வசந்தகாலப் பூக்கள் 11

பதினோறாவது தியானம்

              லெந்து நாட்களில் மனந்திரும்புதலையடுத்து உபவாசம் முக்கிய இடத்தை வகிக்கின்றது. ஒரு சிலர் நாற்பது நாட்களும் பாலும் பழமும் அருந்தி உணவைத் தவிர்ப்பர். வேறுசிலர், ஒருநாளைக்கு ஒருமுறை மாத்திரம் உணவை அருந்துவர். வேறுசிலர், மாம்ச உணவுகளை இந்நாட்களில் தவிர்த்துக் கொள்வர். இப்படியாக, பலவகையான பழக்கவழக்கங்கள் எம்மிடையே காணப்படுகின்றது. இவைகள் சீர்த்திருத்தவாதியான சூரிக் சுவிங்கிலி என்பவரின் காலத்திலிருந்து உருவாக்கப்பட்டவைகளாகும்.

              பொதுவாக எமது வாழ்வில் நாம் பல வகையான காரணங்களுக்காக உணவைத் தவிர்க்கிறோம். குறிப்பாக, நீரிழிவு நோயாளர்கள் இரத்தப் பரிசோதனை செய்வதற்காக உணவைத் தவிர்க்கின்றனர். மேலும், உடற்பருமனைக் குறைப்பதற்காக, வேறுசிலர் உபவாசம் இருக்கின்றனர். ஆனால், வேறுசிலரோ உபவாசம் இருக்கத் தள்ளப்படுகின்றனர். ஏனெனில், அவர்கள் உண்பதற்கு உணவு எதுவும் காணப்படுவதில்லை. இத்தகைய சூழ்நிலையில் எமது உபவாசம் மேற்கூறப்பட்ட முறைகளிலிருந்து அர்த்தமுள்ளதாக இவ் லெந்து நாட்களில் காணப்படவேண்டும்.

              மாற்கு 2:18-22ல் ஆண்டவர் இயேசு உபவாசம் ஓர் விளம்பரமாக அமையக்கூடாது எனப் போதிக்கின்றார். அதாவது, எமது உபவாசம் இறைவனுக்கும் எமக்குமிடையே நிலவக்கூடிய ஓர் தனிப்பட்ட உறவாகக் காணப்படவேண்டும். அதற்கூடாக எமது ஆன்மீக வாழ்வு அர்த்தமுள்ளதாக அமைய வேண்டும். இதனாலேயே ஒரு சிலர் இக்னேசியர் லோயளாஸ் எழுதிய ஆவிக்குரிய பயிற்சிகள் என்ற நூலை படித்து உபவாசத்தை பலப்படுத்துவர். இதன்மூலம், நாம் எம்மை விளம்பரப்படுத்தாமல் தவிர்த்துக் கொள்ளலாம்.

செபம்: இறைவா என் உபவாசம் ஓர் விளம்பரமாக அமையாமல் உம்முடன் உறவைப் புதுப்பிக்கும் ஓர் உறவுப் பாலமாக அமைய அருள் புரிவாயாக. ஆமென்.