தொழுவம் நோக்கி 05

(யோவான் 1:14)
பழைய ஏற்பாட்டில் வார்த்தை சிருஷ்டிக்கும் பணியுடனும் தீர்க்கதரிசன பணியுடனும் மற்றும் பல்வேறு செயற்பாடுகளுடனும் தொடர்புடையதாக காணப்படுகின்றது. இந்த வார்த்தையே மாம்சமாகி நமக்குள்ளே வாசம் பண்ணினார் என யோவான் குறிப்பிடுகின்றார்.இவ்வார்த்தையாகிய கிறிஸ்து இன்று நமக்குள்ளே வாசம் செய்ய விரும்புகின்றார்.

இதோ வாசற்படியில் நின்று கதவை தட்டுகின்றேன் ஒருவனும் சத்தத்தை கேட்டு கதவை திறந்தால் அவனுடன் நான் போஜனம் பண்ணுவேன் என இயேசு கூறுகின்றார் (வெளி 3:20). இதன் ஒளியில் ஆண்டவர் இயேசு எமது உள்ளத்திலே வாசம் செய்ய வேண்டுமேயாகில் நாம் எமது இதய கதவுகளை அவருக்காக திறத்தல் மிக அவசியமாகின்றது. எமது கதவுகளை நாம் மூடிக்கொள்ளும் போது அவர் ஒருபோதும் எமக்குள்ளே வாசம் செய்யமாட்டார்.

இதயத்தில் சுத்தமுள்ளோர் பாக்கியவான்கள் அவர்கள் கடவுளை தரிசிப்பார்கள் (மத்தேயு 5:8). இருதயம் மகா கேடு நிறைந்த ஒன்றாகும். பல பாவ எண்ணங்களை உற்பத்தி செய்கின்ற ஓர் சாதனமாக காணப்படுகின்றது.மனித இதயத்தில் இருந்து பலவிதமான தீமைகள் புறப்பட்டு வருகின்றன. இதன் ஒளியில் இதயத்தில் தூய்மை ஏற்படும் போது நாங்கள் தேவனை தரிசிக்க முடியும். அப்பொழுது கடவுள் எம்முடன் வாசம் செய்வார்.

சங்கீதகாரனாகிய தாவீது கர்த்தர் வாசம் செய்ய விரும்பும் இருதயமாகிய கூடாரத்தில் இருக்கவேண்டிய நற்பண்புகளை பற்றி பேசுகின்றார். சங்கீதம் 15ல் கைகளில் சுத்தம், உண்மை தன்மை, தீங்கு நினையாத தன்மை, புறங்கூறாத தன்மை போன்றவைகள் யாரிடம் காணப்படுகின்றதோ அவர்களுடன் கர்த்தர் வாசம் செய்யவிரும்புகின்றார்.

எனவே எமது இதய கதவுகளை திறந்து பரிசுத்தாவியின் உதவியுடன் தீமைகளை அகற்றி தூய்மையை ஏற்படுத்தும் போது பரிசுத்தாவியானவர் எமக்குள் வாசம் செய்கிறார்.

மன்றாட்டு
கடவுளே நீர் வாசம் செய்ய விரும்பும் கூடாரமாக என இதயத்தை மாற்றியருளும். ஆமென்.

அருட்பணி. அருளம்பலம் ஸ்டீபன்