14 தை 2022

மத்தேயு 12:1-8

•             கடவுள் பல்வேறு வழிகளில் தன்னை உலகத்திற்கு வெளிப்படுத்தியுள்ளார். குறிப்பாக, யூத சமயத்தில் கடவுள் இயற்கையினூடாக தன்னை வெளிப்படுத்தியுள்ளார் (திருப்பாடல்கள் / சங்கீதம் 19:1), இயற்கையில் இறைபிரசன்னத்தை மக்கள் உணர்ந்தனர் (தொடக்கநூல் / ஆதியாகமம் 12:7, விடுதலைப்பயணம் / யாத்திராகமம் 3:14). இரண்டாம் உடன்படிக்கையிலும் கடவுள் அனைவர் மீதும் அன்பு கொண்டு இயற்கையின் ஆசீர்வாதங்களை வழங்குகின்றார் என்பதை நாம் அறிகிறோம் (மத்தேயு 5:45-46).

•             விடுதலைப்பயணம் / யாத்திராகமம் 32:1-16 இப்பகுதியில் இஸ்ராயேல் மக்கள் இறைவனுக்குப் பதிலாக ஓர் பொன் கன்றுக் குட்டியை செய்து அதுவே தங்களை எகிப்திய அடிமைத்தனத்திலிருந்து மீட்டுக்கொண்டது எனக் கூறி அக்கன்றுக்குட்டியை வழிபடத் தொடங்கினர். இறைவனுக்குரிய இடத்தை அவருக்குக் கொடுக்காமல் கடவுளால் படைக்கப்பட்ட கன்றுக்குட்டிக்கு அவ்விடத்தை கொடுக்கின்றனர். இதனைக் கண்ட மோசேயும் ஆரோனும் கோபப்படுகின்றனர்.

•             தை திருநாளன்று நாம் கடவுளுக்கு பதிலாக அல்லது படைப்பாளருக்கு பதிலாக படைப்பாகிய சூரியனை வழிபடுவது தவறாகும். ஆனால், நாம் அந்நாளில் கடவுளுக்கே எமது நன்றிகளையும் துதிகளையும் செலுத்துகின்றோம். ஏனெனில், படைப்புக்கள் அனைத்தையும் கட்டுப்படுத்துகின்றவர் அவரே. உதாரணமாக, இஸ்ராயேல் மக்கள் பிற சமயங்களில் காணப்பட்ட பண்டிகைகளை எடுத்து அதற்கு புதிய விளக்கங்களைக் கொடுத்து அதனை தமதாக்கி கொண்டாடி மகிழ்ந்ததை நாம் காணலாம். உதாரணமாக, அறுவடையின் விழாவை எடுத்துக் கொண்டால் அவ்விழா ஆரம்ப காலத்தில் எகிப்திய மக்கள் தங்கள் அரசனையே கடவுளாகக் கருதி அவருக்கு அனைத்தையும் படைத்தனர். ஆனால், இஸ்ரவேல் மக்கள் அதற்கு எதிரான மாற்றுக் கலாசாரத்தை உருவாக்கி கடவுளுக்கு ‘எலோகிம்’ என பெயரிட்டு அவருக்கு தமது விளைபொருட்களை படைத்தனர். ஏனெனில், ‘எலோகிம்’ என்பது, விவசாயச் சூழலில் கடவுளுக்கு மக்கள் கொடுத்த பெயராகும். முதலில் இஸ்ராயேல் மக்கள் கடவுளை விடுதலையாளராகவே கண்டார்கள். இவ்விழா அன்றே சீடர்கள்மீது தூய ஆவியானவரின் வருகை இடம்பெற்றதை நாம் பார்க்கின்றோம். பாஸ்கா பண்டிகையை நாம் எடுத்துக் கொண்டால் இதுவும் இஸ்ராயேல் மக்கள் எகிப்தில் இருந்து கற்றுக் கொண்டதாகும். குறிப்பாக, எகிப்திலே மந்தைகள் பெருக வேண்டுமென்றால் ஒரு மந்தையை வெட்டி, அதன் இரத்தத்தை நிலையிலே பூசுவார்கள். அப்பொழுது, ஏனைய மந்தைகள் அந்த இரத்தத்தை பார்க்கும்போது அதிக குட்டிகளை ஈனும். இந்நிகழ்ச்சியையே இஸ்ராயேல் மக்கள் ஓர் விடுதலையின் நிகழ்வாக கருதினர். அதனாலேயே, ஆண்டவர் இயேசுவும் விடுதலைக்கான ஒரு நிகழ்வாக அதாவது எம்மை பாவத்திலிருந்து மீட்கும் நிகழ்வாக கருதினார். இதனையே இன்றும் திருச்சபை கையாண்டு வருகின்றது.

விருத்தசேதனம் என்ற நிகழ்வை எடுத்துக் கொண்டால் ஆரம்பத்தில் இது ஒரு பெண்ணினால் ஆணுக்கு செய்யப்பட்டதாகும். இப்பழக்கம் மீதியான் தேசத்தில் இருந்ததாகும். இதன்படி, திருமணம் செய்த முதலிரவில் ஒரு பெண் கூரிய கல்லை எடுத்து, ஆணின் நுனித்தோலை வெட்டி, அதன் இரத்தத்தை தொட்டு, ஆணை நோக்கி, இன்று முதல் நான் உனக்குச் சொந்தம் எனக் கூறுவார். ஏனெனில், திருமணம் செய்ய முன்னர், பெண்கள் பேய்களுக்கே சொந்தம் என கருதப்பட்டனர். இந்நிகழ்வே, பின்னர் இஸ்ராயேலர் வரலாற்றில் ஒவ்வொரு ஆண்களுக்கும் செய்யப்பட வேண்டுமென பரிமாற்றம் அடைந்தது. இவ்வாறாக, ஒவ்வொரு நிகழ்வுகளையும் எடுத்துக் கொண்டால் இஸ்ராயேல் மக்கள் பிற சமயங்களிலிருந்து எடுத்துக்கொண்டவைகளுக்கு தமது சமய விளக்கங்களைக் கொடுத்து அவைகளைக் கொண்டாடியதை நாம் பார்க்கின்றோம்.

ஆதித் திருச்சபை மக்கள் பிற சமயங்களில் காணப்பட்டவைகளை எடுத்து அவற்றிற்கு கிறிஸ்தவ விளக்கத்தை கொடுத்து அவற்றை கொண்டாடியதை நாம் காணலாம். உதாரணமாக, இயேசுவின் பிறப்பு விழா மார்கழி 25ல் கொண்டாடப்படுகின்றது. மார்கழி 25 உரோமர்கள், தோற்கடிக்கப்படாத சூரியனின் விழாவாக அதனை கொண்டாடினர். பின்னர், ரோமர்களும் கிரேக்கர்களும் திருச்சபைக்குள் வந்த பின்னர் கொன்ஸ்டன்டைன் அரசனிடம் சென்று கொண்டாடுவதற்கு ஓர் பண்டிகை வேண்டுமென கேட்டனர். அப்பொழுது, கொன்ஸ்டன்டைன் மார்கழி 25ம் திகதி தோற்கடிக்கப்படாத சூரியனுக்கு நீங்கள் விழா எடுக்கின்றீர்கள். இயேசுவும் தோற்கடிக்கப்படாத நீதியின் சூரியனே. எனவே, அவருடைய பிறப்பை இந்நாளில் கொண்டாடுங்கள் என அறிவுரை கூறினார்.

•             தை திருநாள் அன்று திருச்சபை தன்னை உழவர்களுடன் அடையாளப்படுத்துகின்றது. உழவர்களின் போராட்டங்கள், உரம் பிரச்சினைகள், உத்தரவாத விலைப் பிரச்சினை, கடன் சுமையினால் பாதிக்கப்பட்டு தற்கொலை செய்த விவசாயிகள் போன்ற பல துன்பங்களை அனுபவிக்கும் விவசாயிகளுடன் தன்னை திருச்சபை அடையாளப்படுத்துகின்றது.

•             இரண்டாம் உடன்படிக்கை வாசகத்தின்படி எபிரேயர் 4:9-11 இப்பகுதியில் கடவுள் எல்லாவற்றையும் படைத்த பின்னர் ஓய்ந்திருந்தார் என படிக்கின்றோம். ஆதியாகமம் அல்லது தொடக்கநூலில் குரு பாரம்பரியத்தின்படி ஓய்வுநாள் தூய்மையாக அனுசரிக்கப்பட வேண்டும் என்ற சிந்தனைக் காணப்படுகின்றது. ஆனால், உபாகம அல்லது இணைச்சட்ட பாரம்பரியத்தின்படி ஓய்வுநாள் ஓர் விடுதலையின் நாளாக குறிப்பிடப்படுகின்றது. இந்நாளில் வேலைக்காரர், மிருகங்கள், நிலம் போன்றவற்றிற்கு விடுதலை கொடுக்கப்பட வேண்டும். இதனொளியில் தை திருநாளுக்கு மறுநாள் நாம் மாட்டுப் பொங்கலை நினைந்துக் கொள்ளுகின்றோம். இதற்கூடாக, மிருகங்களுக்கான முக்கியத்துவத்தையெல்லாம் உணர்த்துகின்றோம்.

•             நற்செய்தி பகுதி மத்தேயு 12:1-8ல் ஆண்டவர் கதிர்களை கொய்து சாப்பிடுகின்றார். இந்நிகழ்வு சீடர்களுக்கு புதுமையாகக் காணப்பட்டது. இதனை, தவறு எனக் கருதினர். அப்பொழுது, இயேசு சூழ்நிலை சார்ந்த அறத்தை எடுத்துக் காண்பித்து, தாவீதும் அவரை சார்ந்தவர்களும் கூட சமூகத்தின் அப்பத்தைக் கூடி உண்டார்கள் என உதாரணம் காண்பித்து தனது செயலை சரியென நிரூபித்தார். தை திருநாள் அன்றும் நாம் கதிர்களை கொய்து புதுநெல் புதுப்பானை போன்றவற்றுடனேயே பண்டிகையை அனுசரிக்கின்றோம். எனவேதான், பழையன கழிதலும், புதியன புகுதலும் என்ற பழமொழிக்கு நாம் உயிரளிக்கின்றோம். ஒருவர் கிறிஸ்துவுக்குள் வாழும்போது இவ்வனுபவம் தோன்றுகின்றது (2 கொரிந்தியர் 5:17). எனவே, தைதிருநாள் ஒரு தமிழர்களின் கொண்டாட்டமே. இப்பொழுது, சிங்கள மக்களும் இதில் இணைந்து கொண்டாடுகின்றனர். ஆனால், இதில் காணப்படும் சமயப் பூச்சு அகற்றப்படவேண்டும்.

ஓவியம்: இம்மானுவேல் விவேகானந்தா

அருளம்பலம் ஸ்டீபன்
அருளம்பலம் ஸ்டீபன்

இலங்கை

3 thought on “தமிழர் திருநாள்”
  1. Meaningful interpretation. All Christians Must know about the seasons and reasons. Need of the hour.

Comments are closed.