இலங்கை சுதந்திர தினம்

தெற்காசிய நாடுகள் அனைத்தும் காலனித்துவ ஆட்சியின் கீழே அடிமைகளாக நடாத்தப்பட்டனர். இலங்கையை போர்த்துக்கேயர் 1505-1658 வரையும், ஒல்லாந்தர் 1659-1795 வரையிலும், பிரித்தானியர் 1796-1948 வரையிலும் இலங்கையை ஆண்டு வந்தனர். 1948ம் ஆண்டு மாசி மாதம் 4ம் திகதி இலங்கை சுதந்திரம் அடைந்தது. இலங்கை பேரளவில் சுதந்திரம் அடைந்த போதிலும் தற்போதும் நவீன காலனித்துவ சிந்தனைகள், செயற்பாடுகள் இலங்கையை அடிமைப்படுத்திக் கொண்டே உள்ளன. இஸ்ரயேல் மக்கள் எகிப்தின் அடிமைத்தனத்திலிருந்து விடுதலைப் பெற்ற பின்னர், பெற்ற சுதந்திரத்தை பேணிக் காக்கும் வகையில் அவர்களுக்கு நீதிச்சட்டம் கொடுக்கப்பட்டது. ஆனால், நீதிச்சட்டமும் அதற்கான விளக்கங்களும் பின்னர் இஸ்ராயேல் மக்களை ஒடுக்கியதை நாம் பார்க்கின்றோம். அதேவகையில், எமது சுதந்திரத்தை பேணிக் காக்கும் வகையில் உருவாக்கப்பட்ட அரசியல் யாப்புக்கள் எம்மக்களையே ஒடுக்கும் கருவிகளாக பயன்படுத்தப்படுவதனால் புதியதோர் அரசியல் யாப்பு அவசியம் என்ற சிந்தனை முன்வைக்கப்படுகின்றது.

தொடக்கநூல் / ஆதியாகமம் 11:1-10ல் மனுக்குலத்தின் இன்னுமோர் பாவம் வெளிப்படுத்தப்படுகின்றது. குறிப்பாக, மக்கள் இறைவனுக்கு எதிராக முரட்டாட்டம் புரிந்து தமக்குத் தாமே பெயர் உண்டாக கோபுரம் ஒன்றை அமைத்தனர். இந்நிலையே காலனித்துவ மக்களின் சிந்தனையாகும். இவர்கள் தமக்குத்தாமே பெயர் உண்டாக்க இலங்கை தேசத்தை தமது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்து தன்னிறைவு பொருளாதாரத்தை ஏற்றுமதி இறக்குமதி பொருளாதாரமாக மாற்றி, தமிழ் சிங்கள மொழிகளுக்கு பதிலாக பிரதியீட்டு மொழியாக ஆங்கிலத்தை விதைத்தனர். தன்நாட்டு மையமாக்கல் சிந்தனைகளை அகற்றி மேலைத்தேச சிந்தனைகளை வழிபாட்டிற்குள் புகுத்தினர். அத்துடன், பிளவுப்பட்ட திருச்சபை பிரிவுகளை இலங்கைக்கு பரிசாக தந்தனர். எமது சுதேசிய கலாசாரத்தையும், சமயங்களையும் அழித்து கிறிஸ்தவ சமயத்தை பரப்பினர். இவர்கள் கல்வி, சுகாதாரம், சமூகச் சேவை போன்ற சேவைகளை மக்களுக்கு வழங்கி கட்டாய மத மாற்றங்களையும் புரிந்தனர். இவைகள் எல்லாம் தங்களுக்கு தாங்களே பெயர் உண்டாக்க முற்படுகின்ற மக்களின் ஆட்சிமுறையாகும்.

இவைகள் இறையரசுக்கு தூரமானவைகள். இலங்கை வாழ்மக்கள் பிரித்தானிய ஆட்சியாளருக்கு எதிராக விடுதலை வேண்டி போராடினர். இதன் காரணமாக 1948 பெப்ரவரி 4 இலங்கைக்கு சுதந்திரம் கிடைத்தது. இவ்விடுதலைக்கு காந்தி அடிகளாரால் இந்தியாவில் ஏற்பட்ட சுதந்திர போராட்டமும் காரணமாகும். இப்போராட்டத்தில் கிறிஸ்தவர்களிலும்  பார்க்க ஏனைய சமயத்தவர்களே அதிகளவில் ஈடுபட்டனர். எனவே, அவர்களின் விடுதலைப் போராட்டத்தில் கிடைத்த வெற்றிக்காக நாம் இறைவனுக்கு நன்றி கூற அழைக்கப்பட்டுள்ளோம். இதனையே, சங்கீதம் / திருப்பாடல்கள் 66ல் நாம் வாசிக்கலாம்.

சமத்துவம், சகோதரத்துவம் பேணுவோம்
இறைவன் இஸ்ராயேல் மக்களுக்கு விடுதலையை கொடுக்கும்போது, அவர்கள் பிறரை ஒடுக்கக்கூடாது என்ற கட்டுப்பாட்டை அவர்களுக்கு விதித்தார். ஆனாலும், அவர்கள் தங்கள் இல்லங்களில் உள்ள வேலைக்காரரையும்  அடிமைகளையும் ஒடுக்கினர். அத்தோடு, பிற தேசங்களையும் ஒடுக்கினர். இதுபோன்றே, எமது தேசமும் விடுதலையைப் பெற்றபோதிலும் பல ஒடுக்குமுறைகள் இன்னமும் காணப்படுகின்றன. குறிப்பாக, தமிழர் சுயநிர்ணய உரிமை என்பதற்காக போராடி வருகின்றனர். ஆகக் குறைந்தது 13வது சரத்தை கூட பெற்றுத் தருமாறு இந்தியாவிடம் கையேந்துகின்றது. மேலும், 1830ம் ஆண்டு பிரித்தானியர்களால் இலங்கைக்கு கொண்டுவரப்பட்ட தோட்டதொழிலாளர்கள் இன்னமும் அடையாளமிழந்தவர்களால் அவர்களின் வாழும் உரிமைகள் நாளுக்கு நாள் பறிக்கப்படுகின்றன. சமயங்களுக்கு இடையேயும் முரண்பாடுகள் நிலவுகின்றன. குறிப்பாக, ஏப்ரல் 21ம் திகதி 2019 கத்தோலிக்க, கிறிஸ்தவ ஆலயங்களில் இடம்பெற்ற குண்டுவெடிப்பை உதாரணமாக காட்டலாம்.

அத்துடன் பிரதேசவாதம், சாதியம், ஆணாதிக்கம், பாலாதிக்கம் போன்ற பல ஒடுக்குமுறைகளை நாம் கூறலாம். எனவே, சுதந்திர தினமாகிய இன்று ஒடுக்குமுறையின் கருவிகளை அடையாளம் கண்டு மக்களுக்கு விடுதலையை பெற்றுக் கொடுக்க நாம் செயற்படவேண்டும்.

இப்போது, புவியியல் ரீதியான காலனித்துவ ஆட்சிமுறை அகன்று மக்கள் மனதுகளை அடிமைப்படுத்தும் நவீன காலனித்துவமே எம்மிடையே காணப்படுகின்றது. எனவே, இதிலிருந்தும் மக்கள் விடுவிக்கப்பட வேண்டும். எனவேதான், பரிசுத்த பவுல் கலாத்தியர் 6:4ல் கடவுளை நாம் பிதாவே என அழைக்கும் புத்திரசுவிகாரத்தை தந்துள்ளார் என்கிறார். எனவே,

இலங்கைத் தாயை தலைநிமிர செய்வோம்

இலங்கையை மாதா என நாம் உரிமையோடு அழைக்கும்போது இலங்கை மாதாவின் பிள்ளைகள் என்ற உணர்வு எமக்கு உருவாக வேண்டும். அவ்வுணர்வை நாம் ஒவ்வொருவருக்கும் கொடுக்க வேண்டியது எம் ஒவ்வொருவருடைய கடமையாகும். லூக்கா 13:10-17ல் ஒரு கூன் விழுந்த பெண்ணை இயேசு குணமாக்கி அவளை நிமிர்ந்து நிற்குமாறு கட்டளை கொடுத்தார். இதேபோன்று, இன்று இலங்கை மாதா அரசியல், பொருளாதார, கலை, கலாசார, சமய அழுத்தங்களால் நெருக்கப்பட்டு கூன் விழுந்த பெண்ணைப் போன்று நிமிர்ந்து நிற்க முடியாத நிலையில் அப்பெண் காணப்படுகின்றாள். இலங்கை கடலால் சூழப்பட்ட ஒரு நாடாகும். ஆனால், இன்று அது கடனால் சூழப்பட்டுள்ளது. ஒவ்வொரு பிரஜையும் 8 லட்சம் ரூபாவை வெளிநாடுகளுக்கு கடனாக செலுத்துப்பட வேண்டும். இன்னொரன்ன பல பிரச்சினைகளால் இலங்கை மாதா நிமிர முடியாத நிலையில் உள்ளாள். எனவே, இவளின் விடுதலைக்காக நாம் ஒவ்வொரு வருடமும் பாடுபடவேண்டும்.

இந்த சுதந்திரத் தினத்தன்று சமத்துவம், சகோதரத்துவம், சுபீட்சம் போன்றவைகள் மலரும்போதே கூன் விழுந்த மாதா நிமிர்ந்து நிற்கமுடியும். அது எப்பொழுது நடைபெறும்? என எதிர்ப்பார்த்து காத்திருக்கின்றோம்.

ஆக்கம்: அருட்பணி அருளம்பலம் ஸ்டீபன்