‘வாதை உன் கூடாரத்தை அணுகாது..’ திருப்பாடல் 91:10

முன்னுரை
கொரோனா வைரசின் தாக்கம் எமது வாழ்வில் எல்லா கூறுகளிலும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. அது ஏற்படுத்திய தாக்கங்களை குறித்து இக்கட்டுரையில் குறிப்பிட விரும்புகிறேன். மேலும் இன்றைய நாட்களில் கொரோனாவின் தாக்கம் எமது சமய கோட்பாடுகளில் குறிப்பாக இயேசுவின் இரண்டாம் வருகையுடன் தொடர்புபடுத்தப்படுகின்றது. இவைகளை குறித்த ஆய்வுகளையும்
இக்கட்டுரையில் குறிப்பிட விரும்புகின்றேன்.

சமூக பொருளாதாரத்தில் கொரோனாவின் தாக்கம்
காலத்திற்கு காலம் உலகில் பல்வேறு இயற்கை அனர்த்தங்களும் செயற்கை அனர்த்தங்களும் ஏற்படுகின்றன. இவைகள் தனி மனித சமூக வாழ்விலும் பொருளாதார வாழ்விலும் அதிகளவு
தாக்கங்களை ஏற்படுத்துகின்றன. குறிப்பாக இற்றைக்கு ஒரு வருடத்திற்கு முன்னர் சீனாவில் தோன்றிய கொரோனா வைரஸ் உலகில் 230க்கு மேற்பட்ட நாடுகளுக்கு பரவியுள்ளது. இதனால்
11 இலட்சத்திற்கு மேற்பட்ட உயிர்கள் காவுகொள்ளப்பட்டுள்ளது. சமூக தொடர்புகள் துண்டிக்கப்பட்டு மக்கள் தங்களை ஒருவரிலிருந்து ஒருவர் தனிமைப்படுத்தியுள்ளனர். இந்நிலை சுயநலத்திற்கு வழிவகுத்துள்ளது. மேலும் பொருட்தட்டுப்பாடு ஏற்பட்டு விடும் என்ற காரணத்தினால் எழுந்துள்ள நுகர்வு கலாசாரம் ஏழைகளை இன்னும் ஏழைகளாக்கியுள்ளது. இணையத்தளம் ஊடாக கல்வி கற்கும் நிலை அறிமுகப்படுத்தப்பட்டிருந்த போதிலும் அதில் காணப்படும்
பாரபட்சத் தன்மை மாணவர்களுக்கு இடையே பிரிவினைகளை ஏற்படுத்தியுள்ளது.

உலக நாடுகள் ஒன்றையொன்று குற்றம் சாட்டுவதிலே முண்டிக்கொண்டு செயற்படுகின்றன. உதாரணமாக இவ்வைரசின் தோற்றத்திற்கு சீனாவே காரணம் என அமெரிக்கா சாட்டுகின்ற குற்றச்சாட்டுக்கள் ஏராளம்;. இந்நிலை அமெரிக்காவில் இருந்து இலங்கைக்கு வருகை தந்த இராஜாங்க அமைச்சர் பொம்பே அவர்களின் வருகை அரசியல் கண்ணோட்டத்தோடேயே பார்க்கப்பட்டது. எனவே இவ்முரண்பாடுகளை நாடுகளுக்கிடையேயும் மக்களுக்கிடையேயும் வைரசின் வருகை தோற்றுவித்துள்ளது என்றால் மிகையாகாது. இலங்கையில் வைரஸ் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு
வரக்கூடிய சூழ்நிலை காணப்பட்ட போதிலும் தேர்தலில் வெற்றி பெறவேண்டும் என்ற ஒரே நோக்கத்தில் அரசாங்கம் செயற்பட்டதன் விளைவாகவே இத்தகைய நிலை ஏற்பட்டுள்ளது என்று குற்றம் சாட்டப்பட்டது. எதிர்க்கட்சிகளில் குரல்கள் பலமாக ஓங்கிக் கொண்டு இருக்கின்றன.
இந்நிலை தொடர்ச்சியாக நீடித்தால் நோயாளிகளை பராமரிப்பதற்கு வேண்டிய இட வசதிகளோ வைத்தியசாலை வசதிகளோ போதிய அளவில் இல்லை என்று தேசிய செயலணியின் தலைவர் மேஐர் ஜனரல் சவேந்திர சில்வா கூறுகின்றார். குறிப்பாக இத்தகைய சூழ்நிலையில் வைத்தியர்களின் அர்ப்பணிப்பை பராட்டவேண்டிய அவ்வேளை அவர்களின் பலம் இராணுவ அதிகாரிகளினால் பலவீனப்படுத்தப்பட்டுள்ளது. இதன்மட்டில் அவர்கள் தமது இயலாமையை வெளிக்கொணர்ந்துள்ளனர். நோய்க்கான மருந்து கண்டு பிடிக்கப்பட்டுள்ளது என அவுஸ்ரேலியா இஸ்ரேல் ரஸ்யா சீனா
முதலிய நாடுகள் கூறிய போதிலும் அம்மருந்து மனித உடலில் ஏனைய தாக்கங்களை ஏற்படுத்த வல்லது என உலக சுகாதார ஸ்தாபனம் தமது அறிக்கைகளில் ஆங்காங்கே குறிப்பிட்டுள்ளது. மேலும் உலக சுகாதார ஸ்தாபனம் சரியாக தமது கடமையை செய்யவில்லை என்றும் அவர்கள் சீனாவின் பக்கத்தை சார்ந்து செயற்பட்டதன் விளைவாகவே ஐக்கிய அமெரிக்காவில் இரண்டு இலட்சத்தி முப்பத்தி ஐயாயிரத்திற்கு மேற்பட்ட உயிரிழப்புக்கள் ஏற்பட்டுள்ளன என அமெரிக்க ஐனாதிபதி தனது பகிரங்க அறிக்கையில் குறிப்பிடுகின்றார். மேலும் இத்தகைய நிலை நீடிக்குமெனில் வருகின்ற வருடத்தில் 150மில்லியனுக்கு மேற்பட்ட மக்கள் பட்டினிச் சாவினை எதிர்கொள்வார்கள் என உலக சுகாதார ஸ்தாபனம் எச்சரிக்கின்றது. மேலும் ஏற்றுமதி இறக்குமதிகள் தடைப்படுவதினால் உள்ளாட்டு வெளிநாட்டு வியாபாரங்கள் ஸ்தம்பித நிலையை அடைந்துள்ளது. இதனால் வெளிநாட்டு கடன் வீதம் அதிகரித்துக் கொண்டு செல்கின்றது. நாணயமாற்று வீதமும் அதிகரித்துக் கொண்டு செல்கின்றது. இத்தகைய நிலை பொருளாதார
ஏற்றத் தாழ்வை தோற்றுவிப்பதோடு மட்டுமன்றி சமூகத்தில் சமூக நலன்புரி சேவைகளை பெறுபவர்கள் வாழ்விலும் பலத்த தாக்கத்தை ஏற்படுத்தி மக்களை பலவந்த வறுமைக்குள்ளும் பட்டினிச்சாவிற்குள்ளும் தள்ளுகின்றது. இப்பேர்ப்பட்ட சமூக பொருளாதார கலாசார முடக்கல் நிலைகள் சமூகத்தையும் பொருளாதாரத்தையும் அங்கவீனத்தன்மைக்குள் வழிநடத்தி உள்ளன.
இத்தகைய நிலையில் மானிட சமூகம் இறைவனின் தலையீட்டை விரும்பி நிற்கின்றது. இதனால் வைரசின் வருகையுடன் இறைவனின் இரண்டாம் வருகை நெருங்கி விட்டது என்ற சமய குரல்கள் பலமாக ஒலித்துக் கொண்டிருக்கின்றன.

இயேசுவின் வருகை
எல்லா சமயங்களும் இறைவருகையைப் பற்றி தமது நூல்களில் குறிப்பிட்டுள்ளனர். இந்து சமயத்தில் கல்கியின் அவதாரம் பௌத்த சமயத்தில் மைத்திரிய புத்தாவின் வருகை இஸ்லாம்சமயத்தில் அல்லாவின் நியாயத் தீர்ப்பு கிறிஸ்தவ சமயத்தில் இயேசுவின் இரண்டாம் வருகை போன்ற கருத்துக்களை நாம் காணலாம். குறிப்பாக ஆண்டவர் இயேசுவின் இரண்டாம் வருகையைப் பற்றி நாம் நற்செய்திகளிலும் பார்க்க பவுலின் நிரூபங்களில் அதிகமாக படித்தறிகின்றோம். பரிசுத்த பவுல் இதனைப் பற்றி பேசும் போது இயேசுவின் வருகையுடன் நியாயத்தீர்ப்பு உயிர்த்தெழுதல் ஆகியவைகளும் இடம்பெறும் என குறிப்பிடுகின்றார்.
இவைகள் அனைத்தும் இறுதியியல் சார்ந்த நிகழ்வுகளாகவே அவர் கருதுகின்றார்.

இயற்கை அழிவுகளும் இறைபராமரிப்பும்
நாம் திருமறையைப் படித்து பார்க்கும் போது திருமறையில் கொள்ளை நோய்கள் இறைவன் மக்களை அழிக்கும் ஊடகங்களாக காட்டப்பட்டுள்ளன. குறிப்பாக இஸ்ரவேல் மக்களை பாதுகாக்கும் வகையிலும் எகிப்தியரை அழிக்கும் வகையிலும் கொப்பளங்கள் கொள்ளை நோய்கள் பயன்படுத்தப்பட்டன.
விடுதலைப் பயணம் 9:9. இந்நிகழ்வு இஸ்ரவேல் மக்களின் அடிமைத்தன விடுதலையுடன் தொடர்புபட்டதாகும். ஆனால் மறுகரையில் இறைவன் இவ்வியற்கை அழிவுகளில் இருந்து மக்களை பாதுகாக்கும் ஓர் மீட்பராகவே திருமறையில் காட்டப்படுகின்றார். குறிப்பாக தொடக்கநூல் 9ம் அதிகாரத்தில் ‘நான் இனி பூமியை ஐலத்தினால் அழிக்க மாட்டேன்’ என ஆண்டவர்
குறிப்பிட்டு அதற்காக வானவில்லை ஓர் அடையாளமாக காட்டுகின்றார். மேலும் திருப்பாடல் 91:10 இல் ‘வாதை உன் கூடாரத்தை அணுகாது..’ என நம்பிக்கையின் வார்த்தையை பேசுகின்றார்.
குறிப்பாக மாற்கு 4:35-41ல் இயேசுவின் சீடர்கள் கடலின் கொந்தளிப்புக்கு பயந்து தம் உயிரை குறித்து அச்சமுற்ற வேளையில் இயற்கையின் சீற்றத்தை ஆண்டவர் அடக்குவதை நாம்
பார்க்கின்றோம். இவ்வாறு இயற்கை அழிவுகளில் இருந்து இறைவன் எம்மை பாதுகாப்பவராகவே காட்டப்படுகின்றார். மாறாக எமக்கு தண்டனை அழிப்பவராக அல்ல. இதனை நாங்கள் கருத்திற்
கொள்ள வேண்டும்.

இயற்கை அழிவுகளும் இறைவனின் வருகையும்
திருமறையில் இறைவனின் வருகை அழிவுகளுடன் தொடர்புபடுத்தப்படுகின்றது. மத்தேயு 24ம் அதிகாரத்தை படித்து பார்க்கும் போது இயற்கையில் நடைபெறுகின்ற அழிவுகளுக்கும் கடவுளின் வருகைக்கும் இடையே தொடர்புகள் காணப்படுகின்றன. இந்நிகழ்வுகள் அனைத்தும் மறைபொருள் வெளிப்பாட்டு இலக்கியத்தை சார்ந்தவையாக காணப்படுகின்றன. அத்தோடு கிறிஸ்துவுக்கு பின் எருசலேம் ஆலய அழிவிற்கு முன்பதாக நடைபெற்ற நிகழ்வுகளை ஆசிரியர் மறுபடியும் மீள கொண்டு வருகின்றார். இவற்றை நாம் தெளிவாக அங்கு காணலாம். எனினும் இன்றைய விசுவாசிகள் இப்பகுதிகளை மையமாக கொண்டு இறைவனின் வார்த்தை நிறைவேறுகின்ற காலம் நெருங்கி விட்டது
எனக்கூறி இறைவனின் வருகையை நாட்குறித்து எதிர்பார்த்து இருப்பதை நாம் காணலாம். இப்பேர்ப்பட்ட நிகழ்வுகள் வரலாற்றில் முதன்முறையாக நடந்தது அல்ல மாறாக 2ம் நூற்றாண்டில் வாழ்ந்த மொண்டேனியஸ் என்பவர் தன் திருச்சபை மக்களை பிற்பூசா என்னும்
மலைக்கு அழைத்து சென்று இயேசுவின் வருகைக்கான நாளை குறிப்பிட்டு இருந்தார். ஆனால் ஆண்டவர் இயேசு வரவில்லை. இதனால் அவமானம் தாங்க முடியாத மக்கள் மலையில் இருந்து குதித்து
தற்கொலை செய்து கொண்டனர். மேலும் 2013ம் ஆண்டு ஆண்டவரின் வருகை நடைபெறப் போகின்றது என மக்கள் காத்திருந்தனர். குறிப்பாக மார்கழி மாதம் 12ம் திகதி இது நடைபெறும் என எதிர்பார்த்தனர். ஆனால் நடைபெறாத பட்சத்தில் இவர்கள் தங்கள் பற்றுறுதிகளை கைவிட்டு சோர்வடைந்த உதாரணங்களை நாம் நடைமுறை வாழ்வில் இருந்து அவதானிக்கலாம். உண்மையிலே ஆண்டவரின் வார்த்தைகள் நிறைவேறலாம். ஆனால் நான் ஆண்டவருடைய வார்த்தையை நிறைவேற்றுகின்றேனா என்ற வினாவை எனக்குள்ளே இத்தகைய சூழலில் எழுப்பிக்கொள்ள
வேண்டும். இறைவருகை அல்லது ஆண்டவரின் நாள் என்பது இலகுவானதொன்றல்ல மாறாக அது பயங்கரமானது.
தங்களை புனிதர்களென்று எதிர்பார்க்கும் மக்களுக்கு அந்நாள் துக்க நாளாக மாற உள்ளது. எனவே தான் ஆமோஸ் இறைவாக்கினர் அந்நாளை உவமிக்கும் போது சிங்கத்தில் இருந்து தப்பியவரை பாம்பு கடித்ததை போன்று எனக்கூறுகின்றார். மறு கரையில் ஆண்டவர் இயேசு அந்நாளில் பிள்ளை பெறாத தாய்யும் பாலூட்டாத முலைகளும் பாக்கியமுள்ளன என்கின்றார். இப்பேர்ப்பட்ட நாளின் கடுமைத்தன்மையை எம்மால் உணர்ந்து கொள்ள முடியும். ஆனால்
இப்பேர்ப்பட்ட இறை வருகை இலகுவிலே விரைவாக நடைபெற வேண்டும் என எதிர்பார்ப்பவர்கள் ஏழைகளே. ஏனெனில் இவ்வவுலகில் காணப்படும் பொருளாதார சமூக கலாசார ஒடுக்கு
முறைகளினால் துன்பப்பட்டுக் கொண்டிருக்கும் மக்கள் தங்களுக்கான விடிவு இந்த நாளின் ஊடாக வரும் என்றால் அதனால் திருப்திப்படுவார்கள்.ஆண்டவர் இயேசுவை இவ்வுலகிற்கு அனுப்பிய இறைவன் அவர் மூலம் தனது திட்டத்தை நிறைவேற்றி
முடித்துள்ளார். மேலும் அவரது திட்டத்தை தொடர்ந்தாற்றுவதற்காக எம்மை தெரிந்தெடுத்துள்ளார். எம்மை தான் படைத்துள்ள உலகின் உக்கிராணக்காரராக வைத்து பாரிய பொறுப்பையும் தந்துள்ளார்.
இதன் மட்டில் நாம் எமது கடமையை நிறைவேற்றியுள்ளோமா? இன்று முழு உலகமும் என்னுடைய தவறினால் அழுது கொண்டிருக்கின்றன (ரோமர் 8:22). எனவே இறை வருகையைப் பற்றி பேசிக்

கொள்கின்ற நாங்கள் என்னுடைய பொறுப்பை நான் நிறைவேற்றி உள்ளேனா? என சிந்திப்பது மிக அவசியம். மாறாக இறை வருகையை குறித்து ஆய்வுகளை நடத்தி கொள்வதை நிறுத்த வேண்டும். ஏனெனில் அத்தினத்தை பிதாவானவர் ஒருவரே அறிவார் (மாற்கு 13:32).
இயேசுவின் முதலாவது வருகையை குறித்து மத வல்லுனர்கள் பல ஆய்வுகளை மேற்கொண்டிருந்தனர். அவர்களுக்கு உதவியாக நீதி சட்டத்தை பயன்படுத்திக் கொண்டனர். ஆனால் இயேசு பிறந்த போது
அவர்கள் கைவிடப்பட்டனர். மாறாக கிழக்கில் இருந்து வருகை தந்த ஞானிகள் இன்பத்தை அனுபவித்தனர் (மத்தேயு 2:1-12). இதைப் போன்ற நிலை இன்று இதைக்குறித்து ஆய்வு செய்யும் தினத்தை
குறிக்கும் மக்களுக்கு ஏற்படக்கூடுமா? என்ற வினாவை நாம் எழுப்ப வேண்டும். இயேசுவின் வருகையா உடன் இருக்கும் இயேசுவா?
ஆண்டவர் இயேசு தனது பணியின் நிறைவில் விண்ணகத்திற்கு எடுத்துக் கொள்ளப்பட்டதை லூக்கா நற்செய்தியாளர் தனது நூலிலும் திருத்தூதுவர் பணியிலும் குறிப்பிடுகின்றார்.

திருத்தூதர் பணிகள் 1:10ல் ஆண்டவர் இயேசு எவ்வாறு விண்ணுக்கு எடுத்து செல்லப்பட்டாரோ அவ்வண்ணமாக மறுபடியும் வருவார் என்ற தேவ தூதர்களின் வாக்கு இன்று வரை எம் மத்தியில் இறைவாக்காக காணப்படுகின்றது. ஆனால் திருமறையில் அதிகளவு இறைவாக்குகள் காணப்படும் போது நாம் ஏன் இந்த இறைவாக்கை அதிகம் முக்கியத்துவப்படுத்துகின்றோம்?. குறிப்பாக ஏனோக்கு
எலியா போன்றவர்கள் விண்ணகத்திற்கு எடுத்து கொள்ளப்பட்டதாக திருமறை கூறுகின்ற போது இயேசுவின் தாயாராகிய மரியாளும் விண்ணேற்றம் அடைந்தார் என்பதை குரான் கூறி
நிற்கின்றது. ஆனால் மத்தேயு நற்செய்தியாளர் தனது நற்செய்தியில் ஆண்டவர் இயேசுவின் விண்ணேற்றத்தை பற்றி எதுவும் கூறவில்லை. மாறாக உடனிருக்கும் இயேசுவின் இருப்பு நிலையை
பற்றியே பேசுகின்றார். இதனை மத்தேயு 28:19-20ல் நாம் பார்க்கலாம். அதாவது அவர் எடுத்துக் கொள்ளப்பட்டவராக அல்ல மாறாக எம்முடன் உடன் இருப்பவராகவே காட்டப்படுகின்றார்.
இது இன்றும் நம்பிக்கை தரும் ஒர் வார்த்தை ஆகும். கொரோனா வைரசினால் நாம் தாக்கப்படலாம். இந்நிலை தீர்க்கதரிசனத்தின் நிறைவாக இயேசுவின் வருகையுடன் தொடர்புபடுத்தப்படுவதை விட அந்த இயேசு எம்முடன் இருக்கிறார் என்ற செய்தி அர்த்தம்
நிறைந்த ஒன்றாகும். இதுவே மனுமகனின் பணியுமாகும்.

யோவான் 1:14ல் ‘அந்த வார்த்தை மாம்சமாகி கிருபையினாலும் சத்தியத்தினாலும் நிறைந்தவராகி நமக்குள்ளே வாசம் பண்ணுகின்றார். அவருடைய மகிமையை நாம் கண்டோம்’
என்கிறார். எனவே இங்கே ஆண்டவர் இயேசு எமது அரசியல் பொருளாதார சமூக கலாசார கலை பின்னணிகளில் மனுவுரு எடுத்துள்ளார். அதாவது இவைகள் எல்லாவற்றிலும் அவர் ஒரு
பகுதியாக மாறியுள்ளார். எனவே தொலைவில் இருந்து எம்முடன் தொடர்பு கொள்ளும் ஆண்டவரை அல்ல மாறாக அனைத்து அலகுகளிலும் எம்முடன் இருக்கும் ஆண்டவரையே நாம்
அநுபவிக்கின்றோம். எனவே இத்தகைய அநுபவ நிலையே எங்கள் வாழ்வின் பலம். எனவே அதனை குறித்து நாம் அகமகிழ வேண்டிய நம்பிக்கை எம்மில் காணப்படுகின்றது. வருகையை நான் ஏன் எதிர்பார்த்து காத்திருக்கின்றேன். ஆண்டவர் இயேசுவின் வருகையை பற்றி நாம் பேசிக் கொள்கின்ற இத்தகைய காலங்களில் இந்த
வருகையை நான் ஏன் எதிர்பார்த்து காத்திருக்கின்றேன்? என்ற கேள்வியை நாம் எமக்குள்ளே எழுப்ப வேண்டும். ஒரு சிலர் வருகையில் தாம் எடுத்துக் கொள்ளப்பட வேண்டும் என்றும் பிறர் கைவிடப்பட வேண்டும் என்ற மனநிலையுடன் இதனை எதிர்பார்க்கின்றார்கள். இது ஓர் சுயநலம் சார்ந்த ஒன்றாகும். மேலும் ஒரு சிலர் வேதாகமத்தில் கூறப்பட்ட வார்த்தைகள் நிறைவேறுவதன் ஊடாக இயேசுவே உண்மையான கடவுள் என்றும் கிறிஸ்தவமே உண்மையான சமயம் என்றும் மார்பில் தட்டிக் கொள்வதற்காக வருகையை எதிர்பார்த்து நிற்கின்றனர். இன்னும் ஒரு சிலர் இந்த வருகையின் போது உலகின் இறுதி நிலை ஏற்படுவதால் இவ்வுலக துன்பங்களில் இருந்து விடுதலை
பெற முடியும் என எதிர்பார்த்து காத்திருக்கின்றனர். ஆனால் அதிகார வர்க்கத்தினரோ பலமுள்ளவர்களோ இந்த வருகையை குறித்து அச்சம் கொள்கின்றனர். ஏனெனில் இன்னும் சுரண்டுவதற்கான காலம் அருகில் இருக்கின்றதோ என்று எண்ணுகின்றனர். சேமித்து வைத்தவைகளை
எவ்வாறு அனுபவிப்பது என்ற அச்சம் அவர்களுக்குள்ளே தோன்றுகின்றது. எனவே இப்பேர்ப்பட்ட உலகியல் சிந்தனைகளுடனேயே இவ்வருகையை குறித்து சிந்திக்கின்றோமே ஒழிய இதன் உண்மையான அர்த்தத்தை இன்னும் நாம் உணரவில்லை.

முடிவுரை
உலகில் காலத்திற்கு காலம் பல அனர்த்தங்கள் தோன்றும் போது அவைகள் அனைத்தும் வருகையுடன் தொடர்பு படுத்தப்படுகின்றன. ஆனால் இந்த வருகைக்கு முகம் கொடுக்க தனிப்பட்ட சமூக சமய
ஆயத்தங்கள் எவ்வாறு காணப்படுகின்றன. தேவ பயம் நியாயத்தீர்ப்பை குறித்த பயம் இரண்டாம் வருகையை குறித்த பயம் எங்கள் மத்தியில் இருக்கும் பட்சத்தில் இவைகள் எந்தளவிற்கு எமது
நாளாந்த செயற்பாடுகளில் தாக்கத்தை ஏற்படுத்தி உள்ளன. இதனொளியில் ஆண்டவர் வருவாரேயெனில் அது என் வாழ்வில் உண்டாக்கக் கூடிய யதார்த்த தன்மையிலான தாக்கத்தை குறித்து
சிந்திப்போமாக. மேலும் இயேசுவின் வருகையை குறித்து நாம் தர்க்கித்து எமக்கிடையே பிளவுகளை ஏற்படுத்தாதபடி பார்த்துக் கொள்வோமாக.

<sub>அருட்பணி. அருளம்பலம் ஸ்டீபன்,</sub>
அருட்பணி. அருளம்பலம் ஸ்டீபன்,

இலங்கை