வசந்தகாலப் பூக்கள் 10

பத்தாம் தியானம்

சுயநீதி தவறை உணர்த்துவதற்கான தடையாகும்

              எமது வாழ்வில் நாம் தவறுகளை பல சந்தர்ப்பங்களில் உணர்வதில்லை. அதற்கு பிரதான காரணமாக சுயநீதி காணப்படுகின்றது. விடுதலைப் பயணம் அல்லது யாத்திராகமம் 5:2-3 வசனங்களில் பார்வோன் இஸ்ரவேல் மக்களை வனாந்திரத்தில் வழிபாடு நடாத்துவதற்கு போகவிடமாட்டேன் எனக் கூறினான். மேலும், இஸ்ரவேல் மக்களை நோக்கி, யார் இந்த ஆண்டவர் எனக் கேள்வி கேட்டான். பொதுவாக, எகிப்து நகரில் அரசனையே ஆண்டவராக கருதினர். இத்தகைய சூழ்நிலையில் அவனுடைய சுயநீதி அவனையே ஆண்டவராக்கியது. இதனால், அவன் ஆண்டவரின் வார்த்தைகளுக்கு செவிசாய்க்க விரும்பவில்லை.

லூக்கா 15:28-32 வரையுள்ள பகுதியில் மூத்த மகன் தன்னுடைய சுயநீதியிலே நிலைத்திருந்தபடியால் இளைய சகோதரனை ஏற்றுக்கொள்ள முடியவில்லை. இதனால், அவன் தன்னுடைய தந்தையையும் இளைய சகோதரனையும் நியாயம் தீர்க்கிறான். தந்தையை நோக்கி, நான் இவ்வளவு காலமும் உம்மோடு இருந்தும் ஓர் பண்டிகையை எனக்காக ஏற்படுத்தவில்லை. ஆனால், விலைமாதுகளின் மத்தியில் தனது சொத்துக்களை வீண் விரயம் செய்த இவனுக்கு ஓர் பண்டிகையை ஏற்படுத்துகின்றீரே என குற்றம் சுமத்தினான். இதற்கு இவனில் காணப்பட்ட சுயநீதியே காரணமாகின்றது.

	நாம் சுயநீதியை மையப்படுத்தி வாழும்போது எமது தவறினை நாம் உணராமல் பிறரை குற்றப்படுத்துகின்றோம். இதனால், இறைவார்த்தைக்கு நாம் கீழ்ப்படியாமல் விழுந்து போகின்றோம்.

செபம்: இறைவா என் சுயநீதியை நான் நம்பாமல் எனக்குள்ளே தாழ்மையான இதயத்தை உருவாக்கியருளும். அதன்மூலம் உம்மையும் மற்றவர்களையும் நியாயந்தீர்க்கும் மனநிலையை என்னிலிருந்து அகற்றி அருளும். ஆமென்.