23 தை 2022

United in Love, Ecumenical Sunday

யோவான் 15:11-17

•             1908ம் ஆண்டு முதல் ஐக்கிய வாரம் திருச்சபையில் அனுஷ்டிக்கப்பட்டு வருகின்றது. தை 18ம் திகதி பேதுருவின் திருநாளுடன் ஆரம்பித்து தை 25ம் திகதி பவுலின் மறுரூபமாகுதலின் திருநாளுடன் நிறைவு செய்யப்படுகின்றது.

•             திருத்தந்தை 17ம் பெனர்டிக் அவர்கள் நாம் கிறிஸ்துவின் அன்பை நோக்கி நெருங்கிச் செல்லும்போது எமக்கிடையே இருக்கும் பிரிவினைகளை நாம் மறந்துவிடுகின்றோம் என்கிறார். அத்துடன் திருத்தந்தை புனித பிரான்சிஸ் அவர்கள் எம்மை பிரித்து நிற்கும் எல்லைகளை தாண்டி நாம் செல்லும்போது எமது சகோதரர்களை நாம் கண்டுகொள்ளவும் பிற கலாசாரங்களை தாண்டிச் செல்லவும் எமக்கு உதவியாக காணப்படும் என்கிறார்.

•             வாசிக்கப்பட்ட பழைய ஏற்பாட்டு பாடத்தில் உபாகமம் அல்லது இணைச்சட்டத்தில் 4:1-10ல் மோசே இஸ்ரவேல் மக்களை நோக்கி, கடவுளுடைய வார்த்தையை மையப்படுத்திய ஒருமைப்பாட்டை வலியுறுத்துகிறார். அதாவது, கடவுளின் அன்பில் நாம் நிலைத்திருந்தால் ஆண்டவருடைய வார்த்தைகளை நாம் கடைப்பிடிப்போம். மேலும், திருப்பாடல் அல்லது சங்கீதம் 30ல் கடவுளின் அன்பில் நாம் நிலைத்திருக்கும்போது நாம் ஒருவர் மற்றவர்களுடைய தவறுகளை மன்னிப்போம். அதற்கூடாக, அன்புறவில் நிலைத்திருக்க முடியும் எனப் பார்க்கின்றார்.

•             புதிய ஏற்பாட்டு பகுதியில் திருச்சபை தலைவர்களை மையப்படுத்திய பிரிவினை கொரிந்து சபைக்குள் காணப்படுகின்றது (1 கொரிந்தியர் 1:10-14). கொரிந்து பிரதேசத்தில் பவுலே நற்செய்தியை ஆரம்பத்தில் அறிவித்தபடியால் அவருக்கு ஒரு குழு காணப்பட்டது. அப்பல்லோ ஓர் தத்துவ அறிஞராகவும் சிறந்த பேச்சாளராகவும் காணப்பட்டபடியினால் அவருக்கும் ஒரு குழு காணப்பட்டது. கேபா திருச்சபையின் தலைவராக காணப்பட்டபடியினால் அவருக்கும் ஒரு குழு காணப்பட்டது. ஈற்றில் கிறிஸ்துவுக்கும் ஒரு குழு காணப்பட்டது. இப்படிப்பட்ட பிரிவினையை பார்த்த பவுல் திருமுழுக்கினை உதாரணமாக அவர்கள் முன் வைக்கின்றார். அதாவது, திருமுழுக்கு ஒப்புரவாகுதலின் அடையாளம் அதாவது நம்மை கடவுளுடனும் மக்களுடனும் இணைக்கும் அன்பின் அடையாளம். எனவே, அதனை பிரிவினையின் அடையாளமாக பயன்படுத்த வேண்டாம் என பவுல் கூறுகின்றார்.

•             நற்செய்தி வாசகத்துக்குள் வரும் யோவான் 15:11-17ல் யோவான் இயேசுவின் அன்புக்கட்டளையை நியாபகப்படுத்துகின்றார். பொதுவாக நாம் மத்தேயு 28:19-20ல் காணப்படும் இயேசுவின் இறுதிக் கட்டளையைக் குறித்து அதிக முக்கியத்துவம் கொடுக்கின்றோம். ஆனால், யோவான் இங்கு அன்புக் கட்டளையைப் பற்றியே பேசுகின்றார். நாம் ஒருவரிலொருவர் அன்பாய் இருப்பதனூடாக இயேசுவின் சீடர்களாக முடியும் (யோவான் 13:34-35). இங்கு, ஆண்டவர் இயேசு தம்மை பின்பற்றுபவர்களை நண்பர்கள் என அழைக்கின்றார். இதற்கூடாக அன்பை மையப்படுத்திய ஒற்றுமையை எதிர்ப்பார்க்கின்றார்.

•             இன்றைய திருச்சபை மக்களாகிய நாங்கள் திருமறை, திருமுழுக்கு, அன்புக்கட்டளை ஆகியவற்றை உபயோகித்து எம்மை பிரித்து நிற்கும் அனைத்துத் தடைச் சுவர்களையும் தாண்டி ஒருமைப்பாட்டை ஏற்படுத்துவதற்காக கிறிஸ்துவின் அன்பில் நிலைத்திருப்போம். அவ்வன்பு எமக்கிடையே ஒற்றுமையை ஏற்படுத்தும் (1 கொரிந்தியர் 13:1-7)

அருட்பணி அருளம்பலம் ஸ்டீபன்<br>Revd Arulampalam Stephen
அருட்பணி அருளம்பலம் ஸ்டீபன்
Revd Arulampalam Stephen

இலங்கை, Sri Lanka.

One thought on “அன்பில் நிலைத்திருங்கள்”

Comments are closed.