3 ஏப்ரல் 2022

மாற்கு 10:46-52

The Cross and the Discipleship

சீடத்துவம் என்ற வார்த்தை பொதுவாக லெந்துகாலத்தில் நாம் தியானிக்கும் ஒரு கருப்பொருள் ஆகும். இச்சீடத்துவம் கிறிஸ்துவைப் பின்பற்றுவதனூடாக ஏற்படுகின்றது. சிறப்பாக, இதற்கான பல மார்க்கங்கள் காண்பிக்கப்படுகின்றனமத்தேயு 28:19,20ல் திருமுழுக்கின் ஊடாக வரும் சீடத்துவத்தைப் பற்றி நாம் பார்க்கின்றோம். ஆனால், யோவான் 13:34,35ல் அன்பின் அடித்தளத்தினூடாக எழுகின்ற சீடத்துவத்தைக் காண்கின்றோம். மேலும், நற்செய்திக்காக நாம் அனுபவிக்கும் துன்பம் சீடத்துவத்திற்கான கிரயமாகும். இதுவே, சிலுவை உணர்த்தும் புதிய பரதீசு.

• முதலாம் உடன்படிக்கை வாசகத்தின் அடித்தளத்தில் ஆதியாகமம் / தொடக்கநூல் 26:12-33ல் ஈசாக்கு நன்மை செய்து துன்பம் அனுபவிக்கின்றார். அதாவது, மற்றவர்களின் நல்வாழ்வுக்காக அவன் துன்பத்தை தெரிந்தெடுத்தார். இதுவே, ஆண்டவர் இயேசுவுக்கான முன்மாதிரியான நிழலாட்டம் ஆகும். தாவீது தனது திருப்பாடலில் துன்பச் சூழலிலும் கடவுளுக்கு துதிப்பாடல் பாடுமாறு அழைக்கின்றார். அதாவது, துன்பச் சூழலில் நாம் இறைவனையும் மற்றவர்களையும் குற்றம் சுமத்துவதைத் தவிர்த்து புகழ்பாடுவது புதிய மாதிரியாகும்.

புதிய உடன்படிக்கை பாடத்தின்படி 2 கொரிந்தியர் 11:21-31ல் பவுல் ஊழியத்தில் தான் அனுபவித்த அனைத்து துன்பங்களையும் துன்பங்களின் வகைகளையும் பட்டியலிட்டுக் காண்பிக்கின்றார். எனினும், கிறிஸ்துவின் பொருட்டு இவைகள் அனைத்தையும் லாபமாகக் கருதுகிறேன் என்கிறார் (பிலிப்பியர் 3:5-7). மேலும், இவைகள் அனைத்தும் கிறிஸ்துவின் அன்பைவிட்டு தன்னை பிரிக்காது என்கிறார் (ரோமர் 8:32-39). இவைகளே, சீடத்துவத்திற்கான பரிசாகவும் சீடத்துவத்தை பலபடுத்துபவைகளாகவும் காணப்படுகின்றன.

• நற்செய்தி பகுதியில் மாற்கு 10:46-52 என்ற பகுதியில் பர்திமேயு என்ற பார்வையற்ற மனிதன் இயேசுவால் குணப்படுத்தப்படுகின்றார். இது வெறுமனே ஓர் புதுமையல்ல. மாறாக, ஆலயத்திற்குள் செல்லுவதற்கான ஓர் அங்கீகார செயற்பாடாகும். 2 சாமுவேல் 5ம் அதிகாரத்தில் தாவீது எபூசியர் என்ற இனத்தோடு போர் செய்ய வேண்டிய சூழல் ஏற்பட்டபோது எபூசியர்கள் தாவீதை நோக்கி, “எங்கள் தேசத்திலுள்ள வலியவர்கள் உன்னை வெற்றி கொள்வார்கள். அந்தளவிற்கு நீ திறமை குன்றியவன்” என கிண்டல் செய்தனர். இதனால், ஆத்திரமுற்ற தாவீது போரில் வெற்றிப் பெற்ற பின்னர், அங்கவீனத்தன்மையுள்ள மக்களை ஆலயத்திற்குள் நுழைவதிலிருந்து தடுத்துவிட்டார். எனவே, தாவீதினால் எமக்கு அனுமதி மறுக்கப்பட்டுவிட்டது. எனினும், தாவீதின் பரம்பரையில் இருந்து ஒருவர் வருவார். அவர் மறுபடியும் ஆலயத்திற்குள் செல்வதற்கு அனுமதி அளிப்பார் என மக்கள் காத்திருந்தனர். எனவே தான், இயேசு வருகிறார் என கேள்விபட்டவுடன் பர்த்திமேயு, “தாவீதின் குமாரனே எனக்கு இரங்கும்” எனக் கதறுகிறார். இயேசு அவனைக் குணப்படுத்தியதன் ஊடாக, ஆலயத்திற்குள் செல்லும் அங்கீகாரத்தையும் அவனுக்கு கொடுக்கின்றார்.

• அங்கவீனத்தன்மையுள்ள மக்கள் பார்வையிலிருந்து இப்பகுதியை கவனமாக உற்று நோக்கினால் இயேசு அவரை சுகப்படுத்திய பின்னரே தன்னை பின்பற்றுவதற்கு அனுமதி கொடுக்கின்றார். ஆனால், ஒரு சிலருக்கு இவ்வனுமதி மறுக்கப்படுகின்றது (மாற்கு 5:19). இயேசு அவனுக்கு சுகத்தை வழங்காமல் சீடராக அவரை ஏற்றுக் கொண்டிருந்தால், இன்று அங்கவீனத்தன்மையுள்ள மக்கள் திருப்பணியில் இணைவதற்கு இலகுவாக இருந்திருக்கும். எனினும், இயேசுவின் இச்செயற்பாட்டினூடாக சீடத்துவம் அனைவருக்குமுரியது என்ற கருத்து வலியுறுத்தப்படுகின்றது.

• பொதுவாக துன்பம் எதிர்மறையாக பேசப்படுகின்றது. ஆனால், அது நேர்மறைத் தன்மையுள்ளது என்பதற்கு இயேசுவின் பாடுகள், மரணம், உயிர்த்தெழுதல் ஒரு சான்றாகும்.

அருட்பணி அருளம்பலம் ஸ்டீபன்
அருட்பணி அருளம்பலம் ஸ்டீபன்

இலங்கை.