கடவுளுக்கு பயப்படும் பயம் என்பது முதல் ஏற்பாடு முழுவது விரவிக்கிடக்கின்ற சொல்லாடலாகும். கடவுளை நேசிக்கும் நேசம் என்று நேர்மறையாகக் கூறாமல் விவிலியம் ‘பயம்’ என்ற எதிர்மறையான சொல்லை ஏன் முன்வைக்கிறது எனக் காண்போம்.உண்மையில் பயத்தை விவிலியம் எதிர்மறையாகக் கூறுகிறது.“அன்பிலே பயமில்லை; பூரண அன்பு பயத்தைப் புறம்பே தள்ளும்; பயமானது வேதனையுள்ளது, பயப்படுகிறவன் அன்பில் பூரணப்பட்டவன் அல்ல.”(1 யோவான் 4:18)ஆனால் கடவுளுக்கு பயப்படுகிற பயத்தை பின்வருமாறு கூறுகிறது.“கர்த்தருக்குப் பயப்படுகிற பயம் சுத்தமும், என்றைக்கும் நிலைக்கிறதுமாயிருக்கிறது; கர்த்தருடைய நியாயங்கள் உண்மையும், அவைகள் அனைத்தும் நீதியுமாய் இருக்கின்றன.அவை பொன்னிலும், மிகுந்த பசும்பொன்னிலும் விரும்பப்படத்தக்கவையும், தேனிலும் தேன்கூட்டிலிருந்து ஒழுகும் தெளிதேனிலும் மதுரமுள்ளவையுமாய் இருக்கின்றன.அன்றியும் அவைகளால் உமது அடியேன் எச்சரிக்கப்படுகிறேன்; அவைகளைக் கைக்கொள்ளுகிறதினால் மிகுந்த பலன் உண்டு.”(சங்கீதம் 19:9-11)நேசிப்பது என்பது நேசிக்கலாமா? வேண்டாமா? என சிந்தித்து முடிவுசெய்யும் ஒன்று. ஆனால் பயம் என்பது அப்படிப்பட்டதல்ல, தெருவில் செல்லும்போது சிங்கமொன்று எதிர்பட்டால் ஓடலாமா வேண்டாமா என்று நாம் சிந்தித்து முடிவெடுக்க மாட்டோம் உடனடியாக நமக்கே தெரியாமல் ஒலிம்பிக் ஓட்டவீரரைவிட வேகமாக ஓடுவோம். ஆம்! பயம் என்பது தானாக, உடனடியாகத் தோன்றும், எளிதில் கட்டுபடுத்த முடியாத, ஆழமான உள்ளுணர்வாகும். கடவுளுடைய சட்டங்களுக்கு கீழ்படிவது யோசித்து முடிவெடுக்கும் ஒன்றாக இல்லாமல் பயத்தைப்போல தாமாகவே உடனடியாகத் தோன்றும் உள்ளுணர்வாக அது மாறவேண்டும். அதை உள்ளுணர்வாகக் கொண்டவர்களே எவ்வளவு அவசரமான அல்லது நெருக்கடியான சூழலிலும் பாவத்தில் விழாத முடிவுகளை எடுத்து தன்னை கறைபடாதபடி காத்துக்கொள்வர்!எனவே ஆண்டவருக்கு பயப்படுகிற பயம் ஏதோ ஒரு நாளில் வந்துவிடுகிற ஒன்றல்ல. நாம் உடனே மிதிவண்டியை ஓட்டிவிட முடியாது, ஆற்றில் குதித்த உடனே நீந்திவிட முடியாது, குழந்தை பிறந்த உடனே நடந்துவிட முடியாது மெதுவாகப் பயில பயிலத்தான் அது சாத்தியமாகும். நீதியர் ஏழுதரம் விழுந்தாலும் எழுவர்! எனவே முயல்வோம்! பயில்வோம்! தூயவாழ்வு வாழ தூயாவியாரின் துணை நாடுவோம்!

<strong><sub>அருட்பணி. கிறிஸ்து அடியான்</sub></strong>
அருட்பணி. கிறிஸ்து அடியான்