“இயேசுவின் மானிடத் தன்மையும் இறைத்தன்மையும்”

தாயும் தந்தையுமாகிய கடவுளாலும் நம்முடைய ஆண்டவரும் விடுதலையாளருமாகிய இயேசு கிறிஸ்துவினாலும் நம்மனைவருக்கும் அருளும் அமைதியும் உண்டாயிருப்பனவாக.

தூய மத்தேயு என்பவர் எழுதின நற்செய்தி நூல் 17ஆம் பிரிவு 1 முதல் 9 வரையிலான திருமொழிகள் இயேசு தோற்றம் மாறும் நிகழ்வு குறித்து நாம் இங்கு சிந்திப்போம்.

  1. திருப்பாடல்கள் 50 (சங்கீதம்) – பலியும் துதியும்
  2. முதல் உடன்படிக்கை இறைவாக்குநூல் எசாயா 65:17-25 –முதல்படைப்பும் புதுப்படைப்பும்
  3. புது உடன்படிக்கை திருமுக பகுதி 2பேதுரு 1.12-18 – மனித ஊனுடல் உள்ளார்ந்த மானுடம்

கொடுக்கப்பட்டுள்ள நற்செய்தி பகுதி ஆண்டவரின் நீதித்தீர்ப்பு நாள் குறித்து பேசுகிறது. கொடுக்கப்பட்டுள்ள நான்கு திருமறை பகுதிகளையும் இணைத்து கலவையாக ஒரு சில செய்திகளை உங்களுடன் பகிர்ந்து கொள்ளுகிறேன். நற்செய்தி பகுதி “ஆண்டவரின் புதுப்படைப்பு” எனும் முதல் உடன்படிக்கை நூலின் இறைவாக்கு செய்தியை புது உடன்படிக்கையின் பதிவாக இடம்பெறுகிறது. இந்த நீதித்தீர்ப்பு நாள் என்பது புதுப்படைப்புகான இறைவாக்கு நிறைவேறுதலே ஆகும். ஆண்டவர் இயேசுவின் முதலாம் வருகை “சாந்தகுணமுள்ளவராய் கழுதையின் மேலும் கழுதை குட்டியாகிய மறியின் மேலும் ஏறிவருகிற எளிமையான அன்பு, இரக்கம், பரிவு எனும் குணநலன்களை உடையதாக இருந்தது. ஆனால் வரவிருக்கிற இயேசுகிறிஸ்து நீதியுள்ள நீதிபரராக வருகிறார். நல்லோருக்கும் தீயோருக்கும் ஆண்டவராயிருக்கிற கடவுள் இயேசுகிறிஸ்துவில் அனைவரையும் மீட்டுக்கொண்டார். அது நம் பற்றுறுதி. ஆனால், யார் இதை முழுமையாக நம்புகிறார்களோ அவர்கள் மட்டுமே கடவுளின் மீட்பு திட்டத்தின் கீழ் வருகின்றனர். ஆண்டவர் மீது பற்றுறுதி கொள்ளாமல் இருப்பவர்கள் இந்த மீட்பு திட்டத்தின் கீழ் இடம்பெறமாட்டார்கள்.

ஆண்டவரின் மீட்பு திட்டம் என்பது ஒடுக்கப்பட்டவர்களுக்கு வாழ்வளிப்பது ஆகும். அது புதுப்படைப்பின் செயல்பாடு நிறைந்த ஒன்றாகும். அது பழைய முறைமை,பழக்கவழக்கங்கள் உள்ளடங்கிய பலிசெலுத்துகின்ற வழிபாடு அல்ல, வெறுமனே காணிக்கை செலுத்தும் வழிபாடும் அல்ல, மாறாக நீதி, இரக்கம், அன்பு ஆகியவற்றை நிலைநாட்டுவதே ஆகும். இவையாவும் மெசியாவின் ஆட்சியின் பண்புகள். இவற்றை நிலைப்படுத்த வரும் மெசியாவின் பணியாளன், வழியை ஆயத்தம் பண்ணுகிறவர்தான் திருமுழுக்கு யோவான், இந்த யோவான் தான் எலியாவின் மாற்றுருவம். எலியா ஆண்டவருக்காக பக்தி வைராக்கியம் உடையவராக தம் காலத்தில் இருந்தார். எலியாவின் மாற்றுருவாக விளங்கும் திருமுழுக்கு யோவான் மெசியாவின் அரசு இந்த மண்ணுலகில் நிலைநாட்டப்பட வழியை ஆயத்தம் செய்கிறவராக வந்தார்.

இயேசுகிறிஸ்து கடவுளின் மனுவுருவேற்றலாக வந்தார். ஆகையால், இயேசுகிறிஸ்துவின் தோற்றம் மாறுதல் என்பது மனுவுருவேற்றலின் அடுத்த பரிணாம வளர்ச்சியாக உள்ளது.
துதி என்பது பலியின் பரிணாமம், இயேசுகிறிஸ்துவின் அருளின் மாதிரி என்பது திருச்சட்டத்தின் பரிணாமம்,இயேசுகிறிஸ்துவின் தோற்றம் மாறுதல் என்பது மனுவுருவேற்றலின் பரிணாமம். இயேசுவின் தோற்றம் மாறும் நிகழ்வில் வரும் மோசே ஒரு விடுதலை வீரர். இஸ்ரயேல் மக்களை அடிமைத்தனத்திலிருந்து மீட்டெடுத்த மாபெரும் தலைவர். எலியா மிகுந்த பக்திமான். மோசே சமூகவிடுதலை போராளி. இந்த இருபரிமாணங்களின் கலவை தான் ஆண்டவர் இயேசு கிறிஸ்து.

புத்துயிர் அளிக்க வந்த விடுதலையாளர் இயேசு

இயேசு திருச்சட்டத்தை திறம்பட கற்றறிந்த கடவுளின் மனுவுரு. இயேசு இந்த சமூகத்தில் புறந்தள்ளப்பட்ட மாந்தரின் வாழ்வில் புத்துயிர் அளிக்க வந்த விடுதலையாளர். எலியா நீதியின் பொருட்டு ஆகாப் அரசன் காலத்தில் துன்பத்தை அனுபவித்தவர். மோசே இஸ்ரயேலின் விடுதலைக்காக 40ஆண்டுகள் பதுங்கி வாழ்ந்ததோடு பார்வோன் அரசனிடம் நீதிக்காக அரசமேன்மைகளை துறந்து ஒடுக்கப்பட்ட இஸ்ரயேல் மக்களின் சார்பாக நின்று போராடியவர். ஆண்டவர் இயேசு பொந்து பிலாத்துவின் காலத்தில் ஒடுக்கப்பட்ட மக்களுக்காக போராடி, அன்னா காய்பா ஆசாரியர் காலத்தில் சமயவிடுதலைக்காக போராடி எல்லா மக்களும் எருசலேம் கோவிலுக்குள் சென்று வழிபட வழிவகை செய்தார். இதன் பொருட்டு அன்றைய ரோம அரசினால் சிலுவையில் அறையப்பெற்றார். இந்த சிலுவை இறப்பு என்பது இயேசுவின் தோற்றம் மாறுதலின் அடுத்த பரிணாமம். இயேசுவின் தோற்றம் மாறுதல் என்பது அவரது இறப்புக்கான முன்னோட்டம் என்று சொல்லலாம்.

நீதிக்காக போராட வேண்டும் என்பதே இயேசுவின் தோற்றம் மாறுதல் நிகழ்வின் மையசெய்தியாகும். நீதிக்காக போராடுகின்ற போது இறக்க கூட நேரிடும் அதனை ஏற்றுக்கொள்ள நாம் நம்மை ஆயத்தப்படுத்திக் கொள்ள வேண்டும். இதற்கான தொடக்க நிலை என்பது நம்முடைய சுயநலத்தை அறுத்தெறிய வேண்டும்.

இதுவே ஆண்டவரின் திருவுளம். இதற்கு நாம் செவிசாய்க்க வேண்டும். அப்பொழுது நாம் வரவிருக்கின்ற கடவுளின் தண்டனை தீர்ப்பிலிருந்து தப்பித்துக் கொள்வோம். இவற்றை புரிந்துகொள்ளவும். ஏற்றுக்கொள்ளவும், செயல்படவும் கடவுள் தம் தூய ஆவியாரின் துணை தந்து ஆற்றல் வழங்கி காத்தருள்வாராக.

நிறைவாக, இயேசுவின் திருமுழுக்கும் தோற்றம் மாறுதல் நிகழ்வும் கற்பிக்கும் மையச் செய்தி

“இயேசுவின் சொல்லுக்குக் கீழ்ப்படிதலே புதுப்படைப்புக்கான புதிய மானுடத்திற்கான தோற்றம் மாறுதல்” ஆகும்.

கிறிஸ்துஇயேசுவின் நிறைவான அமைதி நம்முடன் தங்கியிருப்பனவாக.

அருட்பணி. டால்ட்டன் மனாசே
அருட்பணி. டால்ட்டன் மனாசே

ஆற்காடு லுத்தரன் திருச்சபை