எது உண்மையான ஞானஸ்நானம்

“திருமுழுக்கு : திருப்பொழிவு”

தண்ணீரில் மூழ்குவதெல்லாம் திருமுழுக்கு ஆகாது.

திருமுழுக்கு என்பது இறைநீதியை நிலைநாட்டுவதற்கான அடித்தளம் நீதிக்காக துன்புறுதலின் அடித்தளம்.

நம்முடைய தாய் தந்தையாம் கடவுளாலும் நம் ஆண்டவர் இயேசு கிறிஸ்துவினாலும் நம் அனைவருக்கும் அருளும் அமைதியும் உண்டாயிருப்பனவாக.

திருப்பாடல் 2:6-7

இயேசுவின் இரண்டாம் வருகையை தொடர்ந்து இந்நிகழ்வு நடைபெறும். முதலாம் திருப்பாடலில் (சங்கீதம்) சொல்லப்படும் ஆசிபெற்ற அல்லது பேறுபெற்ற மனிதன் என்பவரும் இரண்டாம் திருப்பாடலில் இடம்பெறும் “முடிசூட்டப்பெற்ற அரசர்” என்பவரும் வேறுவேறு நபர்கள் அல்ல. மாறாக, அவர் ஒருவரே. இறைத்தன்மை உடையவர் அவர், அவரே மெசியா, அவரே இறைவரின் மகன்; முதல் இரண்டு திருப்பாடல்களிலும் அவர் வீழ்ந்துபோன மனிதனான ஆதாம் மற்றும் இந்த உலகத்தின் அரசர் ஆகியோரை முரண்பட்டு நிற்கும் புதிய ஆதாமும் அனைத்துலகின் அரசரும் அவரே.

கடவுள் அவரை தம் அன்பார்ந்த மகன் என்று சொல்வதன் வழியாக முழுபடைப்பின் மீதும் அதிகாரம் செலுத்தத்தக்க தம் முழுநிறைவான அதிகாரத்தையும் அவருக்கு தந்திருக்கிறார். அந்த அன்பார்ந்த மகன் இயேசுகிறிஸ்து ஒருவரே.

இன்று – இந்த உலகம் அடித்தளமிடப்படும் முன்னே இந்த நாள் விண்ணரசில் ஆணையாய் எழுதப்பட்டுள்ளது. இது கடவுள் மனுவுருவேற்று சிலுவையில் அறையப்படுவதன் வழி மனுக்குலத்தை மீட்டெடுப்பதற்கான கடவுளின் மீட்புத்திட்டத்தைக் குறித்து பேசுகிறது. (1பேதுரு 1:18-20).

எசாயா 42 :10-13

கடவுள் அனைத்து மக்களுக்குமான கடவுள். அனைத்து மக்களுக்குமான மீட்பர். ஒரு தீவு என்பது எல்லா பக்கங்களும் துன்பத்தால் நிறைந்தது என்பதன் அடையாளம். நாம் எப்பக்கத்திலும் நெருக்கப்பட்டாலும் கடவுள் நம்மை விடுவிக்கும் மீட்பராய் இருக்கின்றார்.
அவர் ஒடுக்குதலை சகியாதவர். ஒடுக்குதலில் உள்ளோரை விடுவித்திட ஒடுக்குவோருக்கு எதிராக சினம் கொள்ளும் கடவுளாய் இருக்கின்றார். ஆகவே ஆண்டவர் நீதி நிலைநாட்ட விடுதலை முழக்கம் எழுப்பும் மீட்பராய் இருக்கின்றார் என்பதை அறிந்துகொள்ள அழைக்கப்படுகின்றோம்.

இயேசு பெற்ற யோவானின் திருமுழுக்கு

(மத்தேயு 3:13-17) மனித வரலாற்றில் இயேசுவின் திருமுழுக்கு என்பது தனித்தன்மை வாய்ந்த மாபெரும் நிகழ்வாகும். இயேசுவின் திருப்பணி இங்கே தொடங்குகிறது. திருமுழுக்கு பெற இடங்கொடு என்பதன் வழி மீட்புப்பணிக்காய் துன்புற இடங்கொடு என்ற மறைபொருளை உள்ளடக்கி இருக்கிறது. தண்ணீர் முழுக்கு என்பது இயேசுவின் இறப்பு, அடக்கம், உயிர்ததெழுதல் ஆகியவற்றின் ஒரு மாதிரிச்செயல் ஆகும். (ரோமையர் 6:3-5) தண்ணீரிலிருந்து கரையேறிய போது என்பது தண்ணீர் தெளிப்பு அல்ல மாறாக தண்ணீரில் மூழ்குதல் என்பதையேக் குறிக்கிறது. ஆனாலும், மீண்டும் அழுத்தமாய் பெற வேண்டிய செய்தி என்பது தண்ணீரில் மூழ்குதல் என்பது இறைவார்த்தையில் மூழ்குதல் என்பதன் அடையாளச்செயல் என்பது தான் மறைபொருள் ஆகும். இயேசுகிறிஸ்து ஒருவரில் தான் வானம் திறக்கப்பட்டது. வானாதி வானங்களை உண்டாக்கிய அவரே வானங்களைத் திறந்து வந்தவர். விண்ணிலிருந்து இறங்கிவனரும் விண்ணைத் திறக்கும் ஆற்றல் உள்ளவரும் அவர் ஒருவரே. ஆவியானவர் புறாவை போல் இறங்கினதை எல்லோரும் கண்டார்கள். ஆனால் இயேசுவுக்குள்ளேயே இருக்கும் ஆவியானவர் புறாவைப் போல் அமர்ந்திருக்கிறார் என்பதை யோவான் கண்டார். ஆக யோவான் இயேசுவுக்குள் கண்ட ஆவியாரைத் தான் வெளியிலிருந்து பறந்துவரும் புறாவில் இருப்பதாக நற்செய்தியாளர் குறிப்பிடுகிறார். விண்ணிலிருந்து ஒரு குரல் ஔிக்கிறது. அது விண்ணுலகிலிருக்கிற தந்தையாம் கடவுளின் குரலாக இருக்கிறது. ஆக, இயேசுவின் திருமுழுக்கில் மூவொரு கடவுள் வெளிப்படுகிறார். தந்தையாம் கடவுள் பேசுகிறார், (தூய) ஆவியார் இறங்குகிறார், மகன் வேண்டுதல் செய்கிறார் என்கின்ற மும்மைக் கடவுள் இருப்புநிலையை இந்நிகழ்வு உணர்த்துகிறது(லூக்கா 3:21).

1பேதுரு 3:18-22

தண்ணீரில் மூழ்குவதெல்லாம் திருமுழுக்கு ஆகாது.

திருமுழுக்கு என்பது இறைநீதியை நிலைநாட்டுவதற்கான அடித்தளம் நீதிக்காக துன்புறுதலின் அடித்தளம்.

நோவாவின் காலத்தில் மூழ்குதல் அழிவைத் தந்தது. காரணம் மனம் திரும்பவில்லை. திருமுழுக்கில் இணைந்தவர்கள் வாழ்வைப் பெற்றுக் கொண்டார்கள். திருமுழுக்கு என்பது மனமாற்றம் அடைந்தோருக்கு மறுவாழ்வளிக்கும் முழுக்காக உள்ளது. திருமுழுக்கு பெற்றோர் முழுமானுடத்தின் மீட்புக்காய் பணியாற்ற அழைக்கப்பட்ட சீடத்துவத்திற்கான அருட்பொழிவாக உள்ளது. அழியாமைக்குட்படுத்தும் முழுக்கு தான் திருமுழுக்கு.

நீதிக்காய் துன்புற நீதிக்காய் போராடும் மக்களோடு நம்மை நாம் இணைத்துக் கொள்ள வேண்டும். அதற்கு நம்மை ஆற்றல்படுத்துவதே திருமுழுக்கு. உலகின் மீட்புக்காக இயேசு திருமுழுக்கின் வழி தம்மை ஒப்புவித்தார். நாமும் அப்படி செய்து கடவுளின் திருவுளம் நிறைவேற்றுவோம். கிறிஸ்துஇயேசுவிலிருந்த மனநிலையே நம்மிலும் இருக்கக்கடவது.

<mark style="background-color:rgba(0, 0, 0, 0)" class="has-inline-color has-quaternary-color">டால்ட்டன் மனாசே</mark>
டால்ட்டன் மனாசே

ஆற்காடு லுத்தரன் திருச்சபை
திட்டக்குடி குருசேகரம்