அன்பானவர்களின் இறுதி மணித்துளியில் அவர்களுடன் இருக்க இயலாமை, துன்பம், நம்பிக்கை இழப்பு ஆகிய சூழலில் உயிரிழந்தோருக்காக வருந்துதல்.

திருமறைப் பகுதி: 1 கொரிந்தியர் 15
(இயேசு கிறிஸ்துவின் உயிர்ப்பின் மூலம் வெற்றி.)

திருமறைப் பகுதியின் சூழல்:


இந்தப் பகுதியில் கிறிஸ்துவின் மீது விசுவாசம் வைத்தோரின் உயிர்த்தெழுதல் பற்றி பவுலின் விளக்குகிறார், இறந்தவர்களின் உடல் ரீதியான உயிர்த்தெழுதலுக்கான தனது வாதத்தை பவுல் முன்வைத்தும், வரவிருக்கும் வெற்றியைப் பற்றி தனது வாசகர்களுக்கு ஒரு உறுதியையும் கூறுகிறார். கிறிஸ்துவின் உயிர்ப்பை நேரில் கண்ட சாட்சிகளில் ஒருவரான திருத்தூதுவர் பவுல் கொரிந்து சபை மக்களுக்கு கிறிஸ்துவின் உடல் உயிர்ப்பை சான்று பகர்கின்றார், இது எல்லா சாட்சிகளிலும் முந்தையதும் நம்பகமானதும் என்று கூறலாம். முதல் நூற்றாண்டில் நிலவிய உயிர்த்தெழுதல் பற்றிய புரிதலைப் பேராயர் என். டி. ரைட் கூறும் போது ‘உயிர்த்தெழுதல்’ என்பதற்கான கிரேக்க வார்த்தை ‘Anastasis’ ‘அனஸ்டாசிஸ்’, அதாவது ‘நிற்பது’ ‘a standing-up’ முதல் நூற்றாண்டின் உலகில், ‘மரணத்திற்குப் பின் வாழ்க்கை’ என்பதை குறிப்பதற்கு அனஸ்டாசிஸ் எனும் சொல்லை ஒருபோதும் மக்கள் பயன்படுத்தியதில்லை. ‘மரணத்திற்குப் பின்னான வாழ்க்கை’ ‘நாம் இறக்கும்போது நமக்கு என்ன நடக்கும்’ ஆகியவற்றைப் பற்றிய சொல்லாடல்களின் போதும் அனஸ்டாஸிஸ் என்ற வார்த்தையை அவர்கள் பயன்படுத்துவது இல்லை

‘ உயிர்த்தெழுதல் என்பது இறப்புக்குப் பிறகு உடனடியாக நடக்கும் ஒன்றல்ல, அது ஒரு தொடர் அனுபவம், கிறிஸ்துவில் அது உறுதிசெய்யப்பட்டுள்ளது, கிறிஸ்து இயேசுவின் உயிர்ப்பில் கடவுள் இயேசுவுக்கு என்ன செய்தாரோ, அதையே கிறிஸ்துவும் தம் மக்கள் அனைவருக்கும் இறுதியில் செய்வார், அவர்களை புதிய வாழ்க்கைக்கு உயர்த்துவார் என்பதயே இந்த சொல் குறிக்கிறது’ என்று பதிவு செய்கிறார்.

1 கொரிந்தியர் 15 ஆம் பிரிவின் வழியாக சில முக்கியமான, அடிப்படையான தகவல்களை பவுல் திருச்சபைக்கு முன் வைக்கிறார்.

  • A reminder of the gospel’s original terms (1 Corinthians 15:1)
  • நற்செய்தியின் சாராம்சத்தை நினைவூட்டல்
  • The necessity of preaching (1 Corinthians 15:1)
  • அருளுரையின் அவசியத்தை நினைவூட்டல்.
  • The faith in which the church stands (1 Corinthians 15:2)
  • திருச்சபை எவ்வித விசுவாசத்தில் உறுதியாக நிற்க வேண்டும் என்பதை விளக்குதல்
  • Handing down the tradition and story of Jesus (1 Corinthians 15:3)
  • கிறிஸ்து இயேசு குறித்த பாரம்பரிய செய்திகளையம் கதைகளையும் ஒப்படைத்தல்.
  • Christ’s death (1 Corinthians 15:3)
  • கிறிஸ்துவின் மரணம்
  • The forgiveness of sins (1 Corinthians 15:3)
  • பாவ மன்னிப்பு
  • The connection to the scriptures (1 Corinthians 15:3-4)
  • விவிலிய வசனங்களுடனான தொடர்பு
  • Christ’s resurrection on the third day
  • மூன்றாம் நாள் கிறிஸ்துவின் உயிர்த்தெழுதல்
  • Christ’s appearance to Cephas the Twelve and many others (1 Corinthians 15:5-8 )
  • கேபா, பன்னிரெண்டு சீடர்களுக்கும் மற்றப் பலருக்கும் கிறிஸ்துவின் தோற்றம் (1 கொரிந்தியர் 15:5-8)

திருஅவையின் உருவாக்கதத்திற்கு கிறிஸ்துவின் உயிர்ப்பு சம்பவத்தின் சான்று அடித்தளமாக அமைந்தது .உயிர்ப்பு நிகழ்வினை குறித்த தூய பவுலின் இந்தப் பிரிவு மிகவும் முக்கியமான வரலாற்று பதிவாகும். இறந்தவர்களின் உயிர்த்தெழுதல் இல்லை என்று சொல்பவர்களுக்கு மறுமொழியாக கிறிஸ்துவின் உயிர்ப்புக்கு நாங்கள சான்றுகள் என்று அறுதியிட்டு கூறுகிறார் தூய பவுல். ஆட்சியாளர், அதிகாரம் செலுத்துவோர், வலிமையுடையோர், ஆகிய இவைகள் பவுலின் காலத்தில் மக்கள் நம்பிய உலகு சார்ந்த சில சக்திகளாகும். கடவுளின் பராமரிப்பையும் அருளையும் நேரடியாக நாம் அனுபவிக்க இவை எப்போதும் தடையாகவே இருக்கும். இந்தப் பகைவர்களின் ஆதிக்கம் வேரோடு அழிக்கப்படும் என பவுல் இங்கு கூறுகிறார்.

நாம் இந்தத் தியானத்திற்கு 50 முதல் 58 வரையுள்ள திருமொழிகளை மட்டும் எடுத்துக்கொள்வோம் திருமொழி 51- இல் ‘இதோ, ஒரு மறை பொருளை உங்களுக்குச் சொல்கிறேன்; நாம் யாவரும் சாகமாட்டோம்; ஆனால் அனைவரும் மாற்றுரு பெறுவோம்’. பவுல் எமக்கு ஒரு காலம் வரையிலும் மறைக்கப்பட்ட ரகசியத்தை, மறைபொருளை இப்பொது விளக்கி எளிமையாக்குகிறார். இயேசுவின் கரங்களில் உறங்கிக் கொண்டிருப்பவர்கள், அதாவது ஏற்கனவே மரித்தவர்கள், ஒரு கணத்தில், எக்காளத்தின் சத்தம் ஊதப்படும்; போது கிறிஸ்துவில் மரித்தவர்கள் அழியாமல் உயிர்த்தெழுவார்கள், இறக்கக்கூடிய உடல் உள்ளோர் அழியாதவராகிவிடுவார், அதாவது மாற்றுருபெறுவர் என்று கூறுகிறார். திருமொழிகள் 54- 55 இன் வழியாக, பவுல் உயிர்த்தெழுதலின் விளைவை, அதாவது மரணத்தின் மீதான வெற்றியை அறிவிக்கிறார். கிறிஸ்துவின் வருகையின் நாளில் உயிரோடு இருப்பவர்களின், இறந்தவர்களின் உடல் உயிர்ப்பில், மரணம் நம்மை கொடுங்கோன்மைப்படுத்தவோ, பயத்தில் வைத்திருக்கவோ முடியாது என்பதைத் திட்டவட்டமாய் கூறுகிறார்.

ஏசாயா 25:8ஐ மேற்கோள் காட்டி பவுல் இதைக் குறிப்பிடுகிறார்
‘என்றுமே இல்லாதவாறு சாவை ஒழித்துவிடுவார்; என் தலைவராகிய ஆண்டவர் எல்லா முகங்களிலிருந்தும் கண்ணீரைத் துடைத்து விடுவார்; தம்மக்களுக்கு ஏற்பட்ட நிந்தையை இம்மண்ணுலகில் அகற்றிவிடுவார்; ஏனெனில், ஆண்டவரே இதை உரைத்தார்’. ‘கடவுள் மரணத்தை வென்று இவ்வுலகை என்றென்றும் ஆளுகைசெய்வார் என்று இறைமக்களுக்கு நம்பிக்கையூட்டுகிறார்.’

57, 58 ஆகிய திருமொழிகளில், ஆகவே நம் ஆண்டவர் இயேசு கிறிஸ்துவின் வழியாக நமக்கு இந்த வெற்றியைக் கொடுக்கும் கடவுளுக்கு நன்றி! எனவே என் அன்பார்ந்த சகோதர சகோதரிகளே, உறுதியோடு இருங்கள்; நிலையாய் நில்லுங்கள். ஆண்டவருக்காக நீங்கள் உழைப்பது வீண் போகாது என்பதை அறிந்து ஆண்டவரின் பணியை இன்னும் அதிகமாக எப்போதும் செய்யுங்கள்

58 ‘உறுதியாக நில்லுங்கள்’ – எதுவும் உங்களை அசைக்க முடியாது, கடவுள் வெற்றி பெறுவார் என்று பவுல் ஆற்றல்நிறைந்த சொற்களால் மக்களுக்கு நம்பிக்கை ஊட்டுகிறார். பவுல் இங்கு நற்செய்தி உண்மையைக் குறிப்பிடுகிறார், கடவுளுடைய ஆளுகைக்காக நாம் அனுபவிக்கும் துன்பங்கள் விண் போகாது, என்பதை நினைவுபடுத்தும் விதமாக மக்களை இன்னும் துடிப்புடனும், நம்பிக்கையுடனும் செயல் பட தூண்டுகிறார், அதாவது நற்செய்தியின் கருவிகளாய் மாறி துன்பங்களில் உள்ள மக்களுக்கு கடவுள் இறுதியில் அரசாளுவார் என்ற நற்செய்தியை பறைசாற்ற ஊக்கப்படுத்துகிறார்.

நிறைவாக,
அன்பானவர்களே, எமது இலங்கை திருநாட்டில் பல்வேறு துன்பங்களின் நடுவே இப்போது வாழ்ந்துவருகிறோம், கொரோனா என்னும் கொடிய தொற்று நோய் எமது அன்றாட வாழ்வை சீரழித்தது, இத்தொற்று நோயின் விளைவாக, குழந்தைகளின் கல்வி பெரிதும் பாதித்தது, தீவகங்களிலும், கிராமப்புறங்களிலும் வாழும் குழந்தைகளுக்கு கல்வி சென்று சேரவேயில்லை, பொது முடக்க காலங்களில் பெண்களுக்கு எதிரான வன்முறைகள் வீட்டிற்க்குள்ளேயே அதிகமாக நடைபெற்றுள்ளன, அன்றாடம் உழைத்து வாழும் குடும்பங்கள் பாரிய பொருளாதார இழப்பை சந்தித்தனர், நோய்வாய் படுக்கையில் இருந்தவர்கள் மிகப்பெரிய பாதிப்புகளை சந்தித்தார்கள். எல்லாவற்றுக்கும் மேலாக நம்மில் பலர் எமக்கு அன்பானவர்களை இந்தக் கொடும் தொற்று நோயினால் இழந்து நிற்கிறோம். அன்பானவர்களின் இறுதி நேரத்தில் அவர்களுடன் இருக்க இயலாத நிலை, இடுகாணுற்ற நிலை, நம்பிக்கை இழந்து போன நிலை, இந்த அனுபவங்கள் எமக்கு தீராத வேதனையை தந்தது, நாங்கள் மரணத்திற்கு குறித்துப் பயப்படுகிறோம். அது நம்மை பலவீனப்படுத்துகிறது. நம் வாழ்க்கை கொஞ்சம் கொஞ்சமாக நம் கண் முன்னே நழுவிச் செல்கிறது. எங்கள் கனவுகள் சிதைகின்றன, எதிர்பார்ப்புகள் தகர்ந்து போகின்றது, இருப்பினும் கடவுள் 1 கொரிந்தியர் 15 ஆம் பிரிவின் வழியாக எம்முடன் உரையாடுகிறார். உயிர்ப்பின் வழியாக கடவுள் இயேசுவை மரித்தோரிலிருந்து எழுப்பிய நிகழ்வு மனுகுலத்திற்கு ஒரு முக்கிய உண்மையை உணர்த்துகிறது, கிறிஸ்து இயேசு தான் வாழ்ந்த சமூகத்தில் இருந்த அடிமைத்தனத்தை வேரோடு பிடிங்கிட தன் உயிரை தியாகபலியாக ஒப்புக்கொடுத்தார்.

பேராயர் டேனியல் தியாகராஜா கிறிஸ்துவின் உயிர்ப்பைப் பற்றி கூறுகிறார்,

‘ஈஸ்டர் என்பது ஒருவிதத்தில் எதிர்ப்புச் செயல். எம்மைப் பலவந்தம் பண்ணும் அனைத்துச் சக்திகளையும் அது மறுத்து எதிர்த்து நிற்கிறது, பணமோ, பற்றாமையோ, பேராசையோ, வன்முறையோ எதுவும் எம்மை ஒன்றும் செய்யாது, ஏனென்றால் புதியதும், வித்தியாசமானதுமான ஒரு புதிய உலகம் எமக்குள் கடவுளால் ஊதப்பட்டுள்ளது’, என்கிறார்.

Dr Daniel Thiagarajah

ஆதிக்க சக்திகளுக்கு எதிர்ப்பாளராக அதாவது கிறிஸ்துவின் சீடர்களாக வாழ அழைக்கப்பட்ட நாம் இவ்வுலப்போக்கில் வாழ்ந்துவருகிறோம். ஒரு விடயத்தை மறந்துவிட கூடாது, கிறிஸ்து இயேசுவை போல அநீதிகளுக்கு எதிர்த்து நின்று சிலுவை சுமக்க நாம் அழைக்கப்பட்டு இருக்கிறோம், சிலுவை எங்கு உண்டோ அங்கே வெற்றியும் உண்டு என்பதை நாம் பல வேளைகளில் மறந்துவிடுகிறோம். இன்று பல நேரங்களில் நாமும் எமது சமூகத்தில் நடைபெறும் படைப்புகளுக்கு எதிராக நடைபெறும் அநீதிகளை கண்டும் காணாமல் இருக்கிறோம். படைக்கப்பட்ட நோக்கத்தினை மறந்து உலகத்தோடு ஒத்துவாழ்கிறோம். படைக்கப்பட்ட இறைத்திட்டத்திற்கு ஏற்ப நாம் வாழும் போது கண்டிப்பாக எமது வாழ்க்கை மகிழ்ச்சியான வாழ்க்கையாக அமையும். இயேசுவின் உயிர்த்தெழுதலின் வழியாக கடவுள் சீர்கெட்டுப் போன உலகை மறுசீரமைப்பு செய்ய விரும்புகிறார். அந்த புதிய உலகில் துக்கம் இராது, பாடுகள், வேதனை இராது, இடுக்கண்கள் இராது, இன்று நாம் வாழும் அநீதி நிறைந்த உலகில் நடைபெறும் கடவுளுக்கு எதிரே செயல்பாடுகளை தடுத்து நிறுத்தி இறையாளுகைக்கு நேராக உலகை அழைத்துச் செல்லவே கடவுள் கிறிஸ்து வழியாக திருச்சபையை பணித்தார், எனவே நாமும் கடவுள் இறையாளுகையை இம்மண்ணில் நிறுவ திருச்சபையாக இணைந்து பணியாற்றுவோம்.

இறைவேண்டல் செய்வோம்,
ஆண்டவரே, கொடிய நோயினால் பாதிக்கப்பட்டு, தங்களுக்கு அன்பானவர்களை இழந்தவர்களையும் அவர்தம் உறவுகளையும் உமது கரத்தினில் வைக்கிறோம், உம் காயங்களால் அவர்களின் வேதனைகள் குணமடைகின்றன என்பதை நாங்கள் அறிவோம். உம் உடலோடு ஒன்றிணைந்து இந்த வேதனையை தாங்கி கொள்ள வலிமையை அவர்களுக்கு கொடுத்தருளும். கொரோனாவுக்கு எதிராக முன்னணியில் போராடும் அனைத்து மக்களின் பாதுகாப்பிற்காக நாங்கள் பிரார்த்திக்கிறோம்; நோயை எதிர்த்துப் போராடுபவர்களை விரைவாக குணப்படுத்தவும் நாங்கள் பிரார்த்திக்கிறோம், பீதியைத் தணிப்பதிலும், அச்சங்களைத் தீர்ப்பதிலும் அமைதியான, ஆறுதலான பகுத்தறிவு நடவடிக்கை அரசாங்கம் எடுக்க நாங்கள் மன்றாடுகிறோம். இந்தத் துன்பகரமான சூழ்நிலையில் உலகளாவிய மனுகுலத்தின் ஒற்றுமைக்காக உம்மிடம் வருகிறோம், உம் அமைதி எம்மை வாழவைக்கட்டும். காரிருளில் நடந்து வந்த மக்கள் பேரொளியைக் கண்டார்கள்; சாவின் நிழல் சூழ்ந்துள்ள நாட்டில் குடியிருப்போர் மேல் சுடர் ஒளி உதித்துள்ளது. (ஏசாயா 9: 2) எனும் இறைவாக்கிற்கு இணங்க கடவுளின் குணப்படுத்தும் கை எமது இலங்கை திருநாட்டின் மீது நிலைத்திருக்கட்டும்; கடவுளின் உயிரைக் கொடுக்கும் ஆற்றல் உமது பிள்ளைகளின் உடலின் ஒவ்வொரு பகுதியிலும், ஆன்மாவின் ஆழத்திலும் பாயட்டும், கடவுளின் சமாதானம் எங்கள் அனைவரையும் சுத்தப்படுத்தி, சுத்திகரித்து, படைப்பின் முழுமையையும் வலிமையையும் மீட்டமைக்கட்டும், இவை அனைத்தையும் கிறிஸ்து இயேசுவின் திருப்பெயரில், வேண்டுகிறோம். ஆமென்.

சிந்தனைக்கு


• எமது வாழ்வில் நேரிடும் இழப்புகளுக்குக் கடவுள் காரணமா?
• உயிர்த்தெழுதல் எமக்கு முன் வைக்கும் அறைகூவல் என்ன?
• இன்று கிறிஸ்துவின் உடல் உயிர்ப்பை நீர்த்துப் போகச் செய்யும் காரணிகள் யாவை ?
• அவற்றிற்கு எமது மறுமொழி என்ன ?

<strong><mark style="background-color:rgba(0, 0, 0, 0)" class="has-inline-color has-quaternary-color">ஜெபசிங் சாமுவேல்,</mark></strong>
ஜெபசிங் சாமுவேல்,

இறைபணியாளர் இலங்கை

துணை நின்ற நூல்கள்:
தவக்கால சிந்தனைகள், பேராயர் டேனியல் தியாகராஜா, 2020.
Resurrection and the Renewal of Creation, Bishop N.T. Wright, 2020.
திருவிவிலிய விளக்கவுரை, 2009.
Online source:
www.workingpreacher.org> commentaries
www.lectionarystudies.com

One thought on “‘உடைந்த நிலையில் விசுவாசம்’”

Comments are closed.