Touch the Untouchables

  • 2 அரசர்கள் 5:1-10
  • திருப்பாடல்கள் 10:1-12
  • எபிரெயர் 13:8-17
  • மத்தேயு 8:1-4

முன்னுரை:

 சமீபத்தில் கடலூர் மாவட்டம், சிதம்பரம் அருகே ஊராட்சிமன்றத் தலைவர் திருமதி. ராஜேஷ்வரி அவர்கள் பட்டியலினத்தை சார்ந்தவர் என்ற ஒரே காரணத்தினால் அவரை அவருக்குரிய அலுவல் நாற்காலியில் அமரவிடாமல் தரையில் அமரவைத்து அவமதிப்பு செய்யப்பட்டதை அறிந்திருப்பீர்கள். இந்நிகழ்வே நம்மை அதிர்ச்சிக்குள்ளாக்கிய நிலையில், நம் இந்திய குடியரசுத் தலைவர் மாண்புமிகு. ராம்நாத் கோவிந் அவர்கள் தன் துணைவியாருடன் பூரி ஜெகநாதர் கோயிலுக்குள் நுழையும்போது அவர் பட்டியலினத்தவர் என்ற ஒரே காரணத்தினால் அங்குள்ள அடிப்படைவாதிகள் அவரை உள்ளே நுழையவிடாமல் தடுத்து நிறுத்தி, அவர் நின்ற இடத்தையும் கழுவி தீட்டு கழித்த நிகழ்வு நாடுமுழுவதும் பெரும் கவன ஈர்ப்புக்குள்ளானது. இந்திய முப்படைத் தலைவரும், முதல் குடிமகனுமாயிருக்கிறவர் மீதே தீண்டாமை இக்காலத்திலும் இப்படி செயல்படுத்தப்படுகிறது என்றால், இந்தியாவில் மற்றவர்களின் நிலை?

  எனவே ஒடுக்கப்பட்டவர்களுக்கான அரசியல் அதிகாரத்தை மீட்டெடுத்தால் மட்டும் இந்த மனிதத்தன்மைற்ற சமூக இழிவை ஒருபோதும் இங்கிருந்து ஒழித்துவிட முடியாது. ஏனெனில் மேற்கூறப்பட்ட நிகழ்வுகளில் ஒடுக்கப்பட்டவர்கள் அரசியல் அதிகாரத்தை கைப்பற்றியும், சமூக இழிவு அவர்களை விடாமல் தொடர்வதை நாம் கண்கூடாகக் கண்டோம். ஆகவே அரசியல் அதிகாரம் பெறுவதைத் தாண்டி, இந்திய சமூகத்தில் உள்ள அனைவரும் சிந்தை, சொல், செயல் அனைத்திலும் மாற்றம்பெறும் அனுபவத்தினூடே பயணிக்க கற்பித்து விழிப்படையச்செய்யவேண்டும். விவிலியத்திலும் நாமான் எப்படி தன் சிந்தை, சொல், செயல் அனைத்திலும் தீண்டாமையை ஒழித்து, மீண்டும் பிறக்கும் அனுபவத்திற்குள் எப்படி பயணித்தார் என்பதை முதல் குறிப்பாகக் காண்போம்.

1. தன்முனைப்புள்ளவன் தீண்டினான் (2 அரசர்கள் 5:1-10)

(Touching of an Egoistic)

 தொழுநோயால் உருசிதைந்த நாமான், சிறுபிள்ளைப்போன்ற உடலுடன் மீண்டும் பிறந்த அனுபவம் எளிதாக நிகழ்ந்துவிடவில்லை. உண்மையில் அது  கடினமான பல சவால்கள் நிறைந்த மனமாற்றத்தின் பயணமாக இருந்தது.

அ) அசீரிய சமூகத்தில் பெண்கள், சிறுவர்கள், அடிமைகள் ஆகிய மூவரும் முக்கிய முடிவுகள் எடுக்கும் கலந்துரையாடல்களில் அனுமதிக்கப்படமாட்டார்கள். ஆனால் இந்த மூன்று நிலைகளையும் உடைய அடிமைச் சிறுபெண்ணின் சொல்லையும் ஒரு பொருட்டாக எண்ணியது நாமானின் முதல்கட்ட மனமாற்றம்.

ஆ) இஸ்ரயேலையும், இஸ்ரயேலின் வளங்களையும், இஸ்ரயேலின் ஆன்மீகத்தையும் தாழ்வாக எண்ணிக்கொண்டிருந்த நாமான் தன் விடுதலைக்காக அந்த இஸ்ரயேலையே நோக்கி செல்ல வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டார். எனினும் தன் ‘தன்முனைப்பை’ (Ego) தவிர்த்து இஸ்ரயேலை நோக்கி புறப்பட்டது இரண்டாம் கட்ட மனமாற்றம்.

இ) “இஸ்ரயேலில் இப்படிப்பட்ட தீர்க்கதரிசிகள் எங்கே இருக்கப்போகிறார்கள்?” என்ற எண்ணமுடைய சீரிய நாட்டிலிருந்து வந்த நாமான், தீர்க்க தரிசியை காண்பதற்கு செல்வதைப் போல செல்லாமல் குதிரைகளோடும் இரதங்களோடும் தன் பலத்தை வெளிப்படுத்தும் கர்வத்துடன் சென்றார். அதன் காரணமாகவே தீர்க்கதரிசியை நேரடியாக காணும் வாய்ப்பை இழந்து, சொல்லியனுப்பப்பட்டவரின் வழியாகத்தான் மிக எளிமையான சுகம் பெறும் முறையினை அறிந்தார்.  எனினும் அந்த எளிய சுகம்பெறும் முறையையும், அது சீரியர்களால் தாழ்வாக எண்ணப்பட்ட யோர்தானில் தான் செயல்படுத்த வேண்டும் என்பதையும் கேட்டு கடும்கோபம் கொண்டார் (2இரா.5:12). ஆனாலும் இஸ்ரயேலின் தீர்க்கதரிசியின் சொல்லுக்கு உடன்பட்டதும், யோர்தானில் நீராட தன்னை தாழ்த்திக்கொண்டதும் அவரின் மூன்றாம் கட்ட மனமாற்றம்.

 இப்படி தான் தாழ்வாகக் கருதியவைகளையும், கருதியவர்களையும் நோக்கி நாமான் பயணித்த மனமாற்றத்தின் பயணமே அவரை மனதளவிலும் உடலளவிலும் மீண்டும் பிறக்கச்செய்தது புதுப்படைப்பாக்கியது. மேலும் அவர் தாழ்வாக கருதிய மண்ணையே புனித மண்ணாக கருதி எடுத்து செல்லும் அளவிற்கு அவரை தலைகீழ் மாற்றத்திற்கு உட்படுத்தியது. இப்படி நாம் தாழ்வாக கருதிக்கொண்டிருப்பவைகளின், கருதிக்கொண்டிருப்பவர்களின் வழியாகத்தான் கடவுள் நமக்கு விடுதலை அருளுகிறார் என்று உணருகிற இந்த ‘தலைகீழ் கருத்தியல் மாற்றம்’ தான், நம் இந்திய சமூகத்தையும் சீர்த்திருத்தக் கூடும்.

2. தள்ளப்பட்டவர் தீண்டினார் (மத்தேயு 8:1-4)

(Touch of an excluded)

 இயேசு, யூதர் என்கிற உயர்குலத்தவர் என பரவலாக அறியப்பட்டாலும், உலக வழக்கப்படி ஆண்வழியாக குலம், சாதி வருவதால், இரத்தத்தினாலோ, உடல் விருப்பத்தினாலோ, புருஷனின் விருப்பத்தினாலோ பிறக்காமல் தூயாவியரால் கன்னி வயிற்றில் பிறந்த இயேசு எப்படி யூதராவார்? (யோவான் 1:13). எனவே இயேசு குலம், சாதி அற்றவர் என்பது தான் உண்மை. மேலும் கிறிஸ்தவர்களாகிய நாம் தான் இயேசுவின் கன்னிப்பிறப்பை விசுவாசிக்கிறோம், ஆனால் இயேசு வாழ்ந்த காலத்தில் பலர் அதை ஏற்றுக்கொள்ளவில்லை. சிலர் மட்டுமே அவரை ‘யோசேப்பின் மகன்’ என்றும், “யோசேப்பு அவரின் உடல் ரீதியான தந்தை இல்லை” என்ற செய்தி அறிந்த சிலர் அவரை ‘மரியாளின் மகன்’ என்றும் அடையாளப்படுத்தினர். அக்காலத்தில் தாய் பெயரை வைத்து ஒருவரை அடையாளப்படுத்தினால் அவரின் பிறப்பை மறைமுகமாக கொச்சைப்படுத்துகின்றனர் என்று பொருள். அந்த பழியையும் கூட இயேசு நமக்காக சுமந்துதிரிந்தார்.

 இயேசு வளர்ந்த நாசரேத் என்பது கலிலேயா பகுதியிலுள்ள ஒரு சிறிய கிராமம். யூதேயா வாழ் யூதர்கள் தங்களை மேன்மையுள்ளவர்களாகவும், கலிலேயர்களை முரடர்களாகவும், அசுத்தமானவர்களாகவும், கலிலேய யூதர்களை கலப்பினத்தவர்களாகவும் கருதியது மட்டுமல்லாது, “கலிலேயாவிலிருந்து எந்த நன்மையும் வராது” (யோவா.1:46, 7:52) என்ற  வெறுப்புணர்வும் உள்ளவர்களாக இருந்தனர். அந்த அர்த்தத்தோடு தான் இயேசுவை “கலிலேயன்” என்று அவர்கள் அடையாளப்படுத்தினர். இவ்வண்ணமாக இயேசு அசட்டைப்பண்ணப்பட்டவரும், மனுஷரால் புறக்கணிக்கப்பட்டவரும், துக்கம் நிறைந்தவரும், பாடு அநுபவித்தவருமாக வாழ்ந்த நிலையிலும்  அவர் மிக சிறப்பாக மக்களை ஒருங்கிணைத்து  இறையரசு மலர ஊழியம் செய்தார்.

 இப்படி பிறப்பின் அடிப்படையிலும், ஊர் அடிப்படையிலும் தாழ்வாகவும் தீட்டாகவும் கருதி தள்ளப்பட்ட கலிலேயனாகிய இயேசுதான் பாளையத்திற்கு புறம்பே சென்று அங்கே புறக்கணிக்கப்பட்டு வாழ்ந்துவந்த தொழுநோய் கண்ட பல யூதர்களை தீண்டி தூய்மை படுத்தினார். இந்திய சமூகத்திலும் மனித மலம் அள்ளுவது, பிணம் எரிப்பது, செருப்பு தைப்பது, அழுக்கு உடை துவைப்பது, முடி வெட்டுவது போன்ற தொழில் செய்பவர்கள் தீட்டானவர்களாகவும் தீண்டத்தகாதவர்களாகவும் தள்ளப்பட்டாலும் அவர்களால் தான் நமக்கு வாழ்வு வருகிறது, அவர்கள் வழியாகத்தான் நாம் தூய்மைபடுத்தப்படுகின்றோம். நாம் அனுபவிக்கும் சொர்கம் உண்மையில் அவர்களின் நரக வாழ்வில்தான் தான் கட்டமைக்கப்பட்டிருக்கிறது. நாம் அனுபவிக்கும் அமைதி உண்மையில் அவர்களின் மனஉளைச்சலிலிருந்து தான் உருவானது என்பதை உணர்ந்து இந்த அநீதியான முறைமையை அழித்து அவர்களுக்கும் சுயமரியாதையுள்ள நிம்மதியான வாழ்வை நாம் உறுதிசெய்யவேண்டும்.

3. தன்னலம் நீங்க தீண்டுவோம் (எபிரெயர் 13:8-17)

(Touch to be an egalitarian)

 “ஆகையால், நாம் அவருடைய நிந்தையைச் சுமந்து, பாளயத்துக்குப் புறம்பே அவரிடத்திற்குப் புறப்பட்டுப் போகக்கடவோம்” (எபிரெயர் 13:13)

இந்த சமூகம் தீர்மானித்து வைத்திருக்கும் தீட்டுத்தூய்மை விழுமிய விளிம்புகளை உடைத்து பாளயத்திற்கு புறம்பே செல்லும் பயணமே இறையரசை நோக்கிய பயணமாகும்.

கடவுள், புறஇன மக்களிடையே ஊழியம் செய்ய அப்போஸ்தலர் பேதுருவை ஒரு திருக்காட்சியின் வழியாக அழைக்கும்போது, அவர் பேதுருவிடம் இந்த சமுதாயத்தின் தீட்டுத்தூய்மை விழுமியங்களை வீழ்த்தி, தீட்டாக கருதியவைகளை தீண்டவும், உண்ணவும் அழைக்கிறார். பேதுருவுக்குள் இயங்கிக்கொண்டிருந்த பாரம்பரிய ‘கருத்தியல் புனிதமாக்கலை’ (Ideological Sanctification) உடைத்தெறிகிறார். (அப்.10:10-16).அந்த திருக்காட்சியால் மனம்மாறிய பேதுரு, கொர்நேலியு வீட்டில் பின்வறுமாறு சாட்சிபகர்கிறார், “அந்நிய இனத்தானோடே கலந்து அவனிடத்தில் போக்குவரவாயிருப்பது யூதனானவனுக்கு விலக்கப்பட்டிருக்கிறதென்று நீங்கள் அறிந்திருக்கிறீர்கள்; அப்படியிருந்தும், எந்த மனுஷனையும் தீட்டுள்ளவனென்றும் அசுத்தனென்றும் நான் சொல்லாதபடிக்கு கடவுள் எனக்குக் காண்பித்திருக்கிறார். ஆகையால் நீங்கள் என்னை அழைப்பித்தபோது நான் எதிர்பேசாமல் வந்தேன். (அப். 10:28,29) எவ்வளவு பெரிய மனமாற்றம்? பேதுருவின் இந்த மனமாற்றத்தை வைத்து தான் கடவுள் ஆதித்திருச்சபையில் யூதர்-புறஇனத்தவர் என்ற பிரிவினையை உடைத்தெரிகின்றார்.

 பவுலடியாரும் அதையே பின்வறுமாறு வழிமொழிகின்றார். “நம்மை பிரித்து நின்ற பிரிவினையின் நடுச்சுவரை இடித்து, நம்மை உயர்ந்தவர் தாழ்ந்தவர் என்று பிரித்துவைத்திருந்த மனித சட்டதிட்டங்களை அழித்து நம்மிடையே உள்ள பகையை சிலுவையினால் கொன்று, சமாதானத்தை சுவிசேஷமாக அறிவித்து, நம் அனைவரையும் ஒரே புதுப்படைப்பாக, கடவுளுக்குள் ஒரே உடலாக இணைப்பதே இயேசுவின் சிலுவை மரணத்தின் நோக்கம்” (எபே. 2:14-17) ஆம்! சிலுவை மரணத்தின் நோக்கமே நம் அனைவரையும் கடவுளுக்குள் ஒன்றிணைப்பதுதான். நம்மை உயர்ந்தவர் தாழ்ந்தவர் என்று பிரிவினை ஏற்படுத்தும் எந்த சித்தாந்தங்களையும், சமூக வழக்கங்களையும் தகர்த்தெறிந்து, நம் சொகுசு எல்லைகளைத் தாண்டி பாளயத்திற்கு புறம்பே  உள்ள மக்களோடும் அவர்களோடு அங்கேயே உடனிருந்து வாழ்ந்துகொண்டிருக்கும் கிறிஸ்துவோடும் இணைந்தால் தான் தன்னலமற்ற இறையரசு மலரும்.

முடிவுரை:

 இந்தியாவில் வர்ணாதிக்க சாதியமுறை நிலைகொண்டபிறகு இங்கேயே தோன்றிய அல்லது வெளியே இருந்து நுழைந்த எந்த சித்தாந்தங்களும், சமயக் கருத்தியல்களும் இங்கு எடுபடாமல் போனதற்கான முதன்மைக் காரணம், இங்கு உள்ள எந்த சித்தாந்தங்களோ, சமயங்களோ இங்குள்ள சமூக இழிவாகிய சாதிய அமைப்பிற்கு எதிராக எதிர்வினையாற்றத்  தவறியதே ஆகும். அந்த வரிசையில் கிறிஸ்தவமும் இடம்பிடித்திருக்கிறது என்பது வருத்தத்திற்குரியது. இயேசுவின் சீடர் தோமா வழியாக 2000 ஆண்டுகளுக்கு முன்னமே கிறிஸ்தவம் இந்தியாவிற்குள் நுழைந்திருந்தாலும், இன்னமும் 2% கிறிஸ்தவர்களை மட்டுமே கொண்டிருப்பது, கிறிஸ்தவம் இந்திய மண்ணில் எடுபடாமல் போனதையே காட்டுகின்றது. காரணம், கிறிஸ்தவமும் இந்த சாதியத்தை உள்வாங்கிக்கொண்டு, ஒன்றும் தெரியாததைப்போல் பாசாங்கு செய்து, போலியான தனிமனித மீட்பை இறையரசிற்கு எதிராக போதித்துக்கொண்டிருப்பதே ஆகும்.

 மாறாக, கிறிஸ்தவர்களாகிய நாம் சகமனிதரை ஏற்றத்தாழ்வுடன் நோக்கும் மனநோயிலிருந்து நலமடைந்து சகமனித உரிமைக்கும், சுயமரியாதைக்கும் மதிப்பளிக்கும் புது மனிதராக  மாறவேண்டும். கிறிஸ்து கற்பித்த மறுபிறப்பின் அனுபவத்திற்குள்ளாக நாம் பயணப்பட வேண்டும். ஒரு குழந்தையைப்போல மீண்டும் பிறந்து புதுப்படைப்பாக மாறவேண்டும். முக்கியமாக சகமனிதரை இழிவாக நோக்குவதற்கு பின்புலமாக செயல்படும் ‘கருத்தியல் புனிதமாக்கலை’ நியாயப்படுத்தும் சமயத்தையும், அதை சார்ந்து மறைமுகமாக செயல்படுத்தப்படும் தீய சமூக வழக்கங்களையும் புறக்கணிக்க வேண்டும். அந்த மாற்றத்தை இந்தியாவின் கடைக்கோடியில் வசிப்பவர்கள் வரை கொண்டுசெல்லும் சீரிய நற்செய்திப்பணியை ஆற்ற வேண்டும். கடவுள் தாமே நாம் தீண்ட தவறியவற்றை தீண்டி வாழ்வுபெறும் துணிவையும், பற்றுறுதியையும் நமக்கு அருள்வாராக!

Painting Courtesy: Rev. W. Jebasingh Samuvel.

<span class="has-inline-color has-quaternary-color">அருள்பணி. பா. கிருஸ்து அடியான்</span>
அருள்பணி. பா. கிருஸ்து அடியான்

தென்னிந்திய திருச்சபை ஊரப்பாக்கம் குருசேகரத்தில் ஆயராக இறைப்பணியாற்றுகிறார்.
திறமைமிக்க பன்முக சிந்தனையாளர்