ஒடுக்கும் அமைப்புக்களை மாற்றமடையச் செய்தல்

27 மார்ச் 2022

லூக்கா 13:10-17

• பழைய உடன்படிக்கையில் நாகூம் என்ற சிறிய இறைவாக்கினர் இஸ்ராயேலரை ஒடுக்குகின்ற அரசியல் அமைப்பாகிய அசீரியா என்ற நாட்டில் ஒடுக்குமுறைகளிலிருந்து கடவுள் அவர்களை மீட்டு அவர்களுக்கு நீதி செய்ய வேண்டுமென்று கூறுகின்றார். இதனூடாக, கடவுள் எல்லா ஒடுக்குமுறை சக்திகளையும் சவாலிட்டு மாற்றமடைய செய்கின்றார்.

திருப்பாடல் 113:7,8ல் எளியவனைக் குப்பையிலிருந்தும் தூசியிலிருந்தும் தூக்கி எடுத்து அவர்களை உயர்த்துகிறார் எனக் கூறுகின்றார். இதனையே, லூக்கா 1:46-55ல் மரியாள் தனது பகுதியில் உள்ள மரியாளின் கீதத்தில் ஆண்டவராகிய இயேசு அரசியல் புரட்சி, சமூக புரட்சி, சமயப் புரட்சி போன்றவற்றை ஏற்படுத்துகின்றார். இதனூடாக, அவர் பலவான்களை ஆசனங்களிலிருந்து தள்ளி தாழ்மையானவர்களை உயர்த்துகின்றார். பசியுள்ளவர்களை நன்மையினால் நிரப்பி ஐசுவரியவான்களை வெறுமையாய் அனுப்பிவிட்டார்.

• திருத்தூதர்பணிகள் 4:32 வரையுள்ள பகுதியில் ஒடுக்குமுறை கலாசாரத்திற்கு எதிரான விடுதலைக் கலாசாரம் முன்வைக்கப்படுகின்றது. சுயநல கலாசாரத்திற்கு எதிராக பொது உடமைவாதம் முன்வைக்கப்படுகின்றது. என்னப் பொருளை எப்படி யாருக்கு உற்பத்தி செய்தல் என்ற அடிப்படை பிரச்சினைகள் அனைத்தும் சேவை நோக்கத்தினூடாக தீர்வு முன்வைக்கப்படுகின்றது. மேலும், இன்றைய நுகர்வு கலாசாரத்திற்கு தக்க பதில்களைக் கொடுக்கும் ஒரு பரிமாற்று கலாசாரம் ஆதித் திருச்சபையினால் முன்வைக்கப்படுகின்றது. இயேசுவின் இரண்டாம் வருகை அண்மையில் இருக்கின்றது என திருச்சபை உணர்ந்தபடியால் இத்தகைய மாதிரிக்குள் தன்னை ஈடுபடுத்திக் கொண்டது. ஆனால், காலம் செல்ல செல்ல வருகை தாமதப்பட்டதால் ஆதித்திருச்சபை இந்த மாதிரியிலிருந்து நழுவிச் சென்றது.

• நற்செய்தி பகுதியில் லூக்கா 13:10-17ல் ஆண்டவர் இயேசு கூன் விழுந்த பெண்மணியை எழுந்து நிமிரச் செய்கின்றார். இங்கே, இப்பெண்மணி பொருளாதார சுமைகள், சமூக, கலை, கலாசார சுமைகள், சமய சுமைகள், அரசியல் சுமைகள் போன்ற சுமைகளால் கூன் விழுந்து காணப்படுகின்றார்;. சிறப்பாக, யூத ரபீ ஒவ்வொரு நாள் காலை வேளைகளிலும் ஆண்டவர் நீர் என்னை நாயாகவும் பெண்ணாகவும் படைக்காதபடியால் உமக்கு நன்றி எனக் கூறுகின்றார். இப்படிப்பட்ட ஆணாதிக்க சிந்தனைகளால் இப்பெண் கூன் விழுந்து காணப்படுகின்றார். இப்படிப்பட்ட நிலையிலிருந்து இயேசு இப்பெண்ணை விடுதலை செய்கின்றார். அதாவது, சமூகப் பிசாசுகளிலிருந்து அல்லது கட்டுகளிலிருந்து இயேசு விடுதலைக் கொடுக்கின்றார். எனவேதான், லூக்கா நற்செய்தியில் மாத்திரம் இப்பெண் ஆபிரகாமின் குமாரத்தி என அழைக்கப்படுகின்றார். மேலும், ஆபிரகாமின் குமாரர் என இந்நற்செய்தியில் சகேயு, லாசரு போன்றவர்கள் தொடர்புபடுத்தப்படுகிறார்கள்.

இன்றைய சமுதாயத்தில் நிலவும் பல்வேறு கட்டுக்களிலிருந்து விடுதலை செய்யும் விடுதலையாளர்களாக கடவுள் எம்மை அழைக்கின்றார். குறிப்பாக, அங்கவீனத்தன்மையுள்ள மக்களை கட்டி வைத்துள்ள பழமொழிகளாகிய ‘’கண்கெட்ட பின்னர் சூரிய நமஸ்காரம் செய்வதா’’, ‘’செவிடன் காதில் ஊதிய சங்கு’’ அங்கவீனர்களை தாழ்த்தி மதிப்படுகின்ற சொல்லாடல்கள் போன்றவைகளிலிருந்து மக்களை விடுதலை செய்ய வேண்டும். அத்துடன், இன்று ஆலயங்களில் பாடப்படுகின்ற பாடல்கள் மேலைத்தேய இறையியலாலும் இசைக்கருவிகளினாலும் சிறைப்பிடிக்கப்பட்டுள்ளன. எனவே, இவற்றுக்கும் நாம் விடுதலைக் கொடுக்க வேண்டும்.

Rev Arulampalam Stephen

Painting by Revd Jebasingh Samuvel, Srilanka.

அருட்பணி.அருளம்பலம்  ஸ்டீபன்