வசந்தகாலப் பூக்கள் 14

பதினான்காம் தியானம்

உபவாசம் விடுதலையுடன் மிக நெருக்கமாகக் காணப்படுகின்றது. இவ்விடுதலையை தனி மனித விடுதலை, சமூக விடுதலை என நாம் பாகுபடுத்தலாம். மாற்கு 9:29 இல் ஆண்டவர் இயேசு மறுரூப மலையிலிருந்து இறங்கி வந்தவுடன் மலையின் அடிவாரத்தில் ஓர் தந்தை பேய் பிடித்த தனது மகனைக் குணப்படுத்துமாறு சீடர்களிடம் வேண்டினார். ஆனால் அவர்களுக்கு இயலாமல் போகவே இயேசுவின் இடத்தில் கொண்டு வந்தார்கள். இயேசு அவர்களை நோக்கி இப்படியான பேய் செபத்தினாலும் உபவாசத்தினாலும் மாத்திரம் அகன்று போகும் எனக் கூறி அம்மகனைக் குணமாக்கினார்.

அன்றுபோல் இன்று பேய் பிடித்த பலர் குணமாக்கப்படுவதை நாம் கண்டுள்ளோம். ஆனால் தனி மனித விடுதலையை விட இன்று சமூக விடுதலையே அதிகளவில் மக்கள் எதிர்பார்க்கின்றனர். குறிப்பாக சாதிப்பேய், சீதனப்பேய், மதப்பேய், பிரதேச வாதப் பேய், ஆணாதிக்கப்பேய் போன்ற பல பேய்கள் இன்று சமூகத்தில் காணப்படுகின்றன. இவைகளை யாரும் துரத்துவதில்லை. இவைகள் நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே செல்கின்றன. இவைகளிலிருந்து மக்கள் விடுதலையை எதி;ர்பார்க்கின்றனர். எனவே இந்த உபவாச நாட்களில் இப்படியான சமூகப் பேய்கள் எம்மை விட்டு அகன்று போக நாம் இறைவனிடம் பிரார்த்திப்பதோடு அதற்காக செயற்படவும் அழைக்கப்படுகின்றோம்.

இன்றைய சமூகத்தில் தலித் என்ற உடைக்கப்பட்ட மக்கள் பல்வேறு ரீதியில் சாதியம் என்ற பெயரில் மக்களால் ஒடுக்கப்படுகின்றனர். இவர்களுக்காகவும் இவர்களின் உரிமைகள் பாதுகாக்கப்பட்டு இவர்களும் கடவுளின் சாயலில் படைக்கப்பட்டவர்கள் என்பதை நாம் உணர்ந்து செயற்பட முற்படுவோமாக.

செபம்: இறைவா இவ்வுபவாச நாட்களில் சமூகத்தில் தாண்டவமாடும் சமூகப் பேய்களை அகற்றுவதற்கு எனக்கு அருள் புரிவாயாக. ஆமென்.