நுகர்வுப் பண்பாட்டுக்கு

கிறிஸ்தவரின் மறுமொழி

(CHRISTIAN RESPONSE TO CONSUMERISM)

நிலைவாழ்விற்கான தகவுகளை நாடாமல் மண்ணுலக வாழ்விற்கான பெருமை மேட்டிமை பண்புகளை நாடுதல் அழிவுக்கேதுவான நுகர்வு கலாச்சாரம் ஆகும்.

அருட்பணி. டால்ட்டன் மனாசே

1) திருப்பால்கள் (Psalms)37 –  இறைநீதிக்கு எதிரான நுகர்வு

இத்திருப்பாடல் இருமைக் கோட்டினை அடிப்படையாகக் கொண்டது. நீதி – அநீதி, நல்லார் – பொல்லார், ஒடுக்கப்படல் – ஒடுக்குதல், இறைப்பற்று உடையோர் – இறைப்பற்று அற்றோர் இவற்றுள் எவராக நாம் இருக்கிறோம். நாம் வாழ பிறரை ஒடுக்குதல், துன்புறுத்துதல், சுரண்டுதல் போன்ற உலகநீதி யாவும் அழிவுக்கேதுவான நுகர்வு கலாச்சாரம் ஆகும். பிறருக்காய் நம்மை அளிப்பதும், பிறரின் வாழ்வுக்காக, மீட்புக்காக நம்மை மீட்பின் பணியாளராக, சிலுவை சுமப்போராக மாற்றிக்கொள்ளுதலே இறைத்திருவுளம் ஆகும். உலகத்துக்கொத்த நுகர்வு பண்பாட்டையும் சுரண்டல் கலாச்சாரத்தையும் ஒழிப்போம். இறைப்பற்றினை பெருக்கிக்கொள்வோம். 

2) தொடக்க நூல் (Genesis) 3:1-7 – ஊனியல்பின் இச்சைகள்

கண்களின் இச்சை/கவர்ச்சியானது கடவுளின் வார்த்தைக்கு கீழ்ப்படியக் கூடாத படி இழுத்துக்கொண்டது. 

கண்களின் இச்சை கடவுளின் திருவுளத்திற்கு எதிராக வழிநடத்தும்.  கவர்ச்சி/கண்களின் இச்சை அநீதியான வர்த்தகத்தை வர்த்தக நீதி என நியாயப்படுத்தும். 

கவர்ச்சியான விளம்பரங்கள் கண்களின் இச்சைக்கு இட்டுச்செல்லும். கண்களின் இச்சை பாவத்திற்கு இட்டுச் செல்லும். பாவம் இறப்பை ஊதியமாய் தந்திடும். 

டால்ட்டன் மனாசே

விளம்பரங்கள் கண்களின் இச்சைக்கு அடிமையாக்கி ஏழையைக் கடனாளியாகவும் மேலும் வறுமைக்கு ஆளாக்கி அழிவை ஏற்படுத்திவிடும்.  அரசியல்வாதிகளுக்கு அல்லது பேராயர்களுக்கு தேர்பவனி நடத்துதல், தேவையற்ற விளம்பர பதாகைகள், காசு மாலை அணிதல், சிவப்பு கம்பளம் விரித்தல், பூனைப்படை வைத்துக்கொள்ளுதல், மேளதாளங்கள் ஆடல்பாடல்கள், மலர்த்தூவுதல் போன்ற மேட்டிமை எண்ணம் உடைய கீழ்த்தரமான செயல்கள் யாவும் கடவுளின் வார்த்தைக்கு எதிரான பாவம். அது மரணக்கண்ணியாய் முடியும். இந்த வர்த்தக எண்ணம்/நுகர்வு கலாச்சாரம் கிறிஸ்தவத்தின் இறையாண்மைக்கு எதிரானதாகும். 

3) பிலிப்பியர் (Philippians) 3:17-21 – பணஆசையும் பொருளாசையும் இறைவார்த்தைக்கு மதிப்பளிக்காமல் வர்த்தக நோக்குடன் செய்யப்படும் எந்த செயலும் கடவுளின் திருவுளத்திற்கெதிரான செயலேயாகும். 

விண்ணரசு/இறையரசின் தகவுகளை வளர்த்துக்கொள்ளாமல் மண்ணுலகிற்கான போக்குடன் செயல்படுதல் யாவும் பாவம் ஆகும்.  பெருமை என்பது மனித மரணத்திற்கான காரணியாகும்.  நிலைவாழ்விற்கான தகவுகளை நாடாமல் மண்ணுலக வாழ்விற்கான பெருமை மேட்டிமை பண்புகளை நாடுதல் அழிவுக்கேதுவான நுகர்வு கலாச்சாரம் ஆகும். ஊனியல்பின் இச்சை யாவும் இறையரசுக்கெதிரான வர்த்தக கவர்ச்சியாகும்.  உலகின்மீட்புக்காக தம்மை வெறுமையாக்கி சிலுவை இறப்புக்கு ஒப்புக்கொடுத்த கிறிஸ்துவின் மனநிலைக் கொண்டிராமல் அதற்கு முரணான தேடல்களும் விருப்பங்களும் உடையோராய் மண்ணுலக வாழ்வின் வீண்பெருமைக்கும் தற்புகழ்ச்சிக்குமான நுகர்வு எண்ணம் உடையோராய் இருத்தல் புதிய மானுடத்திற்கும் புதிய படைப்புக்கும் எதிரான பாவம் ஆகும். அதன் முடிவு அழிவாகவே இருக்கும். மீட்புக்கான சிந்தையுடையோராய் இருப்போம்.  கடவுள் கொடுத்தவற்றில் நிறைவு கொள்ளாமல் பேராசைக் கொள்ளுதலும், கடவுள் விலக்கியவற்றின் மீது நாட்டம் கொள்ளுதலும் நிலையற்ற வாழ்விற்கான நுகர்வு கலாச்சாரம் ஆகும். 

4) மத்தேயு (Matthew) 6:25-34 

நுகர்வுக்கலாச்சாரத்திற்கு எதிரான இறையரசு கல்லுகளை அப்பமாக்கி உண்ணும் பொல்லாத உலகில் வாழ்ந்து கொண்டிருக்கிறோம்.  இறையாற்றலுக்கு தம்மை ஒப்புவிக்காமல் இறைமகனையே தாழவிழுந்து பணிந்து கொண்டால் ஆட்சியுரிமையை உனக்கு தருவேன் என சொல்லும் அலகையின் உலகில் வாழ்கிறோம்.  இறையாற்றலுக்கும் இறைவார்த்தைக்கும் ஒப்புக்கொடாமல் இறையாற்றலையே பரிட்சித்து பார்க்கும் அலகையின் உலகில் வாழ்கிறோம். 

படைப்புகளை நமக்கு கீழானவைகளாக பார்க்க கற்றிருக்கும் மானுடம் படைப்புகள் வெளிப்படுத்தும் இறைநம்பிக்கையை வெளிப்படுத்தவில்லை.  இறையாற்றல் இறைவழிநடத்துதல் இறைபராமரிப்பின் மீது நம்பிக்கைக் கொள்ளாமல் நமது ஆற்றலும் நமது கைவன்மையும் நம்மை காத்திடும் என்ற எண்ணம் அழிவிற்கேதுவான நுகர்வு கலாச்சாரம் ஆகும். 

உண்மையான இறைப்பற்று என்பது நாளைய தினத்தைக் குறித்து கவலை கொள்ளாதிருத்தலே ஆகும். நம்முடைய “முதன்மைத் தெரிவு” இறைப்பற்றுக்கும் இறையரசுக்கும் ஏற்புடையனவாக இருக்க வேண்டும் என்பதே இந்த நற்செய்திப் பகுதியின் நோக்கமாகும். இச்செய்தி இயேசுவின் திருப்பணியின் தொடக்கச் செய்தியாக அமைந்துள்ளது. இதன் நிறைவு மத்தேயு 25:31-46 வரை அடங்கிய பகுதியில் உள்ளது. பிறருக்கான வாழ்வு, அனைவருக்குமான வாழ்வு, சமத்துவ வாழ்வு வாழ்வோர் தங்களுக்கானவற்றுக்காகவும் நாளைய நாளுக்கானவற்றுக்காகவும் கவலை கொள்வதில்லை. 

கிறிஸ்துவின் மனநிலையே நம்மிலும் இருக்கக்கடவது.

மூவொரு கடவுளின் அன்பும் அருளும் ஆசியும் நம்மை நிறைத்துக் காப்பதாக. 

இறைமகன் இயேசுவின் திருப்பணியில் 

அருட்பணி. டால்ட்டன் மனாசே
அருட்பணி. டால்ட்டன் மனாசே

ஆற்காடு லுத்தரன் திருச்சபை, தமிழ்நாடு, இந்தியா

9 thought on “கண்களின் இச்சை குறித்து பைபிள் என்ன சொல்லுகிறது?”
  1. மிகச் சிறப்பான இறையியல் கருத்துக்கள் .வாழ்த்துக்கள்

  2. சிறப்பு தோழர்…
    மகிழ்ச்சி வாழ்த்துகள்.

  3. ஆழ்ந்த இறையியல் பகிர்வு சிறப்பு

    1. தலைமையாசிரியர் ஐயா அவர்களுக்கு நன்றி

  4. பிறருக்கு எளிமையாக புரிந்து கொள்ளும் வகையில் தங்களின் இறையியல் சிந்தனைக்கு நான் தலை வணங்குகிறேன்….அருமை ஐயா🙏🏻

    1. தங்களின் ஊக்கமளிக்கும் கருத்துக்கு நன்றி

Comments are closed.