லூக்கா 24:50-53
Ascension of our Lord: Glorified Christ

26 மே 2022

• ஆண்டவராகிய இயேசு உயிர்த்தெழுந்து நாற்பது நாட்கள் தமது சீடர்களுடன் உறவாடிய பின்னர் விண்ணுக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட திருநாளே விண்ணேற்றம் அடைந்த திருநாளாகும். மேலும், ஆண்டவர் இயேசுவைப் போன்று முதலாம் உடன்படிக்கை நூலில் ஏனோக்கு மற்றும் எலியா போன்றவர்கள் விண்ணேற்றம் அடைந்தார்கள். திருச்சபை வரலாற்றில் புனிதவதி மரியாளும் விண்ணேற்றம் அடைந்ததாக நாம் படித்தறிகின்றோம்.

• முதலாம் உடன்படிக்கை நூலில் தானியேல் 7:9-14ல் மகா சிங்காசனத்தில் வீற்றிருக்கும் ஒருவரைப் பற்றி பேசுகின்றது. அவர் மனிதகுமாரனுடன் பிரதிநிதித்துவப்படுத்தப்படுகின்றார். திருப்பாடல் 47லும் கடவுளின் உன்னத பண்புகளைப் பற்றி நாம் பார்க்கின்றோம்.

• திருத்தூதர்பணிகள் அல்லது அப்போஸ்தலர் 1:1-11ல் இயேசுவின் விண்ணேற்பு நிகழ்வினை லூக்கா காட்டுகின்றார். இங்கு கலிலேயர்கள் வானத்தை அண்ணார்ந்து பார்த்துக் கொண்டிருக்கும் வேளையில் அங்கு தேவதூதர்கள் அவர்களை உற்சாகப்படுத்துகின்றனர். விண்ணேற்பு என்பது நாம் சோர்ந்து போய் துக்கம் கொண்டாடுவது அல்ல. மாறாக, மீள்வருகைக்காக நாம் செயற்பட அழைக்கப்படுகின்றோம்.

• வாசிக்கக் கேட்ட நற்செய்தி பகுதி லூக்கா 24:50-53 பகுதியில் இயேசுவின் விண்ணேற்பு பெத்தானியா பகுதியில் நடைபெறுவதாக லூக்கா கூறுகின்றார். இங்கு இயேசு சீடர்களை ஆசீர்வதிக்கின்றார். ஆனால், ஏனைய நற்செய்திகளில்லாத உடனிருக்கும் வாக்குறுதி மத்தேயுவிலேயே காணப்படுகின்றது. இதன்படி, உலகின் இறுதிவரை ஆண்டவர் எம்முடன் உடனிருக்கின்றார் என்பது விண்ணேற்ற திருநாள் தரும் நம்பிக்கையான வாக்குறுதியாகும்.

ஆக்கம்: அற்புதம்

ஓவியம்: பெஞ்சமின்