g4cba24a7f5124afa783825708f452059896d30b1fded0f5d9f7a792386ed5aa06cb8ec21ad2f0228e41410022687b99ef8c75de7bee3ab6805ebab2944ee0165_1280-2604969.jpg

“திருமுழுக்கு: கிறிஸ்துவுடன் மரித்தலும், உயிர்த்தலும்”

திருமறை பகுதிகள்

யாத்திராகமம் 2: 1 – 10
1 பேதுரு 3: 19 – 22
யோவான் 12: 20 – 26

சிந்தனைக்கு….

ஒருமுறை எங்களது ஆலயத்தில் உள்ள திருமுழுக்கு பதிவேட்டை ( Baptism Register) பார்த்தபொழுது அருட்பபணியாளர்கள் ( Missionaries) ஒருவருக்கு திருமுழுக்கு கொடுத்திருக்கிறார்கள். அவரைப் பற்றி அதில் ஒரு குறிப்பு இருந்தது என்னவென்றால் அவர் ஒரு “பிச்சைக்காரர்” ( Begger )என்று எழுதப்பட்டிருந்தது….
அன்றைய ஆதி திருச்சபையில், யாசிக்கின்றவர்களும் ( பிச்சை எடுத்தவர்களும்) ஆலயத்திற்குள் இருந்திருக்கிறார்கள்…. திருச்சபை அவர்களோடு ஒன்றித்து இருந்தது என்பது ஆச்சரியமே….!
நமது பிறந்த நாட்களையும், திருமண நாட்களையும் மறவாமல் நினைவில் வைத்திருக்கிற நாம், நம்மில் எத்தனை பேர், நாம் திருமுழுக்கு எடுத்த நாளை நினைவில் வைத்திருக்கிறோம்… ஏன் அதனை கொண்டாடாமல் விட்டு விட்டோம்…?
கீர்த்தனை பாடலில் ஒன்று “ஞானஸ்நான மா ஞான திரவியமே” (251)….இந்தப் பாடலை எழுதியவர் ஞா. சாமுவேல் ஐயா அவர்கள். இரண்டாம் சரணத்தில் “சீரியவர்கள், பூரியர்கள்” இன்னும் இரண்டு பதங்களை பயன்படுத்தியுள்ளார். அதன் அர்த்தங்களை மிகவும் அழகாக கீழே தந்து இருக்கிறார்கள் “சிறந்தவர்கள், கீழ்மக்கள்”.. அப்படி என்றால் திருமுழுக்கு கிறிஸ்துவுக்குள் உயர்ந்தவன் – தாழ்ந்தவன் என்ற பாகுபாட்டை களைகிறது, நாம் அனைவரும் இறைவனின் பிள்ளைகளே என்ற ஆழமான இறையியலை எடுத்துரைக்கின்றது ….!

திருமுழுக்கு என்பது கிறிஸ்துவுடன் வாழ்ந்து, மரித்து, உயிர்த்த

ஒரு அனுபவம் ..
ஒரு அடையாளம் …
ஒரு ஆன்மீகம் …

Rev. Augusty Gnana Gandhi

1. ” தத்து எடுக்கப்பட்டவர்கள்” எனும் “உறவை” திருமுழுக்கு நமக்கு தருகிறது….(யாத்திராகமம் 2: 1 – 10)

மோசேயின் வரலாறு ஒரு ஆற்றில் துவங்குகிறது…, எகிப்தில் ஆண் பிள்ளைகள் அனைத்தும் கொல்லப்பட்ட சூழ்நிலையில், மோசேயின் தாய் பெற்றெடுத்த தன் மகன் மோசையை வளர்க்க முடியாத சூழ்நிலை. எப்படியாவது காப்பாற்ற வேண்டும் என்ற பெரும் பாடு யாத்திராகமம் நூலில் கண்ணீரோடு வடிக்கப்பட்டுள்ளது.

நாணலில் சுற்றி ஆற்றில் மோசையை விட்டு விடுகிறார். பார்வோனின் மகள் அதை கண்டு ஆற்றில் இருந்து குழந்தையை மீட்டெடுக்கிறாள்.

மோசேயை வளர்ப்பதற்கு பெற்ற தாயே “வாடகை தாயாக”, ஒரு “ஒப்பந்த பணியாளராக” பணியமர்த்தப்படுகின்றார்.

மோசேயை அதன் தாய் பெற்றெடுத்திருந்தாலும், பார்வோன் குமாரத்தி இடம் தன் மகனை பெறும் பொழுது தன் மகனையே “தத்து எடுக்கின்றார்கள்”(Adoption) என்று நாம் புரிந்து கொள்ள அளிக்கப்படுகிறோம்…

பால்குடி மறந்த பின்பு, மோசேயின் தாய், பார்வோன் மகளிடம் இடம் மீண்டும் ஒப்படைக்கின்றார். ஆற்றில் இருந்து எடுக்கப்பட்டவன் என்ற பெயர் காரணத்தோடு அக்குழந்தைக்கு “மோசே” என்று பெயரிடுகின்றார் பார்வனின் மகள்.

இதை ஒரு ஒப்பிடாக நாம் பார்க்கலாம். மோசேயின் தாய் கடவுளோடு ஒப்பிடப்படுகின்றார். தன் மகனை தத்தெடுத்ததை போல திருமுழுக்கை நாம் புரிந்து கொள்ளலாம்.

இயேசு கிறிஸ்து திருமுழுக்கு பெற்ற பொழுது “இவர் என் நேசகுமாரன், இவரில் நான் பிரியமாய் இருக்கிறேன்”என்று வானில் வானத்தில் ஒரு சத்தம் உண்டானது.

இயேசு கடவுளின் மகனாக இருந்தாலும், கடவுளால் கடவுளின் திட்டத்திற்காக அனுப்பப்பட்டிருந்தாலும், இயேசு யோர்தான் ஆற்றில் முழுக்கு முனிவரால் திருமுழுக்கு பெற்ற பொழுது, கடவுள் வெளிப்படையாக, பொதுவெளியில் இயேசுவை “தன் மகனாக தத்தெடுத்து” இவர் என் நேசகுமாரன், இவரில் நான் பிரியமாய் இருக்கிறேன் என்ற பிரகடனத்தை கடவுள் மேற்கொண்டார்.

மோசேயின் தாய் தன் மகனை “தத்தெடுத்ததை” போல, திருமுழுக்கு பெற்ற இயேசுவை கடவுள் இவர் என் நேசக்குமார் என்று “தத்தெடுத்ததை” போல, திருமுழுக்கு பெரும் ஒவ்வொரு வரையும், கடவுள் தன் மகனாக / மகளாக “தத்தெடுக்கின்றார்.”

பெற்றெடுத்தவர் யாராகவும் இருக்கலாம் ஆனால் திருமுழுக்கின் போது, திருமுழுக்கு பெரும் ஆணையும் பெண்ணையும், தன் மகனாக / மகளாக கடவுள் “தத்தெடுக்கின்றார்.” இது கடவுளுக்கும் நமக்கும் உள்ள உறவை, புதிய “உறவை” நமக்கு திருமுழுக்கு தருகிறது.

நாம் கடவுளால் தெரிந்தெடுக்கப்பட்டவர்கள் மட்டுமல்ல “தத்தெடுக்கப்பட்டவர்கள்” என்பதே அந்த உறவு. இது பெற்றோர் – பிள்ளை உறவை சுட்டிக்காட்டுகிறது. நம்மை தத்தெடுத்த ஆண்டவரின் உறவில் நிலைத்திருப்பதே நாம் பெற்ற திருமுழுக்கின் அடையாளம். இந்த உறவில் என்றும் நிலைத்திருப்போம்…..

2. ⁠ “மறுபடி பிறந்தவர்கள்” எனும் “உணர்வை” திருமுழுக்கு நமக்கு ஊட்டுகிறது….(1 பேதுரு 3: 19 – 22)

பேதுருவின் இந்த கடிதம் யாருக்கு எழுதப்பட்டது என்றால் சிதறடிக்கப்பட்டவர்கள் அனைவருக்கும் எழுதின கடிதம். குறிப்பாக ஆசியா (1:1) என்ற கண்டத்தில் வாழ்ந்த நமது முன்னோர்களுக்கு எழுதின கடிதம் ஆகவும் நாம் எடுத்துக் கொள்ளலாம்.

தமது திருச்சபை மக்களுக்கு வலியுறுத்துகின்ற காரியம் என்னவென்றால்…
அறியாமையிலே வாழ்ந்து கொண்டிருந்தீர்கள், கீழ்படியாமையின் பிள்ளைகளாய் இருந்தீர்கள்(1:14,15) முன்னோர்களைப் போல வீணான நடத்தையில் வாழ்ந்து கொண்டிருந்தீர்கள் (1:18), துர்குணம, வஞ்சகம், பொறாமை, புறங்கூறுதல் (2:2) இவைகளில் நிலைத்திருந்தீர்கள்.

இப்படி வாழ்ந்து கொண்டிருந்த உங்களை ஆண்டவராகிய இயேசு கிறிஸ்து மரித்தோரிலிருந்து எழுந்து, தமது மிகுந்த இரக்கத்தின் படி நம்மை மறுபடியும் பிறப்பித்தார்(1:4) என்று தமது திருச்சபைக்கு வலியுறுத்தி கூறுகின்றார்.

இயேசு கிறிஸ்து மரித்து எழுந்ததினாலே நாமும் நம்முடைய பாவங்களுக்கு மரித்து நீதியின் பொருட்டு நம்மையும் உயிரோடு எழ வைத்துள்ளார். அவர்தானே தமது சரீரத்திலே நம்முடைய பாவங்களை சிலுவையின் மேல் சுமந்தார். அவருடைய தழும்புகளால் நாம் குணமடைந்தோம் (2: 24).

ஆண்டவரின் உயிர்த்தெழல் என்பது, நம்முடைய பாவத்திலிருந்து நாம் மீட்டெடுக்கப்பட்டு, மீண்டும் ஒரு புதிய பிறப்பை பிறந்ததற்கு (1:4) அடையாளமாக பேதுரு வலியுறுத்துகின்றார்.

நோவா உண்டாக்கிய பேழையில் எட்டு பேர் மாத்திரம் பாவத்திலிருந்து, இறைவனின் தண்டனையிலிருந்து காக்கப்பட்டதை திருமுழுக்கோடு பேதுரு ஒப்பிடுகின்றார். அது ஒரு மறு பிறப்பு என்பதை பேதுரு தம் திருச்சபைக்கு சுட்டிக்காட்டுகின்றார்.

இயேசுவின் உயிர்ப்பு, புது பிறப்பை தந்ததைப் போல திருமுழுக்கு பெரும் ஒவ்வொருவரும் ஆண்டவரோடு மரித்து மீண்டும் உயிர் பெற்று எழுகின்றோம். புதிய படைப்பாக, புதிய பிறப்பாக (2:3) நாம் மீண்டும் பிறக்கின்றோம்.

ஆண்டவரின் உயிர்ப்பு “வரலாற்று புரட்டிப் போட்டதை போல” ஒவ்வொருவரின் திருமுழுக்கும் (புதிய பிறப்பு) ஒரு “புதிய வரலாறை படைக்க வேண்டும்”.

திருமுழுக்கு நமக்கு ஒரு புது பிறப்பை தந்திருக்கிறது இந்த புது பிறப்பு கடவுளால் நமக்கு “இலவசமாக” வழங்கப்பட்டு இருக்கிறது. இயேசுவின் “உயிர்ப்பும், திருமுழுக்கும்” நம்மை புதிதாய் பிறக்க வைத்திருக்கிறது, என்ற “உணர்வில்” நாம் திருமுழுக்கு நாளை நினைவுகூர்ந்து “உணர்வில்” மாற்றம் அடைவோம்….

3. “உடன் பணியாளர்கள்எ” எனும் “உரிமையை” திருமுழுக்கு நமக்கு தந்துள்ளது ….(யோவான் 12: 20 – 26)

ஆண்டவர் இயேசு கிறிஸ்து திருமுழுக்கு பெற்ற உடனே தமது திருப்பனையை துவக்கினார். சிறைப்பட்டவர்களை விடுதலையாக்கவும் …., என்ற நாசரேத்தூர். அறிக்கையை தனது வாழ்வின் குறிக்கோளாக கொண்டு களத்தில் பணியை முன்னெடுத்தார்…..

பன்னிரண்டு சீடர்களை அழைத்து, அவர்களைப் பயிற்றுவித்து, இறைவனின் ஆட்சியை இம்மண்ணில் நிறுவுவதற்கு “உடன் பணியாளர்களாக” இணைத்து பணியை களத்தில் ஆற்றினார்.

அன்றைக்கு சீடர்களை பெயர் சொல்லி அழைத்த ஆண்டவர், இன்றைக்கு தம் திருப்பணியை தொடர்வதற்கு, திருமுழுக்கை ஆண்டவர் திருச்சபையில் ஏற்படுத்தினார் என்பது நமது ஆழமான பற்றுறுதி….

திருமுழுக்கின் போது நெற்றியில் சிலுவை அடையாளத்தை வரைவது ஒரு அடையாளம் திருமுழுக்கு பெற்ற ஒவ்வொருவருக்கும், சிலுவை கொடுக்கப்படுகிறது, சிலுவை வழியில் பயணிக்க அனுப்பப்படுகிறார்கள்….

சிலுவை அடையாளம் என்பது வெளிப்படுத்தின விசேஷத்தில் குறிப்பிட்டபடி “முத்திரை” போடப்பட்டவர்கள் என்னும் அடையாளத்தையும், உரிமையையும் திருமுழுக்கு தருகிறது….

நாம் தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள் மட்டுமல்ல, உடன் பணியாற்ற அழைப்பைப் பெற்ற “களப்பணியாளர்கள்” என்னும் உரிமையை திருமுழுக்கு நமக்கு தந்துள்ளது, என்பதை திருமுழுக்கு பெற்ற ஒவ்வொருவரும் நினைத்து அர்ப்பணிப்போடு பணியாற்ற அழைக்கப்பட்டுள்ளோம்…..

நிறைவாக …….

நாம் திருமுழுக்கின் மூலம் இறைவனால் தத்தெடுக்கப்பட்டவர்கள் எனும் “உறவில்” வாழுவோம்….

நாம் திருமுழுக்கின் மூலம் “மறுபடி பிறந்தவர்கள்” எனும் “உணர்வில்” வளருவோம்….

நாம் திருமுழுக்கின் மூலம் “உடன் பணியாளர்கள்” எனும் “உரிமையில்” பணியாற்றுவோம்….

இயேசுவின் “உயிர்ப்பு” உலக வரலாற்றை புரட்டிப் போட்டது ….

நமது “திருமுழுக்கு” புது வரலாறு படைக்கட்டும்…..

இறை அருளும், இறை ஆசியும் உங்களோடு என்றும் இருப்பதாக ….
இறைப்பணியில்
உங்கள்

இறைப்பணியில் உங்களோடு

Rev. Augusty Gnana Gandhi,

CSI Trichy Tanjore Diocese.