வசந்தகாலப் பூக்கள் 7

ஏழாம் தியானம்

பொதுவாக, உணர்ச்சி எமக்கு மிக அவசியமாகின்றது. இவ்வுணர்வு பல சந்தர்ப்பங்களில் நன்மையை ஏற்படுத்துகின்ற போதிலும் ஒரு சில சந்தர்ப்பங்களில் தீமையை ஏற்படுத்துகின்றது. எமது ஆன்மீக வாழ்வில் அறிவு மூளையிலிருந்தும் உணர்வு இதயத்திலிருந்தும் பிறக்கின்றது. இவ்வறிவுக்கும் உணர்வுக்கும் இடையே தொடர்வு இருக்க வேண்டும். ஆனால், ஒரு சிலர் அறிவினால் இறைவனை காண முயற்சிக்கின்றனர். மறுகரையில், இன்னுமொரு சிலர் உணர்வினால் இறைவனை புரிந்துகொள்ள முற்படுகின்றனர். இந்த இரண்டுமே தவறான அணுகுமுறையாகும்.

லூக்கா 9:18-29ல் பிலிப்பு செசரியா பட்டணத்தில் இயேசு, நீங்கள் என்னை யார் என்று சொல்லுகின்றீர்கள் எனக் கேட்டார். அதற்கு பேதுரு, நீர் உயிருள்ள தேவனுடைய குமாரனாகிய கிறிஸ்து எனக் கூறினார். இவ் அறிக்கை ஓர் உணர்ச்சி சார்ந்த அறிக்கையாகும். அதனால், இவ்வறிக்கையில் அவனால் நிலைத்திருக்க முடியவில்லை. இப்பேர்ப்பட்ட உணர்ச்சி வாய்ந்த பல அறிக்கைகளை அவன் தன் வாயினால் அறிக்கையிட்டான். இதுவே, அவனது வீழச்சிக்கு காரணமாகும். 

எமது வாழ்விலும் வழிபாட்டிலும் நாம் பல விதமான அறிக்கைகளை உணர்ச்சியினிமித்தம் அறிக்கையிட்டுள்ளோம். ஆனால், காலம் செல்ல செல்ல இவ் அறிக்கைகள் அனுபவங்களாக மாற்றம் பெறுவதில்லை. அதனால் நாம் சோதனைக்கு உட்படுகின்றோம். இந்நிலையே பேதுருவுக்கு ஏற்பட்டது. 

செபம்: இறைவா அறிவாலோ உணர்வாலோ உம்மை அறிக்கையிடாமல் மாறாக அனுபவத்தில் உம்மைக் கண்டு கொள்ள அருள் புரிவாயாக.