வசந்தகாலப் பூக்கள் 4

நான்காம் தியானம்

நாம் வாழும் உலகில் பொதுவாகவே எமது தவறுகளை நாம் ஏற்றுக்கொள்வது குறைவாக காணப்படுகின்றது. தொடக்கநூல் (ஆதியாகமம்) 3:13ல் ஏவாள் தன்னுடைய தவறை ஏற்றுக்கொள்ளவில்லை. கடவுள் அவரிடத்தில் வினாவும்போது, நீர் படைத்த சர்ப்பம் என்னை வஞ்சித்ததினால் நான் இப்பேர்ப்பட்ட பாவத்தை செய்தேன் என சர்ப்பத்தின்மீது தவறை சுமத்தினார். இதன் காரணமாகவே அவர்  தண்டிக்கப்பட்டார். நாம் பாவத்தை ஏற்றுக்கொள்ளாதபோது அதனை நாம் அறிக்கையிடமாட்டோம். அதனால், நாம் பொய்க்காரர் என்ற சொல்லுக்கு ஆளாகின்றோம் (1 யோவான் 1:7). மேலும், எமது தவறை நாம் ஏற்றுக்கொள்ளாத பட்சத்தில் கடவுளின் மன்னிக்கும் மகத்துவத்தை எம்மால் உணர்ந்து கொள்ள முடியாது (1 யோவான் 1:9).

நாம் தவறை அறிக்கையிடும்போதே எமக்கு பாவமன்னிப்பு கிடைக்கின்றது. பாவமன்னிப்பு என்பது நாம் பரிசுத்த நிலைக்கு உயர்த்தப்படுவது அல்ல. மாறாக, நாம் பாவத்தோடு போராடி மேற்கொள்வதற்கான சக்தியை அல்லது பலத்தை இறைவரிடமிருந்து பெற்றுக்கொள்ளுகின்ற இடமே ஆகும். எனவே, நாம் எமது தவறை இன்னொருவர்மீது சுமத்தும்போது தவறோடு போராடும் வல்லமையை இழந்துவிடுகின்றோம். அதனால் தவறிலிருந்து எம்மால் விடுபடமுடியாது (நீதிமொழிகள் 28:13).

செபம்: இறைவா எனது தவறை நான் ஏற்றுக் கொண்டு, அறிக்கையிட்டு அதனை விட்டுவிட அருள்புரிவாயாக. ஆமென்.