தமாக்குவதற்கான இறைவார்த்தைகள் ஆகும்.

• அகஸ்டின் என்று சிப்போ நகர பேராயர் இறைவா என் ஆன்மா உமது வாக்கில் தாகமாய் இருக்கின்றது எனக் கூறுகின்றார். மேலும், தாகத்தோடு பரிசுத்தமாகுதலுக்காக போராடிய மார்டின் லூதர் ரோமர் 1:17ம் வசனத்தில் விசுவாசத்தில் நீதிமான் பிழைப்பான் என்ற வார்த்தையினாலே தூய்மைப்பட்டார். இத்தாலி தேசத்தில் அசீசி பட்டணத்தில் வாழ்ந்த புனித பிரான்சிஸ் அவர்களும் இறைவார்த்தையினால் ஆட்கொள்ளப்பட்டார். எனவே, தூய்மையாகுதல் என்பது, ஓர் இரவில் நடைபெறுவது அல்ல. அது வாழ்நாள் சார்ந்த ஓர் அறப்போராட்டமாகும். இந்நிலையை நாம் இலகுவில் அடைந்துவிட முடியாது. கடவுளின் சாயலில் படைக்கப்பட்டவர்களாகிய நாங்கள் அவர் தூயவராய் இருப்பதுபோல நாமும் அந்த தூய்மையிலேயே அடைய முற்படுவோமாக. இதற்கு தூய ஆவியர் எமக்கு அருள் புரிவாராக.

அருளம்பலம் ஸ்டீபன்.
அருளம்பலம் ஸ்டீபன்.

இலங்கை

2 thought on “தூயவர்களாய் இருங்கள்”

Comments are closed.